மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 3

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை
News
இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

முதல் இந்தியர்கள்

கிளைக் கதை என்றாலும் பாரசீகப் போர்களை விவரிக்கும் இடத்தில் இந்தியாவை ஏன் கொண்டுவந்தார் ஹெரோடோட்டஸ்? ஏனென்றால், இந்தப் போரில் இந்தியர்களும் பங்கேற்றிருந்தனர். எதிரி நாடான பாரசீகப் படைகளில் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை விவரித்துக்கொண்டே வரும்போது முதன்முறையாக இந்தியர்களைக் குறிப்பிடுகிறார் ஹெரோடோட்டஸ்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 3

பெரும்பாலான உலகம், இந்தியர்கள் என்னும் பெயரை வாசித்து அறிந்தது அப்போதுதான். அவர்களுக்கு அறிமுகமான முதல் இந்தியர்கள், கூலிப்படை வீரர்களாக இருந்தனர். பாரசீகத்தின் ஆட்சிக்கு உட்பட்டவர்களாக இருந்தனர். அதுவும் போதாதென்று, போரில் தோல்விபெறும் அணியோடு சேர்ந்திருந்தனர். இருந்திருந்து, இப்படியா இந்தியர்களை உலகுக்கு அறிமுகப் படுத்துவது என்று ஹெரோடோட்டஸிடம் நாம் சண்டைக்குப் போக முடியாதபடிக்கு கூடவே ஒரு நல்ல காரியத்தையும் அவர் செய்துவிட்டார்.

`இந்தியர்கள்’ என்று முதன்முதலில் நம்மை எழுத்தில் பதிவுசெய்தவர் அநேகமாக ஹெரோடோட்டஸ்தான். (கிரேக்கத்தில், ‘இண்டோன்’). `இந்தியா’, `இந்தியர்கள்’ ஆகிய சொற்களை இந்தியாவும் இந்தியர்களுமே அப்போது அறிந்திருக்கவில்லை என்பதை இணைத்துப் பார்த்தால் ஹெரோடோட்டஸ் குறிப்பின் முக்கியத்துவத்தை உணர முடியும். அப்படியானால், இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் பெயர் சூட்டியவர் ஹெரோடோட்டஸ் என்று சொல்லிவிடலாமா? `வரலாற்றின் தந்தை’ என்று ஐரோப்பா சொல்வதுபோல், `இந்தியாவுக்குப் பெயர் சூட்டிய தந்தை’ என்று அவரை அழைத்துவிடலாமா?

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 3

இல்லை. ஹெரோடோட்டஸ் எழுதினாரே தவிர, இந்தியா என்பது அவர் கண்டுபிடித்து சூட்டிய பெயரல்ல. அந்தப் பெருமை கிரேக்கர்களுக்கு உரியது. நம் நிலத்தை `இந்தியா’ என்று அழைத்தவர்கள் அவர்கள்தாம். கிட்டத்தட்ட ஹெரோடோட்டஸ் காலகட்டத்தில்தான் இந்த வழக்கம் தொடங்கியிருக்க வேண்டும். கிரேக்கர்களும்கூட அழைத்தவர்கள்தானே தவிர, பெயரிட்டவர்கள் அல்லர். அராபியர்களிடமிருந்தும், இரானியர்களிடமிருந்தும் கேட்டுத் தெரிந்துகொண்ட பெயர் அது. இந்த இருவருக்கும் இந்தியா எங்கிருந்து அறிமுகமானது என்றால், சிந்து நதியிலிருந்து. அரபு உச்சரிப்பு வழக்கப்படி சிந்து ‘ஹிண்டு’ ஆனது. கிரேக்கர்கள் தங்கள் பங்குக்கு ஹிண்டுவை ‘இண்டஸ்’ ஆக்கினார்கள். இண்டஸிலிருந்து ‘இண்டியா’ பிறந்தது.

இந்தியா என்னும் பெயர் மட்டுமல்ல, இந்தியா குறித்த ஹெரோடோட்டஸின் அசாதாரண வர்ணனைகளும் உலகம் முழுக்கப் பரவின. உடன்பட்டார்களோ முரண்பட்டார்களோ, அவருக்குப் பின் எழுதவந்த அனைவருமே ஹெரோடோட்டஸைக் குறிப்பிட்டேயாக வேண்டியிருந்தது. இன்றைய தேதியில்கூட பண்டைய இந்தியா குறித்து எழுதுபவர்கள் ஹெரோடோட்டஸை நினைவுகூரப் பெரும்பாலும் தவறுவதில்லை. இந்தியர்களுக்கும் இது பொருந்தும்.

இனி கதைக்குத் திரும்புவோம். நல்லவேளையாக, இந்திய வீரர்களிடம் தொடங்கிய ஹெரோடோட்டஸ் அவர்களோடு கதையை முடித்துக்கொண்டுவிடாமல், இன்னொரு கிளையைப் பிடித்துக்கொண்டு இந்தியாவுக்குத் தாவி வந்துவிடுகிறார். தெரியாதவர்களுக்காக முதலில், முறைப்படி இந்தியா எங்கிருக்கிறது என்பதை அவர் அறிமுகப்படுத்தி வைக்கிறார். எங்கிருக்கிறது இந்தியா? மிக மிகத் தொலைவில், கண்காணாத இடத்தில், கிட்டத்தட்ட ஒளிந்துகொண்டிருக்கிறது.

கிரேக்கத்திலிருந்து இயன்றவரை கிழக்கே சென்றுகொண்டேயிருந்தால், வரிசை வரிசையாக உங்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமான பல நாடுகள் வரும். அவற்றையெல்லாம் பார்த்து முடித்த பிறகு, மேற்கொண்டு எதுவும் இல்லை என்பதுபோல் ஒரு வெறுமையை உணர ஆரம்பிப்பீர்கள். மனம் தளராமல் தொடர்ந்து முன்னேறிச் சென்றுகொண்டேயிருந்தால், கட்டக்கடைசியாக ஒரு நிலத்துண்டு வரும். அதுதான் இந்தியா. சிந்து நதிக்கரையை ஒட்டி இந்தியா அமைந்திருக்கிறது. சூரியன் உதிக்கும் இடத்துக்கு மிக அருகில் இந்தியர்கள் வாழ்கிறார்கள். அதன் பிறகு பாலைவனம் வரும். பாலைவனத்துக்கு அப்பால் எதுவும் இல்லை. உலகம் முடிவுக்கு வந்துவிடுகிறது என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார் ஹெரோடோட்டஸ்.

புவியியல், வரலாறு ஆகிய துறைகளின் முன்னோடியான ஹெரோடோட்டஸ் இந்தியாவை இவ்வளவு மேம்போக்காகவும், பிழையாகவும் அறிமுகம் செய்ததற்குக் காரணம், அவர் இந்தியாவில் காலடி எடுத்து வைக்கவேயில்லை என்பதுதான். இந்தியா எங்கிருக்கிறது, அது எங்கே தொடங்குகிறது, எங்கே முடிகிறது, அங்குள்ள நிலம் எப்படி இருக்கும், கடல் எப்படி இருக்கும், மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்று எதையும் நேரில் சென்று காணாமலேயே இந்தியாவைத் தன் நூலில் விவரித்திருக்கிறார் ஹெரோடோட்டஸ். முதல் பெரும் வரலாற்று நூல் என்று கருதப்படும் ஒரு நூலில், `வரலாற்றின் தந்தை’ என்று கொண்டாடப்படும் ஒருவர் இழைத்த இந்தத் தவற்றை, அவருக்குப் பின் வந்த எண்ணற்ற பலர் தொடர்ந்து பின்பற்றினர்.

ஆம், எழுதுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் செல்லும் வழக்கம் கொண்டவர்தான். எதையும் சரிபார்த்து எழுதுபவர்தான். தரவுகளைப் பரிசோதிக்கும் இயல்புகொண்டவர்தான். ஆனால், இந்தப் பண்புகளையெல்லாம் அவர் தனது நாடான கிரேக்கத்துக்கும், அதன் சுற்றுவட்டாரத்து நாடுகளுக்கும் மட்டுமே கையாண்டார். இந்தியா போன்ற தொலைதூர தேசங்களையெல்லாம் நேரில் சென்று பார்ப்பதும், எழுதுவதும் சாத்தியமில்லை என்று அவர் கருதியிருக்க வேண்டும். அல்லது எப்படியும் இவையெல்லாம் கிளைக் கதைகள்தானே, அவற்றையெல்லாம் சரிபார்ப்பது இயலாத காரியம் என்றும் அவர் நினைத்திருக்கலாம். இந்தியா பற்றிய அவர் குறிப்புகளை வாசிக்கும்போது இந்த உண்மையை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். தனக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு சில பிரதிகளையும் (இவை நமக்குப் பெரும்பாலும் கிடைக்கவில்லை), வாய்வழி வரலாற்றையும் அடிப்படையாக வைத்தே அவர் இந்தியாவை எழுதியிருக்கிறார்.

ஹெரோடோட்டஸைப் பொறுத்தவரை, இந்தியர்கள் யார்? பழங்குடிகள். பல குழுக்களாக அவர்கள் பிரிந்து காணப்படுகிறார்கள். எவ்வளவு குழுக்கள் என்று கணக்கிடுவது கடினம். அதேபோல் அவர்கள் எவ்வளவு மொழிகளில் பேசுகிறார்கள், அவை என்னென்ன என்று சொல்வதும் கடினம். உலகில் வேறு எங்கும் இருப்பதைவிட, இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழ்கிறார்கள். இந்தப் பழங்குடிகளில் சிலர் நாடோடிகள். மற்றவர்கள் நிலையாக ஓரிடத்தில் தங்கியிருப்பவர்கள். நீர்நிலைக்கு அருகில் வாழ்பவர்களுக்கு மீன் முக்கிய உணவாக இருக்கிறது. நாணல் அல்லது கோரைப்புல் கொண்டு படகு அமைத்து மீன் பிடிக்கிறார்கள். சமைக்கும் வழக்கமெல்லாம் இல்லை. அப்படியே மீனைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிட்டுவிடுகிறார்களாம். அதே கோரைப்புல்தான் உடுத்துவதற்கும். புற்களை வெட்டியெடுத்து வந்து, பாய் போல் முடைந்து, அதிலிருந்து ஆடைகளாக வெட்டியெடுத்து அணிகிறார்கள்.

மற்றபடி பருத்தி ஆடையைத்தான் இந்தியர்கள் அணிகிறார்கள். இந்தியர்களில் போர்க்குணம் மிக்கவர்கள் இருக்கிறார்கள். வில், பிரம்பால் செய்யப்பட்ட அம்பு ஆகியவற்றை வைத்திருக்கிறார்கள். முனையில் மட்டும் கூர்மையான இரும்பு இருக்கும். இந்தியர்களும் எத்தியோப்பியர்களும் பார்ப்பதற்கு ஒன்றுபோலவே இருப்பார்கள். ஒருவரைப் பார்த்தால் அவர் இந்தியரா, எத்தியோப்பியரா என்று உறுதியாகச் சொல்வது கடினம். வேறுபாடு கண்டுபடித்தே தீரவேண்டுமானால், அதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. அவர்களின் தலைமுடி எப்படி இருக்கிறது என்று பாருங்கள். எத்தியோப்பியர் என்றால் தலைமுடி நேராக நிற்கும். அல்லது எந்த மொழியில் பேசுகிறார்கள் என்று கவனியுங்கள்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 3

இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். அவர்கள் எந்த விலங்கையும் கொல்ல மாட்டார்கள். மக்காச்சோளம் விளைவித்துச் சாப்பிடுவதிலும் ஆர்வம் இல்லை. வீடு கட்டிக்கொண்டு வாழ்வதிலும் நம்பிக்கை இல்லை. வெறும் காய்கறி மட்டுமே சாப்பிடுவார்கள். அந்தக் காய்கறியையாவது விளைவிப்பார்களா என்றால், அதுவும் இல்லை. ‘இயற்கையாக என்ன கிடைக்கிறதோ அதை மட்டுமே உண்போம்’ என்பது இவர்கள் கொள்கை. இவர்களுக்கென்றே காட்டிலும் மேட்டிலும் ஒருவித செடி வளர்கிறது. அதன் பெயர் தெரியவில்லை. ஆனால் அதன் விதை தினை, சாமை விதை அளவுக்கு இருக்கும். அந்த விதைகளை மட்டும் ஆர்வத்தோடு சேகரிப்பார்கள். பிறகு, கொதிக்கவைத்து உண்பார்கள். இவர்களில் யாரேனும் ஒருவருக்கு நோய் வந்துவிட்டால், அவர் விறுவிறுவென்று நடந்து காட்டுக்குப் போய்விடுவார். அங்கே தனிமையில் படுத்துக்கொண்டு மரணத்துக்காகக் காத்திருப்பார். ‘அப்படியெல்லாம் போகாதே’ என்று சொல்வதற்கோ, தடுப்பதற்கோ அவர்கள் குழுவில் யாரும் இருப்பதில்லை. நோயாளிகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றோ, இறந்தவர்களை மதிக்க வேண்டும் என்றோ அவர்களுக்குத் தோன்றுவ தில்லை என்கிறார் ஹெரோடோட்டஸ்.

கிரேக்கத்தை எடுத்துக்கொண்டால் நமக்கு நல்ல, மிதமான வானிலை இருக்கிறது. நாம் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். இந்தியாவில் எல்லாமே தீவிர நிலையில்தான் இருக்கும். ஆனால் தீவிரமான, கடினமான சூழல்களில் இயற்கையே துணை நிற்கும் என்று சொல்வார்கள் அல்லவா? இந்தியாவிலும் அப்படித்தான். இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

இந்தியர்களுக்கென்று இருக்கும் பொதுத்தன்மை என்று பார்த்தால் ஒன்றுதான். அவர்கள் அனைவரும் பாரசீகத்தின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் என்கிறார் ஹெரோடோட்டஸ். இது பகுதியளவில்தான் உண்மை. பாரசீக மன்னரான சைரஸ் (பொஆமு 558-529) தனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் மீது படையெடுத்து சிந்து நதிக்கு மேற்கே இருந்த பகுதிகள், காந்தாரம் ஆகியவற்றைக் கைப்பற்றியது உண்மை. இந்தியா மீது தொடுக்கப்பட்ட முதல் போர், முதல் ஆக்கிரமிப்பு என்று இதைச் சொல்ல முடியும்தான். ஆனால், முழு இந்தியாவும் பாரசீகத்தின் கீழ் வந்ததாக ஹெரோடோட்டஸ் கருதியது தவறு. இந்தியா என்பது சிந்து நதிக்கரைப் பிரதேசம் மட்டுமே என்று ஹெரோடோட்டஸ் நம்பியதால் நேர்ந்த பிழை இது. ‘சிந்துவைக் கடந்தால் வேறு எதுவும் இருக்காது, உலகம் முடிந்துவிடும்’ என்று தன் காலத்தில் நிலவிய நம்பிக்கையையே அவரும் கேள்வியின்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

பாரசீகத்திடம் மொத்தம் 20 மாகாணங்கள் இருந்தன. இந்தியாதான் கடைசியானது. இருப்பதிலேயே பெரியதும்கூட. மாகாணம் என்பது பாரசீகர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம். ஆக்கிரமிப்பின் மூலம் இணைத்துக்கொள்ளப்பட்ட பகுதி. இப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பாரசீக மன்னருக்குத் தொடர்ச்சியாக கப்பம் செலுத்த வேண்டும். `இருப்பதிலேயே அதிக கப்பம் செலுத்துபவர்கள் இந்தியர்களே’ என்கிறார் ஹெரோடோட்டஸ். எவ்வளவு என்பதையும் குறிப்பிடுகிறார். 360 டேலண்ட் தங்கத் துகள்களாம். ஒரு டேலண்ட் என்பது 35 கிலோ! இவ்வளவு தங்கத்துக்கு இந்தியர்கள் அப்போது எங்கே போனார்கள் என்று கேட்டால், ஹெரோடோட்டஸ் இன்னொரு கதையைச் சொல்கிறார். இந்தியாவைப் பற்றிய புகழ்பெற்ற கதைகள் என்றொரு பட்டியல் தயாரித்தால், அதில் இதுதான் முதலிடம் பெறும்.

(விரியும்)