மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 31 - வீடு திரும்பும் காதை

வீடு திரும்பும் காதை
பிரீமியம் ஸ்டோரி
News
வீடு திரும்பும் காதை

புத்தரின் நிலத்தில் ஏன் பௌத்தம் தேய வேண்டும்? அதற்கு முன்பு இன்னொரு கேள்வியை பாஹியான் எழுப்பிக்கொண்டார். இந்தியாவில் பௌத்தத்தை வளர்ப்பவர்கள் யார்? முதலில், ஆட்சியாளர்.

ஒரு பயணம் எங்கெல்லாம் நம்மை இட்டுச்செல்லும், எதையெல்லாம் நம் கண்களுக்கு வெளிப்படுத்தும் என்பது நம் கையில் இல்லை. பௌத்தத்தின் எழுச்சியைக் காண விரும்பிய பாஹியான், அதன் வீழ்ச்சியின் தொடக்கப்புள்ளிகளையும் சேர்த்தே காணவேண்டியிருந்தது. வருத்தம்தான்; துயரம்தான்; இருந்தும் கண் முன்னிருக்கும் உண்மையை அவர் மறுக்கவோ, மறைக்கவோ விரும்பவில்லை. ஓங்கி உயர்ந்து நிற்கும் பௌத்தக் கட்டுமானங்களின் அழகைப் பதிவுசெய்த அதே கரங்களால் அவற்றின் சிதிலங்களையும் அவர் பதிவுசெய்தார். `எது உன்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறதோ, அதுவேதான் உன்னைத் துயரத்திலும் தள்ளுகிறது’ என்னும் பௌத்த விதியை அவர் மறந்திருக்க வாய்ப்பில்லை.

புத்தரின் நிலத்தில் ஏன் பௌத்தம் தேய வேண்டும்? அதற்கு முன்பு இன்னொரு கேள்வியை பாஹியான் எழுப்பிக்கொண்டார். இந்தியாவில் பௌத்தத்தை வளர்ப்பவர்கள் யார்? முதலில், ஆட்சியாளர். அசோகர்போல், கனிஷ்கர்போல், ஹர்ஷர்போல் பௌத்தத்தை ஏற்றுக்கொண்ட ஒருவர் ஆட்சியாளராக அமரும்போது பௌத்தம் தழைக்கிறது. தூண்கள், சிலைகள், விகாரங்கள், நினைவுச்சின்னங்கள் போன்றவற்றை அவர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் எழுப்புகிறார்கள். இந்தக் கட்டுமானங்கள் மக்களை ஈர்க்கின்றன. அரசு ஆதரவோடு பிக்குகள் தேசமெங்கும் பௌத்த நெறிகளைப் பரப்புகின்றனர். பௌத்தத்துக்குச் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அளிக்கப்படுவதை மக்கள் உணர்கின்றனர். அவர்களும் திரண்டுவந்து பௌத்தத்தைத் தழுவுகின்றனர்.

இரண்டாவது, வைசியர்கள். இவர்கள் பொருளுதவி அளிக்காவிட்டால் இவ்வளவு தர்மசாலைகள் இந்தியா முழுக்கப் பரவியிருக்க வாய்ப்பில்லை. பசித்த வயிறுகள் நிறைந்தால்தான் நெறிகளும் கோட்பாடுகளும் உள்ளே நுழைய முடியும். பௌத்தம் என்றால் அன்பு என்று அமரவைத்து பக்கம் பக்கமாக விளக்குவதற்கு பதில், தேவையோடு வருபவர்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவ உதவிகள் ஆகியவற்றை அளித்து, அவர்கள் நிறைவடைந்ததும் இதுதான் பௌத்தம் என்று சொல்வது கூடுதல் செயலூக்கம்கொண்டது அல்லவா? தவிரவும் பௌத்தக் கட்டுமானங்களைப் பராமரிப்பவர்களும் இவர்களே. `இவர்கள் தொடர்ந்து அளித்துவரும் நிதியால்தான் மடாலயங்கள் இயங்குகின்றன. பிக்குகளை ஆதரிப்பவர்களும் இவர்களே. அந்தவகையில் பௌத்தம் தழைப்பதற்குக் காரணம் வைசியர்கள்’ என்கிறார் பாஹியான்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 31 - வீடு திரும்பும் காதை

பௌத்த மன்னரின் இடத்தில் வேறொருவர் வரும்போது, அவருடைய சமயம் வேறொன்றாக இருக்கும்போது, பௌத்தத்துக்குக் கிடைத்துவந்த சமூக அங்கீகாரம் குறைகிறது. வைசியர்கள் தங்கள் ஆதரவைக் கைவிடும்போது மடாலயங்கள் களையிழக்கின்றன. பராமரிப்பு இல்லாததால் நினைவுச்சின்னங்கள் கைவிடப்படுகின்றன. மக்களின் இடப்பெயர்ச்சியும் முக்கியமானது. பல்வேறு காரணங்களுக்காக ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு மக்கள் குழுவாக இடம்பெயரும்போது, அவர்களோடு அவர்கள் கடைப்பிடித்து வந்த சமயமும் விடைபெற்றுச் சென்றுவிடுகிறது. வெற்றிடம் உருவாகிறது. அந்த வெற்றிடத்தை வளமோடு இருக்கும் பிற சமயங்கள், பிற நம்பிக்கைகள் ஆக்கிரமிக்கின்றன.

இந்தியாவில் பௌத்தம் ஏன் வீழ்ச்சியடைந்தது என்பதை எளிமைப்படுத்தி விளக்கிவிட முடியாது. பல்வேறு கோணங்களிலிருந்து விரிவாகவும் நுணுக்கமாகவும் ஆராயவேண்டிய ஒரு கேள்வி இது. என்றாலும், பாஹியானின் வாதம் மறுக்க முடியாதது. மீனுக்கு நீர்போல் எந்தவொரு சமயத்துக்கும் நிதி அவசியம்.

பாஹியான் வீடு திரும்பத் தயாரானார். தேடியெடுத்த ஏடுகள், பிரதியெடுத்தவை, மடாலயங்களில் அமர்ந்து எழுதிய குறிப்புகள், சான்றோரிடமிருந்து கேட்டுத் தொகுத்துக்கொண்ட விளக்கங்கள், மொழிபெயர்ப்புகள் எனக் குன்றுபோல் காகிதக் குவியல்கள் வளர்ந்திருந்தன. அவற்றையெல்லாம் வெவ்வேறு பைகளிலும் பெட்டிகளிலும் நிறைத்துக்கொண்டார். மனம் நிறைந்து ததும்பும் அளவுக்கு அனுபவங்களும் பாடங்களும் திரண்டிருந்தன. இனி சீனா திரும்பியாக வேண்டும். டாவோ சிங் என்பவர் மட்டும் இப்போது பாஹியானுடன் இருந்தார். `கிளம்பலாமா?’ என்று பாஹியான் கேட்டபோது டாவோ சிங் மறுத்துவிட்டார். `எனக்கு பாடலிபுத்திரம் நன்கு பழகிவிட்டது. நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்!’

பாஹியானும் தங்கியிருக்கலாம்தான். ஆனால் அவருக்கொரு கடமை இருந்தது. இந்தியாவிலிருந்து திரட்டியெடுத்த ஒளியை அவர் சீனர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பினார். அதைச் செய்தால் மட்டுமே பயணம் முழுமையடையும். அதேசமயம் வந்த வழியில் திரும்பவும் நடந்துசெல்ல அவர் தயாராக இல்லை. இந்தியாவை நாடி வரும்போது அவர் ஒரு தனி மனிதர். இப்போது விலைமதிப்பில்லாத சொத்துகள் அவரிடம் உள்ளன. சீனாவின் கரங்களில் ஒப்படைக்கும்வரை பைகளுக்கு எந்தச் சேதமும் ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே அவர் கடலைத் தேர்ந்தெடுத்தார். திட்டம் இதுதான். வங்கத்திலிருந்து புறப்பட வேண்டும். அங்கிருந்து இலங்கை. பிறகு தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் ஆடி அசைந்து சீனாவை அடைந்துவிடலாம்.

எப்போது கப்பல் கிளம்பும் என்பது வீசும் காற்றைப் பொறுத்தது. ஒரு துறைமுகத்தைவிட்டு இன்னொரு துறைமுகம் சென்றதும் அங்கே காத்திருக்க வேண்டும். உகந்த வானிலை அமையும்போதுதான் அங்கிருந்து கப்பல் கிளம்பும். சிலசமயம் மாதக்கணக்கில்கூட ஓரிடத்தில் மாட்டிக்கொள்ள நேரிடலாம். பாஹியான் அப்படிப்பட்ட தருணங்களையும் தனக்குச் சாதமாக்கிக்கொண்டார். வங்கத்திலிருந்து இலங்கைக்கு 14 நாள்களில் சென்று சேர்ந்த பிறகு, அடுத்த கப்பல் கிளம்புவதற்குத் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது. `அவசரமே இல்லை, நான் இலங்கையை ஒரு சுற்று சுற்றிவிட்டு வருகிறேன்’ என்று கிளம்பிவிட்டார் பாஹியான்.

இலங்கை ஒரு பௌத்த சோலையாக இருந்தது. புத்தரின் வாழ்வோடும் உபதேசங்களோடும் தொடர்புடைய புனித இடங்கள் ஏராளம் அமைந்திருந்தன. பௌத்த ஏடுகளும் கிடைத்தன. தியான முறைகள் சிலவற்றைப் புதிதாகக் கற்றுக்கொள்ள முடிந்தது. மடாலயங்கள் கடைப்பிடித்த சில சடங்குகள் அவர் அறியாதவையாக இருந்தன. இந்த வாய்ப்பை விட்டால் இன்னொருமுறை இங்கே வர முடியாது. கப்பலைப் பிடிப்பது முக்கியமல்ல. கரை சேர்வதுதான் முக்கியம். அடுத்த இரண்டாண்டுகள் இலங்கையில் தங்கிவிட்டார் பாஹியான். பிரதியெடுத்தல், குறிப்புகள் எழுதுதல், ஒப்பிடுதல் என்று குன்று மலையாக வளர ஆரம்பித்தது.

ஒருநாள் இலங்கையில் தற்செயலாக ஒரு சீன வணிகரைக் கண்டார். நீண்டகாலமாக அந்நிய நிலங்களில் அந்நிய மனிதர்களையே கண்டும் பழகியும் வந்த பாஹியான் சக சீனர் ஒருவரைத் திடுதிப்பெனக் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். இதயத்தில் தேக்கிவைத்திருந்த ஏக்கங்களெல்லாம் மேலேழும்பி வந்தன. கண்ணீர் வழிந்தோட ஆரம்பித்தது.

ஜாவா சென்றுகொண்டிருந்த ஒரு கப்பலில் இடம்பிடித்துக்கொண்டார். ஏற்கெனவே 200 பயணிகள் அதில் நிரம்பியிருந்தனர். இந்தியாவுக்கும் சீனாவுக்குமான கடல் பயணம் நிலப்பயணம் அளவுக்கு ஆபத்தானது.

இலங்கையிலிருந்து கிழக்கு நோக்கி நகர ஆரம்பித்த மூன்று தினங்களில் கப்பலில் எங்கோ விழுந்த ஓட்டையால் நீர் அடித்துக்கொண்டு உள்ளுக்குள் வர ஆரம்பித்துவிட்டது. உடனடியாக கரை ஒதுங்கவும் முடியாது. முழுக்க மூழ்குவதிலிருந்து தப்ப வேண்டுமானால் எடையைக் குறைத்தாக வேண்டும். ஒவ்வொருவரும் தாம் சுமந்துவரும் பொருள்களிலிருந்து சிலவற்றைக் களையுமாறு அறிவுறுத்தப்பட்டனர். வணிகர்கள் பண்டங்களைக் கடலில் வீசினர். பாஹியானும் தன் சுமையைக் குறைத்துக்கொள்ளத் தயாரானார். உடைமைகளோடு நெருக்கம் கொள்ளாதே என்றுதான் புத்தரும் சொல்கிறார். ஆனால் அதற்காக புத்தரைத் துறந்துவிட முடியுமா என்ன? `என்னைக் களைவேனே தவிர என் பிரதிகளைக் களையேன்’ என்று நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டார் பாஹியான்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 31 - வீடு திரும்பும் காதை

கடலில் திசைகாட்டும் கருவிகள் அப்போது இல்லை என்பதால் பரந்து விரிந்திருக்கும் கடல் கடும் அச்சத்தை ஏற்படுத்தியது. எது மேற்கு, எது கிழக்கு என்றே ஒருவருக்கும் தெரியவில்லை என்கிறார் பாஹியான். பகலில் சூரியனையும் இரவில் நிலவையும் நட்சத்திரங்களையும் கொண்டே கப்பலைச் செலுத்தினர். நாம் செலுத்தும் திசையில்தான் கப்பல் எப்போதும் செல்லும் என்று சொல்ல முடியாது. பலமான காற்று வீசும் ஒவ்வொரு முறையும் கப்பல் நம் கட்டுப்பாட்டிலிருந்து விலகிவிடும். நீண்ட அலைக்கழிப்புக்குப் பிறகு ஓரிடத்தில் கப்பல் வந்து நிற்கும்போது மீண்டும் திசைக் குழப்பத்தில் மாட்டிக்கொள்வோம். `இரவொளியில் பெரிய பெரிய அலைகளைக் காணும்போது மனமும் இருண்டுவிடும்’ என்கிறார் பாஹியான். இமயமலையை முதலில் கண்டபோது ஏற்பட்ட அதே அச்சம் மீண்டும் படர்ந்தது. இந்தக் கடலுக்குள் எத்தனை எத்தனை பயங்கர விலங்குகள் ஒளிந்துகொண்டிருக்குமோ என்று நடுங்குகிறார் பாஹியான்.

`கடல் சீற்றத்திலிருந்து தப்பினால் கடற்கொள்ளையரிடம் மாட்டிக்கொள்ள நேரிடும். மாட்டினால் துரித மரணம்தான்’ என்கிறார் பாஹியான். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஜாவா சென்று சேர்வதற்கு 90 தினங்கள் ஆகிவிட்டன. ஐந்து மாதங்கள் ஜாவாவில் தங்கினார். அந்த இடம் அவரைக் கவரவில்லை. `இங்குள்ள பௌத்தம் குறித்து எதுவும் சொல்லாமல் இருப்பதே நல்லது’ என்று முடித்துக்கொள்கிறார். களைத்திருக்கும் பாஹியானை ஏற்றிக்கொண்டு சீனக் கப்பல் ஒரு வழியாக ஜாவாவிலிருந்து புறப்படுகிறது. நான்கு முதல் ஆறு வாரங்களில் சீனாவை அடைவதுதான் திட்டம். ஆனால், கிளம்பி 70 தினங்கள் ஆன பிறகு, நாம் இப்போது எங்கே இருக்கிறோம் என்று கப்பலில் ஒருவருக்கும் தெரியவில்லை. ஏதோ ஒரு நம்பிக்கையில் அங்கே, இங்கே செலுத்தி ஒருவழியாக சீனாவில் கொண்டுவந்து மாலுமி இறக்கியபோது, அனைவருக்கும் அது ஒரு பேரதிசயம்போல் இருந்தது.

இத்தனைக்கும் அவர்கள் அடையவேண்டிய துறைமுகம் வேறு. இறக்கிவிடப்பட்ட துறைமுகம் வேறு. பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சீன மண்ணில் தன் கால்களைப் பதித்த பாஹியான் இதற்கெல்லாம் குறைபட்டுக்கொண்டதுபோல் தெரியவில்லை. குழுவோடு இங்கிருந்து கிளம்பிச் சென்ற நினைவு, அவர் மனதில் நிழலாடியிருக்கும். அந்தக் குழுவில் பயணத்தை முடித்துக்கொண்டு உயிரோடு வீடு திரும்பியவர் அவர் மட்டும்தான். புத்தருக்கு நன்றி. இந்தியாவுக்கு நன்றி. பாஹியான் நடக்கத் தொடங்கினார்.

(விரியும்)