மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 30 - பாஹியானின் பாடலிபுத்திரம்

பாஹியானின் பாடலிபுத்திரம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாஹியானின் பாடலிபுத்திரம்

பாஹியான் எதுவும் குறிப்பிடாவிட்டாலும் இந்தியாவின் இரு பெரும் மதங்களாக அப்போது பௌத்தமும் இந்து மதமும்தான் இருந்தன.

மெகஸ்தனிஸ், பாஹியான் இருவரையும் கவர்ந்த இந்திய நகரம், பாடலிபுத்திரம். மெகஸ்தனிஸ் வருகைபுரிந்தது மௌரியர் காலத்தில் என்றால், பாஹியான் வந்தது குப்தர் காலத்தில். பாடலிபுத்திரத்தில் அடியெடுத்து வைத்தபோது ஆட்சியில் இருந்தவர் சந்திரகுப்தர். பாஹியான் வந்தபோது இரண்டாம் சந்திரகுப்தர் (விக்ரமாதித்யர்) ஆட்சியில் இருந்தார். மெகஸ்தனிஸ் எப்படி மௌரியர் பற்றி ஒரு சொல்கூட எழுதவில்லையோ அதேபோல் பாஹியானும் குப்தர் பற்றி ஒரு சொல்கூட எழுதவில்லை.

புத்தர் தனது பயணமொன்றில் பாடலிபுத்திரத்தைக் கடந்து சென்றிருக்கிறார். அப்போது எதிர்காலத்தில் இது ஒரு பெரிய நகரமாக மலரப்போகிறது என்று அவர் அறிவித்திருக்கிறார். அப்படித்தான் நடந்தது. நந்தர், மௌரியர், சுங்கர், குப்தர் என்று அடுத்தடுத்து வந்த அனைவருக்கும் பாடலிபுத்திரம்தான் தலைநகரம். உலகிலேயே சிறந்த நகரம் பாடலிபுத்திரம். `திறனோடு இயங்கும் ஓர் அரசை நான் அங்கே கண்டேன்’ என்றார் மெகஸ்தனிஸ். ஆன்மிகத் தேடலோடு வந்த பாஹியானுக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்பதால் அவர் நேரடியாக குப்தரின் ஆட்சிமுறை குறித்து எதுவும் விவரிக்கவில்லை. நகரம் குறித்த பொதுவான ஓர் அறிமுகத்தை மட்டுமே அவர் அளிக்கிறார்.

நீண்ட பெரும் பயணத்தை நிகழ்த்திய பாஹியான், பொது ஆண்டு 400 வாக்கில் பாடலிபுத்திரம் வந்தார். அங்கே அவர் காண்பதற்கு ஏராளமான மடாலயங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் பார்க்க வேண்டும். பிறகு அவர் எதற்கு இந்தியா வந்தாரோ அந்தப் பணியை ஆரம்பிக்க வேண்டும். பௌத்த ஏடுகளைத் தேடியெடுக்க வேண்டும். எனவே, எல்லாவற்றுக்கும் நேரம் இருப்பதுபோல் மூன்று ஆண்டுகள் பாடலிபுத்திரத்தில் தங்கினார் பாஹியான். மெகஸ்தனிஸும் இந்தியாவில் அதிகம் கண்டது இந்நகரைத்தான்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 30 - பாஹியானின் பாடலிபுத்திரம்

மெகஸ்தனிஸின் குறிப்புகளையும் பாஹியானின் குறிப்புகளையும் அருகருகில் வைத்துக்கொண்டு ஒப்பிடும்போது, சுமார் 700 ஆண்டுகளில் இந்தியாவில் என்னென்ன மாறியிருக்கின்றன, எதுவெல்லாம் மாறவில்லை என்பதை ஓரளவுக்குத் தெரிந்துகொள்ளமுடியும். பாடலிபுத்திரத்தில் காணப்பட்ட மரக் கட்டுமானங்களை மெகஸ்தனிஸ் விலாவாரியாகப் பதிவுசெய்திருந்தார். பாஹியான் சென்று பார்த்தபோது அவை குலைந்துபோயிருந்தன. பாதி முறிந்த சுவர்களையும் கோபுரங்களையும் கண்டார். ஆனால் அவற்றின் அழகிய வேலைப்பாடுகள் இன்னமும் அழியாமல் இருந்ததைக் கண்டு அதிசயித்தார். மரங்களை விட்டுவிட்டு உறுதியான கற்களைக் கொண்டு இப்போது மாளிகைகள் எழுப்பப்பட்டிருந்தன. அசோகரின் அரண்மனை கம்பீரத்தோடு நின்றுகொண்டிருந்தது. புதிய கண்காணிப்பு கோபுரங்கள் ஓங்கி உயர்ந்திருந்தன.

இவற்றையெல்லாம் கண்டு எந்த அளவுக்கு பாஹியான் மயக்கம்கொண்டார் என்பது அவருடைய குறிப்பிலிருந்து தெரிகிறது. `பாடலிபுத்திரத்தில் நான் பார்த்த கட்டுமானங்களை நம்மைப் போன்ற மனிதர்கள் உருவாக்கியிருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இறங்கிவந்து தங்கள் அற்புதக் கரங்களால் இங்குள்ள அனைத்தையும் உருவாக்கியிருக்க வேண்டும். பாடலிபுத்திரம் தேவர்களால் உருவாக்கப்பட்ட நகரம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.’

பாடலிபுத்திரத்தில் அசோகரின் தூணைக் கண்டார் பாஹியான். அதை ஒட்டியவாறு அமைந்திருந்த மடாலயங்களையும் தரிசித்தார். ஒரு மிகப்பெரிய மஹாயான விகாரத்தை அங்கே அவர் கண்டிருக்கிறார். `ஹீனயானத்துக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. நான் கண்ட ஒரு ஹீனயான மடாலயத்தில் 700 துறவிகள் தங்கியிருந்தனர். ஒழுங்கும் தூய்மையும் நிலவும் அருமையான இடம். வேறுபாடின்றி எல்லா வகையாக பௌத்தர்களும் அறிவும் உண்மையும் தேடி இந்த மடாலயத்துக்கு வருகிறார்கள்’ என்கிறார் பாஹியான்.

ஒவ்வோர் ஆண்டும் இரண்டாம் மாதம், எட்டாம் நாள் இங்கே ஒரு சடங்கு நிகழ்த்தப்படுகிறது. மூங்கில் கம்புகளை ஒன்றன் மீது ஒன்று பொருத்தி, அசோகரின் தூண்போல் ஒன்றை உருவாக்குகிறார்கள். நிஜ கட்டுமானம்போல் அதை அழகுபடுத்துகிறார்கள். கிட்டத்தட்ட 20 அடியில் இந்த மூங்கில் தூண் எழுந்து நிற்கிறது. அதை அப்படியே தூக்கி நான்கு சக்கரங்கள் கொண்ட வண்டியில் நிறுத்துகிறார்கள். தங்கம், வெள்ளி, பளபளப்பான கற்கள் ஆகியவற்றைக்கொண்டு தோரணம் போல் கட்டுகிறார்கள். பிறகு புத்தரின் ஓவியம் வண்டியில் ஏற்றப்பட்டு வேலைப்பாடுகளுக்கு நடுவில் வைக்கப்படுகிறது. மடாலயத்துக்குள் அமர்ந்திருப்பதுபோல் புத்தர் வண்டியில் அலங்காரமாக அமர்ந்திருக்கிறார்.

இப்படி இருபது வண்டிகள் தயார்செய்யப்படுகின்றன. பிறகு ஊர்வலம் தொடங்குகிறது. வழிநெடுகிலும் துறவிகள் தொடங்கி சாமானியர்கள் வரை அனைவரும் வீதியின் இரு பக்கங்களிலும் காத்திருந்து புத்தர்மீது மலர்களைத் தூவுகிறார்கள். நறுமணப் பொருள்கள் காணிக்கையாக அளிக்கப்படுகின்றன. வாத்தியங்கள் முழங்குகின்றன. நகரம் நகரமாக, வீதி வீதியாக ஊர்வலம் செல்கிறது. `இங்கு மட்டுமல்ல இந்தியா முழுக்க இப்படிப்பட்ட ஊர்வலங்கள் நடக்கின்றன’ என்கிறார் பாஹியான்.

பாடலிபுத்திரத்தில் மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். வளங்கள் நிறைந்திருக்கின்றன. மற்றவர்களுக்கு உதவுவதில் நீ முந்தியா, நான் முந்தியா என்பதில்தான் கடும்போட்டி காணப்படுகிறது. வாரி வழங்கும் வள்ளல்களை இங்கே அதிகம் காணமுடிகிறது. மூத்தோர்களும் நல்லுள்ளம் கொண்டவர்களும் இணைந்து வள்ளல்களின் பொருளுதவியோடு சில அமைப்புகளை நடத்திவருகிறார்கள். ஒருவரையும் பசிப் பிணி நெருங்காதவாறு இவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். தர்மசாலைகள் அமைக்கப்பட்டு அனைவருக்கும் உணவு அளிக்கப்படுகிறது.

நோயுற்றவர்களை குணப்படுத்தும் மருத்துவமனைகளையும் இவர்கள் திறந்துவைத்திருக்கிறார்கள். `ஆரோக்கிய விகார்’ என்று இதை அழைக்கிறார்கள். இங்குள்ள மருத்துவர்கள் பலவிதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறார்கள். அவரவர் தேவைக்கேற்ப மருந்து, உணவு இரண்டுமே நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. பல நோயாளிகள் அங்கேயே தங்கவைக்கப்படுவதும் உண்டு. உடல்நிலை தேறியதும் அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுகிறார்கள்.

சின்னச் சின்ன சண்டைகள் போக, பெரிய அளவில் மோதல்கள் எதுவும் பாடலிபுத்திரத்தில் வெடிப்பதில்லை. எனவே யாரும் பெரிய அளவில் புகார்கள் தெரிவிப்பதில்லை. நிலத்திலிருந்துதான் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குத் தடையின்றி பயணம் செய்யலாம். மடாலயங்கள், கோயில்கள், வழிபாட்டு இடங்கள் ஆகியவை வரி செலுத்தத் தேவையில்லை. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பணமாக அளிக்கப்படுகிறது. இதுபோக அவர்கள் எங்கிருந்தும் லஞ்சம் பெற்றுக்கொள்ளக் கூடாது. நகரில் திருட்டும் கொள்ளையும் நடைபெறுவதில்லை.

பௌத்தர்களுக்கு மட்டுமல்ல, சமணர்களுக்கும் பாடலிபுத்திரம் முக்கியமான இடம்தான். முக்கிய சமண அறிஞரும் போதகருமான தூலபத்திரர் பாடலிபுத்திரத்தில் பிறந்தவர். சமண அறநெறிகள் பொஆமு 4-ம் நூற்றாண்டில் முதன்முதலில் இந்நகரில்தான் திரட்டப்பட்டன என்றும் நம்பப்படுகிறது. அசோகர் பௌத்தத்தை உயர்த்திப் பிடித்தவர் என்றாலும், அவருக்கு முன்பே சந்திரகுப்த மௌரியர் சமணத்தால் ஈர்க்கப்பட்டிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. பிராமண மரபுகளிலும் பாடலிபுத்திரத்துக்குச் சிறப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது. சம்ஸ்கிருத அறிஞர் பாணினி, பதஞ்சலி முனிவர் என்று தொடங்கி சிறப்புமிக்க பலர் பாடலிபுத்திரத்தோடு தொடர்புடையவர்கள். பொஆ 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வாத்ஸ்யாயனர் பாடலிபுத்திரத்தில் வாழ்ந்தவர். கணிதவியல் அறிஞரும், வானியல் நிபுணருமான ஆரியபட்டர் பாடலிபுத்திரத்தில்தான் வசித்திருக்கிறார். பாஹியான் வருவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்புதான் தன்னுடைய புகழ்பெற்ற நூலை (ஆரியபட்டியம்) அவர் இயற்றியிருக்கிறார். வழக்கம்போல் பாஹியானின் குறிப்புகளில் இவர்கள் யாருமே இல்லை.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 30 - பாஹியானின் பாடலிபுத்திரம்

விநயம் உள்ளிட்ட பௌத்த ஏடுகளை வட இந்தியாவின் பல பகுதிகளில் பாஹியான் தேடியிருக்கிறார். சற்றே பெரிய மடாலயத்தைக் காண நேர்ந்தால் உள்ளே சென்று அவர்களிடம் என்னென்ன ஏடுகள் இருக்கின்றன என்று ஆர்வத்தோடு ஆராய்ந்திருக்கிறார். ஆனால், ஏற்கெனவே கண்டிருந்த அல்லது கற்றிருந்த ஏடுகள் தவிர்த்து புதிதாக எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லைபோலும். மனம் தளராமல் தொடர்ந்து தன் தேடலை அவர் முன்னெடுத்திருக்கிறார். இறுதியில் பாடலிபுத்திரத்தில்தான் அவர் தேடல் முடிவடைந்திருக்கிறது. அங்கிருந்த பல மடாலயங்களில் நூலகங்களும் உள்ளுக்குள்ளே இருந்திருக்கின்றன. அவற்றில் விநயமும் வேறு பல ஏடுகளும் அவருக்குக் கிடைத்தன. அந்தப் பிரதிகளையெல்லாம் அவர் அமர்ந்து கற்றிருக்கிறார். நிதானமாக, கவனமாகப் பிரதியெடுத்திருக்கிறார். பாஹியான் பார்வையிட்ட பல ஏடுகள் சம்ஸ்கிருதத்தில் இயற்றப்பட்டவை என்பதால் அவர் சம்ஸ்கிருதத்தையும் அநேகமாக பாடலிபுத்திரத்தில்தான் கற்றிருக்க வேண்டும்.

பாஹியான் எதுவும் குறிப்பிடாவிட்டாலும் இந்தியாவின் இரு பெரும் மதங்களாக அப்போது பௌத்தமும் இந்து மதமும்தான் இருந்தன. பஞ்சாப், வங்காளம், மதுரா போன்ற பகுதிகளில் பௌத்தம் செல்வாக்கோடு இருந்திருக்கிறது. உத்தரப்பிரதேசம், பீகார், வங்காளத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் இந்து மதத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இரண்டாம் சந்திரகுப்தர் விஷ்ணு பக்தராக அறியப்படுகிறார் என்றாலும், பௌத்தம் உள்ளிட்ட பிற மதங்களைக் கனிவோடு அணுகியிருக்கிறார். கோயில்கள் மட்டுமன்றி, பௌத்த மடாலயங்களுக்கும் அவர் அரசு நிதியுதவி செய்திருக்கிறது.

பாஹியான் பாடலிபுத்திரத்தில் கண்ட மடாலயங்களில் எதையும் இன்று நாம் காண முடியாது. அவருடைய குறிப்புகளைக் கொண்டு கற்பனையில் வேண்டுமானால் ஒரு சுற்று சுற்றிவிட்டு வரலாம். பௌத்தம் கொஞ்சம் கொஞ்சமாக இந்நிலத்திலிருந்து மறைய, மறைய மடாலயங்களின் எண்ணிக்கையும் மறைய ஆரம்பித்துவிட்டன. இந்த மாற்றம் பாஹியான் காலத்திலேயே நடக்க ஆரம்பித்துவிட்டது. அவர் குறிப்புகளைப் பார்க்கும்போது ஒட்டுமொத்த இந்தியாவும் பௌத்த நிலம்போல் காட்சியளித்து நம்மை வியக்கவைக்கும் என்றாலும், அது பகுதியளவிலான சித்திரம் மட்டும்தான். குப்தர் காலத்து பாடலிபுத்திரத்தை பௌத்தம் தழைக்கும் இடம் என்று அழைப்பதைவிட பிராமணியம் செல்வாக்கோடு இருந்த இடம் என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

(விரியும்)