
ஒரு சீனர் கேட்ட கேள்விக்கு ஏன் தன் குருவால் தெளிவாக விடையளிக்க முடியவில்லை என்று அவர்களுக்குக் குழப்பம். சீடர்களின் தத்தளிப்பை யுவான் சுவாங் உணர்ந்துவிட்டார்.
சாமர்கண்ட் வீதிகளைப் பொறுமையாகச் சுற்றிவந்தார் யுவான் சுவாங். குதிரை வண்டிகள் சத்தமெழுப்பியபடி பாய்ந்துகொண்டிருந்தன. ஒரு வண்டி கிளப்பிவிட்ட புழுதி அடங்குவதற்குள், அடுத்த குளம்பொலி கேட்கத் தொடங்கிவிடும். சந்தைக்கென்றே அமைந்துவிடும் தனித்துவமான மணம் யுவான் சுவாங்கின் நாசியை நிரப்பியது. ஊதுபத்தியும், கிராம்பும், பட்டையும், லவங்கமும், மாமிசமும், மலர்களும், வியர்வையும் கலந்து உருவாக்கிய மணம் அது. மணம் மட்டுமா கலவை? வண்டியோட்டிகள், வணிகர்கள், பயணிகள், உள்ளூர் மக்கள், பொழுதுபோக்க அக்கம் பக்கத்திலிருந்த வந்த கூட்டம் என்று மனிதர்களும் கலவையாகவே இருந்தனர். எல்லாச் சத்தங்களும், எல்லாப் பண்பாடுகளும், எல்லா மொழிகளும் சந்தையில் ஒன்று கலக்கின்றன. சந்தையின் இன்னொரு பெயர், உலகம்!
`பிற இடங்களைவிட சாமர்கண்ட் சந்தைகளில் உயர்தரமான பண்டங்கள் கிடைக்கின்றன’ என்கிறார் யுவான் சுவாங். `கைவினைப் பொருள்களும் கூடுதல் அழகோடு மின்னுகின்றன. அதற்குக் காரணம் இங்குள்ள கலைஞர்கள் தேர்ந்த கலை வல்லுநர்களாக இருப்பதுதான்’ என்கிறார். இந்தியாவிலிருந்து நறுமணப் பொருள்களும், ஆபரணக் கற்களும், பருத்தி ஆடைகளும் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுவதைக் கண்டார். எதிர்த் திசையிலிருந்து பட்டும் இரும்புப் பொருள்களும் சீனாவிலிருந்து வந்துகொண்டிருந்தன. பாரசீகத்துக்கும் ரோமாபுரிக்கும் சீன வண்டிகள் சென்றுகொண்டிருந்தன. இந்திய வணிகர்களையும் சீன வணிகர்களையும் ஒரே இடத்தில் சந்திக்க முடிந்தது. இருபெரும் நாகரிகங்கள் சாமர்கண்ட்டில் சந்தித்து உரையாடிக்கொண்டன.
அநேகமாக பௌத்தமும் யுவான் சுவாங்குக்கு ஒரு சந்தைபோல் காட்சியளித்திருக்க வேண்டும். புத்தரை அணுகுவதற்கும் வழிபடுவதற்கும் ஏராளமான வழிகள் இருப்பதை அவர் வழிநெடுகிலும் கண்டார். பௌத்தம் ஒவ்வோர் இடத்தையும் ஒவ்வொரு விதமாக மாற்றியமைத்திருந்தது. ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொருவிதமாகத் தீண்டியிருந்தது. ஒரு மொழியை பாதித்த அளவுக்கு இன்னொரு மொழியை அது பாதிக்கவில்லை. புத்தர்கூட இடத்துக்கு இடம் மாறிக்கொண்டேயிருந்தார். பாமியானில் வானத்தை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு அவர் உயர்ந்திருந்தாரென்றால், இன்னோரிடத்தில் சிறிய பூச்செடிபோல் அவர் அடங்கியிருந்தார்.

சாமர்கண்ட் பண்டைய இரானின் முக்கிய மதமான ஜொராஷ்டிரியத்தின் தாக்கத்துக்கு உட்பட்டிருந்தது. ஒன்றிரண்டு பௌத்த மடாலயங்கள்தான் எஞ்சியிருந்தன. அவையும் கேட்பாரற்றுக் கிடந்தன. இந்தநிலையில், `சீனாவிலிருந்து யாரோ ஒருவர் வந்திருக்கிறார்; அவர் எல்லோரையும் பௌத்தர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்’ என்றொரு வதந்தி ஊருக்குள் பரவ ஆரம்பித்தது. சாமர்கண்ட்டை ஆண்டுவந்த மன்னரும் ஜொராஷ்டிரர்தான் என்றாலும் யுவான் சுவாங்கையும் குழுவினரையும் அவர் நல்ல விதமாகவே வரவேற்று, தங்கவைத்தார்.
ஒருநாள் இளம் பிக்குகள் பழைய பௌத்த மடாலயங்களைப் பார்ப்பதற்காகக் கிளம்பியிருக்கிறார்கள். இது தெரிந்ததும், ‘ஐயோ, எதிரிகள் நம்மை நெருங்கிவிட்டார்கள்! வாருங்கள் அவர்களை ஒரு கை பார்ப்போம்’ என்று சில தீவிர ஜொராஷ்டிரர்கள் சண்டைபோடுவதற்காகக் கும்பலாக மடாலயத்துக்குக் கிளம்பிவிட்டார்கள். ஜொராஷ்டிர மதத்தைச் சேர்ந்தவர்கள் நெருப்பை வழிபடுபவர்கள் என்பதால், ஒவ்வொருவரிடமும் தீப்பந்தம் இருந்தது. பிக்குகள் பயந்து அங்கிருந்து ஓடிவந்துவிட்டனர். யாருக்கும் எந்த ஆபத்தும் நேரவில்லை. ஆனால், மன்னர் வெகுண்டுவிட்டார். `என் விருந்தினர்களாக வந்திருப்பவர்களை எப்படி அச்சுறுத்தலாம்?’ என்று கொதித்த அவர், அனைவரையும் பிடித்து இழுத்து வந்து அவர்கள் கரங்களை வெட்டி வீழ்த்துமாறு உத்தரவிட்டார். யுவான் சுவாங் குறுக்கிட்டு, மன்னரைச் சமாதானம் செய்தார். `கரங்களை வெட்டும் அளவுக்கு அவர்கள் எந்தத் தீங்கையும் செய்துவிடவில்லை’ என்று வாதாடினார். இறுதியில் சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டு அனைவரும் நாடு கடத்தப்பட்டனர்.
சாமர்கண்ட்டில் பௌத்தத்தின் பேரொளி படர வேண்டும் என்று விரும்பிய யுவான் சுவாங், சமயச் சொற்பொழிவுகள் ஆற்றத் தொடங்கினார். மன்னருக்கு இதில் பெரிய ஆர்வமில்லை என்றாலும், பொழுதுபோக்காக வந்து அமர்ந்து கேட்டிருக்கிறார். யுவான் சுவாங்கின் உரைகள் மெல்ல மெல்ல அவரை மயக்கத்தில் ஆழ்த்தின. உடனே பெரும் கூட்டமொன்றைக் கூட்டினார். யுவான் சுவாங்கின் தலைமையில் பலர் பௌத்தத்தைத் தழுவினர். `ஒன்றுமே இல்லாமலிருந்த பௌத்தம், ஜொராஷ்டிர மதத்தோடு வலுவாகப் போட்டியிடும் அளவுக்கு அதன் பிறகு வளர்ந்தது’ என்கின்றன சில குறிப்புகள். தங்கள் நிலத்துக்கு வந்த யுவான் சுவாங்கை உயர்த்திக் காட்டுவதற்காகச் சற்றே மிகை கலந்து இதை உருவாக்கியிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
அதன் பிறகு, அமு தார்யா என்று அழைக்கப்படும் ஆக்சஸ் ஆற்றை அடைந்தார் யுவான் சுவாங். மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான் பகுதிகளில் அமைந்திருக்கும் முக்கியமான ஆறு இது. அங்கிருந்து 1,400 மைல் தொலைவில் டெர்மெஸ் என்றோர் இடம் இருக்கிறது. அலெக்சாண்டர் இந்தப் பகுதிக்கு அருகில் வந்திருக்கிறார், சில இடங்களையும் கைப்பற்றியிருக்கிறார். கிரேக்கர்களின் தாக்கத்திலிருந்து அதன் பிறகு விடுபட்டுவிட்டது என்றாலும், பௌத்தம் டெர்மெஸ் மக்களோடு ஒன்று கலந்திருந்ததை யுவான் சுவாங் கண்டுகொண்டார். `இங்குள்ள ஒரு மடாலயத்தில் ஆயிரம் பிக்குகள் தங்கியிருக்கிறார்கள்’ என்று பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார் யுவான் சுவாங். டெர்மெஸில் பௌத்தம் செழித்திருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. பிற்காலத்தில் இங்கே சோவியத் ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது, பௌத்தக் கட்டுமானங்களைக் கண்டெடுத்திருக்கிறார்கள். சுண்ணாம்பால் உருவாக்கப்பட்ட புத்தரின் சுதைச் சிற்பம் அவற்றுள் புகழ்பெற்றது. போதி மரத்தடியில், இரு பக்கங்களிலும் பிக்குகள் நிற்க, கண்களை மூடி புத்தர் தியானத்தில் மூழ்கியிருக்கிறார். 1 அல்லது 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த அழகிய சிற்பத்தை யுவான் சுவாங் கண்டிருக்கலாம்.
அங்கிருந்து கிளம்பி இன்றைய ஆப்கானிஸ்தானிலுள்ள குண்டூஸ் என்னும் இடத்துக்கு வந்து சேர்ந்தார் யுவான் சுவாங். ஆனால் வேளைதான் சரியில்லை. ஆட்சியிலிருந்த மன்னர் தார்டூவின் மனைவி சற்று முன்புதான் இறந்திருந்தார். அவர் துக்கத்தில் இருக்கும்போதே இன்னொரு திருமணத்துக்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. விரைவில் அவர் ஓர் இளவரசியைத் திருமணமும் செய்துகொண்டார். யுவான் சுவாங் திகைத்திருக்க வேண்டும். காலடி எடுத்துவைத்தவுடன் மரணச் சடங்குகள். அவை முடிவதற்குள் கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டன. துக்கத்தின் நீட்சிதான் மகிழ்ச்சியா.. மரணத்திலிருந்துதான் வாழ்வு முளைக்கிறதா?

யுவான் சுவாங் இதை ஒரு தத்துவ விவாதமாக வளர்த்தெடுப்பதற்குள், அடுத்த பெரும் திருப்பம் ஏற்பட்டுவிட்டது. புதிய அரசி அவர்கள் நினைத்ததுபோல் இல்லை. மன்னரையல்ல, அரியணையையே அவர் காதலித்திருக்கிறார். தவிரவும் அவருக்கு ஒரு காதலரும் இருந்திருக்கிறார். காதலருடன் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் அவருடைய திட்டம்போலும். ஒருநாள் மன்னர் தார்டூவின் உணவில் அரசி நஞ்சு கலந்துவிட்டார். மன்னரும் இறந்துவிட்டார். அரசு விருந்தினர் எனும் முறையில் மன்னரின் மரணச் சடங்குகளில் கலந்துகொள்ளுமாறு யுவான் சுவாங் கேட்டுக் கொள்ளப்பட்டார். சடங்குகள் முடிந்த கையோடு, அரசி தன் காதலரைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துவிட்டதால் துக்கம் சந்தோஷமாக மாறியது. இசை, நடனம், விருந்து, கொண்டாட்டம் என்று ஊர் முழுக்க ஒரே ஆர்ப்பாட்டம். எல்லாவற்றுக்கும் யுவான் சுவாங் வரவேற்கப்பட்டார். திருமணம் முடிந்ததும் புதிய மன்னர் அரியணையில் அமர்ந்தார். அதற்கொரு கொண்டாட்டம் வேண்டாமா? அதில் வெளிநாட்டுக்காரரான யுவான் சுவாங் கலந்து கொள்ளாமல் போனால் நாளை உலகம் குண்டூஸைப் பழிக்காதா?
இத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு திடுக்கிடும் திருப்பங்களை அடுத்தடுத்து யுவான் சுவாங் அதற்கு முன்பு சந்தித்திருக்க வாய்ப்பில்லை. பௌத்தர் என்பதாலோ என்னவோ தன் உணர்வுகளை எந்தச் சூழலிலும் வெளிக்காட்டாமல் அவரால் அடங்கியிருக்க முடிந்தது. இடையில் தர்மசிம்மா எனும் மூத்த பிக்குவைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. இளம் பிக்குகள் படைபோல் சூழ்ந்து நிற்க, நடு நாயகமாக அமர்ந்திருந்தார் தர்மசிம்மா. அவர் இந்தியாவுக்குச் சென்று வந்தவர் என்பதாலும், நிறைய ஏடுகள் கற்றவர் என்பதாலும் ஆர்வத்தோடு அவரோடு உரையாடத் தொடங்கினார் யுவான் சுவாங். `எனக்குத் தெரியாதது என்று எதுவுமில்லை. எதைப் பற்றி வேண்டுமானாலும் கேளுங்கள், சொல்கிறேன்’ என்று பெருமிதத்தோடு அறிவித்தார் தர்மசிம்மா.
`அப்படியானால் இன்னின்னவற்றை விளக்க முடியுமா...’ என்று யுவான் சுவாங் தன் ஐயங்களை வெளிப்படுத்தினார். தர்மசிம்மா பதிலளிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே யுவான் சுவாங்குக்குத் தெரிந்துவிட்டது. `இந்த மூத்த பிக்குக்கு எந்த ஏடும் தெரியவில்லை, எதையும் விளக்கவும் தெரியவில்லை.’ அவர் மட்டுமல்ல, படைபோல் சூழ்ந்திருந்த சீடர்களும்கூட இதைக் கண்டுபிடித்து விட்டார்கள். ஒரு சீனர் கேட்ட கேள்விக்கு ஏன் தன் குருவால் தெளிவாக விடையளிக்க முடியவில்லை என்று அவர்களுக்குக் குழப்பம். சீடர்களின் தத்தளிப்பை யுவான் சுவாங் உணர்ந்துவிட்டார். தன்னால்தான் இந்த இக்கட்டு நேர்ந்துவிட்டது என்பதையும் அவர் உணர்ந்திருப்பார். ஒரு துக்கத்தை மகிழ்ச்சியாக மாற்றுவது எப்படி என்பதையும் அவர் இந்நேரம் கற்றிருக்கக் கூடும். எனவே அமைதியாக சீடர்களிடம் சொன்னார். ‘உங்கள் குரு உண்மையிலேயே சிறந்த படிப்பாளி. நான் எந்தவகையிலும் அவருக்குச் சமமானவன் கிடையாது என்பதையும் உணர்கிறேன்!’
(விரியும்)