மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 24 - பாஹியானின் பயணம்!

பாஹியானின் பயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாஹியானின் பயணம்

இந்தியாவை உலகம் கண்டுகொண்டது மனிதர்கள் மூலம் மட்டுமல்ல, இது போன்ற பாதைகள் மூலமும்தான்.

பாஹியான் - பாஹியான், ஃபாஹியான், பாசியான் ஆகிய பெயர்களால் தமிழில் அழைக்கப்படுகிறார். ஆங்கிலத்திலும்கூட வெவ்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. சீன உச்சரிப்பு வேறொன்றாக இருக்கிறது. சூரியனை மையமாகக்கொண்டு பூமி சுற்றுவதுபோல், புத்தரை மையமாகக்கொண்டு பூமியைச் சுற்றியலைந்தவர் பாஹியான். பௌத்தம்தான் இவர் மதம். பௌத்தம்தான் இவர் உலகம். பௌத்தம்தான் இவர் உயிர்.

பாஹியானின் பின்னணி குறித்து ஓர் எளிய சித்திரம் மட்டுமே கிடைக்கிறது. சீனாவிலுள்ள ஷங்சி மாகாணத்தில் பொது ஆண்டு 337-ல் பிறந்தார். மொத்தம் மூன்று அண்ணன்கள். முதல் பல் விழுவதற்குள் மூவரும் இறந்துவிட்டனர். பாஹியானையும் இழந்துவிடக் கூடாது என்று அஞ்சிய அவர் தந்தை புத்தரைத் தொழுது, `என் மகனை நீங்கள் காப்பாற்றினால் அவனை உங்களுக்கு அர்ப்பணித்து விடுவேன்’ என்று இறைஞ்சியிருக்கிறார். பாஹியான் உயிர் தப்பினார். ஆனால், வாக்களித்தபடி மடாலயத்திடம் ஒப்படைக்காமல் வீட்டிலேயே தன் மகனை வைத்திருந்திருக்கிறார் அப்பா. திடீரென்று ஒருநாள் குழந்தையின் உடல்நிலை மோசமடைய, ஐயோ தவறு செய்துவிட்டோமோ என்று பதறி பாஹியானை ஒரு மடாலயத்திடம் ஒப்படைத்திருக்கிறார் அப்பா.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 24 - பாஹியானின் பயணம்!

பாஹியானுக்குப் பத்து வயதானபோது அப்பா இறந்துவிடுகிறார். வீட்டில் அம்மா தனியாகக் கிடந்து அல்லாடுகிறார். உன் துறவு வாழ்க்கையை இதோடு முடித்துக்கொண்டு கிளம்பி வா என்று பாஹியானை நேரில் சென்று அழைத்திருக்கிறார் மாமா. பாஹியான் அவருக்கு அளித்த பதில் இது. ‘அப்பா சொன்னார் என்பதற்காகவோ, அவர் வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவோ நான் இங்கே தங்கியிருக்கிறேன் என்று நினைத்துவிட வேண்டாம். வெளி வாழ்க்கை புழுதி நிறைந்ததாக இருக்கிறது. அருவருப்பூட்டுகிறது. அங்கிருந்து விலகியிருக்கவே விரும்புகிறேன். துறவு வாழ்க்கைதான் எனக்குப் பொருத்தமானது.’

அம்மாமீது கொள்ளை ஆசை கொண்டவராகவே இருந்திருக்கிறார். அம்மா மறைந்த செய்தி கேட்டதும் மிகுந்த துயரத்தோடு இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருக்கிறார். முடிந்ததும் மீண்டும் மடத்துக்குத் திரும்பிவிட்டார். இளம் வயதிலேயே பௌத்தத்தின் சாரம் அவருக்குள் இறங்கிக் கலந்திருந்தது. ஒருநாள் தானியம் திருடுவதற்காக மடாலயத்துக்குள் திருடர்கள் புகுந்துவிட்டனர். இளம் துறவிகள் அனைவரும் திருடர்களைக் கண்டு அஞ்சி ஓடிவிட, பாஹியான் அச்சமின்றி அவர்களைக் கண்டு பரிதாபப்பட்டிருக்கிறார்.

‘உங்களுக்கு உணவுதான் வேண்டுமென்றால் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு தானியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உணவளிக்கத் தவறிவிட்டதால் தான் உங்களுக்கு இந்த அவலநிலை நேர்ந்திருக்கிறது. திருடுவதன் மூலம் இப்போது மீண்டும் நீங்கள் தவறிழைக்கிறீர்கள். இதற்கும் சேர்த்து நீங்கள் இன்னமும் மோசமான வறுமையையும் துயரத்தையும் சந்திக்கப் போகிறீர்கள். முன்கூட்டியே அதற்கு என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’

அசோகர் மறைந்து கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து சீனத்தை வந்தடைந்தது பௌத்தம். பௌத்தத்தின் புனித நூல் தொகுப்பு, திரிபிடகம். சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபிடகம் ஆகிய மூன்று திரட்டுகள் அதில் அடங்கியுள்ளன. முதலாவதும் மூன்றாவதும் புத்தரின் போதனைகளை உள்ளடக்கியவை. பௌத்த சங்கம் எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும், சங்கத்திலிருப்பவர்கள் என்னென்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் போன்றவற்றை விவரிப்பது விநயபிடகம். இந்தியத் துறவிகள், பௌத்த உபதேசங்களை மட்டுமே சீனர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தனர். சங்க விதிகள் தெரியாததால், சீனர்கள் அவரவர் விருப்பத்துக்கும் வசதிக்கும் ஏற்ப சங்கம் தொடங்கி நடத்திவந்தனர்.

ஆனால், பாஹியானால் மற்றவர்களைப்போல் கிடைத்தவரை லாபம் என்று அமைதிகொள்ள முடியவில்லை. `புத்தர்தான் எல்லாம் என்று ஆகிவிட்ட பிறகு, துறவுதான் வாழ்க்கை என்று தீர்மானித்துவிட்ட பிறகு சங்கத்துக்கான அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளாமல் விட்டுவிட முடியுமா... புத்தம், தம்மம், சங்கம் ஆகிய மும்மணிகளில் ஒன்றை இழந்தாலும் அது பெரும் இழப்பு அல்லவா? சீனாவில் எந்த மடாலயத்திலும் நான் தேடும் ஏடு இல்லை என்பது உண்மை. ஓர் ஏட்டைக் கற்காமல் இருப்பதற்கு அது என் கைக்கு அருகில் இல்லை என்னும் காரணம் எப்படிப் போதுமானதாக இருக்க முடியும்... கைக்குள் வந்து அவராகவே அடங்குபவரா புத்தர்... நானல்லவா அவரை நாடிச் செல்ல வேண்டும்? புத்தரின் நிலத்தில் வாழ்ந்து, புத்தரின் காற்றைச் சுவாசித்து, புத்தரின் கால் தடங்களைப் பணிந்து தொழுதால்தான் பௌத்தத்தின் இதயத்தைத் தரிசிக்க முடியும். எனவே, இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்வதுதான் இப்போது என் முன்னுள்ள ஒரே வழி’ என்று தீர்மானித்தார் பாஹியான்.

பொது ஆண்டு 399-ல் பாஹியான் உட்பட ஏழு துறவிகள் சீனாவிலிருந்து தங்கள் புனித யாத்திரையைத் தொடங்கினார்கள். உயிரைத் துச்சமாகக் கருதுபவர்களால் மட்டுமே இப்படியொரு பெரும் பயணத்தைத் தொடங்க முடியும். மலையைக் கடக்க வேண்டும். பாலைவனத்தைக் கடக்க வேண்டும். கடும் பனியையும் கொடும் வெயிலையும் ஏற்க வேண்டும். தெரிந்த, தெரியாத விலங்குகள் தாக்கலாம். கால்கள் துவளலாம். உடல்நலம் கெடலாம். நோய் தாக்கலாம். புத்தி பேதலிக்கலாம். எல்லாவற்றையும் கடந்து இந்திய மண்ணை மிதிப்பது சாத்தியமா... அப்படியே சாத்தியம் என்றாலும் மீண்டும் வீடு திரும்புவது குறித்து யோசிக்கவாவது முடியுமா... மற்றவர்கள் எப்படியோ, பாஹியான் மனதில் எந்தச் சலசலப்பும் இல்லை. ஓர் உயர்ந்த நோக்கத்தை அடைவதற்கான பயணத்தில் உயிர் பிரிகிறது என்றால் அதைவிட இன்பம் வேறென்ன இருக்க முடியும்?

இந்தியாவையும் சீனாவையும் இணைக்கும் புகழ்பெற்ற பட்டுச்சாலையில் எழுவரும் முன்னேறத் தொடங்கினர். சீனாவில் தொடங்கும் பட்டுப்பாதை தக்லாமக்கான் பாலைவனத்தின் விளிம்பைத் தொட்டு கடக்கிறது. உய்கர் மொழியில் இதன் பொருள் ‘தனித்துவிடப்பட்ட இடம்.’ கடப்பதற்கு மிகவும் கடினமான பகுதி என்பதால், கடக்காமல் இருப்பதே நல்லது என்னும் எச்சரிக்கையைப் பெயரிலேயே கொண்டிருக்கும் பகுதி. சும்மா இல்லை. இன்றளவும் சைபீரியாவுக்குச் சற்றும் குறைவில்லாத உறைபனிப் பகுதியாகவே இந்தப் பாலைவனம் நீடிக்கிறது. இந்தப் பாலைவனத்தைக் கடந்துவிட்டால், வடக்கு இமயமலைப் பகுதிகளை அடைந்துவிடலாம். அங்கிருந்து பாரசீகத்துக்கும் மத்திய கிழக்குக்கும் நீண்டு செல்கிறது பட்டுப்பாதை. படிப்பதற்கு எளிதானதாக இருக்கலாம். பாஹியான் காலத்தில் உலகின் ஆபத்தான பாதைகளில் ஒன்றாகப் பட்டுப்பாதை இருந்தது.

கடல்வழியும் இருக்கிறது. சீனாவின் தெற்குக் கரையிலிருந்து தென்கிழக்கு ஆசியக் கடல் பகுதிகளை அடைந்து, இந்தியாவைத் தொட்டு பிறகு மத்தியக் கிழக்குக்குச் செல்ல முடியும். ஆனால், இந்த வழியும் ஆபத்தானதுதான். `கப்பலில் செல்கிறீரா... பட்டுப்பாதையில் நடக்கிறீரா?’ என்று கேட்டால், `கடல் வேண்டாம். நடக்கிறேன்’ என்று சொல்பவர்களே அப்போது அதிகம் இருப்பார்கள். நடைப்பயணத்தில் ஆபத்து நேர்ந்தால் தப்பிக்கவாவது முடியும். கடலில் எதுவும் நம் கையில் இல்லை. அமைதியாகச் சென்றுகொண்டிருக்கும் கப்பல் எப்போது எந்தப் பாறையில் முட்டும், எப்போது மூழ்கும் என்று சொல்ல முடியாது. சூறாவளி தாக்கலாம். மழையும் வெள்ளமும் கப்பலைக் கவிழ்க்கலாம். சரியான திசையில்தான் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்தியா போக வேண்டும் என்று கப்பலில் ஏறி அமர்ந்தால், அது இந்தியாவில்தான் இறக்கிவிடும் என்று சொல்ல முடியாது. இன்றுபோல் திசையைத் துல்லியமாகக் காட்டும் கருவிகள் அன்று இல்லை.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 24 - பாஹியானின் பயணம்!

கடல் பயணத்தை வணிகர்கள் அதிகம் விரும்பினர். பண்டங்களைப் பட்டுப் பாதை மூலம் கொண்டுவருவதற்கு அதிக செலவாகும். நேரமும் அதிகம் பிடிக்கும். கடலில் ஆபத்துகள் இருந்தாலும், கப்பல் கவிழ்ந்து இழப்புகள் ஏற்படும் என்றாலும் பண்டங்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும், கொள்முதல் செய்யவும் கடலை அவர்கள் துணிந்து தேர்ந்தெடுத்தனர். சில வணிகர்கள் பட்டுப்பாதையையும் பயன்படுத்தினர். குதிரைகள் மூலமும், அடிமைகள் மூலமும் பண்டங்களை அவர்கள் ஏற்றி அனுப்பினர். தனி நபர்களாக அல்லாமல் குழுவாக (கேரவேன்) நடந்து செல்பவர்களே அதிகம் இருந்தனர். பயணிகள், வியாபாரிகள், நாடோடிகள், பாஹியான் போன்ற திருத்தல யாத்ரீகர்கள் ஆகியோர் பட்டுப்பாதையில் குழுக்களாகப் பயணம் செய்தனர்.

மனிதர்களையும் பண்டங்களையும் விலங்குகளையும் மட்டுமல்ல, கருத்துகளையும் ஓரிடத்திலிருந்து இன்னொன்றுக்குப் பட்டுப்பாதை சுமந்து சென்று இறக்கியது. இந்தியாவை உலகம் கண்டுகொண்டது மனிதர்கள் மூலம் மட்டுமல்ல, இது போன்ற பாதைகள் மூலமும்தான். தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, சீனா ஆகிய பகுதிகளில் பௌத்தம் பரவியதற்குக் கடல்வழியும் பட்டுப்பாதையும் முக்கியப் பங்காற்றியுள்ளன. குறிப்பாக, பட்டுப்பாதைக்கும் பௌத்தத்துக்குமான உறவு நெருக்கமானது. பௌத்தம் சீனாவை அடைந்ததும், இந்தியாவை சீனா கண்டுபிடித்ததும் பட்டுப்பாதை மூலமாகத்தான்.

எனவே, வணிகர்களின் மதமாகவும் பௌத்தமே அப்போது திகழ்ந்தது. மன்னர்களுக்கு அடுத்தபடியாகப் பொருளுதவி மூலம் பௌத்தத்தை வளர்த்தெடுத்தவர்கள் வணிகர்களே. அவர்கள் உதவியால் பட்டுப்பாதையில் பல இடங்களில் பௌத்த மடாலயங்கள் முளைத்தன. பாஹியான் போன்ற பயணிகள் இத்தகைய மடாலயங்களில்தான் தங்கி, இளைப்பாறினர். அவரைப் பொறுத்தவரை பட்டுப்பாதை இந்தியாவுக்கான பாதை மட்டுமல்ல. முக்திக்கான பாதையும்கூட!

(விரியும்)