மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 26 - பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
News
பௌத்த இந்தியா

அவர் இந்தியா வந்தது என்னவோ ஏடு தேடித்தான். ஆனால், அதை மட்டும் எடுத்துக்கொண்டு ஊர் திரும்பிவிட முடியுமா என்ன?

பாலைவனத்தைக் கடந்ததும், கோட்டானில் உள்ள கோமதி மடாலயத்தில் சிறிது காலம் தங்கினார் பாஹியான். மூவாயிரம் பிக்குகளைக்கொண்ட புகழ்பெற்ற மடாலயம் அது. ஒருநாள் ஏதோவொரு சடங்குக்காக வெவ்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான துறவிகள் திரண்டு நின்று ஒரே நேரத்தில் புத்தரைத் தொழுத காட்சியைக் கண்டார் பாஹியான். அவர் மனதில் அந்தக் காட்சி அழுத்தமாகப் பதிந்துபோனது. புவியே புத்தரின் நிலமாக மாறிவிட்டதுபோல் பரவசமடைந்தார். பௌத்தர்கள் பெருகப் பெருக அமைதியும் பெருகும். அமைதி பெருகினால், பூமியைவிடச் சிறந்த சொர்க்கம் இன்னொன்றில்லை அல்லவா?

விடைபெற்றுக்கொண்டு பரவசத்தோடு மேற்கு நோக்கி முன்னேறினார் பாஹியான். நடக்க, நடக்க ஊசிபோல் குளிர் உடலைக் குத்த ஆரம்பித்தது. அந்தக் குளிர் எங்கிருந்து வருகிறது என்பது அவருக்குத் தெரியும் என்பதால் பொறுத்துக் கொண்டார். படபடப்பு அதிகரித்தது. பயணத்தின் இறுதிக்கட்டத்தை இப்போது அவர் நெருங்கிக் கொண்டிருந்தார். சீனாவிலிருந்து புறப்பட்டு வந்த துறவியை வரவேற்க இமயமலை காத்துக் கொண்டிருந்தது.

ஆனால், ஏனோ இமயத்தைக் கண்டதும் பாஹியான் அரண்டுபோனார். பனி படர்ந்து பூதாகரமாகத் திரண்டு நிற்கும் இமயம் பாஹியானுக்குள் ஒரு பூதம்போல் இறங்கி ஆட்கொள்ள ஆரம்பித்தது. மனதின் அடியாழத்தில் உறைந்துகிடந்த அச்சங்களெல்லாம் புறப்பட்டு வந்து நேரில் நின்றதுபோல் இருந்தது. அவரால் இமயமலையை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏறிட்டுப் பார்க்கவும் முடியவில்லை. பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. எங்கே போனாலும் நிழல்போல் மலை தொடர்ந்துவந்தது. இரவு, காலை, மதியம் என்று எல்லா நேரங்களிலும் விழித்துப் பார்த்துக்கொண்டேயிருந்தது. தவிரவும், நெருங்க, நெருங்க உருவில் வளர்ந்துகொண்டே போனது.

யாராவது சொன்னார்களா அல்லது அவராகவே நினைத்துக்கொண்டாரா என்று தெரியவில்லை. இமயமலைக்குப் பின்னால் ஆபத்தான விலங்குகள் மறைந்து வாழ்கின்றன என்று அச்சத்தோடு பதிவுசெய்திருக்கிறார் பாஹியான். சீனர் என்பதாலோ என்னவோ மலைக்குப் பின்னால் டிராகனும் மறைந்து வாழ்வதாக அவர் நம்பினார். அதைச் சீண்டாமல் இருப்பது முக்கியம். மீறினால் அது உங்களை நோக்கி நஞ்சைக் கக்க ஆரம்பிக்கும் என்கிறார் பாஹியான். திரவ வடிவில் இல்லாமல் காற்றுபோல் நஞ்சு பறந்துவரும். ஒரு டிராகனின் வாயிலிருந்து பனிமழை புறப்பட்டு வரும் என்றால், இன்னொன்றின் வாயிலிருந்து கல்மழை பெய்யும். டிராகனிடம் சிக்குபவர்கள் தப்பிப்பது அபூர்வத்திலும் அபூர்வம் என்று எச்சரிக்கிறார் பாஹியான். டிராகன் மட்டுமல்ல, இமயமலையே ஆபத்தான ஒரு விலங்குதான் அவருக்கு.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 26 - பௌத்த இந்தியா

பாஹியானின் மிரட்சியை இன்றைய ஆய்வாளர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. 1,600 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கண்ட இமயமலை, கடும் பனியையும் குளிரையும் அள்ளித் தெளித்து வருவோர், போவோரையெல்லாம் இரக்கமின்றிக் கொன்றுகொண்டிருந்தது. திடகாத்திரமான பயணிகளையே உடலளவிலும் மனதளவிலும் வீழ்த்திப்போடும் ஆற்றல்கொண்டது இமயம். பாஹியானால் இமயத்தைக் காண முடிந்ததே இமாலயச் சாதனைதான். இதைச் சொல்வதற்குக் காரணம் அவர் வயது. என்ன வந்தாலும் பரவாயில்லை, இந்தியாவைக் கண்டே தீருவேன் என்று புறப்பட்டு வந்த பாஹியான், அறுபது வயது கடந்த முதியவர். சில தரவுகளின்படி அவர் வயது 62!

பாஹியான் தனது குறிப்புகளில் இமயமலையை ‘வெங்காய மலைகள்’ என்று அழைக்கிறார். ஒரு பிரமாண்டமான வெங்காயம் நிற்பது போல் இமயம் அவருக்குத் தோன்றியிருக்கிறதுபோலும். சீனாவிலிருந்து இமயத்தை அடைவதற்கு பாஹியானுக்கும் அவர் குழுவுக்கும் மூன்றாண்டுகள் பிடித்திருக்கின்றன. ஒருவழியாக இமய மலையை வெற்றிகரமாகக் கடந்து, இன்றைய வடக்கு பாகிஸ்தான் அமைந்திருக்கும் ஸ்வாட் பள்ளத்தாக்கை வந்தடைந்தார் பாஹியான். இமயமலை உண்டாக்கிய அச்சம் நீங்கி ஆனந்தத்தில் ஆழ்ந்துபோனார்.

பாஹியான் முதலில் கண்ட இந்திய நகரம் காந்தாரம். இன்றைய வடகிழக்கு பாகிஸ்தானில் அமைந்திருக்கும் பெஷாவரின் பண்டைய பெயர்தான் காந்தாரம். பெஷாவர் பள்ளத்தாக்கு, ஸ்வாட் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியிருந்தது காந்தாரம். பாஹியான் காலடி எடுத்துவைத்தது ஸ்வாட் பள்ளத்தாக்கில். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த நகரமாக அப்போது இருந்தது ஸ்வாட். அசோகர் காலத்தில்தான் முதன்முதலாக பௌத்தம் இங்கே அறிமுகப்படுத்தப்பட்டது. அசோகரின் ஆரம்பகாலத் தூண்கள் ஸ்வாட்டில் அமைந்துள்ளன. மௌரியர்களுக்குப் பிறகு கிரேக்கர்களின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துசேர்ந்தது. கிரேக்கத்திடமிருந்து விடுபட்ட பிறகு, தனி ராஜ்ஜியமாக மாறியது காந்தாரம்.

அசோகர் தொடங்கிவைத்த பணியை குஷாணப் பேரரசர் கனிஷ்கர் நிறைவுசெய்தார். பௌத்தத்தை இந்தியாவில் பரப்பியதில் கனிஷ்கரின் பங்கு முக்கியமானது. காந்தாரத்தின் பொற்காலம் என்று புகழப்படும் அளவுக்கு அவர் ஆட்சியில் காந்தாரத்தின் இதயத்தோடு பௌத்தம் ஒன்று கலந்தது. தட்சசீலம், புருஷபுரம் (பெஷாவர்) போன்ற நகரங்கள் பௌத்தப் பண்பாட்டு மையங்களாகத் திகழ்ந்தன. எப்படிப்பட்ட பௌத்தம்? அசோகரின் பௌத்தம் `ஹீனயானம்’ என்று அழைக்கப்படுகிறது. கனிஷ்கர் மகாயானத்தைத் தோற்றுவித்தவராக அறியப்படுகிறார். இரு பிரிவுகளுக்கிடையில் பல தத்துவார்த்த வேறுபாடுகள் இருக்கின்றன என்றாலும், இருவருக்கும் புத்தர் பொதுவானவர். `என்னுடையதே பெரியது, உன்னுடையது தாழ்ந்தது’ என்று அவ்வப்போது கருத்து மோதல்கள் வெடித்தாலும், பௌத்தத்தின் சாரத்தை இருவரும் அவரவர் வழியில் உள்வாங்கி, அவரவர் வழியில் பரப்புரை செய்துவந்தனர். இந்த இரு பிரிவுகளுக்குள் கிளைப் பிரிவுகளும் இருக்கின்றன. பாஹியான் கண்ட இந்தியா மகாயான பௌத்தத்தை உயர்த்திப் பிடித்திருந்தது.

கனிஷ்கரின் ஆட்சியில் இந்தியா கடந்து, மத்திய ஆசியாவிலும் பௌத்தம் பரவியது. அசோகர் வழியில் குறிப்பிடத்தக்க பௌத்தக் கட்டுமானங்களை கனிஷ்கர் உருவாக்கினார். முந்தைய பௌத்தத் தூண்கள் பழுதுபார்க்கப்பட்டன, விரிவாக்கப்பட்டன. மற்றொரு பக்கம் புதிய தூண்களும் வளர்ந்தன. மடாலயங்களிலும் மலையடிவாரங்களிலும் பெரிய பெரிய புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப்பட்டன. புத்தரின் முற்பிறவிகளை விவரிக்கும் புத்த ஜாதகக் கதைகளை நினைவுகூரும் வகையில், பல நினைவிடங்களை கனிஷ்கர் உருவாக்கினார். இவற்றையெல்லாம் தரிசிக்க, பல நாடுகளிலிருந்து பௌத்தத் துறவிகள் இந்தியாவுக்குத் திரண்டுவந்தனர். மத்திய ஆசியா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து பலர் பௌத்தம் தொடர்பான இடங்களை தரிசிப்பதற்காகவே இந்தியாவுக்கு வந்திருக்கின்றனர்.

பாஹியானும் இந்த வரிசையில் வருபவர்தான். அவர் இந்தியா வந்தது என்னவோ ஏடு தேடித்தான். ஆனால், அதை மட்டும் எடுத்துக்கொண்டு ஊர் திரும்பிவிட முடியுமா என்ன? அசோகர் தொடங்கி கனிஷ்கர் வரை பௌத்த மன்னர்கள் உருவாக்கிய கட்டுமானங்கள் அனைத்தையும் தேடித் தேடி கண்டு மகிழ்ந்தார் பாஹியான். இந்தியாவில் அவர் கண்ட பௌத்த மடாலயங்கள் அனைத்தும் மிகுந்த மகிழ்ச்சியோடு அவரை வரவேற்று தங்கவைத்தன. எந்த அடிப்படையில் துறவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது என்பதையும் பாஹியான் பதிவுசெய்திருக்கிறார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 26 - பௌத்த இந்தியா

தூர தேசத்திலிருந்து குழுவாக எட்டுப் பேர் ஒரு மடாலயத்துக்குப் போகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் வேற்று நாட்டிலிருந்து புத்தரை நாடி வருபவர்கள் என்பது பார்க்கும்போதே தெரிந்துவிடும். களைப்போடு இருக்கும் அவர்களை உடனடியாக வரவேற்று, உணவு கொடுத்து உபசரிப்பார்கள். பிறகு ஒவ்வொருவரிடமும் உரையாடுவார்கள். `நீங்கள் எந்த நாட்டிலிருந்து வருகிறீர்கள்... எந்த மடாயலத்தில் துறவியாக இருக்கிறீர்கள்... எத்தனை ஆண்டுகளாகத் துறவியாக இருக்கிறீர்கள்?’ பாஹியானிடமும் இக்கேள்விகள் கேட்கப்பட்டன. `நான் அளித்த பதிலைவைத்து, எனக்கு எத்தகைய வசதிகள் அளிக்கப்பட வேண்டும், உறங்குவதற்கு எத்தகைய அறை ஒதுக்கப்பட வேண்டும், எப்படிப்பட்ட மரியாதைகள் தரப்பட வேண்டும் போன்றவற்றையெல்லாம் முடிவுசெய்கிறார்கள். எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு இருக்கிறது இந்தியர்களிடம். விதிமுறைகளின்படி எங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் தராதரத்துக்கு ஏற்றபடி வசதி வாய்ப்புகள் செய்து தரப்பட்டன’ என்று நிறைவோடு எழுதுகிறார் பாஹியான்.

ஆயிரக்கணக்கான பௌத்தர்களைக் கண்டு பரவசமடைந்த பாஹியான், ஸ்வாட் பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கில் சிறியதும் பெரியதுமாக நிறைந்திருந்த மடாலயங்களைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார். அவருடைய குறிப்புகள்படி மொத்தம் 500 மடாலயங்கள் ஸ்வாட்டில் மட்டும் இருந்திருக்கின்றன. பெரிய மடாயலங்களில் புத்தர் தொடர்பான புனிதப் பொருள்கள் எதையேனும் பாதுகாத்து வைத்திருப்பார்கள். ஒரு மடாலயம் புத்தரின் கைத்தடியை பத்திரப்படுத்தி வைத்திருக்கும். இன்னொன்று புத்தரின் தலைமுடியைப் பேழையில் வைத்திருக்கும். `புத்தரின் தலைமுடி எங்களிடம் இருக்கிறது’ என்று ஒரு மடாலயம் அறிவிக்குமென்றால், `எங்களிடம் புத்தரின் நகம் இருக்கிறது’ என்று இன்னொன்று பெருமிதம்கொள்ளும். முக்கியமான தருணங்களில், முக்கியமான சடங்குகளின்போது துறவிகள் இந்தப் புனிதப் பொருள்களை பயபக்தியோடு ஏந்தி மக்களுக்குக் காட்சிப்படுத்துவார்கள். இவற்றை தரிசிப்பதும் வழிபடுவதும் பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியமானவை. பாஹியான் இவற்றையெல்லாம் தரிசித்து மனநிறைவு கண்டார்.

தன்னை வருத்திக்கொண்டிருந்த வலிகளெல்லாம் விடைபெற்றுச் சென்றதை உணர்ந்தார் பாஹியான். அசோகரின் இந்தியா, கனிஷ்கரின் இந்தியா, புத்தரின் இந்தியா அந்தச் சீன முதியவரை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டது.

(விரியும்)