மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 32 - இரண்டாம் பிறவி!

இரண்டாம் பிறவி!
பிரீமியம் ஸ்டோரி
News
இரண்டாம் பிறவி!

முயன்றுகொண்டே இருக்கலாமா அல்லது மேரு மலை எனக்கில்லை என்று திரும்பிச் சென்றுவிடலாமா?

சீனா வந்தடைந்த பாஹியான், தான் கொண்டுவந்த ஏடுகளை மொழிபெயர்ப்பதிலும், தனது பயண அனுபவங்களை விரிவாக எழுதுவதிலும் அடுத்த பத்து ஆண்டுகளைச் செலவிட்டார். 422-ம் ஆண்டு, தனது 85-வது வயதில் மரணமடைந்தார். கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகள் கழித்து, மனம் முழுக்க புத்தரையும் பாஹியானையும் நிறைத்துக்கொண்டு அதே சீனாவிலிருந்து, இந்தியாவை நோக்கி ஒரு நெடும்பயணத்தைத் தொடங்கினார் யுவான் சுவாங்.

யுவான் சுவாங்கை எடுத்து வாசிக்கும்போது, இன்னொரு முறை இந்தியாவைக் காண வேண்டும் என்னும் துடிதுடிப்பில் பாஹியானே மறுபிறப்பு எடுத்து வந்துவிட்டாரோ என்றுதான் நமக்குத் தோன்றும். அந்த அளவுக்கு பாஹியானின் பயணத் தடத்தை மட்டுமல்ல, வாழ்க்கைத் தடத்தையும் பிரதியெடுத்திருக்கிறார் யுவான் சுவாங்.

இப்போதுள்ள ஹெனான் மாகாணத்தில் 602-ம் ஆண்டு யுவான் சுவாங் பிறந்தார். நான்கு குழந்தைகளில் இளையவர். கற்றறிந்தவர்களும் செல்வாக்கு மிக்கவர்களும் குடும்பத்தில் அதிகம் என்பதால், வசதிக் குறைபாடு இல்லாத நிறை வாழ்க்கை அமைந்துவிட்டது. இளம் வயதிலேயே யுவான் சுவாங்குக்கு வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. அவர் வயது குழந்தைகளெல்லாம் காக்கா, குருவி புத்தகங்களை எழுத்துக்கூட்டிப் படித்துக்கொண்டிருக்க, யுவான் சுவாங்கோ பெரியோர்களே அதிகம் படித்திராத சமயக் கோட்பாடுகளையும், செவ்வியல் படைப்புகளையும் தேர்ந்தெடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 32 - இரண்டாம் பிறவி!

தந்தை, கன்ஃபூஷியஸ்மீது பற்றுகொண்டவர். யுவான் சுவாங், தந்தைவழியில் செல்லாமல் புத்தரைத் தன் ஆசானாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். அப்போது அவர் வயது 13. இது எளிதான தேர்வல்ல என்பது அவருக்குத் தெரியும். புத்தர் ஒரு சிந்தனையாளர் மட்டுமல்லர். ஏடுகளில் தொடங்கி ஏடுகளோடு முடிந்து போய்விடுகிற ஒரு கோட்பாட்டாளர் கிடையாது அவர். அவரைப் பயில வேண்டுமானால், இயன்றவரை நம்மை விரிவாக்கிக்கொள்ள வேண்டும். வீட்டுக் கதகதப்புக்குள் வசதியாக அமர்ந்துகொண்டு பௌத்தரை உள்வாங்கிக்கொள்ள முடியாது. `என்னை மடாலயத்தில் சேர்த்துவிடுங்கள்’ என்று குழந்தை கோரிக்கை வைத்தபோது, வீட்டிலிருந்தோரால் மறுக்க இயலவில்லை. அள்ளி எடுத்துச் சென்று சேர்த்திருக்கிறார்கள். யுவான் சுவாங் முறைப்படி பௌத்தம் கற்க ஆரம்பித்தார். பிக்குவாக மாற வேண்டும் என்னும் கனவு அவருக்குள் விரிந்து படர ஆரம்பித்தது.

இதற்கிடையில் அரசியல் நிலவரம் சரியில்லாததால், சிச்சுவானுக்குக் குடும்பம் குடிபெயர்ந்தது. யுவான் சுவாங் அங்கிருந்த வேறொரு மடாலயத்தில் சேர்ந்துகொண்டார். இந்த முறை அவர் மாணவர் அல்ல. பரிசோதித்துப் பார்த்ததன் முடிவில் முழு பிக்குவாக அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அப்போது அவர் வயது 20. `ஆஹா, தேடியதை அடைந்துவிட்டேன்’ என்று மனநிறைவு கொள்ளலாம்தான். ஆனால், யுவான் சுவாங் அல்லவா? சில ஆண்டுகளில் மனம் கிடந்து அல்லாட ஆரம்பித்தது.

நுணுக்கமாகச் செல்லச் செல்ல ஏடுகளில் உள்ள இடைவெளிகளும் குறைபாடுகளும் புலப்பட ஆரம்பித்தன. இது பௌத்தத்தில் உள்ள இடைவெளி, பௌத்தத்தில் காணப்படும் குறைபாடு என்னும் முடிவுக்கு வந்துசேர அவர் தயாராக இல்லை. நிச்சயம் இது மொழிபெயர்ப்பு சார்ந்த பிரச்னைதான் என்பதை உணர்ந்துகொண்டார். சீனம் உயர்ந்த மொழிதான், செவ்வியல் மொழிதான். ஆனால், புத்தர்தான் உலகம் என்று ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு சீன மொழியோடு தேடலை முடித்துக்கொள்வது சரியில்லை அல்லவா? பௌத்தத்தின் அடிப்படைகளைக் கற்க எப்படி வீட்டு எல்லையைக் கடந்தேனோ, அதேபோல் பௌத்தத்தின் இதயத்தைத் தரிசிக்க சீனத்தின் எல்லையையும் கடந்தாக வேண்டும், இல்லையா?

இந்திய மொழிகள் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் சீனாவில் இருக்கிறார்களா என்று தேடத் தொடங்கினார் யுவான் சுவாங். கிடைத்தார்கள். எவ்வளவு தீவிரமாக பௌத்தம் கற்றாரோ, அதே தீவிரத்தோடு சம்ஸ்கிருதம் கற்கத் தொடங்கினார். விரைவில் சம்ஸ்கிருதம் வசப்பட ஆரம்பித்தது. வேறு சில அந்நிய மொழிகளையும் அவர் கற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. எவையென்று உறுதியாகத் தெரியவில்லை.

புது மொழிகள், புது வாசல்களைத் திறந்துவிட்டன. புதிய கேள்விகளையும் கிளப்பிவிட்டன. பௌத்தம் என்பது ஒரு பாதையில் நடந்து சென்று அடையவேண்டிய இலக்கு அல்ல. பல்வேறு பாதைகளை, பல்வேறு சிந்தனைப் பள்ளிகளைக்கொண்டு இயங்கும் தனியுலகம் என்பதை யுவான் சுவாங் புரிந்துகொண்டார். இந்தப் பாதைகள் ஒன்றோடொன்று இணைந்தும், சிலசமயம் ஒன்றோடொன்று முரண்பட்டும் பௌத்தத்தைச் செழுமைப்படுத்துவதை அவர் கண்டார். `குருடர் யானையைத் தடவும் கதையாக என்னுடைய தேடல் சுருங்கிவிடக் கூடாது’ என்று அவர் தவித்தார். முழு யானையைக் காண வேண்டுமானால் இருக்கும் இடத்தைவிட்டு நகர வேண்டும். யானையின் ஒவ்வொரு பக்கத்தையும் சுற்றி வந்து பார்க்க வேண்டும். ஒவ்வொன்றையும் உணர வேண்டும். பிறகு எல்லாவற்றையும் தொகுத்துக்கொண்டு ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அந்தச் சித்திரம்தான் நிஜ யானைக்கு நெருக்கமானதாக இருக்கும்.

பாஹியான் பௌத்தத்தை உணர்ந்தது இப்படித்தான். பௌத்தம் ஏட்டுச் சுரைக்காய் அல்ல. சீன மண்ணைத் துறந்து ஆண்டுக்கணக்கில் இந்தியாவைச் சுற்றியதால்தான் அவரால் பௌத்தத்துக்கு நெருக்கமாகச் செல்ல முடிந்தது. பாஹியான் இந்தியாவிலிருந்து கொண்டுவந்த ஏடுகளை வாசிப்பதோடு ஆறுதல் அடைந்துவிட யுவான் சுவாங் தயாராக இல்லை. மாறாக, பாஹியானையே ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு ஓர் இந்தியப் பயணத்தை அவர் தொடங்க விரும்பினார். அவர் கண்ட காட்சிகளைக் காண வேண்டும். `அவர் பட்ட அல்லல்களைப் பட வேண்டும். அவர் கால்பதித்த இடங்களிலெல்லாம் கால் பதிக்க வேண்டும். அவர் பெற்ற அனுபவங்களைப் பெற வேண்டும். `இந்தா...’ என்று அவரைப்போல் உயிரை விண்டு தனியே எடுத்துவைத்துவிட்டு நானும் நடக்க வேண்டும்.’

`யாரெல்லாம் இந்தியா வருகிறீர்கள்?’ என்று கேட்டு தன்னைப்போலவே சில பிக்குகளைத் திரட்டிக்கொண்டார். அனைவரும் கூட்டாகச் சேர்ந்து, `நாங்களெல்லாம் பௌத்த பிக்குகள். ஏடுகள் பார்க்கவும், புத்தரின் வாழ்வோடு தொடர்புடைய புனித இடங்களை தரிசிக்கவும் இந்தியா செல்ல விரும்புகிறோம். எங்களுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று ஒரு விண்ணப்பத்தை எழுதி சீன மன்னருக்கு அனுப்பிவைத்தார்கள். அந்நிய நிலங்களுக்குப் பயணம் செல்வதற்கு அப்போது கடுமையான கட்டுப்பாடுகள் நிலவிவந்தன. யார் செல்கிறார், எங்கே, என்ன காரணத்துக்காக என்பதையெல்லாம் அலசிப் பார்த்துவிட்டு ஆபத்தில்லை என்று கருதினால் மட்டுமே அரசு அனுமதி வழங்கும். டாய்சோங் என்பவர் அப்போது சீன அரசராக இருந்தார். டாங் வம்சத்தைச் சேர்ந்த இரண்டாவது அரசர். புகழ்பெற்றவர். சீனாவை ஆண்ட சிறப்புமிக்க அரசர்களில் ஒருவர். ஒப்பீட்டளவில் இவர் ஆட்சிக்காலத்தில் சீனா போர்களின்றி, மோதல்களின்றி அமைதியாக இருந்தது.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 32 - இரண்டாம் பிறவி!

ஆனால், யுவான் சுவாங்கின் மனம் ஒரு குட்டிப் போர்க்களமாக மாறியிருந்தது. `அனுமதி வருமா, வராதா... பதிலே சொல்லாமல் கிடப்பில் போட்டுவிட்டால் என்ன செய்வது?...பௌத்தத்தைத் தேடுதல் என்பது முக்கிய அலுவல் என்பதன்கீழ் வருமா, வராதா?’ ஒருநாள் யுவான் சுவாங்குக்கு ஒரு கனவு வந்தது. கடும் குழப்பத்திலும் கலக்கத்திலும் யுவான் சுவாங் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். உன்னை விட்டேனா பார் என்று கடும் சவால்கள் அவர் முன்பு அணிவகுத்து நிற்கின்றன. கூச்சலும் குழப்பமும் தாங்க முடியாமல் உயரமான கோபுரமொன்றில் ஏறி தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார். `கடவுளே என்னைக் காப்பாற்று’ என்று அங்கிருந்தபடி வேண்டுகிறார். அப்போது மேரு மலை அவர் கண்முன் தோன்றுகிறது. இந்துக்களுக்கும், சமணர்களுக்கும், பௌத்தர் களுக்கும் பொதுவான புனிதச் சின்னம். ஐந்து முனைகளைக் கொண்ட மேரு மலைதான் உலகின் மையம். உலக இயக்கங்கள் அனைத்துக்கும் மையம். வழக்கம்போலில்லாமல் தங்கமும் வெள்ளியும் இன்னபிற மதிப்புமிக்க கற்களும் சேர்ந்து மேரு மலையாகத் திரண்டிருப்பதை யுவான் சுவாங் காண்கிறார். மலையை ஆறு சூழ்ந்திருக்கிறது. அருகில் சென்று பார்க்கும் ஆர்வத்தோடு யுவான் சுவாங் நீரில் காலடி எடுத்துவைக்கிறார். தாமரை அவரைத் தாங்கிப் பிடித்துக்கொள்கிறது. பாலம்போல் வழியெங்கும் தாமரை பூத்து கிடப்பதைக் கண்டு அச்சமின்றி ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து மேரு மலையை நெருங்குகிறார்.

அண்ணாந்து பார்க்கிறார். `வா, வா...’ என்று அழைப்பது போலிருக்கிறது மேரு மலை. நம்பிக்கையோடு ஏறுகிறார். ஆனால் முதல் அடியிலேயே வழுக்கிவிடுகிறது. வேறொரு பக்கமாகச் சென்று அங்கிருந்து ஏற முடியுமா என்று பார்க்கிறார். அங்கும் வழுக்குகிறது. தவிப்போடு சுற்றிச் சுற்றி வருகிறார். எவ்வளவு முயன்றும் முதல் அடியைக்கூட அவரால் எடுத்துவைக்க முடியவில்லை. `முயன்றுகொண்டே இருக்கலாமா அல்லது மேரு மலை எனக்கில்லை என்று திரும்பிச் சென்றுவிடலாமா?’ திடீரென்று பெரும் சூறாவளிக் காற்று வீசுகிறது. `இருப்பது போதாதென்று இது வேறா...’ என்று யுவான் சுவாங் கலங்கும்போது, காற்று அவரை அப்படியே மேலே, மேலே தூக்கிச் சென்று மேரு மலையின் உச்சியில் கொண்டு சென்று நிறுத்துகிறது. மலை மீதிருந்து சுற்றிலும் பார்வையைச் சுழலவிடுகிறார் யுவான் சுவாங். புதிய புதிய உலகங்கள் உயிர்பெற்று எழுந்துவருகின்றன. அதுவரை காணாத காட்சிகள் புலப்படுகின்றன. பரவசத்தோடு யுவான் சுவாங் விழித்தெழுகிறார்.

`இது கனவல்ல. எனக்கான அழைப்பு’ என்று உணர்கிறார் யுவான் சுவாங். `பௌத்தம் என்னும் மேரு மலையை அடைந்தே தீருவேன். அரசு அனுமதிக்காக இனியும் காத்திருக்கப்போவதில்லை. தாமரை மலர்கள் என்னைத் தாங்கும். பாஹியானைச் சுமந்து சென்றதுபோல் என்னையும் காற்று சுமந்து செல்லும். இந்தியா எனக்காகக் காத்திருக்கிறது!’

(விரியும்)