
பாஹியான் தன் பயணத்தை நிறுத்தவில்லை. கண்ட வரை போதும் என்று அவர் மனம் நிறைவடையவில்லை.
கண்முன்னால் விரிந்திருக்கும் அனைத்தையும் அல்ல... தனக்கு என்ன தேவையோ அதை மட்டுமே ஒருவர் தேர்ந்தெடுத்துக் காண்கிறார். பாஹியானும் அப்படித்தான். புத்தரோடு தொடர்புடைய இடங்கள் அனைத்தையும் அவர் சுற்றியலைந்தார். பௌத்த விகாரங்களைத் தேடித் தேடிச் சென்று தரிசித்தார். பௌத்த சிற்பங்களையும் கட்டுமானங்களையும் கண்கள் விரித்துப் பார்த்து ரசித்தார். மடாலயங்களில் தங்கினார். பாஹியான் இந்தியர்களைக் கண்டார் என்றால், பௌத்தர்களைக் கண்டார் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவைப் புகழ்கிறார் என்றால், பௌத்தத்தைப் புகழ்கிறார். இந்தியப் பண்பாடு என்றால், பௌத்தப் பண்பாடு. இந்திய மதம் என்றால், பௌத்தம். இந்தியர் என்றால், பௌத்தர். புத்தரோடு தொடர்பில்லாத எதுவும் அவருக்கு இந்தியாவே அல்ல.
ஒருநாள் சிறுவனொருவன் களிமண்ணைக் கொண்டு பொம்மைக் கட்டடம் ஒன்றை உருவாக்கிக்கொண்டிருப்பதை புத்தர் கண்டார். பிற்காலத்தில் இந்த இடத்தில் கனிஷ்கர் ஒரு தூணை உருவாக்குவார் என்று தன் சீடர்களிடம் அறிவித்தார் புத்தர். அவர் வாக்கு பலித்தது. பெஷாவரில் கனிஷ்கர் ஒரு பெரிய தூணைத் தன் பெயரில் எழுப்பினார். புத்தரின் நினைவுச் சின்னங்கள் இதில் பாதுகாக்கப்பட்டதாகத் தெரிகிறது. உலகப் புகழ்பெற்றுவிட்ட கனிஷ்கர் தூணைக் கண்டு திகைத்துப்போனார் பாஹியான். `இதுவரை மனிதக் கரங்கள் உருவாக்கிய தூண்களில் மிக உயர்ந்தது இதுதான்’ என்கிறார் பாஹியான். இந்தத் தூண் இன்று இல்லை. சிதிலங்கள் மட்டுமே இருக்கின்றன. அவற்றைக் கொண்டு மதிப்பிடும் ஆய்வாளர்கள், குறைந்தது 400 அடி உயரம்கொண்டதாக கனிஷ்கரின் தூண் இருந்திருக்கலாம் என்கிறார்கள்.

இந்தப் புனிதத் தலத்தோடு தொடர்புடைய கதையொன்று உண்டு. நீண்டகாலமாக புத்தரின் பிச்சைப் பாத்திரம் இந்நாட்டில் பாதுகாப்பாக இருந்துவந்ததாம். பக்கத்து நாட்டு மன்னனுக்கு இந்தப் பாத்திரத்தின்மீது ஒரு கண். எப்படியாவது அதைக் கவர்ந்து வந்துவிட வேண்டும் எனும் துடிப்பில், ஒருநாள் தன் படைகளை அனுப்பி பெஷாவரை முற்றுகையிட்டான். `இனி இது என் நாடு. எனவே, புத்தரின் பிச்சைப் பாத்திரமும் என்னுடையதே’ என்று மகிழ்ச்சியோடு அதைக் கைப்பற்றுவதற்காகச் சென்றான். இருப்பதிலேயே பெரிய யானையொன்றைத் தருவித்து அதன்மீது பிச்சைப் பாத்திரத்தை ஏற்றினான். யானையோ நிலத்தில் சுருண்டு படுத்துக்கொண்டு, எழுந்திருக்க மாட்டேனென்று அடம்பிடித்தது.
உடனே மன்னன், நான்கு சக்கரம்கொண்ட ஒரு பெரிய வண்டியைக் கொண்டுவரச்செய்து எட்டு யானைகளை அந்த வண்டியில் பிணைத்தான். உலகையே சுமந்து செல்லும் வலுவோடு அந்த வண்டி புறப்படத் தயாரானது. புத்தரின் பாத்திரத்தை ஏற்றியதுதான் தாமதம். ஒரேயோர் அங்குலம்கூட வண்டி நகரவில்லை. மன்னன் தன் தவற்றை உணர்ந்தான். `புத்தரின் பிச்சைப் பாத்திரத்தை ஏற்பதற்கான தகுதி இன்னமும் எனக்கு வரவில்லை’ என்று வருந்தி, கண்ணீர்விட்டு அங்கொரு மடாலயத்தை அமைத்தான். அதற்குள் புத்தரின் பிச்சைப் பாத்திரம் பாதுகாக்கப்பட்டது.
பாஹியான் அந்த மடாலயத்தை தரிசித்தார். அங்கே எழுநூறு துறவிகள் தங்கியிருந்தனர். ஒவ்வொரு மதியமும் புத்தரின் பிச்சைப் பாத்திரம் வெளியில் கொண்டுவரப்படும். சாமானியர்கள் தங்களால் இயன்றதைச் செலுத்துவார்கள். அதன் பிறகு திரண்டிருக்கும் அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்படும். மாலை நேரம் ஊதுபத்தி மணம் கமழும் நேரம் மீண்டும் பிச்சைப் பாத்திரம் வெளியில் கொண்டுவரப்படும். இன்னதுதான் அதில் போட வேண்டும் என்றில்லை. `நானொரு ஏழை, என்னால் மலர் காணிக்கைதான் செலுத்த முடியும்’ என்றால், அதையும் அன்போடு பெற்றுக்கொள்வார்கள். மாறாக, செல்வந்தர்கள் எவ்வளவு இட்டாலும் அந்தப் பாத்திரம் நிறையவே நிறையாதாம்!
புத்த ஜாதகக் கதைகள் பாஹியானுக்கு அத்துப்படி என்பதால், அந்தக் கதைகளோடு தொடர்புடைய இடங்களையெல்லாம் ஆர்வத்தோடு கண்டுகளித்தார். ஒருநாள் கழுகொன்று புறாவைப் பாய்ந்து பிடித்ததை புத்தர் முந்தைய பிறவியொன்றில் கண்டார். `பாவம் அந்தப் புறா. தன் பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. அதை தயவுசெய்து விட்டுவிடு’ என்று மன்றாடினார் புத்தர். ‘எனக்குப் பசிக்கிறதே! என் உணவுக்கு நான் எங்கே போவேன்?’ என்று கழுகு குறைபட்டுக்கொண்டதும், தன் சதையை அரிந்து கொடுத்து இரு உயிரினங்களையும் காத்தார் புத்தர். இந்தக் கதையோடு தொடர்புடைய நினைவிடத்தை ஸ்வாட் பள்ளத்தாக்கில் தரிசித்தார் பாஹியான்.
தட்சசீலத்தைச் சுற்றிவந்து மகிழ்வதோடு, `இந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?’ என்று கேட்டு தனக்குத் தெரிந்த ஒரு ஜாதகக் கதையை விவரிக்கிறார் பாஹியான். தட்சசீலம் என்றால் பாலி மொழியில் துண்டிக்கப்பட்ட தலை. புத்தர் தனது முற்பிறவியில் இங்கே வந்தபோது ஒரு சிங்கத்தைக் கண்டார். பசியோடு இருக்கும் சிங்கத்துக்குத் தன் தலையை வெட்டியெடுத்து அவர் அளித்தார். அதனால்தான் `தட்சசீலம்’ என்று பெயர் வந்தது. சிங்கம் வரும் இடத்தில் புலியைப் போட்டும் ஒரு ஜாதகக் கதை இருக்கிறது. வேறு சில கதைகளிலும் புத்தர் தன் உடலின் பாகங்களை இவ்வாறு வெவ்வேறு விலங்குகளுக்கு அளிக்கிறார். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும், கருணை காட்ட வேண்டும் என்னும் பௌத்த நெறியை வலியுறுத்தும் கதைகள் இவை.
இந்தியா செல்லும் வழிநெடுகிலும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த விதவிதமான மக்கள் குழுக்களைக் கண்டார் பாஹியான். சீன உடை உடுத்தியிருப்பார்கள். சீனம் பேசுவார்கள். ஆனால் பழக்கவழக்கங்களைப் பார்க்கும்போது இந்தியரோ என்று நினைக்கத் தோன்றும். `இந்தியாவின் தாக்கம் இந்தியாவைக் கடந்தும் அடர்த்தியாகப் பரவியிருக்கிறது’ என்கிறார் பாஹியான். மத்திய ஆசிய மக்களிடம் இந்தியாவின் தாக்கம் இருந்ததுபோலவே, இந்தியர்களிடம் மத்திய ஆசியாவின் தாக்கம் இருந்ததையும் பாஹியான் கவனித்தார். இந்தியர்களுக்கு மத்திய ஆசிய மொழிகள் தெரிந்திருந்தன. சாமானிய இந்தியர்களின் எளிய உடைகளைக் காணும்போது, அவர்கள் அளித்த உணவைப் பெற்றுக்கொள்ளும்போது மத்திய ஆசியாவில் இருப்பதைப் போன்ற உணர்வே அவருக்கு ஏற்பட்டது. மத்திய ஆசியாவையும் இந்தியாவையும் இணைக்கும் ஓர் அம்சமாக பௌத்தம் திகழ்ந்ததை பாஹியான் கண்டார்.
`நான் பார்த்தவரை எல்லாப் பகுதிகளிலும் நட்சத்திரங்கள்போல் வீடுகள் இடைவெளிவிட்டுக் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பகோடா போன்ற அமைப்பு காணப்படுகிறது. பௌத்தத் துறவிகள் அதில் தங்கி ஓய்வெடுக்கலாம். இதற்கும் விதிமுறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறவியும் ஒரு வீட்டில் மூன்று தினங்கள் தங்கலாம். அதற்குள் அவர் ஒரு மடாலயத்தைக் கண்டறிந்து அங்கே மாறிக்கொள்ள வேண்டும். மடாலயம்தான் இருக்கிறதே அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடாமல், சாமானிய மக்களும் பௌத்தர்களைத் தாமே முன்வந்து ஆதரிப்பது பௌத்தம் எந்த அளவுக்கு அவர்கள் வாழ்வோடு கலந்திருந்தது என்பதைக் காட்டுகிறது.

முன்பின் அறிமுகமற்ற பௌத்தர்களை வரவேற்று, தங்கவைக்கும் வழக்கம் இந்தியாவில் நிலவியதற்கு ஓர் அடிப்படையான காரணம் இருந்தது. புத்தர் பல பகுதிகளுக்கு நடந்து சென்று அங்குள்ள மக்களுக்கு உபதேசித்திருக்கிறார். புத்தரின் காலடித்தடங்கள் இந்தப் பகுதிகளில் பதிந்துபோயிருக்கின்றன. உலகம் முழுவதிலுமிருந்து வரும் துறவிகள், புத்தரின் காலடித்தடங்களை அடியொற்றியே இங்கு வருகிறார்கள். புத்தர் ஆலமரம் என்றால் இவர்களெல்லாம் விழுதுகள் அல்லவா... புத்தரை வரவேற்ற மண், பௌத்தர்களையும் அல்லவா வரவேற்க வேண்டும்... அதனால்தான் புத்தரின் நிலம் அவரைப்போலவே அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்கும் உயர்ந்த குணத்தோடு ஒளி வீசுகிறது’ என்கிறார் பாஹியான்.
பாஹியான் ஒரு குழுவோடு இணைந்து வந்தார் என்று பார்த்தோமல்லவா? நாள்கள் செல்லச் செல்ல குழு மெலிய ஆரம்பித்தது. `நான் இந்த மடாலயத்திலேயே தங்கிவிடுகிறேன், நீங்களெல்லாம் கிளம்புங்கள்’ என்று ஒருவர் பெஷாவரில் தங்கிவிட, இன்னொருவர் காந்தாரத்தில் தன்னைக் கரைத்துக்கொண்டார். `நான் இங்கிருந்து வேறு இடம் செல்லவேண்டும் பாஹியான், இனி உங்களோடு வரவில்லை’ என்று ஒருவர் விடைபெற்றுக்கொள்ள, மற்றொருவர், `இதுவரை பார்த்ததே போதும். நான் ஊருக்குப் போகிறேன்’ என்று திரும்பிவிடுகிறார். புத்தரின் பிச்சைப் பாத்திரத்தை தரிசித்த பிறகு, அங்கேயே நோய்வாய்ப்படுகிறார் ஹுய்ஜிங் என்பவர். வேறிடத்துக்குக் கிளம்பத் தயாரான மற்றொரு துறவி, தன் நண்பரின்மீது பரிதாபம்கொண்டு அவரோடு தங்கி கவனித்துக்கொள்கிறார். பிச்சைப் பாத்திரத்தின் நிழலிலேயே ஹுய்ஜிங் இறந்துவிடுகிறார். இந்திய மண்ணை மிதிப்பதற்குள் வழியிலேயே கடும் குளிரில் இறந்துபோனவரும் உண்டு.
பாஹியான் தன் பயணத்தை நிறுத்தவில்லை. கண்ட வரை போதும் என்று அவர் மனம் நிறைவடையவில்லை. `எவ்வளவு தூண்களையும் சிலைகளையும்தான் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருப்பது’ என்று சிறு சலிப்பும் அவருக்கு ஏற்படவில்லை. `இங்கேயே இருந்துவிடலாமா, இதோடு நிறுத்திக்கொள்ளலாமா, அந்த மடாலயத்தில் அழைத்தார்களே... அவர்களோடு மிச்சமுள்ள காலத்தைக் கழித்துவிடலாமா’ என்றெல்லாம் எந்தச் சஞ்சலமும் காணப்படவில்லை அவரிடம். தன்னுடைய சிறு மூட்டையை முதுகின்மீது போட்டுக்கொண்டு, `இன்று புதிதாக என்ன காணலாம்’ என்று யோசனையோடு நடக்கத் தொடங்கினார்.
(விரியும்)