மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 28 - சொற்களும் கற்களும்

சொற்களும் கற்களும்
பிரீமியம் ஸ்டோரி
News
சொற்களும் கற்களும்

அடையாளம் நிரந்தரமானதல்ல. ஒரு புதிய நிலத்துக்குச் செல்லும் பயணியின் அடையாளம் சூழலுக்கு ஏற்ப மாற்றமடைகிறது.

புத்தரை நாடிச்சென்ற ஒவ்வோர் இடத்திலும் பாஹியான் வண்ண வண்ணக் கதைகளை தரிசித்தார். கதைகளைத் தேடிச்சென்ற ஒவ்வொரு முறையையும் அவர் புத்தரைக் கண்டார். எனில், கதைகளைச் சேமித்துவைக்கத்தான் விகாரத்தையும் மடாலயத்தையும் தூணையும் சிலையையும் உருவாக்கி வைத்திருக்கிறார்களா அல்லது காலம் கற்களைப் பிடித்துத் தள்ளிவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சி சொற்களைக்கொண்டு கதைகளைக் கட்டியிருக்கிறார்களா? பாஹியானின் பயணக் குறிப்புகளைப் பார்க்கும்போது, நிலத்தைக் கதையும், கதையை நிலமும் தாங்கிப் பிடிப்பதையும் ஒன்றை மற்றொன்று செழுமைப்படுத்துவதையும் காண முடிகிறது.

இன்றைய ஆப்கானிஸ்தானில், காபூல் ஆற்றுக்கும் சிந்துவுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது நகரஹாரா. அதன் எல்லையிலுள்ள சிறிய நகரின் பெயர், ஹிட்டா. குழுவினர் அனைவரும் திசைக்கொன்றாகச் சிதறிவிட, தனியோர் ஆளாக நடந்து வந்து ஹிட்டாவை அடைந்தார் பாஹியான். இங்குள்ள விகாரத்தில் புத்தரின் மண்டையோடு பாதுகாக்கப்படுகிறது. தங்கமுலாம் பூசப்பட்ட அந்த விகாரம், ஏழு விலைமதிப்புமிக்க கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தங்கத்துக்கும் கற்களுக்கும் விலை உண்டு. புத்தரின் புனித மண்டையோட்டுக்கு இன்னதுதான் மதிப்பு என்று சொல்லிவிட முடியுமா என்ன?

எனவே, விகாரத்தைப் பாதுகாக்க அங்குள்ள மன்னன் ஒரு சிறப்பு ஏற்பாட்டைச் செய்திருந்தான். ஊரிலுள்ள எட்டு பிரமுகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளுக்கொரு சாவி ஒப்படைக்கப்பட்டது. எட்டுப் பேரும் ஒன்று சேர்ந்து, ஒன்றாகத் திறந்தால்தான் விகாரத்தின் கதவு திறக்கும். ஒவ்வொரு நாளும் அதிகாலை எட்டுப் பேரும் வருவார்கள். எட்டுப் பேரும் கதவைத் திறந்து உள்ளே செல்வார்கள். உள்ளே ஒவ்வொருவருக்கும் நறுமண நீர் அளிக்கப்படும். அதில் தங்கள் கைகளைச் சுத்தம் செய்துகொள்வார்கள். சுத்தமான பிறகு மண்டையோட்டை வெளியில் எடுப்பார்கள். எல்லோரும் காண்பதற்கு வசதியாக உயரமாக எழுப்பப்பட்டுள்ள பீடத்தில் மண்டையோட்டைப் பொருத்துவார்கள். அப்போது மேள தாளம் முழங்கப்படும். சங்கொலி காற்றில் பரவும். ஓசை கேட்டு ஒவ்வொரு நாளும் மன்னர் விழித்தெழுந்து புத்தரைக் காண வருவார். கிழக்குக் கதவு வழியாக உள்நுழைந்து மலர்களையும் வாசனைப்பொருள்களையும் காணிக்கையாகச் செலுத்திவிட்டு மேற்குக் கதவு வழியாக அவர் வெளியேறுவார். அதற்குப் பிறகுதான் அவர் மற்ற அலுவல்களை கவனிப்பார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 28 - சொற்களும் கற்களும்

மன்னர் மட்டுமல்ல, ஊர் மக்களும்கூட புத்தரின் மண்டையோட்டை தரிசித்து முடித்த பிறகே அன்றாட வேலைகளில் ஈடுபடுவார்கள். விகாரத்துக்கு வெளியில் மலர்களும் வாசனைப்பொருள்களும் விற்பனை செய்யப்படும். பக்கத்து நாட்டு மன்னர்களும்கூட இந்தப் புனித இடத்தை நாடி வருவதுண்டு. சக்திவாய்ந்த தலம் என்பதால் இடி, மின்னல் தொடங்கி எந்த இயற்கைப் பேரிடரும் இங்கே எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. இதே நகரில் அமைந்துள்ள மற்றொரு மடாலயத்தில் புத்தரின் பல் பாதுகாக்கப்படுகிறது. அதுவும் இதேபோல் சிரத்தையோடு பாதுகாக்கப்படுகிறது. பாஹியான் அங்கும் சென்று தொழுதார்.

`அங்கிருந்து கிளம்பி ஒரு யோசனை தூரம் சென்று, புத்தரின் கைத்தடியைக் கண்ணாரக் கண்டேன். செந்நிற சந்தனக் கட்டையால் உருவான கைத்தடி அது’ என்று குறிப்பிடுகிறார் பாஹியான். `பதினாறு, பதினேழு அடிகள்கொண்ட அந்தக் கைத்தடி அபார பலம் மிக்கது. நூறு, ஆயிரம் என்று எத்தனை பேர் திரண்டு வந்தாலும் இந்தக் கைத்தடியை நகர்த்தக்கூட முடியாது’ என்கிறார் பாஹியான். அங்கிருந்து மேற்கு நோக்கி நான்கு நாள்கள் நடந்து ஒரு மடாலயத்தை அடைந்தார். புத்தரின் அங்கி அங்கே வைக்கப்பட்டிருந்தது. எப்போதெல்லாம் நாட்டில் பஞ்சமும் வறட்சியும் வருகிறதோ அப்போதெல்லாம் அங்கியை வெளியில் எடுத்து வழிபடுவார்கள். பொலபொலவென்று மழை பெய்து வறட்சியைப் போக்கிவிடும்.

இந்தியா புத்த தர்மம் மேலோங்கிய நிலம் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்கிறார் பாஹியான். பிக்குவுக்கு தானம் தருவதற்கு முன்பு, ஒரு மன்னர் தன்னுடைய மகுடத்தைக் கழற்றிவைக்கிறார். நான் அதிகாரத்திலிருந்து கொண்டு உங்களுக்கு தானம் செய்யவில்லை. உங்களை மதித்து ஒரு சகமனிதனாக இதை அளிக்கிறேன் என்னும் உணர்வோடுதான் எதையும் அளிக்கிறார். மன்னர், தனது பணியாளர்களிடம் சொல்லி பிக்குவுக்கு உணவளிப்பதில்லை. அமைச்சர்களும் உறவினர்களும் புடைசூழ வணங்கி, தன் கரங்களால் மன்னர் பிக்குவுக்குப் பரிமாறுகிறார். வந்திருப்பவர் வயதில் மூத்த பிக்கு என்றால், அவர் உண்டு முடித்ததும் சிவப்புக் கம்பளம் விரித்து அவர் முன்னால் தரையில் அமர்ந்து உரையாடுகிறார். `இது புத்தர் காலத்தில் நிலவிய வழக்கம். அதுதான் இன்றளவும் பின்பற்றப்படுகிறது’ என்கிறார் பாஹியான்.

அடுத்து, மத்தியதேசம் வந்தடைந்தார் பாஹியான். கங்கை, யமுனையின் மேற்பகுதியிலிருந்து இரண்டும் சங்கமிக்கும் பிரயாகை வரையிலான பிரதேசத்துக்கு பாலியில் ‘மத்யதேஷா’ என்று பெயர். பௌத்தம் தோன்றிய இடம், பௌத்த மன்னர்கள் ஆளும் இடம் என்பதால் உலகின் மையமாக இந்தப் பிரதேசத்தை பௌத்தர்கள் கருதினர். இந்த நம்பிக்கையைப் பகிர்ந்துகொண்டனர் என்பதால் பாஹியானும் மத்தியதேசம் என்றே இப்பகுதியை அழைக்கிறார். மத்தியதேசம் கதிரவன் என்றால், பிற நாடுகளெல்லாம் குட்டிக் குட்டி நட்சத்திரங்கள். இதுதான் பௌத்தர்களின் புவியியல் கோட்பாடு. சீனாவில் பிறந்தவர், சீனாவில் வளர்ந்தவர் என்றாலும் தனது நாட்டை மத்திய தேசத்தை ஒட்டி அமைந்துள்ள எல்லை நிலம் என்றே குறிப்பிடுகிறார் பாஹியான்.

தங்களை நாடிவரும் சீன முதியவரைக் கண்டு, மத்திய தேசத்து இந்தியர்கள் வியப்படைந்திருக்கின்றனர். அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். குழம்பியிருக்கின்றனர். `என்னது நீங்கள் பிக்குவா... புத்தர் நம் கடவுள் என்றல்லவா நினைத்திருந்தேன்... சீனாவிலும் புத்தரை வணங்குகிறார்களா... சீனாவிலும் துறவிகள் இருக்கிறார்களா... பௌத்த ஏடுகளைத் தேடியா சீனாவிலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறீர்கள்... அதுவும் நடந்து... அதிலும் இந்த வயதில்?’

`நான் ஹான் தேசத்திலிருந்து வருகிறேன். பௌத்த ஏடுகள் தேடி வந்திருக்கிறேன்!’ யார் கேட்டாலும் பாஹியானிடமிருந்து வரும் பதில் இதுதான். `அதென்ன ஏடு?’ என்று கேட்பவர்களுக்கு, `பௌத்த சட்ட திட்டங்களை வரையறுத்து வைத்திருக்கும் ஏடு’ என்பார். இதைக் கேட்டு இந்தியர்களின் திகைப்பு பன்மடங்கு கூடிவிடும். `ஆ, நாங்கள் இதுவரை ஹான் தேசத்திலிருந்து யாரும் வந்து பார்த்ததேயில்லையே! நாங்கள், எங்களுக்கு முன்பிருந்தவர்கள், அவர்களுக்கும் முன்பிருந்தவர்கள் என்று வழிவழியாக, தலைமுறை தலைமுறையாக இங்கிருந்தும்கூட, உங்களைப் போன்ற ஒருவரும் இங்கே வந்ததில்லை. எங்களிடம் ஏடுகளெல்லாம் இருக்கும் என்று யார் உங்களுக்கு அங்கே சொன்னார்கள்... உங்கள் ஹான் தேசத்தில் சட்ட திட்டங்களே இல்லையா? நீங்கள் உண்மையிலேயே விந்தையான மனிதர்தான், பாஹியான்!’

இந்த உரையாடல்கள் மூலம் மேலும் சிலவற்றை நாம் அறிந்துகொள்ளலாம். மத்திய தேசம் கிட்டத்தட்ட தனித்த நிலப்பகுதியாக இருந்திருக்கிறது. பௌத்தர்களின் புனித இடமாக இருந்தபோதும் அயல்தேசத்தவர் யாரும் இங்கே கால் பதித்ததுபோல் தெரியவில்லை. பாஹியான்தான் பலரும் கண்ட முதல் அந்நியராக, முதல் சீனராக இருந்திருக்கிறார். யார் இங்குள்ளவர், யார் வெளியிலிருந்து வருபவர் என்பதைத் தோற்றம், நிறம், பேசும் முறை ஆகியவற்றைக்கொண்டு இந்தியர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இருந்தாலும், பாஹியானைக் கண்டு எதிரியோ என்று அவர்கள் அஞ்சவில்லை. தயங்கி நிற்கவில்லை. நெருங்கிச் சென்று பேச்சு கொடுத்திருக்கிறார்கள்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 28 - சொற்களும் கற்களும்

பாஹியானின் குறிப்புகளைப் பார்க்கும்போது, சில இடங்களில் அவர் தன்னை ‘நான் ஒரு கிங் பௌத்தன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். கிங் என்பது சீன இனக்குழுவொன்றின் பெயர். ஆக, அந்நியர்களை அதிகம் கண்ட இந்தியர்கள் மத்தியில் அவர் தன்னை தன் இனத்தின் பெயரால் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். இனக்குழுவின் பெயரைச் சொன்னால் மத்திய தேசத்து மக்களால் புரிந்துகொள்ள முடியுமோ, முடியாதோ என்று யோசித்து கிங் பௌத்தன் என்று சீன ஆட்சியாளர்களின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார் பாஹியான். அடையாளம் நிரந்தரமானதல்ல. ஒரு புதிய நிலத்துக்குச் செல்லும் பயணியின் அடையாளம் சூழலுக்கு ஏற்ப மாற்றமடைகிறது.

புத்தரின் முதன்மைச் சீடர்களான சாரிபுத்திரர், மௌத்கல்யாயனர் இருவருக்கும் தூண்கள் எழுப்பப்பட்டிருந்ததை பாஹியான் கண்டார். இருவரும் இளம் வயதிலிருந்தே நண்பர்கள். ஆன்மிக நாட்டத்தோடு பலரை நாடியபோதும் யாரும் இவர்களுக்கான பாதையைக் காட்டவில்லை. இறுதியில் புத்தரை அடைந்தனர். புத்தர் அவர்களுக்கு அபயக்கரம் நீட்டினார். ஆனந்தரின் தூண், மிகுந்த மதிப்போடு வணங்கப்பட்டது. சங்கத்தில் பெண்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வாதிட்ட ஆனந்தரை இந்திய பிக்குணிகள் அதிக அளவில் திரண்டு மலர் தூவி ஆராதித்ததை பாஹியான் கண்டார். புதிதாக வரும் பௌத்தர்கள் புத்தரின் மகன் ராகுலனைத் தொழுதனர். இவர்கள் அனைவருடைய வாழ்விலிருந்தும் கதைகள் பொதுமக்கள் முன்னிலையில் நாடகம்போல் நடித்துக் காட்டப்பட்டதை பாஹியான் கண்டார்.

எது நாடகம், எது நிஜம்... எது கதை, எது வரலாறு... எது கல், எது சிலை... நான் எதிர்காலத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கிறேனா அல்லது கடந்த காலத்துக்குள் கரைந்துகொண்டிருக்கிறேனா? இந்தியா பாஹியானை மயக்கி வசப்படுத்திக்கொண்டிருந்தது!

(விரியும்)