மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 22 - மெகஸ்தனிஸின் அற்புத உலகம்

மெகஸ்தனிஸின் அற்புத உலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
மெகஸ்தனிஸின் அற்புத உலகம்

இது குரங்கா, மனிதனா என்று மலைக்கச் செய்யும் புத்திசாலிக் குரங்கு வகையொன்று இந்தியாவில் இருக்கிறது. அதன் பெயர் தெரியவில்லை.

மெகஸ்தனிஸ், தனது இண்டிகாவில் அற்புதங்களுக்கும் அதிசயங்களுக்கும் உரிய முறையில் இட ஒதுக்கீடு செய்திருப்பதைக் காண முடிகிறது. கண் முன்னால் விரிந்திருக்கும் பாடலிபுத்திரத்தை எப்படி விவரிப்பாரோ அதே நேர்த்தியோடு, அதே நுணுக்கத்தோடு கற்பனை உயிர்களையும் அவர் விவரிக்கிறார்.

உலகிலேயே பெரிய புலி இந்தியாவில் வாழ்கிறது. இரண்டு சிங்கங்களின் பருமனும் பலமும் கொண்டது இது. இங்குள்ள குரங்கும் அளவில் பெரியது. முகம் தவிர உடலெல்லாம் வெளுத்திருக்கும் குரங்கு வகை ஒன்று உண்டு. முகம் மட்டும் கறுத்திருக்கும். நேர் எதிராக உடலெல்லாம் கறுத்து முகம் மட்டும் வெளுத்திருக்கும் வகையும் உண்டு. இந்தியக் குரங்கு ரொம்பவும் சாது. யாரிடமிருந்தும் எதையும் பிடுங்காது. துரத்தி வந்து தாக்காது.

இது குரங்கா, மனிதனா என்று மலைக்கச் செய்யும் புத்திசாலிக் குரங்கு வகையொன்று இந்தியாவில் இருக்கிறது. அதன் பெயர் தெரியவில்லை. பிடுங்கி வந்து நட்டுவைத்ததுபோல் நெற்றியில் கற்றைமுடி தனியாக நீட்டிக்கொண்டிருக்கும். மேல்நோக்கித் திரும்பிய தாடை. சிங்கத்துக்கு இருப்பதைப் போன்ற வால். முகம், வாலின் நுனி தவிர உடல் முழுக்க வெள்ளை நிறம். காட்டில் வசிக்கும். கனி, காய் மட்டுமே உண்ணும்.

சில ஊர்களில் குடியிருப்புகளுக்குள்ளும் குரங்குக் கூட்டம் வந்துவிடுவதுண்டு. மக்களும் தயாராகவே ஆங்காங்கே வீட்டு வாசலில் தட்டு போட்டு குரங்குக்கான உணவை முன்கூட்டியே எடுத்துவைத்துவிடுவார்கள். பெரும்பாலும் சாதம். `இன்று நீ, நாளை நீ’ என்று தங்களுக்குள் பேசிவைத்துக்கொண்டு பரிமாறுகிறார்கள். குரங்கு நோட்டமிட்டபடி வரும். தட்டு இருக்கிறதா என்று பார்க்கும். சமர்த்தாக எடுத்து மடியில் வைத்துக்கொண்டு சாப்பிடும். பிறகு வந்த வழியே திரும்பச் சென்றுவிடும். இங்குள்ளவர்களெல்லாம் சமைக்கும்போதே குரங்குக்கும் ஒரு பிடி சேர்த்துச் சாதம் வடித்துவிடுகிறார்கள். அப்படிச் செய்ய வேண்டும் என்பது அரச கட்டளை. வீட்டுப் பொருள்கள் சேதமாகாமல் இருக்கவும், யாருக்கும் எந்தத் தீங்கும் நேராமல் இருக்கவும் இது உதவும். குரங்குக்கும் இந்த ஏற்பாடு பிடித்துப் போய்விட்டதால் அநாவசியமாக வம்பு தும்பு எதுவும் செய்வதில்லை.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 22 - மெகஸ்தனிஸின் அற்புத உலகம்

மூன்றடி நீளப் பறக்கும் பாம்புகளைச் சில பகுதிகளில் காண முடியும். வௌவாலுக்கு இருப்பதுபோல் மெல்லிய இறக்கைகள் கொண்டிருக்கும். இரவு நேரங்களில் சடாரென்று தரையிலிருந்து எழும்பிப் பறக்க ஆரம்பிக்கும். அப்போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பாம்பின் உமிழ்நீரோ சிறுநீரோ நம்மீது சிந்திவிடும். எந்த இடத்தில் சிந்துகிறதோ அங்கே புண் உண்டாகும், தோல் அழுகிப்போகும். இது பரவாயில்லை. எருது அல்லது மானை ஒரே விழுங்கில் விழுங்கி ஏப்பமிடும் பிரமாண்ட பாம்புகளும் இருக்கின்றன.

நாய் என்னவோ நல்லதுதான். ஆனால் பெரிய அளவில் திரண்டு நிற்கும் நாயை நெருங்காதீர்கள். இது தாக்கினால் உங்கள் கண்கள் கிழியும் அல்லது பிடுங்கிக்கொண்டு வெளியில் வந்து விழுந்துவிடும். அதன் பற்களில் சிக்கிக்கொண்டால் விடுபடுவது கடினம். உயிர் பிழைக்க வேண்டுமானால் அதன் மூக்குத் துவாரங்களில் நீரை ஊற்ற வேண்டும். (வாயிடுக்கில் சிக்கியிருக்கும்போது தண்ணீருக்கு எங்கே போவது... நாயின் மூக்கில் விடும்வரை அது அமைதி காக்குமா?) சிங்கமும் எருதும்கூட இந்த நாயின் பிடியிலிருந்து விடுபட முடியாது. ஒரு முறை பலத்தையெல்லாம் திரட்டி நாயின் வாயிலிருந்து ஓர் எருதை மீட்டிருக்கிறார்கள். ஆனால், அது ஏற்கெனவே உயிரைவிட்டிருந்தது.

மனித நடமாட்டம் உள்ள பகுதிகளிலேயே இப்படி என்றால், இருள் படர்ந்த காடுகளிலும் மலைகளிலும் என்னென்ன ஆபத்துகளும் அதிசயங்களும் ஒளிந்திருக்கும் என்பதை யார்தான் அறிவார்? ஆடு, மாடு போன்ற பொதுவான சாதுவான பிராணிகளும்கூட இங்கே பயங்கரமாக இருக்கும். கார்டாசோன் என்னும் விலங்கு இந்தியாவில் உலவுகிறது. அசப்பில் குதிரைபோல் இருக்கிறது. பட்டுப்போல் மிருதுவான மஞ்சள் கேசம். உறுதியான கால்கள், வேகமாக ஓடக்கூடிய பாதங்கள். பன்றிக்கு இருப்பதைப் போன்ற குட்டை வால். அதிசயமாக இரு புருவங்களுக்கு மத்தியில் கொம்பு ஒன்று முளைத்திருக்கிறது. கறுத்திருக்கும் இந்தக் கொம்பு நேராக இல்லாமல் பிறை போல் வளைந்திருக்கிறது. வாள்போல் கூர்மையானது. வாயைத் திறந்து கத்தினால் காடே குலுங்கும்.

ஆண் விலங்குகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும், கொம்பால் குத்திக் காயப்படுத்திக்கொள்ளும். இரண்டில் ஒன்று கொல்லப்பட்டால்தான் சண்டை முடிவுக்கு வரும். சண்டை ஆணுக்கும் ஆணுக்கும்தான். பெண்ணைக் கண்டுவிட்டால் ஆண் விலங்கு சாதுவாகிவிடுகிறது. கூச்ச சுபாவி. தானுண்டு தன் மூக்கு உண்டு என்று தனிமையில் மேய்ச்சல் நிலத்தில் நடைபோட்டுக்கொண்டிருக்கும். கார்டாசோனின் ஒவ்வோர் உடல் பாகமும் பயனளிக்கக்கூடியது, வலு தரக்கூடியது. குறிப்பாக, கொம்புக்கு ஆற்றல் அதிகம். குட்டியாக இருக்கும்போது பிடித்துக்கொண்டுபோய் மன்னர்களிடம் ஒப்படைப்பார்கள். குட்டிகளை மோதவிட்டு அவர் வேடிக்கை காண்பார். நீட்டி, முழக்கி மெகஸ்தனிஸ் விவரித்திருக்கும் இந்த விலங்கு, காண்டாமிருகம்.

மனிதர்களையும் விட்டுவைக்கவில்லை மெகஸ்தனிஸ். மூன்றடிக்குக் கொஞ்சம் அதிகம், ஏன் இரண்டு அடி உயரம்கொண்ட மனிதன்கூட இந்தியாவில் வாழ்கிறானாம். இவர்களுக்கு மூக்கே கிடையாது. உதட்டுக்கு மேலிருக்கும் இரண்டு ஓட்டைகளில் சுவாசித்துக்கொள்ள வேண்டியதுதான். ஒற்றைக்கண் மனிதன், நீண்ட குச்சி கால்கள்கொண்ட மனிதன், பின்பக்கம் திரும்பிய பாதங்கள்கொண்ட மனிதன் என்று வகை வகையான மனிதர்கள் இண்டிகாவில் வருகிறார்கள். நாரைகளுக்கும் கௌதாரிகளுக்கும் குள்ள மனிதர்கள்மீது பகை என்பதால், அவ்வப்போது திரண்டுவந்து போர் தொடுக்குமாம். உங்கள் குழந்தைகளை நாங்கள் ஏதாவது செய்கிறோமா... நீங்கள் மட்டும் ஏன் எங்கள் முட்டைகளைக் கவர்ந்து செல்கிறீர்கள் என்பதுதான் பறவைகளின் தார்மிகக் கோபத்துக்குக் காரணம்.

நிஜ உலகையும் கற்பனை உலகையும் எப்போதும் தனித்தனியே வைத்திருப்பதில்லை மெகஸ்தனிஸ். இந்த விசித்திர மனிதர்களையெல்லாம் பாடலிபுத்திர மக்களும் கண்டிருக்கிறார்கள். சிலரை சந்திரகுப்தரின் அரண்மனைக்கும் இழுத்து வந்திருக்கிறார்கள். இன்னும் சிலரை எவ்வளவு முயன்றும் வீரர்களால் பிடித்துவர முடியவில்லை. உங்கள் உணவைச் சாப்பிட மாட்டோம் என்று சொல்லி வழியிலேயே மாண்டுபோயிருக்கிறார்கள். எல்லா விசித்திர மனிதர்களும் காடுகளில்தான் வாழ்வார்கள் என்று சொல்ல முடியாது. வாயற்ற மனிதர்கள் கங்கைக் கரைக்கு அருகிலேயே வாழ்கிறார்கள். வறுக்கப்பட்ட இறைச்சியின் மணம், பூக்கள், கனிகளின் நறுமணம் ஆகியவற்றை நாசித் துவாரங்கள் வழியே உள்ளிழுத்துப் பசியாறுகிறார்கள்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 22 - மெகஸ்தனிஸின் அற்புத உலகம்

யானை இல்லாமல் ஒரு புத்தகமா? ஒரு யானை எவ்வாறு காட்டிலிருந்து பிடித்து வரப்படுகிறது என்பதற்கான படிப்படியான செயல்முறை இண்டிகாவில் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் போய் பிடித்து வர முடியாது. குதிரைகளும் யானைகளும் மன்னரின் சொத்துகள். கட்டிப் போட்டு அடி அடி என்று அடிப்பது, கழுத்து முழுக்கச் சின்னச் சின்ன வெட்டுக்காயங்களை ஏற்படுத்தி கொக்கிகள் கொண்டு பிணைப்பது, பட்டினி போடுவது, நிற்க முடியாமல் தடுமாறும் வரை கால்களைத் தாக்குவது ஆகியவை யானையைப் பழக்குவதற்கான சில வழிமுறைகள். வீட்டுப் பிராணியாக மாறியதை உறுதி செய்துகொண்ட பிறகு நல்ல உணவு கொடுத்து பலமூட்டுவார்கள். அடுத்து, கீழ்ப்படியச் சொல்லித் தர வேண்டும். பாடுவது, மேளம் கொட்டுவது, இசைக்கருவிகள் வாசிப்பது, பேசிக் கட்டளைகள் பிறப்பிப்பது ஆகியவற்றைக் கலந்தும், தனியாகவும் பயன்படுத்தலாம்.

ஒரு நல்ல யானை தனது பாகனை நேசிக்கும். போரில் அவன் கீழே விழுந்துவிட்டால் அல்லது தாக்கப்பட்டால் எனக்கென்ன என்று இருக்காமல், அவனை இழுத்து வந்து பாதுகாப்பான இடத்தில் கிடத்தும். அதெப்படி என் பாகனை நீ காயப்படுத்தலாம் என்று எதிரியோடு சீற்றத்தோடு சண்டைக்குப்போன யானையைப் பார்த்திருக்கிறேன். சில சமயம் தவறாகப் புரிந்துகொண்டு அல்லது தடுமாற்றத்துக்கு ஆட்பட்டு பாகனை இழுத்து மிதித்துக் கொன்றுவிடுவதும் உண்டு. அப்படி நேரும்போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் யானை, உணவுகூட எடுத்துக்கொள்ளாமல் கண்ணீர்விட்டு அழ ஆரம்பித்துவிடும். குற்றவுணர்வு தாளாமல் இறந்துவிடுவதும் வாடிக்கையே.

நோயுற்ற யானைக்கு மெகஸ்தனிஸ் பரிந்துரைக்கும் கைவைத்தியங்களிலிருந்து இரண்டு மட்டும் இங்கே... யானை காயமடைந்துவிட்டால், பன்றியின் உடல் பாகங்களைச் சிறிது சிறிதாக வெட்டியெடுத்து வந்து ரத்தம் காய்வதற்குள் புண்ணுக்குள் நுழைக்க வேண்டும். கண்ணில் எரிச்சல் ஏற்பட்டால், மாட்டுப் பால் கொண்டு வந்து எரியும் இடத்தில் ஊற்ற வேண்டும்.

இப்படிக் கற்பனையும் நிஜமும், வரலாறும் புனைவும், சாத்தியமும் அசாத்தியமும் கலந்த உலகமாக இந்தியா மெகஸ்தனிஸுக்குக் காட்சியளித்திருக்கிறது. ஏற்க முடியாத, நம்ப முடியாத பல பகுதிகள் அவருடைய இண்டிகாவில் இருப்பது உண்மை. ஆனால் அவற்றையும் மீறி அவரை நாம் மதிப்பதற்கும் திரும்பத் திரும்ப அவரிடம் சென்று கொண்டிருப்பதற்கும் காரணம் ஒன்றுதான். மெகஸ்தனிஸை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா உயிர்பெற்று நம் முன்னால் வந்துவிடுகிறது. அவர் விவரிக்கும் எல்லா அதிசயங்களையும் விஞ்சி நிற்கும் அதிசயம் அல்லவா இது!

(விரியும்)