மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 23 - நிலமெல்லாம் பௌத்தம்

நிலமெல்லாம் பௌத்தம்
பிரீமியம் ஸ்டோரி
News
நிலமெல்லாம் பௌத்தம்

கலிங்கத்துக்கு எதிரான பெரும் போரொன்றை நடத்தினார் அசோகர். அப்போது அங்கே யாருடைய ஆட்சி நடந்துவந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை

புத்தர் உலகிலுள்ள அனைத்தையும் துறந்தார் என்றால், அலெக்சாண்டர் உலகிலுள்ள அனைத்தையும் அடைய விரும்பினார். `ஆசையே அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம்’ என்றார் புத்தர். மேலும், மேலும் நிலங்களை ஆக்கிரமித்த பிறகும் அலெக்சாண்டரின் ஆசை அடங்கவேயில்லை. இந்தியாவை வெல்லும் கனவோடு வந்தவரால் சில பகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது என்று பார்த்தோம். அந்தச் சில பகுதிகளையும் சந்திரகுப்தர் முழுமையாக மீட்டெடுத்துவிட்டார்.

சந்திரகுப்தர் அலெக்சாண்டரின் சமகாலத்தவர். இளம்வயதில் அலெக்சாண்டரை நேரில் கண்டவர் என்றும் சொல்லப்படுகிறது. சந்திரகுப்தருக்குப் பிறகு அவர் மகன் பிந்துசாரர் பதவியேற்றார். `உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் பேரும் புகழும் மிக்கவனாக இருப்பான்’ என்று அவரிடம் ஆரூடம் சொல்லப்பட்டது. உண்மையில் அதுதான் நடந்தது.

அசோகர் (பொஆமு 268-232) ஆட்சியில் அமர்ந்தபோது இந்தியா ஏற்கெனவே பேரரசாக மாறியிருந்தது. மேற்கில் இந்து குஷ் மலைத்தொடர் முதல் (இன்றைய ஆப்கானிஸ்தான்) கிழக்கில் வங்காளம் வரையிலான பரந்து விரிந்த பிரதேசம் அசோகரின் கரங்களுக்குள் வந்துசேர்ந்திருந்தது. தெற்கில் கர்நாடகம் வரை செல்வாக்கு பரவியிருந்தது. கேரளாவையும் தமிழ்நாட்டையும் (பாண்டியர்களும் சோழர்களும் ஆண்டுகொண்டிருந்தனர்) மட்டும்தான் நெருங்கி வர முடியவில்லை. ஒரே விதிவிலக்கு, இன்றைய ஒடிசாவான கலிங்கம். வனப்பகுதியாகவும், பழங்குடிகளின் வசிப்பிடமாகவும் இருந்த கலிங்கம் மௌரியர்களின் ஆட்சிக்கு உட்படாமல் இருந்தது.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 23 - நிலமெல்லாம் பௌத்தம்

எனவே, கலிங்கத்துக்கு எதிரான பெரும் போரொன்றை நடத்தினார் அசோகர். அப்போது அங்கே யாருடைய ஆட்சி நடந்துவந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் லட்சக்கணக்கானவர்களை அசோகர் கொன்றொழித்ததாகச் சொல்லப்படுகிறது. சிந்துவோடும் கங்கையோடும் போட்டிபோடும் அளவுக்கு ரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. அழிவின் தடங்களை நேரில் கண்ட அசோகர், இத்தனை பெரிய கொடூரத்தையா நிகழ்த்தியிருக்கிறோம் என்று அதிர்ந்து, மனம் மாறி பௌத்தத்தைத் தழுவிக்கொண்டிருக்கிறார். அசோகர் குறித்து முன்வைக்கப்படும் எளிய சித்திரம் இதுதான்.

ஆனால் இத்தனை எளிதாக மனமாற்றம் சாத்தியமாகியிருக்கும் என்பதை அனைவரும் ஏற்கவில்லை. அசோகர் குறித்து விரிவான ஆய்வுகளை முன்னெடுத்துள்ள ரொமிலா தாப்பர், ‘கலிங்கத்துக்குப் பிறகு ஒரே இரவில் அசோகர் மனம் மாறினார் என்பது நம்பும்படியாக இல்லை’ என்கிறார். எது எப்படியோ, இந்தியாவும் உலகமும் கிட்டத்தட்ட மறந்துபோயிருந்த புத்தரை மிகப்பெரிய அளவில் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் அசோகர் என்பதை ஒருவரும் மறக்கவில்லை. முதன்முறையாக பௌத்தம் அரசு மதமாக மாறியதற்குக் காரணம் அசோகர். முதன்முறையாக பௌத்தம் இந்தியா முழுக்கப் பரவியதற்குக் காரணம் அசோகர். அதுவரை என்னவெல்லாமோ ஏற்றுமதி செய்துகொண்டிருந்த இந்தியா, முதன்முறையாக ஒரு மதத்தை, ஒரு கோட்பாட்டை, ஓர் அரசியல் தத்துவத்தை உலகோடு பகிர்ந்துகொண்டதற்குக் காரணமும் அசோகர்தான்.

அந்த வகையில் மௌரியப் பேரரசராக இருந்த அசோகர், பௌத்தப் பேரரசராக மாறியது இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் பதிந்துபோனது. ஓர் அரசர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணத்தைத் திட்டவட்டமாக மறுவரையறை செய்தார் அசோகர். இயன்றவரை மக்களிடமிருந்து விலகியிருப்பதே ஒரு மன்னரின் அடிப்படைப் பண்பு என்பதை மாற்றி, மக்களின் அன்றாட நிகழ்வுகளில், அவர்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்னைகளில் அக்கறையோடு கவனம் செலுத்தினார் அசோகர். அந்தப் பிரச்னைகளையெல்லாம் களைய முடியும், மக்களின் வாழ்நிலையையும் மனநிலையையும் மேலே மேலே உயர்த்த முடியும் என்று அவர் நம்பினார்.

இவை நடக்க வேண்டுமானால் ஒரு புதிய சமூகம் அமைய வேண்டும். எல்லா நம்பிக்கைகளுக்கும், எல்லாப் பார்வைகளுக்கும், எல்லா மாற்றுக் கருத்துகளுக்கும் அங்கே இடம் இருக்க வேண்டும். பிளவுகள் இல்லாத, மோதல்கள் இல்லாத, வன்முறை இல்லாத சமூகமாக அது உருத் திரண்டு வர வேண்டும். அப்படியொரு சமூகம் மலர்ந்தால்தான் மன்னர் முதல் சாமானியர் வரை அனைவருக்கும் விடுதலை சாத்தியமாகும். அப்படியொரு சமூகம் மலர வேண்டுமானால் நிலமெல்லாம் பௌத்தம் மலர வேண்டும்.

இந்திய மக்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மானுடகுலத்தையும் மேம்படுத்த விரும்பினார் அசோகர். சமூகம் என்று அவர் நினைத்தது இந்திய சமூகத்தையல்ல, உலக சமூகத்தை. மனிதர்களோடும் நின்றுவிடவில்லை அவர். தாவரங்களையும் பறவையினங்களையும் விலங்கினங்களையும் மனிதனோடு ஒன்றிணைத்து அணுகினார். ஒன்றிணைத்து கனவு கண்டார். இந்தக் கனவை அவர் புத்தரிடமிருந்து பெற்றுக்கொண்டார். பௌத்த தம்மம் அசோகரின் தம்மமாக மாறியது. தனது சிந்தனைகளையும் கனவுகளையும் மக்களோடு பகிர்ந்துகொள்ள கல்வெட்டுகளை அவர் பயன்படுத்திக்கொண்டார்.

விலங்குகளை ஏன் துன்புறுத்தக் கூடாது... உயிர்ப் பலி ஏன் தடை செய்யப்பட வேண்டும்... நல்ல நடத்தை ஏன் ஒரு மனிதனுக்கு அவசியம்... நமக்குக் கீழே உள்ளவர்களை ஏன் கரிசனத்தோடு நடத்த வேண்டும்... முதியோர்களை ஏன் மதிக்க வேண்டும்... நண்பர்களோடும், அண்டை வீட்டாரோடும், உறவினர்களோடும் நல்லுறவு பேணுவது எப்படி... வீண் சடங்குகளை ஏன் குறைத்துக்கொள்ள வேண்டும்... தம்மத்தை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பது சாத்தியம்தானா... உண்மையோடும், நேர்மையோடும், அன்போடும் வாழ்வது சாத்தியம்தானா... நம்மைப்போல் இல்லாதவர்களையும், நம் நம்பிக்கைகளைப் பகிர்ந்துகொள்ளாதவர்களையும் எப்படி அணுக வேண்டும்... எல்லாவற்றையும் விவாதித்தார் அசோகர். என் மக்களின் நல்வாழ்வுக்கு நான் பொறுப்பேற்கிறேன். எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும். இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சி பரவுவதற்கு ஒரு சக்கரவர்த்தியாக என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்.

பௌத்தம் அசோகருக்கு மதமல்ல. ஒரு வாழ்க்கைத் தத்துவம். நகரம் கிராமம், படித்தவர் படிக்காதவர், இந்தியர் அந்நியர் எல்லோருக்கும் பொருந்தும் அடிப்படை அறம். இந்தியாவில் மட்டும் தம்மத்தைப் பரப்புவதோடு தன் பணி முடிந்துவிடவில்லை. இந்தியாவுக்கு வெளியிலும் தம்மத்தை எடுத்துச் செல்ல வேண்டும், பிற மதங்களை, பிற நம்பிக்கைகளை, பிற வாழ்க்கைத் தத்துவங்களைப் பின்பற்றுவோருக்கும் தம்மத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்று விரும்பினார் அசோகர். பௌத்தத்தைக் கொண்டு செல்வதற்காகவே பிரத்யேகமான தூதுக்குழுக்களை அவர் நியமித்தார். `தர்ம மகா மாத்திரர்கள்’ என்று அழைக்கப்பட்ட அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். பௌத்தம் இந்தியாவைக் கடந்து உலகம் முழுக்கப் பரவுவதற்கான விதைகள் அசோகரால் ஊன்றப்பட்டன.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 23 - நிலமெல்லாம் பௌத்தம்

காஷ்மீருக்கும் காந்தாரத்துக்கும் இரு பௌத்தத் துறவிகள் தலைமையில் தூதுக்குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டன. வாரணாசியில் பிறந்த மஜ்ஜந்திகா முதல் துறவி. இரண்டாமவர் தர்மரஷிதா. இவர் ஒரு கிரேக்கர் என்று சொல்லப்படுகிறது. அலெக்சாண்டரின் குழுவினரோடு இணைந்து வந்த பல கிரேக்கர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் நிரந்தரமாகக் குடியேறியிருந்தனர். `யவனர்கள்’ என்று அழைக்கப்பட்ட இந்த கிரேக்கர்களோடு தொடர்புகொண்டு தம்மத்தை அவர்கள் மொழியில் அறிமுகப்படுத்த ஒரு கிரேக்க துறவி தேவை என்று கருதி தர்மரஷிதாவை அசோகர் தேர்ந்தெடுத்திருக்கலாம். இவர் மேற்கொண்ட பணிகள் குறித்து கிரேக்கப் பதிவுகள் கிடைத்திருக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட சூத்திரங்களை இவர் மக்களிடையே பரப்புரை செய்திருக்கிறார். பலர் இவரால் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

மைசூருக்கு மகாதேவ தேரா என்பவர் அனுப்பிவைக்கப்பட்டார். கர்நாடகத்துக்கு அருகிலும், தென்னிந்தியாவிலும் பௌத்தத்தை அறிமுகப்படுத்த ரக்கிட்ட தேரர் எனும் துறவி சென்றார். வடக்கு குஜராத், கத்தியாவார், கச், சிந்து ஆகியவற்றை உள்ளடக்கிய பிரதேசம் `அபராந்தகம்’ என்று அழைக்கப்பட்டது. யோன தம்மரக்கிட்டர் இந்தப் பகுதிக்கான தூதுவராக நியமிக்கப்பட்டவர். அபராந்தகத்தில் மட்டும் 37,000 பேர் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டதாகக் குறிப்புகள் சொல்கின்றன. மகாராஷ்டிரத்துக்கு மகாதம்மரக்கிட்டர். கிரேக்கத்துக்கு மகாரக்கிட்டர். இமயமலைப் பகுதிகளுக்கு மஜ்ஜிம்மர் சென்றார். மியான்மரும் தாய்லாந்தும் சேர்ந்த பகுதிக்கு அன்று `சுவர்ணபூமி’ என்று பெயர். சோனா, உத்தரா ஆகிய இரு பௌத்தர்கள் இந்தநாட்டுக்குத் தூதுக்குழுவினரை அழைத்துச் சென்றனர். லட்சத்தீவுக்கும் இலங்கைக்கும் அசோகர் தன்னுடைய மகன் மகிந்தனையும், மகள் சங்கமித்ராவையும் அனுப்பியிருக்கிறார்.

அகோகரின் முதல் மகன் மகிந்தன். இலங்கை, பௌத்தத்தை முதன்முதலாகப் பெற்றுக்கொண்டது இவரிடமிருந்துதான். இன்றைய தேதிவரை அது அங்கே செல்வாக்கோடு இருக்கிறது. மகிந்த தேரர் என்றும் அழைக்கப்பட்ட மகிந்தனின் இலங்கைப் பயணம் குறித்த பதிவுகள் தீபவம்சம், மகாவம்சம் இரண்டிலும் இருக்கின்றன. அனுராதபுரத்தைத் தலைநகராகக்கொண்டு இலங்கையை ஆண்டுவந்த தேவநம்பிய தீசன் என்பவரைச் சந்தித்த மகிந்தன், அவரை பௌத்தத்தை ஏற்கச் செய்திருக்கிறார். மகிந்தனின் தங்கை சங்கமித்ரா உஜ்ஜயினியில் பிறந்தவர். 14 வயதில் திருமணம் செய்துகொண்டு நான்காண்டுகளில் தன் அண்ணனோடு இணைந்து பௌத்தத் துறவியாக மாறியிருக்கிறார். தன் மகளை அவ்வளவு தொலைவு அனுப்பிவைக்க அசோகர் தயங்கியதாகவும், `கலங்காதீர் அப்பா. நான் இலங்கைக்குச் செல்ல வேண்டியது அவசியம்’ என்று சங்கமித்ரா மனவுறுதியோடு அவரைச் சமாதானம் செய்ததாகவும் சொல்கிறார்கள்.

பௌத்தம் உலக மதமாக மாறியதற்கு அசோகர் முதன்மையான காரணமாக இருந்தார். பௌத்தத்தோடு சேர்த்து ஒரு புதிய இந்தியாவை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். எங்கோ மூலையில் கிடக்கும் ஒரு விசித்திர நிலமாக அதுவரை கருதிவந்த பலர், அசோகரின் பணிகளால் புத்தரின் நிலமாக இந்தியாவைக் காணவும் கொண்டாடவும் தொடங்கினர். வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்தியாவில் கால் பதித்துவிட மாட்டோமோ என்று பலர் ஏங்கித் தவிக்கத் தொடங்கினர். இந்தியப் பயணம் அவர்களுக்குப் புனித யாத்திரையாக மாறிப்போனது. அப்படியொரு பயணத்தை அடுத்துப் பார்ப்போம்.

(விரியும்)