மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 34 - புதிய பாதை, புதிய தரிசனம்

புதிய பாதை, புதிய தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய பாதை, புதிய தரிசனம்

இந்தியா எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்கு முன்பே இந்தியா எப்படிச் சுவைக்கும் என்பதை அவர் இங்கே உணர்ந்துவிட்டார்.

`எதையும் சேகரிக்காதே, எதையும் நாடாதே, எதற்கும் ஆசைப்படாதே’ என்று அறிவுறுத்திய பௌத்தம் `ஒன்றை மட்டும் சேகரிக்கலாம், ஒன்றை மட்டும் நாடலாம், ஒன்றின்மீது மட்டும் ஆசைப்படலாம்’ என்றது. அறிவு. அதை அடைய நீங்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். எவ்வளவு வேண்டுமானாலும் அலையலாம். எத்தனை இன்னல்களையும் தாங்கிக்கொள்ளலாம். எத்தனை இழப்புகளையும் சந்திக்கலாம். அறிவு அனைத்தையும் ஈடுசெய்துவிடும்.

`சங்கத்தில் இணைவது அவசியம்’ என்று புத்தர் வலியுறுத்தியது உண்மை. ஆனால், உள்ளொளி பெறுவதென்பது கூட்டுச் செயல்பாடு அல்ல. ஒவ்வொரு பிக்குவும் தனக்கான பாதையைத் தானே தேர்வுசெய்ய வேண்டும். காரணம், ஒவ்வொரு தேடலும் தனித்துவமானது. ஒவ்வொரு பயணமும் தனித்துவமானது. பயணத்துக்கு ஏற்றாற்போல் ஒவ்வொருவரும் அவரவருக்கான உள்ளொளியைப் பெறுகிறார்கள்.

ஏழு கட்டச் சோதனைச்சாவடிகளைக் கடந்த பிறகே சீனாவின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வர முடிந்தது யுவான் சுவாங்கால். பசியும், தாகமும், உயிரச்சமும், தொலைந்து போய்விட்டோமோ என்னும் கலக்கமும் மாறி மாறி ஆக்கிரமித்தன. உதவிக்கரங்களும் ஆங்காங்கே நீண்டன. சமயங்களில் நல்லுள்ளம் கொண்டவர்களோடும்கூட அவர் போராட வேண்டியிருந்தது. ஒருமுறை கோபி பாலைவனத்தின் தெற்குமுனையில் அமைந்திருந்த ஒரு பிரதேசத்தைக் கடந்து செல்லும்போது, அங்கிருந்த மன்னர் யுவான் சுவாங்கை வரவேற்றார். கு வெண்டாய் என்பது அவர் பெயர். `சீனாவிலிருந்து வருகிறீர்கள். எங்களோடு கொஞ்சம் தங்கி இளைப்பாறிச் செல்லுங்கள். எங்கள் மடாலயங்களையும் பார்வையிடுங்கள்’ என்று மன்னர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, சில காலம் அங்கே தங்கியிருந்தார் யுவான் சுவாங்.

ஆனால் நாள்கள் செல்லச் செல்ல தோளில் விழுந்திருந்த மன்னரின் அன்புக்கரம் இரும்புக்கரமாக மாறுவதை யுவான் சுவாங் உணர்ந்தார். `உங்கள் அன்பில் திக்குமுக்காடிப் போய்விட்டேன் மன்னா, நன்றி. நான் உத்தரவு வாங்கிக்கொள்ளட்டுமா...’ என்று அவர் சொல்லும்போதெல்லாம், ‘அதற்கென்ன போனால் போயிற்று’ என்று பிடியை இன்னமும் இறுக்கமாக்கிக்கொண்டார் மன்னர். யுவான் சுவாங்கை விட்டுவிடுவதற்கு அவருக்கு மனமில்லை. போதுமான அளவுக்கு அழுத்தம் கொடுத்து யுவான் சுவாங்கை அங்கேயே நிரந்தரமாகத் தங்கவைத்துவிட்டால் பௌத்தத்தைப் பரப்பும் பணியை அவரிடம் ஒப்படைத்துவிடலாம் என்பது அவர் கணக்கு. மன்னர் சொல்லியும் கேட்க மாட்டேன் என்று சொல்லிவிடுவாரா என்ன?

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 34 - புதிய பாதை, புதிய தரிசனம்

சொல்லிச் சொல்லிப் பார்த்து அலுத்துவிட்டது யுவான் சுவாங்குக்கு. ஒரு முடிவெடுத்தார். `இனி உணவு எடுத்துக்கொள்ள மாட்டேன்’ என்று அறிவித்துவிட்டு சமாதிநிலையில் அமர்ந்துவிட்டார். பணியாளர்கள் பலமுறை சென்று கேட்டும் நீர்கூட அருந்த மறுத்துவிட்டார். மன்னரும் தூது அனுப்பி ஓய்ந்துபோனார். யுவான் சுவாங் துரும்பாக இளைத்துக்கொண்டிருப்பதைக் கண்ட மன்னர், முதன்முறையாகக் கொஞ்சம் பின்வாங்கினார். இப்படியே சில தினங்கள் விட்டால், ஒரு பௌத்த பிக்குவைக் கொன்ற பாவத்துக்கு ஆளாக நேரிடுமோ என்று அஞ்சினார். `என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் விருப்பத்துக்கு மாறாக இனி தடுத்து நிறுத்த மாட்டேன்’ என்று மன்னர் வேண்டிக்கொண்ட பிறகே, யுவான் சுவாங்கால் அங்கிருந்து கிளம்ப முடிந்தது. ஒரு தனி மனிதன், அதிகாரத்தை எதிர்த்து நடத்திய வெற்றிகரமான அகிம்சைப் போராட்டமாக இதை வரலாறு பதிவுசெய்திருக்கிறது.

விடுவித்ததோடு இல்லாமல், யுவான் சுவாங்கின் பயணத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொடுத்தார் மன்னர் கு வெண்டாய். போகப் போக பனி அதிகம் என்பதால், முகத்தை மூடிக்கொள்ளும் துணிக்கவசம், கையுறைகள், புதிதாகத் தைக்கப்பட்ட முப்பது அங்கிகள், காலுறைகள் ஆகிவற்றை அளித்தார். தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள், மூட்டை மூட்டையாகப் பட்டுத்துணிகள் ஆகியவையும் வண்டியேற்றப்பட்டன. சுமந்து செல்ல 30 குதிரைகள். பொதி சுமக்க எருதுகள். உதவிக்கு 25 பணியாட்கள். துணைக்கு நான்கு இளம் பிக்குகள். இவற்றைக் கொண்டு கிட்டத்தட்ட இருபதாண்டுகள் யுவான் சுவாங் வசதியாகப் பயணம் செய்ய முடியும். இவை போதாதென்று, மேற்கில் அவர் செல்லுமிடமெல்லாம் வரவேற்பும் உபசரிப்பும் கிடைக்கும் வகையில் 24 சிபாரிசுக் கடிதங்களைத் தயாரித்துக் கொடுத்தார் மன்னர். யுவான் சுவாங்கின் சிறப்பை விவரித்து, அவரைத் தக்கமுறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு மற்ற மன்னர்களை இந்தக் கடிதம் விண்ணப்பித்துக் கொண்டது.

பாஹியானைப்போலவே யுவான் சுவாங்கையும் தக்லாமக்கான் பாலைவனம் கடுமையாகச் சோதித்தது. முழு உடலையும் போர்த்திக்கொண்டுதான் இருந்தார் என்றாலும், குளிர் ஈட்டிகள் அனைத்தையும் துளைத்துக்கொண்டு எலும்புவரை ஊடுருவிச் சென்று பதம் பார்த்தன. மரணத்தின் நிறம் என்னவென்று கேட்டிருந்தால் வெள்ளை என்று சொல்லியிருப்பார். எங்கும் பனி, எதிலும் பனி. கீழே குனிந்தால் பனியாறுகள். பார்வையைத் திருப்பினால் குத்தீட்டிகள்போல் ஆங்காங்கே மழை உறைந்து ஊசிபோல் நின்றுகொண்டிருந்தன. அண்ணாந்து வானைப் பார்த்தால் வெள்ளை மேகங்கள். ஒரு கட்டத்தில் கண் பார்வையே பறிபோய்விட்டதுபோல் ஆகிவிட்டது.

யுவான் சுவாங்கின் கண்முன்னால் ஒவ்வொருவராகக் கீழே சரியத் தொடங்கினர். பாலைவனத்தைக் கடப்பதற்குள் 12 முதல் 14 பேர் வரை இறந்துபோயினர். அடுத்து நானா, நீயா என்று அச்சத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டேதான் அவர்கள் சென்றிருக்க வேண்டும். சிலர் குதிரைகளோடு சேர்ந்து விழுந்து உறைந்துபோயினர். எருதுகளும் தப்பவில்லை. மனிதர்களைவிட விலங்குகள் அதிக எண்ணிக்கையில் இறந்ததாகத் தெரிகிறது. பெரிய வசதிகள்கூட இல்லாமல் முதியவரான பாஹியான் இந்த இடத்தை எப்படித்தான் கடந்து சென்றாரோ என்று யுவான் சுவாங் எத்தனை முறை எண்ணி எண்ணி மாய்ந்துபோயிருப்பார் என்பதை யூகிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

இருநூறு மைல்கள் கடந்த பின்னர், இன்றைய கிர்கிஸ்தானை அடைந்தனர். பனியையும் மரணத்தையும் மட்டுமே கண்டு வறண்டு போயிருந்த கண்கள் நீண்டு விரிந்திருக்கும் புல்வெளிப் பிரதேசத்தைக் கண்டதும் நிச்சயம் குளிர்ந்திருக்கும். அந்நிலத்தில் நாடோடிக் குழுக்கள் வசித்துவந்தனர். ஓர் அரசர் இருந்தார். அவருமேகூட கிட்டத்தட்ட நாடோடிகளின் பண்பு நலன்கள் நிரம்பியவராக இருந்தார். சிபாரிசுக் கடிதம் இருந்ததால் யுவான் சுவாங்குக்கு உயர்வான வரவேற்பு அளிக்கப்பட்டது. பௌத்தம் குறித்து அங்கிருந்தவர்களுக்குப் பெரிதாக எதுவும் தெரியவில்லை.

`அதனாலென்ன? ஏதோ ஏடுகள் தேடி மேற்கில் தொலை தூரம் செல்பவர்கள். பாவம், களைத்திருப்பார்கள். தடபுடலாக விருந்து கொடுத்துவிடலாம். மாமிசம் மலையளவு திரளட்டும், மது கடல்போல் பாயட்டும்’ என்று உற்சாகத்தோடு உத்தரவிட்டார் மன்னர். `ஐயோ, நான் சைவம்’ என்று யுவான் சுவாங் அலறினார் போலிருக்கிறது! சாதம், சர்க்கரை, வெண்ணெய், தேன், திராட்சை என்று பார்த்துப் பார்த்து பௌத்தர்களுக்கென்று தனிச் சமையல் தயாரிக்கச் செய்து விருந்தினர்களை அசத்தினார் மன்னர். இவற்றையெல்லாம் கொண்டு என்ன மாதிரியான உணவு தயாரிக்கப்பட்டது என்று தெரியவில்லை. என்னவாக இருந்தாலும் யுவான் சுவாங்குக்கு வீட்டுச் சாப்பாடு சாப்பிட்ட உணர்வு தோன்றியிருக்கும்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 34 - புதிய பாதை, புதிய தரிசனம்

காரணம் இல்லாமலில்லை. கிர்கிஸ்தானில் நெல் விளைவதில்லை என்பதால் சீனாவிலிருந்துதான் அவர்களுக்கு அரிசி கிடைத்துவந்தது. யுவான் சுவாங் வந்த அதே பாதையில்தான் அரிசி மூட்டைகளும் அவர்களுக்கு வந்திருக்கின்றன. அந்த வகையில் தாய்வீட்டு அரிசியை நீண்டகாலத்துக்குப் பிறகு அங்கே அவர் சுவைத்துவிட்டார். அதேபோல், இந்தியா எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்கு முன்பே இந்தியா எப்படிச் சுவைக்கும் என்பதை அவர் இங்கே உணர்ந்துவிட்டார். அரிசி என்றால் சீனா என்பதுபோல், சர்க்கரை என்றால் அங்கிருப்பவர் களுக்கு இந்தியாதான். யுவான் சுவாங் காலத்தில் கரும்பு விளைச்சலில் முன்னணியில் இருந்த நாடு இந்தியா மட்டுமே. கைபர் கணவாய் வழியாக, ஆப்கானிஸ்தான் வழியாக சர்க்கரை அவர்களுக்குக் கிடைத்திருந்தது. ஆக மொத்தம் யுவான் சுவாங்கின் தட்டில் இந்தியாவும் சீனாவும் ஒன்று கலந்திருக்கின்றன.

அங்கிருந்து கிளம்பியதும் துருக்கிய மொழி, மங்கோலிய மொழி, உய்குர் மொழி போன்றவற்றைப் பேசும் மக்கள் கூட்டத்தினரை யுவான் சுவாங் சந்தித்தார். பல இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசுபவர்களைக் கண்டார். பௌத்த மடாலயங்களில் அவ்வப்போது தங்கி இளைப்பாறினார். `நீங்கள் எந்த மாதிரியான பௌத்தத்தைக் கடைப்பிடிக்கிறீர்கள், எப்படி வழிபடுகிறீர்கள், எந்த மாதிரியான ஏடுகள் வாசிக்கிறீர்கள்...’ என்று பிக்குகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். தாஷ்கண்ட், சாமர்கண்ட், புக்காரா ஆகிய பட்டுப் பாதை நகரங்கள் அடுத்தடுத்து மலர்ந்து வந்தன. இந்தியா சென்று வந்த பலரைச் சந்தித்தார். அவர்களோடு உரையாடினார். ஆப்கானிஸ்தானை அடைந்தபோது பௌத்தம் பூத்த நிலத்துக்கு வந்ததுபோல் இருந்தது.

வடக்கு ஆப்கானிஸ்தானில் மலையைக் குடைந்து பிரமாண்டமாக எழுப்பப்பட்டிருந்த பாமியான் பௌத்தச் சிற்பங்களைக் கண்டு அவர் இதயம் குளிர்ந்தது. நூறடி உயரத்தில் எல்லோரையும் அவதானித்தபடி, எல்லோருக்கும் அருள் பாலித்தபடி நின்றுகொண்டிருந்த புத்தரைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றுவிட்டார். அதுவரை சந்தித்த துயரங்களையெல்லாம் புத்தரின் கனிவான புன்னகை ஒரு கணத்தில் காணாமல் ஆக்கிவிட்டதுபோலிருந்தது. கடினமான பாதையின் முடிவில்தான் இப்படியொரு தரிசனம் கிடைக்கும்போலிருக்கிறது!

(விரியும்)