மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 29 - உயிர்த்தெழும் பௌத்தம்

 உயிர்த்தெழும் பௌத்தம்
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர்த்தெழும் பௌத்தம்

தொல்லியல் ஆய்வுகளைக்கொண்டும் எது பண்டைய கபிலவஸ்து என்பதைக் கண்டறிய முடியவில்லை. காரணம் பௌத்தக் கட்டடச் சிதிலங்கள் இரு இடங்களிலும் கிடைத்துள்ளன.

கொக்குபோல் பௌத்தம் ஒன்றே குறி என்று இருப்பவர்தான் என்றாலும், சிற்சில இடங்களில் சற்றே விரிந்து அலகமாகவும் இந்தியாவைக் காண்கிறார் பாஹியான். மத்திய தேசத்தில், குறிப்பாக மதுராவில் பயணம் செய்யும்போது வழக்கமான `அந்த விகாரத்தைக் கண்டேன், இந்தத் தூணைக் கண்டேன்’ புராணங்களுக்கு இடையில், மண் குறித்தும் மக்கள் குறித்தும்கூட எழுதுகிறார் அவர்.

பனி, குளிர் இல்லாத மிதமான பிரதேசமாக இருக்கிறது. இங்குள்ள மக்கள் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுகிறார்கள். எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக இருக்கிறார்கள். அநாவசியமான வரிகள் கிடையாது. மன்னரின் நிலத்தில் பணியாற்றுபவர்கூட நிலத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான குறைந்தபட்ச வரி மட்டுமே செலுத்துகிறார்கள். விளைச்சல் அவர்களுக்குத்தான். நிலத்தில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் பணியாற்றலாம். வேண்டாம் என்று நினைத்தால் வெளியேறிச் சென்றுவிடலாம். யாரும் அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது.

அடக்கமான மன்னர். அன்பானவரும்கூட. படையினரும் சேவகர்களும் அரண்மனையிலிருந்து தங்களுக்கான அனைத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். மரண தண்டனை என்பதே கிடையாது. குற்றமிழைப்பவர்களுக்குக் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படுகிறது. இருப்பதிலேயே மோசமான குற்றம் அரசுக்கு எதிராகச் சதிபுரிவது. அப்படிச் செய்பவர்களைக்கூட மன்னர் கொல்வதில்லை. வலது கரம் மட்டும் அகற்றப்படுகிறது, அவ்வளவுதான்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 29 - உயிர்த்தெழும் பௌத்தம்

மக்கள் சாதுவானவர்கள். ஒருவரும் விலங்குகளை பலி கொடுப்பதில்லை. மது அருந்துவதில்லை. உணவில் வெங்காயம், பூண்டு சேர்த்துக்கொள்வதில்லை. சண்டாளர் எனப்படும் சாதி நீக்கம் செய்யப்பட்டவர் மட்டுமே விதிவிலக்கு. இவர்கள் தீயவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மற்றவர்களைவிட்டு இவர்கள் தள்ளியே வசிக்கின்றனர். நகரத்துக்குள்ளோ, சந்தைக்குள்ளோ இவர்கள் போக நேர்ந்தால், இன்னார் வந்திருக்கிறேன் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு மரத்துண்டின்மீது தட்டி ஒலியெழுப்புகிறார்கள். உடனே மக்கள் கவனத்தோடு ஒதுங்கிச் சென்றுவிடுகின்றனர். வேட்டையாடுவது, மீன்பிடிப்பது ஆகியவற்றில் சண்டாளர் மட்டுமே ஈடுபடுகின்றனர்.

மக்களின் குடியிருப்புகளில் பன்றியையோ, பறவையையோ நீங்கள் காண முடியாது. கால்நடைகளும் பராமரிக்கப்படுவதில்லை. சந்தையில் மாமிசக் கடையோ, மதுக் கடையோ கிடையாது. சோழியை நாணயம்போல் பயன்படுத்துகிறார்கள். மன்னர், செல்வந்தர் என்று அனைவரும் பௌத்த விகாரங்களிலுள்ள பிக்குகளை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள். என்னைப்போலவே அடுத்து வருபவரும் பிக்குகளை ஆதரிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மன்னரும் முன்கூட்டியே எழுதிவைத்துவிடுகின்றனர். அடுத்து வருபவர் இந்த விதியை மீறுவதில்லை. அவரும் இதேபோல் எழுதிவைத்துவிடுகிறார். புத்தர் காலத்திலிருந்து இந்த வழக்கம் வழிவழியாகப் பின்பற்றப்பட்டுவருகிறது.

விகாரத்தில் தங்கும் ஒவ்வொரு பிக்குவுக்கும் பாய், படுக்கை, உணவு, நீர், ஆடை ஆகியவை அளிக்கப்படும். புதிதாக ஒரு பிக்கு வருகை தந்தால், விகாரத்திலுள்ள மூத்த பிக்கு வெளியில் வந்து அவரை வரவேற்கிறார். கால்களைச் சுத்தம் செய்துகொள்ள நீர் மொண்டு தருகிறார். பாதங்களில் தடவிக்கொள்ள எண்ணெய் வழங்குகிறார். உணவு பரிமாறுகிறார். பிறகு வந்திருப்பவரின் பின்னணியைப் பொறுத்து, தகுதி அறிந்து அவருக்குண்டான அறையை ஒதுக்கித் தருகிறார். மன்னரும் மடாலயங்களும் மட்டுமல்ல, மக்களும் பௌத்தர்களை ஆதரிக்கின்றனர். பதிலுக்கு பௌத்தர்கள் சமூகத்துக்கு என்ன அளிக்கிறார்கள்? பௌத்தத் தத்துவத்தை எடுத்துரைக்கிறார்கள். மக்களுக்குப் புனித ஏடுகளை வாசித்துக் காட்டுகிறார்கள். வாழ்வியல் நெறிகளை உபதேசிக்கிறார்கள். சமூகத்தின் நலனுக்காக வழிபடுகிறார்கள். இதுதான் பாஹியான் அளிக்கும் சித்திரம்.

அங்கிருந்து தென் கிழக்காக நடந்து சஞ்கஸ்யா எனும் இடத்தை அடைந்தார் பாஹியான். இது இன்றைய உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள பகுதி. இங்குள்ள முக்கியத்துவம் பெற்ற சில பௌத்த மடாலயங்களை தரிசித்தார். புத்தரின் வாழ்வோடு தொடர்புடைய இடங்கள், பரிநிர்வாணம் அடைந்த இடம், சொர்க்கத்திலிருந்து இறங்கிவந்த இடம், மீண்டும் சொர்க்கம் சென்று சேர்ந்த இடம் என்று ஏராளமான இடங்களை அடுத்தடுத்து பார்வையிடுகிறார் பாஹியான். அதிகம் சுற்றவேண்டிய பகுதி என்றால் அங்கே சில மாதங்கள் தங்கியும், பார்க்க அதிகமில்லை என்றால் ஒரேயொரு சுற்று சுற்றிவிட்டும் அடுத்த இடத்துக்கு நகர்ந்துவிடுகிறார்.

கங்கைக்கரையை ஒட்டி அமைந்துள்ள இன்றைய உத்தரப்பிரதேசத்து நகரமான கனோஜுக்கு வருகைதருகிறார் பாஹியான். இங்கே ஹீனயான பௌத்தம் போதிக்கும் இரு மடாலயங்களைக் கண்டார். புத்தர் உபதேசம் செய்த இடம் என்றொன்று அருகில் இருந்தது. அங்கு சென்று பார்த்தார். கசப்பும் அகந்தையும் வாழ்வில் நிலையானவையல்ல என்பதை புத்தர் இங்கே உபதேசித்திருக்கிறார். உடல் என்பது நீர்க்குமிழி போன்றது என்றும் அவர் இங்கே வந்தபோது சொல்லியிருக்கிறார். சரியாக எங்கே அமர்ந்து புத்தர் உபதேசித்தாரோ அங்கே ஒரு தூண் அமைக்கப்பட்டிருந்ததை பாஹியான் கண்டார்.

பௌத்தம் செழித்த இடங்களை மட்டுமல்ல, பௌத்தம் எதிர்ப்புகளைச் சந்தித்த இடங்களையும் பாஹியான் பார்வையிட்டார். பிராமணர்கள், பௌத்தர்களை எவ்வாறு கண்டனர் என்பதை அவர் விவரிக்கும் கதைகளிலிருந்து தெரிந்துகொள்ளாம். எடுத்துக்காட்டுக்கு இரண்டு. ஒருமுறை புத்தர் வைசாகாவில் இருந்தபோது வில்லோ மரக்கிளையிலிருந்து ஒரு சிறு குச்சியை எடுத்து தன் பற்களைச் சுத்தம் செய்தார். முடித்ததும் குச்சியை நிலத்தில் நட்டார். கிடுகிடுவென்று அந்தக் குச்சி ஏழு அடிகொண்ட வில்லோ மரமாக வளர்ந்தது. ஏழு அடிக்கு ஓர் அங்குலமும் குறையவில்லை, அதற்குமேல் அதிகரிக்கவும் இல்லை. இந்த மரத்தைக் கண்டு கடுப்படைந்த பிராமணர்கள் மரத்தைப் பிடுங்கி வீசினர். எங்கே வீசினார்களோ அங்கே மீண்டும் அதே ஏழு அடி வில்லோ மரம் முளைத்தது. கிளை, கிளையாக வெட்டிப் பார்த்தார்கள். வெட்டி வீசிய இடங்களிலெல்லாம் மரங்கள் முளைத்தன. பிராமணர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.

பௌத்தப் பதிவுகளில் அங்குலிமாலா ஒரு முக்கியமான பாத்திரம். கொடூரமானவனாக, கொலைகாரனாக, ஒருவராலும் நெருங்க முடியாத இருள் மனிதனாக இருந்த அங்குலிமாலாவை புத்தர் மீட்டெடுத்தார். சரியான பாதையைக் காட்டி ஒளி பாய்ச்சினார். அங்குலிமாலா பரிநிர்வாணம் எய்திய பிறகு அவர் உடல் எரியூட்டப்பட்டது. அவர் நினைவாக கோசல நாட்டில் தூணொன்று எழுப்பப்பட்டது. அவரைப்போல் வேறு சில முக்கிய பௌத்தர்களின் தூண்களும் அங்கே அமைந்திருந்தன. கடும் வெறுப்புற்ற பிராமணர்கள் இந்தத் தூண்களை அகற்ற முயன்றனர். உடனே வானிலிருந்து மின்னலும் இடியும் தரையில் இறங்கின. பிராமணர்கள் அஞ்சியோடினர்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 29 - உயிர்த்தெழும் பௌத்தம்

இந்திய-நேபாள எல்லையில் அமைந்திருந்த புத்தரின் பிறப்பிடமான கபிலவஸ்துவை அடைந்தபோது, பாஹியான் நெகிழ்ச்சிக்கடலில் மிதந்திருக்க வேண்டும். கபிலவஸ்துவிலுள்ள லும்பினித் தோட்டம் புத்தரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. சாக்கியர்களின் தலைநகரம் கபிலவஸ்து. நேபாளத்தில் பெரும் பகுதியையும் இந்தியாவில் ஒரு சிறு பகுதியையும் உள்ளடக்கிய நகரமாக கபிலவஸ்து இன்று அடையாளம் காணப்படுகிறது. பொஆமு 3-ம் நூற்றாண்டில், அசோகர் கபிலவஸ்துவுக்கு வருகை புரிந்தார். மூன்று அசோகர் தூண்கள் கபிலவஸ்துவில் எழுப்பப்பட்டன. முப்பதடி உயரத்தில் நீண்டு நின்ற அந்தத் தூண்கள் குறித்து பாஹியான் எதுவும் குறிப்பிடவில்லை. ஒருவேளை அவர் பார்க்கவேயில்லையோ என்னவோ!

பாஹியான் குறிப்பிட்டிருக்கும் மடாலயங்களையும், அவர் விவரித்திருக்கும் பயண நேரங்களையும் கணக்கிட்டுப் பார்த்த சிலர், அநேகமாக கபிலவஸ்து என்று நினைத்து அருகிலுள்ள வேறொரு நகருக்கு பாஹியான் சென்றிருக்கலாம் என்று யூகிக்கிறார்கள். கபிலவஸ்துவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிட்டத்தட்ட அதே போன்ற மடாலயங்கள் நிறைந்திருப்பதால், தவறு நடந்திருக்கலாம் என்பது அவர்கள் வாதம். இதை மறுப்பவர்களும் உள்ளனர். எங்கெங்கோ தேடித் தேடி பயணம் செய்த பாஹியான், புத்தரின் பிறப்பிடத்தைத் தவறாக அடையாளம் காண்பாரா என்ன?

உண்மையில் குழப்பம் அவருக்கு மட்டுமல்ல. எது கபிலவஸ்து என்பதில் இன்றுமே மாற்றுக் கருத்துகள் நிலவுகின்றன. நேபாளத்தில் இருப்பதுதான் புத்தரின் கபிலவஸ்து என்பதை எல்லா ஆய்வாளர்களும் ஒப்புக்கொள்வதில்லை. உத்தரப்பிரதேசத்திலுள்ள சித்தார்த் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள, பிப்ரவா என்னும் சிறிய கிராமம்தான் புத்தரின் கபிலவஸ்து என்றொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. தொல்லியல் ஆய்வுகளைக்கொண்டும் எது பண்டைய கபிலவஸ்து என்பதைக் கண்டறிய முடியவில்லை. காரணம் பௌத்தக் கட்டடச் சிதிலங்கள் இரு இடங்களிலும் கிடைத்துள்ளன. எப்படியும் கபிலவஸ்து பற்றிய நம்முடைய இன்றைய புரிதலுக்கு பாஹியானின் குறிப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் உதவியிருப்பது நிஜம்.

மிகுந்த எதிர்பார்ப்போடு கபிலவஸ்துவுக்குச் சென்ற பாஹியானுக்கு அதிர்ச்சியே ஏற்பட்டது. வருத்தத்தோடு தான் கண்டதை அவர் பதிவுசெய்கிறார். இங்கே மன்னரும் இல்லை, மக்களும் இல்லை. கைவிடப்பட்ட ஓரிடம்போல் கபிலவஸ்து இருந்தது. வெறுமைதான் என்னை வரவேற்றது. ஒன்றிரண்டு குடும்பங்களைக் கண்டேன். பெயருக்கு ஒன்றிரண்டு பிக்குகள், அவ்வளவுதான். புத்தரின் தந்தையும் அரசருமான சுத்தோதனரின் அரண்மனை இருக்கும் சுவடே இல்லை. வெள்ளை யானைகளும் சிங்கங்களும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று இங்கிருப்பவர்கள் எச்சரிக்கின்றனர். அச்சமாக இருக்கிறது. பாஹியானின் உள்ளம் நிச்சயம் ஏங்கியிருக்கும். `எங்கே எனது புத்தர்... எங்கும் நிறைந்திருக்கும் புத்தர் ஏன் இங்கு இல்லை?’

(விரியும்)