மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 25 - பாதங்களின் சொற்கள்

பாதங்களின் சொற்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பாதங்களின் சொற்கள்

நகரைக் கடந்ததும், மீண்டும் பாலைவனம் வந்து ஒட்டிக்கொண்டது. அடுத்து ‘கோட்டான்’ எனும் இடத்தை அடைய வேண்டும். 3

இன்னமும் சீனப் பெருஞ்சுவரின் நிழலைக்கூடக் கடந்தபாடில்லை. அதற்குள், ‘இதற்கு மேல் இந்தச் சாலையில் நடக்க முடியும் என்று தோன்றவில்லை’ என்று பாஹியானே எழுதும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. பலம் மிக்க அரசு இல்லாத காரணத்தால், தடி எடுத்தவர்களெல்லாம் தண்டல்காரர்களாக மாறியிருந்தனர். கொலை, கொள்ளை, குட்டிப் போர்கள் என்று பட்டுப்பாதை ரணமாகிக்கொண்டிருந்தது. அமைதி தேடிச் சென்றவரை வன்முறையே வரவேற்றது.

நல்லவேளையாக, உள்ளூர் பௌத்த அரசர் ஒருவர், பாஹியான் குழுவினருக்கு அடைக்கலம் அளித்தார். சரி, சில வாரங்கள் காத்திருப்போம் என்று நம்பிக்கையோடு இருந்தனர். வாரங்கள் உருண்டோடின. மாதங்கள் உருண்டோடின. மோதல் ஓய்வதாகவே இல்லை. சீனாவிலிருந்து கிளம்பியவர், சீனாவுக்குள்ளேயே ஓராண்டுக் காலம் முடங்கியிருக்க வேண்டியிருந்தது.

அதன் பிறகு ஒரு நாள் பாதை சீரானது. பாஹியான் நடக்க ஆரம்பித்தார். இந்தமுறை மேலும் ஐவர் புதிதாகச் சேர்ந்துகொள்ள கூடுதல் பலத்தோடும் உற்சாகத்தோடும் குழு தனது பயணத்தைத் தொடங்கியது. பெருஞ்சுவரின் மேற்குமுனை வழியாக நடந்து, துன்ஹுவாங் எனும் இடத்தை அடைந்தனர். பட்டுப்பாதையில் செல்பவர்களுக்கு இது ஒரு முக்கியமான நிறுத்துமிடம். பாஹியான் குழுவுக்கு இங்கே இன்னொரு பௌத்த அரசர் அடைக்கலம் கொடுத்தார். அடுத்து அவர்கள் பாலைவனப் பகுதியைக் கடக்க வேண்டும் என்பதை அறிந்து, வழிக்குத் தேவையான உணவு, நீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களையும் அரசர் கொடுத்து அனுப்பினார். இப்படி வழி நெடுகிலும் பல நல்லுள்ளங்களின் ஆதரவு பாஹியானுக்குக் கிடைத்துக்கொண்டேயிருந்தது.

பாஹியான் தனது பயண அனுபவங்களை ஓரளவுக்கு விரிவாகவே பதிவுசெய்திருக்கிறார். எந்த வழியில் நடந்தோம், எந்தெந்த இடங்களைக் கடந்தோம், எங்கெங்கே தங்கி இளைப்பாறினோம், எந்தெந்த நல்லுள்ளங்கள் உதவின என்று அனைத்தையும் நினைவுகூர்ந்திருக்கிறார். புத்தரின் சீடர் என்பதாலோ என்னவோ, அதிகம் அலட்டிக்கொள்ளாமல் நிதானமாகவே எதையும் விவரிப்பார். எத்தனை பெரிய தடை ஏற்பட்டாலும், எவ்வளவு பெரிய இடர்ப்பாடு வந்தாலும், உடலும் உள்ளமும் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் அவர் அங்கலாய்ப்பதில்லை. இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பது போல் கடந்து போய்க்கொண்டேயிருப்பார்.

அப்படிப்பட்ட பாஹியானையே தக்லாமக்கான் பாலைவனம் உலுக்கிவிட்டது. ‘இது கொடூரமான இடமாக இருக்கிறது. வெப்பக்காற்று கொல்கிறது. கண்ணுக்குப் புலப்படாத தீயசக்திகள் பாலைவனமெங்கும் நிரம்பியிருக்கின்றன. மனிதர்கள் கும்பல் கும்பலாக மடிந்துகொண்டிருக்கிறார்கள். வானில் ஒரு பறவையும் இல்லை. நிலத்தில் ஒரு விலங்கும் இல்லை. ஏதேனும் ஆறுதலாகக் கண்ணுக்கு அகப்படுமா என்று உங்கள் பார்வையை நாலாபக்கமும் சுழற்றிக்கொண்டே இருப்பீர்கள். வழிபோல் ஏதாவது தட்டுப்பட்டால், திருப்பம்போல் ஏதாவது தோன்றினால் தப்பி வெளியேறிவிடலாம் என்று தவிப்பீர்கள். ஆனால், எதுவும் இருக்காது. எந்தத் திசையில் நடக்க வேண்டும் என்று தெரியாது. ஏதாவது ஒரு முடிவை நீங்களாகவே எடுக்க வேண்டும். நீங்களாகவே நம்பிக்கையோடு நடக்க வேண்டும். இதுதான் பாதை என்பதை உணர்த்தும் வகையில் ஒரேயொரு தடயம் மட்டும் இருந்தது. இறந்தவர்களின் காய்ந்துபோன எலும்புகள்.’

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 25 - பாதங்களின் சொற்கள்

இறந்தவர்களே உயிரோடு இருப்பவர்களுக்கு வழிகாட்டினார்கள். ஒவ்வோர் அடியை எடுத்துவைக்கும்போதும், `வா... வா...’ என்று வாய் நிறைய சிரிப்போடு வரவேற்றது மரணம். உடலைவிட அதிகம் சோர்ந்திருந்தது மனம். இயன்றவரை வேகமாகக் கடப்பதுதான் பாலைவனத்தை வெல்வதற்கு ஒரே வழி. ஆனால், உடலும் மனமும் `வேண்டாம். இதோடு நிறுத்து’ என்று போட்டிபோட்டுக்கொண்டு நொடிக்கு நொடி அலறிக்கொண்டிருந்தன. `கண்களை மூடி அப்படியே படுத்துக்கொள். எல்லா வதைகளும் முடிந்துவிடும்’ என்று யாரோ காதுக்குள் சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். புத்தம் சரணம் என்று பாஹியான் நடந்துகொண்டே இருந்தார். ஒவ்வொரு நாளும் 15 மைல். அடுத்த 17 நாள்களுக்கு இது ஒன்றுதான் இலக்கு. இடைவெளி இல்லை. ஓய்வில்லை. மண்ணில் பாதி புதைந்தும், பாதி புதையாமலும் நீட்டிக்கொண்டிருந்த ஒவ்வொரு துண்டு எலும்பும் வழிகாட்டும் பலகைபோல் அவர்களை உந்தித் தள்ளிக்கொண்டேயிருந்தது.

‘லோப் நோர்’ எனும் பெயர்கொண்ட ஒரு நகரை அடைந்தனர். கடை வீதிகளின் பரபரப்பையும், மனிதர்களின் சுறுசுறுப்பான நடமாட்டத்தையும் கண்டபோது மீண்டும் உயிர் வந்து ஒட்டிக்கொண்டதுபோல் இருந்திருக்க வேண்டும். நகருக்கு அருகில் படர்ந்திருந்த ஏரியைக் கண்டதும் உடலெல்லாம் சிலிர்த்திருக்க வேண்டும். பாஹியான் என்பதால், உணர்வுகளை வெளிப்படுத்த ஒரேயொரு சொல்லைக்கூட அவர் வீணடிக்கவில்லை. `நடந்தோம், நகரை அடைந்தோம்.’ அவ்வளவுதான்.

லோப் நோரில் இதமான வரவேற்பு கிடைத்தது. பௌத்த அரசர் கனிவோடு வரவேற்றார். அங்கிருந்த ஒரு நல்ல பௌத்த மடாலயத்தைக் கண்டு மகிழ்ந்தார் பாஹியான். கிட்டத்தட்ட 4,000 பௌத்த பிக்குகள் அங்கே தங்கியிருந்தனர். பாஹியானும் கொஞ்சம் ஓய்வெடுத்துக்

கொண்டார். எவ்வாறு புத்தர் வணங்கப்படுகிறார், எப்படிப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன, பிக்குகளின் பழக்க வழக்கங்கள் எப்படியிருக்கின்றன என்பதையெல்லாம் கவனித்துக்கொண்டார். பிக்குகளுக்கு சம்ஸ்கிருதம் தெரிந்திருந்தது. அவர்களிடமிருந்த ஏடுகளை வாங்கிப் பார்த்தார். பாஹியானுக்கு மரியாதையுடன்கூடிய வரவேற்பே கிடைத்தது என்றாலும், மடாலயத்திலிருந்தவர்கள் சிக்கனமானவர்களாக இருந்ததால் வழித் தேவைகளுக்குப் போதுமான உணவை அவர்கள் கொடுத்தனுப்பவில்லை என்று தெரிகிறது. இதற்கும் பெரிதாகக் குறைபட்டுக்கொள்ளவில்லை பாஹியான்.

நகரைக் கடந்ததும், மீண்டும் பாலைவனம் வந்து ஒட்டிக்கொண்டது. அடுத்து ‘கோட்டான்’ எனும் இடத்தை அடைய வேண்டும். 300 மைல் தொலைவில் அமைந்துள்ள பௌத்த ராஜ்ஜியம் அது. அசோகரோடு தொடர்புடைய இடமென்று அது அழைக்கப்படுகிறது. கதைப்படி அசோகருக்கும் பத்மாவதிக்கும் பிறந்தவன் குணாளன். அம்மாவின் மரணத்துக்குப் பிறகு எட்டு வயது குணாளனை உஜ்ஜயினிக்கு அனுப்பிவைக்கிறார்கள். அடுத்த மௌரிய அரசனாக உஜ்ஜயினியை வளர்த்தெடுக்கும் பணிகள் ஆரம்பமாகின்றன. ஒருநாள் அசோகர் அவையிலுள்ள ஆசிரியர்களுக்குக் கடிதமொன்றை எழுதுகிறார். `என் மகனுக்குக் கல்வி புகட்டும் பணியை ஆரம்பித்துவைக்கவும்’ என்பதுதான் கடிதத்தின் சாரம்.

அந்தக் கடிதம் அசோகரின் மற்றொரு மனைவியின் கையில் சிக்குகிறது. குணாளனை எப்படியாவது தடுத்து நிறுத்தி, தன் மகனை அரசனாக்கிவிட வேண்டும் என்பது அந்த ராணியின் கனவு. கையில் கிடைத்த கடிதத்தை அவள் நயவஞ்சமாகத் திருத்தியனுப்புகிறாள். எப்படி? பிராகிருதத்தில் `அதேயு’ என்றால் கல்வி. ராணி அதில் ஒரேயொரு புள்ளியைச் சேர்க்கிறாள். அதேயு இப்போது `அந்தேயு’ என்று மாறிவிடுகிறது. இதன் பொருள், என் மகனின் கண்களைத் தோண்டியெடுத்துவிடுங்கள்!

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 25 - பாதங்களின் சொற்கள்

குணாளனே கடிதத்தை ஏந்தி வந்து அரண்மனையில் ஒப்படைக்கிறார். வாங்கிப் படித்த அதிகாரியின் கண்கள் கலங்கிவிடுகின்றன. அப்படி என்ன எழுதிவிட்டார் அப்பா என்று குழப்பத்தோடு வாங்கிப் படிக்கிறான் குணாளன். அவனுக்கும் அதிர்ச்சிதான் என்றாலும், விரைவில் சுதாரித்துக்கொள்கிறான். பேரரசர் அசோகர் காரணமில்லாமல் எதையாவது செய்வாரா... அவர் சொல்வதற்குக் கீழ்ப்படியாமல் போனால் எனக்கு மட்டுமா, மௌரியப் பேரரசுக்கே அல்லவா அவப்பெயர்? சற்றும் யோசிக்காமல் பழுக்கக் காய்ச்சிய இரும்பை எடுத்து, தன் கண்களைத் தானே பறித்துக்கொண்டான் குணாளன். ராணிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால் தண்டனையைப் பார்த்துக்கொண்டிருந்த அதிகாரிகள் நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் அலைந்து திரிந்து ஓரிடத்தைக் கண்டுபிடித்து குடியேறியதோடு, அங்கே ஓர் அரசரையும் தேர்ந்தெடுத்து வாழ்ந்தனர். அந்த இடம்தான் கோட்டான். இந்தியர்களும் சீனர்களும் மட்டுமன்றி இரானியர்களும் வாழும் பகுதியாக அது மாறியது.

கோட்டானை அடைவது பெரும் சவாலாகவே இருந்திருக்கிறது. பாதை இருப்பதுபோலவே இருக்கும். நீங்கள் நடந்துகொண்டேயிருப்பீர்கள். திடீரென்று பெருங்காற்று எங்கிருந்தோ அடிக்கும். சில நிமிடங்கள் கண்களை மூடி அமைதியாக இருந்துவிட்டு கண்களைத் திறந்தால், உங்கள் முன்பிருந்த பாதை முழுக்க மணலில் புதையுண்டு போயிருக்கும். இனி எந்தத் திசையில் நடப்பதென்று தெரியாமல் திணறிவிடுவீர்கள். `இது போன்ற சமயங்களில்தான் குழுத் தலைவரின் வழிகாட்டுதல் நமக்குத் தேவைப்படுகிறது’ என்கிறார் பாஹியான். வணிகர்களோ, துறவிகளோ நடைப்பயணம் செய்யும் எல்லோரும் தகுதி வாய்ந்த வழிகாட்டி ஒருவரை நியமித்துக்கொள்கிறார்கள். பயணம் முடியும்வரை அவர் சொல்வதுதான் கடவுள் வாக்கு. அவர் சுட்டிக்காட்டும் இடத்தில்தான் காலைவைக்க வேண்டும். அவர் சொல்லும் இடத்திலிருந்துதான் நீரை அள்ளிப் பருக வேண்டும். எங்கே எந்த விலங்கு வரும், எது ஆபத்தானது என்பதெல்லாம் அவருக்குத்தான் தெரியும். பாஹியானின் குழுவுக்கும் அப்படியொரு வழிகாட்டி அமைந்திருந்தார்.

`அவர் போக, இருக்கவே இருக்கிறார் எங்கும் நிறைந்த புத்தர். அவருடைய அருள் ஒன்று போதாதா... எத்தனை பாலைவனங்கள் குறுக்கிட்டால்தான் என்ன... எவ்வளவு வதைகள் ஏற்பட்டால்தான் என்ன? பற்றிக்கொள்ள புத்தரின் கதகதப்பான கரம் இருக்கும்வரை எனக்கும் இந்தியாவுக்கும் நடுவில் எந்தப் பெரிய சக்தியும் வந்துவிட முடியாது!’

(விரியும்)