மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 33 - யுவான் சுவாங்கின் குதிரை

யுவான் சுவாங்கின் குதிரை
பிரீமியம் ஸ்டோரி
News
யுவான் சுவாங்கின் குதிரை

குதிரை ஒரு கட்டத்தில் தன் முடிவை மாற்றிக்கொண்டு, கிளையாகப் பிரிந்து சென்ற ஒரு புது திசை நோக்கிப் பாய ஆரம்பித்தது.

யுவான் சுவாங் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தபோது, சீனா வறட்சியை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தது. எதிர்பாராத அளவுக்குப் பனிப்பொழிவு மிகுந்துவிட்டதால், பல பகுதிகளில் விளைச்சல் பொய்த்துப்போனது. எனவே, தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள், பாதிப்பு குறைந்த பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். யுவான் சுவாங்கும் கும்பலோடு கும்பலாகத் தனது மூட்டை, முடிச்சுகளோடு தயாரானார். கிடைத்த வாய்ப்பை நழுவவிடலாமா?

யுவான் சுவாங் தனது இந்தியப் பயணத்தைத் தொடங்கியபோது, அவர் 27 வயது இளைஞர். ஆறடிக்குச் சற்றே குறைவான உயரம். அடர்த்தியான புருவங்கள். பளிச்சிடும் கண்கள். அகண்ட முன்நெற்றி. நிமிர்ந்த, நேரான பார்வை. தன்னை நேர்த்தியாக வெளிப்படுத்திக்கொள்வதில் அக்கறைகொண்டவர். பிக்குதான் என்றாலும் நல்ல உடுப்புகளைத் தேர்ந்தெடுத்து அணிந்துகொள்வார். பேசினால் அழகாகவும் தெளிவாகவும் இருக்கும். பேசவேயில்லை யென்றாலும் தோற்றமே அவர் அறிஞர் என்று காட்டிவிடுமாம்.

யுவான் சுவாங்கோடு சில பிக்குகளும் இணைந்துகொண்டனர். மேற்கு நோக்கி நடந்து கான்சு மாகாணத்தில் அமைந்திருக்கும் முக்கிய நகரமான லியாங்ஷோவுக்கு வந்து சேர்ந்தார்கள். ஒரு மாத காலம் அங்கே தங்கியிருந்து இந்தியப் பயணத்துக்குத் தேவையான அனைத்தையும் திரட்டிக்கொண்டார்கள். யுவான் சுவாங் பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடமிருந்து பாடம் படித்துக்கொள்ள சில இளைய பிக்குகள் வந்தனர். யுவான் சுவாங் அவர்களுக்கு வகுப்பெடுத்தார். சில மதக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு பௌத்தம் குறித்து உரையாற்றினார்.

ஓர் இளம் துறவி இந்தியா சென்று கொண்டிருக்கிறார் என்னும் செய்தி, காற்றோடு காற்றாகப் பரவ ஆரம்பித்தது. விரைவில் சீனப் படைகள் யுவான் சுவாங்கை வளைத்துப் பிடித்து ஆளுநரிடம் கொண்டு சென்று நிறுத்தின. ஆவணங்கள் இல்லை என்பது தெரிந்ததும், உடனடியாக ஊர் திரும்புமாறு யுவான் சுவாங் அறிவுறுத்தப்பட்டார். நாம் கவனிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்ததும் யுவான் சுவாங் திட்டத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தார். நிலைமை சரியாகும்வரை பகல் நேரங்களில் பதுங்கியிருந்து, இருள் வந்ததும் பயணத்தைத் தொடர வேண்டும்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 33 - யுவான் சுவாங்கின் குதிரை

இது ஓரளவுக்குப் பலன் கொடுத்தது. இருளில் யார் கண்ணிலும் படாமல் குதிரையைச் செலுத்துவார்கள். விடிந்ததும் ஓய்வெடுப்பார்கள். இதோடு சீன எல்லைகள் முடிந்துவிடும். இனி பாலைவனம்தான் என்னும் நிலையில், ஒரு மாத காலம் ஓய்வெடுத்துக்கொண்டார்கள். `தனிமையில், ரொம்ப சோகமாக அந்த ஒரு மாத காலம் கழிந்தது’ என்கிறார் யுவான் சுவாங். மீண்டும் கிளம்பலாம் என்று வெளியில் வந்தபோது, சீன அதிகாரிகளிடம் இன்னொருமுறை சிக்கிக்கொண்டார். அவர்களில் ஒருவர் பௌத்தர் என்பதால், ஆவணம் இல்லை என்று தெரிந்தும் யுவான் சுவாங்கை அவர் தடுத்து நிறுத்தவில்லை. `உடனே கிளம்புங்கள்’ என்று அப்புறப்படுத்தினார்.

சீனாவிலிருந்து வெளியில் வந்ததும் பகல், இரவு என்னும் பேதமில்லாமல் பயணத்தைத் தொடர முடிந்தது. ஆனால், திசை தெரியாமல் ஆங்காங்கே மயங்கி நிற்கவேண்டியிருக்கும். ஓரிடத்தில் வழித்துணைக்குச் சிலர் இணைந்துகொண்டபோது நம்பிக்கை பிறந்தது. ஒருமுறை ஹுலூ ஆற்றை நெருங்கும்போது, களைப்பு மிகுதியால் ஓரிடத்தில் படுக்கையை விரித்தனர். யுவான் சுவாங் சில நிமிடங்களில் உறங்க ஆரம்பித்துவிட்டார். இருளில் திடீரென்று விழிப்பு வந்தபோது, வழிகாட்டுகிறேன் என்று சொல்லி இணைந்துகொண்ட ஒருவர் உருவிய வாளோடு ஒவ்வொருவரையும் நெருங்கி உடைமைகளைத் திருடிக்கொண்டிருந்தார். யுவான் சுவாங் தன் கண்களை இறுக மூடிக்கொண்டு போதிசத்வரை நினைத்தபடி மனதுக்குள் உச்சாடனத்தை ஆரம்பித்திருக்கிறார். திருடன் விலகிவிட்டானாம்.

அதன் பிறகு யுவான் சுவாங் யாரையும் தன்னுடன் இணைத்துக் கொள்ளவில்லை. பாஹியான் கண்டு மிரண்ட பாலைவனத்தை இவரும் கண்டார், மிரண்டார். ஒரே வேறுபாடு பாஹியான் நடந்து சென்றார். யுவான் சுவாங்கிடம் குதிரை இருந்தது. இருந்தாலும், எலும்புகள் தட்டுப்படும் ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள் அதிர்வார். பிறகு நம்பிக்கையைத் திரட்டிக்கொண்டு தொடர்வார். வெப்பக் காற்று உடலைச் சுட்டெரிக்கும். கண்கள் இருண்டு வரும். ஒதுங்க முடியாது, ஓய்வெடுக்க முடியாது. தொலைவில் திரண்டு நிற்கும் மலை, பூதம்போல் இரு கரங்களை நீட்டி `வா, வா...’ என்று கிசுகிசுக்கும். பிடிபடாத சத்தங்கள் பகலிலும் இரவிலும் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

மதிய வேளையில் திடீரென்று கட்டுமிராண்டிகளின் கூட்டம் துரத்திவருவது போலிருக்கும். மணலில் ஆயிரக்கணக்கான உருவங்கள் தோன்றும், அழியும், புது வடிவத்தோடு மீண்டும் தோன்றும். அஞ்சுவார்; மிரள்வார்; அலறுவார். `பாலைவனத்தைக் கடக்கும்வரை கவனமாக இரு’ என்று எல்லோரும் ஏன் வலியுறுத்தினார்கள் என்பது புரிந்தது. கிருமிபோல் பாலைவனம் உங்கள் உடலுக்குள் புகுந்து, கொஞ்சம் கொஞ்சமாக உங்களைப் பிய்த்துத் தின்னத் தொடங்குகிறது. விழிப்போடு இல்லாவிட்டால் மரணம் உறுதி.

கண்காணிப்பு கோபுரங்களைக் காணும்போதெல்லாம், எலிபோல் எங்கேனும் பதுங்குவார். வெளிச்சம் மறைந்ததும் குதிரை பாயும். ஒருமுறை கடும் தாகத்தோடு இருந்தபோது, நீர் நிலையொன்றைக் கண்டு ஆசையோடு குனிந்து பருகத் தொடங்கினார். எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஓர் அம்பு அவரை உரசியபடி குத்தி நின்றது. என்ன எதுவென்று பார்ப்பதற்குள் இன்னொரு அம்பும் வந்து சேர்ந்தது. இரு கைகளையும் உயர்த்தியபடி குரலெழுப்பினார் யுவான் சுவாங். “நான் ஒரு பௌத்த பிக்கு. தலைநகரிலிருந்து வருகிறேன். என்னைக் கொன்றுவிடாதீர்கள்!”

பிறகென்ன? மீண்டும் விசாரணை. மீண்டும் விளக்கங்கள். `அனுமதி பெறாமல் எப்படி நீ சீனாவைக் கடக்கலாம்? திரும்பிப் போய்விடு’ என்று கண்டிப்போடு கூடிய மன்னிப்பு. ஒரு மடாலயத்தில் தஞ்சமடைந்தார். ‘என்னது, ஏடுகள் தேடி இந்தியா சென்று கொண்டிருக்கிறீர்களா?’ என்று அடங்கா வியப்போடு அவரைத் துளைத்தெடுத்தார்கள். ‘எங்கள் மடாலயத்திலேயே பெரிய நூலகம் இருக்கிறது. நீங்கள் ஏன் இங்கேயே தங்கிவிடக் கூடாது... இங்கே கிடைக்காத எதுவும் உங்களுக்கு இந்தியாவிலும் கிடைக்காது தெரியுமா?’ ‘அப்படியா, நல்லது. உங்கள் உதவிக்கு நன்றி!’ என்று புன்னகைப்பதைத் தவிர வேறு என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. இந்தியா ஏன் தனக்கு முக்கியம் என்பதை அவரால் அவர்களுக்கு இறுதிவரை விளக்க முடியவில்லை. சிறிது காலம் தங்கியிருந்துவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.

இந்தமுறை கூடுதல் எச்சரிக்கையோடு குதிரையைச் செலுத்தினார் யுவான் சுவாங். இப்போது நேர்வழியைத் துறந்துவிட்டு அதிகம் பயன்படுத்தப்படாத வழித்தடங்களாகத் தேடித் தேடிச் செல்ல ஆரம்பித்தார். ஆபத்துகள் நேரும்போதெல்லாம், வழி தெரியாமல் குழம்பித் தவிக்கும்போதெல்லாம் புத்தரை தியானம் செய்வார். மாயம்போல் ஏதோ நிகழும். மீள்வார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 33 - யுவான் சுவாங்கின் குதிரை

காஷும் கோபி எனும் பாலைவனப் பகுதியை சீனர்கள் `மணல் ஆறு’ என்று அழைப்பது வழக்கம். ஆங்காங்கே மணல் சரிந்து சரிந்து விழும் என்பதால் நீரின் மேல் நடக்கும் உணர்வே ஏற்படும். பறவை, விலங்கு, செடி, மரம் எதையும் பார்க்க முடியாது. நீர்நிலை என்னும் பேச்சுக்கே இடமில்லை. இது தெரிந்து முன்கூட்டியே தோல் பையில் நீர் நிரப்பிக்கொண்டு வந்துவிட்டதால், எப்படியாவது சமாளித்துவிட முடியும் எனும் நம்பிக்கை அவருக்கு. ஆனால் மீண்டும் வழியைத் தொலைத்துவிட்டார். எவ்வளவு முயன்றும் பாதையைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஒரு கணம், ஒரேயொரு கணம்தான் தடுமாறியிருப்பார். அந்த ஒரு கணத்தில் அவர் முதுகில் தொங்கிக்கொண்டிருந்த தோல் பை பொத்தென்று கீழே விழ, அவர் கண்முன்னால் அவ்வளவு நீரும் மணலுக்குள் ஊடுருவிச் சென்று மறைந்துபோனது.

காலம் உறைந்து நின்றுவிட்டது போலிருந்தது. சுக்கல் நூறாக நொறுங்கிப்போனார் யுவான் சுவாங். பூதங்கள் இளித்துக்கொண்டே அவரைச் சூழ்ந்துகொண்டன. வாய், உதடுகள், தொண்டை எல்லாம் வறண்டுபோயின. விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உள்ளுணர்வு அழுத்தமாகச் சொன்னது. யுவான் சுவாங் தன் குதிரையைத் திருப்பிக்கொண்டார். குதிரை அசைந்து அசைந்து சென்று கொண்டிருந்தபோதே யோசித்தார். இறக்க நேர்ந்தாலும் கிழக்கு திரும்ப மாட்டேன். இந்தியாவைப் பார்த்தபடியே என் உயிர் பிரியும் என்று நான் எடுத்த முடிவு என்னவாயிற்று... ஏன் இந்தத் தடுமாற்றம்... நீர்தானே தொலைந்தது, உயிர் கிடையாதே?

மீண்டும் குதிரையை நிறுத்தி மேற்கு நோக்கித் திருப்பினார் யுவான் சுவாங். எப்படியும் பிரியப்போகும் உயிர், இந்தியாவின் திசையைப் பார்த்தபடி பிரியட்டும். நான்கு மைல்கள் முன்னேறிய பிறகு குதிரையின் மீதே மயங்கிச் சரிந்தார் யுவான் சுவாங். அவருடைய குதிரை மிகவும் மெலிந்திருந்தது. யுவான் சுவாங்கைப் போலவே அதற்கும் தீராத தாகம். கடும் களைப்பு வேறு. சத்தமின்றி நேராகச் சென்றுகொண்டே இருந்த குதிரை ஒரு கட்டத்தில் தன் முடிவை மாற்றிக்கொண்டு, கிளையாகப் பிரிந்து சென்ற ஒரு புது திசை நோக்கிப் பாய ஆரம்பித்தது. குதிரை வேறு எங்கோ செல்கிறது என்பதை மயக்கத்திலிருந்த யுவான் சுவாங்கும் அறிந்துகொண்டார் என்றாலும், அவரால் கடிவாளத்தைப் பிடித்து முறைப்படுத்த இயலவில்லை. `இனி எதுவும் என் கையில் இல்லை’ என்று கண்களை மூடிக்கொண்டார்.

நினைவு வந்தபோது, குதிரை ஆடாமல் அசையாமல் நின்றுகொண்டிருந்தது. மெல்ல கண்களைப் பிரித்தார். வெள்ளிபோல் தகதகவென்று மின்னியபடி நீர் பாய்ந்துகொண்டிருந்தது. தாவி இறங்கினார் யுவான் சுவாங். வியப்போடு குதிரையை ஏறிட்டார். `நான் வேண்டிய மட்டும் அருந்திவிட்டேன். நிதானமாகக் குடி’ என்று குதிரை சொல்வதுபோலிருந்தது. இது நீரல்ல, உயிர் என்பதுபோல் அள்ளி அள்ளிப் பருக ஆரம்பித்தார் யுவான் சுவாங்.

(விரியும்)