
பௌத்தம் மட்டும் என்னவாம்? எப்போது வேண்டுமானாலும் அணைந்துவிடலாம் எனும் அளவுக்கு ஓரிடத்தில் நடுங்கிக்கொண்டிருக்கும்.
மகிழ்ச்சியும் துக்கமும் இரவும் பகலும்போல என்பதை ஏடுகளைவிட, பயணமே யுவான் சுவாங்குக்கு உணர்த்திவிட்டது. ஒருநாள் குடிக்க ஒரு சொட்டு நீர்கூடக் கிடைக்காது. இன்னொரு நாள் திரும்பும் பக்கமெல்லாம் நீருற்று பொங்கிக்கொண்டிருக்கும். ஒருநாள் சிதிலமடைந்த கட்டடங்களில் தங்க வேண்டும். மறுநாள் ஏதேனும் ஓர் அரசர், முதுகு வளைத்து வரவேற்று, போதும் போதுமென்னும் அளவுக்கு உபசரிப்பார். ஒரு வாரம் முழுக்க பனிமழை ஊசிபோல் உடலைக் குத்தும். மறு வாரம் அதே உடலை அனல் காற்று வாட்டி வதைக்கும்.
பௌத்தம் மட்டும் என்னவாம்? எப்போது வேண்டுமானாலும் அணைந்துவிடலாம் எனும் அளவுக்கு ஓரிடத்தில் நடுங்கிக்கொண்டிருக்கும். இன்னோரிடத்திலோ தகத்தகாய சூரியனாக ஒளி பாய்ச்சிக்கொண்டிருக்கும். கலக்கத்துக்கோ, கொண்டாட்டத்துக்கோ இடம் கொடுக்காமல் இரண்டையும் சமமாகக் கருதி, கடந்து சென்றுகொண்டே இருக்கவேண்டியதுதான். யுவான் சுவாங் அதைத்தான் செய்தார். சீனாவிலிருந்து புறப்பட்ட ஓராண்டில் இந்தியாவை வந்தடைந்தார். ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்னர் அலெக்சாண்டர் எவ்வளவு நம்பிக்கையோடு, எவ்வளவு எதிர்பார்ப்புகளோடு இந்தியாவில் காலடி எடுத்துவைத்தாரோ அதே அளவு நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் யுவான் சுவாங்குக்கும் இருந்தன. முதலாமவர், `இந்தியா எனக்குத்தான்’ என்று முழக்கமிட்டார் என்றால் இரண்டாமவரோ, `இந்தியா என்னை ஏற்றுக்கொள்; நான் உன்னுடையவன்’ என்று இறைஞ்சினார்.
யுவான் சுவாங் முதலில் கால்பதித்தது இன்றைய ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலாலாபாத் எனும் இடத்துக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில். அவருடைய இந்தியா, வடக்கில் இந்து குஷ் மலைகளில் தொடங்குகிறது. இந்து குஷ் மலைகளை நேரில் கண்டதால், கடந்துவந்ததால் அவருக்கு இந்தியாவின் நுனி தெரிந்தது. அடியை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தியா என்பது எதுவரை என்பதை அவரால் வரையறுக்க முடியவில்லை. எனவே, வடக்கு தவிர மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருக்கிறது என்று சொல்லி முடித்துக்கொள்கிறார். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 70 ராஜ்ஜியங்கள் இருப்பதாகச் சொல்லும் யுவான் சுவாங்கின் குறிப்புகளை இன்று பார்க்கும்போது, இந்தியாவின் நீள அகலங்களை அவர் மிகையாகக் கற்பனை செய்துவைத்திருந்தது தெரிகிறது. இன்னொன்றும் சொல்லியாக வேண்டும். இந்தியாவை எந்த இடத்திலும் அவர் `இந்தியா’ என்று அழைக்கவில்லை. இந்நாட்டுக்கு அவர் சூட்டியுள்ள பெயர், `இந்து.’
ஜலாலாபாத், யுவான் சுவாங்குக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல, அயர்ச்சியையும் ஏற்படுத்தியது. பௌத்தர்களுக்கு ஜலாலாபாத் ஒரு புனிதமான இடம். விகாரம், மடாலயம், தூண், ஸ்தூபி என்று திரும்பும் திசையெல்லாம் முக்கியமான கட்டுமானங்கள் குவிந்திருந்ததால் ஊர் முழுக்க எந்நேரமும் உள்ளூர், வெளியூர் பிக்குகள் மொய்த்துக்கொண்டிருந்தனர். பல இடங்களில் நீண்ட, நீண்ட வரிசைகள் உருவாகியிருந்தன. யுவான் சுவாங் நிதானமாக எல்லாவற்றையும் தரிசித்தார்.
காணவேண்டிய இடங்கள் பட்டியலில் அடுத்தாக நிழல் குகை இருந்தது. பல், தலைமுடி, நகம், மண்டையோடு, எலும்பு என்று புத்தரோடு தொடர்புடைய பல புனிதப் பொருள்கள் பல்வேறு இடங்களில் பாதுகாக்கப்பட்டு வணங்கப்படுவதைப் பார்த்தோமல்லவா? இந்தக் குகையிலும் அப்படியொரு பொருள் இருக்கிறது. ஆனால் அதை நம் கண்களால் காண முடியாது, உணர மட்டுமே முடியும். உண்மையில் அது பொருள்கூட இல்லை. புத்தரின் நிழல். ஒரு காலத்தில் நாக கோபாலா என்னும் பெயரில் பொல்லாத டிராகனொன்று குகையை ஒட்டி வாழ்ந்துவந்தது. முற்பிறவியில் அந்த டிராகன் ஆடு மேய்ப்பவனாக இருந்தான். அப்போது அவனை யாரோ, எதற்கோ சீண்டியிருக்கிறார்கள். அது அவனைக் கடுமையாக பாதித்ததால் `உங்கள் ஊரை அழிக்கிறேனா, இல்லையா பார்’ என்று சூளுரைத்திருக்கிறான்.

டிராகனாகப் பிறப்பெடுத்த பிறகு, அவன் மனதிலுள்ள பகை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. இப்போது டிராகனால் நிஜமாகவே ஊரை அழித்துவிட முடியும். அபாயம் உணர்ந்து மத்திய இந்தியாவிலிருந்த புத்தர் பறந்தோடி உடனடியாகக் குகைக்கு வந்து சேர்ந்தார். டிராகனோடு சண்டையிட்டார். கொன்று போடாமல் (புத்தர் அல்லவா?) அதைப் பணியவைத்தார். புறப்படுவதற்கு முன்பு எதற்கும் இருக்கட்டும் என்று காவலுக்குத் தன் நிழலை அங்கேயே கழற்றிவைத்துவிட்டுச் சென்றார். அன்று முதல் டிராகன் எந்தத் தப்பு தண்டாவும் செய்யாமல் புத்தரின் நிழல் காத்தருளியது. அந்த நிழல் இன்னமும் குகையில் இருப்பதால், அது நிழல் குகை. டிராகன் வருவதால் இந்தக் கதை சீனாவில்தான் உருவாகியிருக்கும் என்று தாராளமாகச் சந்தேகிக்கலாம் அல்லவா?
யுவான் சுவாங் குகையைக் கண்டடைந்த கதை இவ்வாறு விரிகிறது. கரடுமுரடான பாதை என்பதால் நிழல் குகையை அணுகுவது எளிதல்ல. பழகியவர்களுக்கே கடினம் எனும் நிலையில் புதியவர்கள் என்றால் திணறிவிடுவார்கள். எனவே, ஒரு முதிய வழிகாட்டியை யுவான் சுவாங் அமர்த்திக்கொண்டார். குகையை நெருங்கும் சமயத்தில் ஐந்து கொள்ளையர்கள் வாளை உருவிக்கொண்டு பாய்ந்து வந்தனர். யுவான் சுவாங் அமைதியாக அவர்களிடம் சொன்னார். ‘நான் புத்தரை தரிசிப்பதற்காகச் சென்றுகொண்டிருக்கிறேன். ஆபத்தான விலங்குகளைக் கண்டு மட்டுமல்ல, உங்களைப் போன்றவர்களைக் கண்டும் நான் கலங்க மாட்டேன்’. கொள்ளையர்களுக்கோ திகைப்பு. புத்தரின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்திருந்தால், இந்த மனிதன் வாளைக் கண்டு அஞ்சாமல் நின்றுகொண்டிருப்பான்... அப்படிப்பட்ட புத்தரை நாம் எப்படி இவ்வளவு காலம் பார்க்காமல் விட்டுவிட்டோம்? வாளைப் போட்டுவிட்டு அவர்களும் யுவான் சுவாங்கோடு இணைந்து குகையை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
குகைக்குள் நுழைந்தார் யுவான் சுவாங். புத்தரின் நிழல் தட்டுப்படவில்லை. சிறிது நேரம் காத்திருந்தார். வருந்தினார். கலங்கினார். தொழுதார். அழுதார். கற்றறிந்த சூத்திரங்களையெல்லாம் சொல்லிப் பார்த்தார். `புத்தனே, புத்தனே...’ என்று அரற்றினார். மீண்டும் மீண்டும் வணங்கி எழுந்தார். குகையின் ஓரத்திலுள்ள வெடிப்பின் வழியே ஒளி தோன்றியதுபோலிருந்தது. அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வளர்ந்து, வளர்ந்து குகை முழுவதையும் நிரப்பியது. இப்போது யுவான் சுவாங்கால் புத்தரின் நிழலை தரிசிக்க முடிந்தது. அவர் கண்களிலிருந்து நீர் வழிந்தோட ஆரம்பித்தது.
வழியும் கண்ணீர் வழியாகவே கண்டார் என்றாலும் காட்சி துலக்கமாகவே இருந்தது. மெலிந்திருந்த நிழலின் அடர்த்தி மெல்ல மெல்லக் கூட ஆரம்பித்தது. யாருடைய நிழலைக் காணத் துடித்தாரோ அவரே இப்போது யுவான் சுவாங் முன்னால் தோன்றியிருந்தார். சக மனிதனைப் பார்ப்பதுபோல் இப்போது புத்தரைப் பார்த்தார் யுவான் சுவாங். மஞ்சளும் சிவப்பும் கலந்த புத்தரின் அங்கி காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. புத்தரின் உடலுமேகூட இந்த இரு வண்ணங்களைக் குழைத்து தீட்டியதுபோல் இருந்தது. தாமரை சிம்மாசனத்தில் புத்தர் அமர்ந்திருந்தார். சிம்மாசனத்தின் நிறம் மங்கியிருந்ததுபோல் இருந்தது. அப்படியெல்லாம் இல்லை. என்மீது அமர்ந்திருப்பவர் என் ஒளியைக் குறைத்துவிட்டார் என்று சிம்மாசனம் குறைபட்டுக்கொண்டது போலிருந்தது.
புத்தரின் தரிசனம் யுவான் சுவாங்கை என்னவோ செய்தது. தன் உணர்வுகளை அவரால் சொற்களில் வடிக்க முடியவில்லை. வடிக்காமல் போனால் காட்சி மறைந்து போய்விடுமோ என்னும் அச்சமும் அவரிடம் இருந்தது. நினைவுகளில் தேக்கி வைத்துக்கொள்ளலாம்தான். ஆனால் நினைவுகளை நம்ப முடியுமா... புத்தரைச் சேமித்துவைக்கும் அளவுக்கு நினைவுக்கு வலிமை இருக்குமா? எனவே, யுவான் சுவாங் குகை புத்தரை ஒரு சிறிய சிலையாக வடித்தெடுத்து வாங்கி, பத்திரப்படுத்திக்கொண்டார். யுவான் சுவாங்கின் கரங்களில் இப்போது குகை புத்தர் பாந்தமாக அடங்கியிருந்தார். சந்தன மரத்தால் உருவாக்கப்பட்ட பதினைந்து அங்குல சிற்பம் அது. பெரியதாகச் செய்திருக்கலாம்தான். ஆனால் அதை எப்படிச் சுமப்பது? எங்காவது ஓரிடத்தில் கொண்டு சென்று நிறுத்துவது அல்ல அவர் நோக்கம். பையிலும் கையிலும் எப்போதும் புத்தர் தவழ்ந்துகொண்டிருக்க வேண்டும். அதற்கு இதுதான் சரி. சிறியதே அழகு!

ஜலாலாபாத், ஹட்டா போன்ற பகுதிகளில், பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் பௌத்தம் இங்கே செழித்திருந்ததைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஜலாலாபாத்துக்கு அருகிலுள்ள பிமாரன் என்னும் இடத்தில் தங்கப்பேழைகளில் பாதுகாக்கப்பட்ட புத்தரின் புனிதப் பொருள்கள் கிடைத்துள்ளன. நின்ற வாக்கில் அமைந்திருக்கும் புத்தரின் சிலையும் கிடைத்திருக்கிறது. நமக்கு இதுவரை கிடைத்துள்ள பழைமை வாய்ந்த புத்தர் சிலைகளில் இதுவும் ஒன்று. இந்தச் சிலையின் சிறப்பம்சம், புத்தரின் இரு பக்கங்களிலும் பிரம்மாவும் இந்திரனும் நின்றுகொண்டிருப்பதுதான். இந்து மதம் பிற்காலத்தில் புத்தரைத் தன்னோடு இணைத்துக்கொள்ள முயன்றது நமக்குத் தெரியும். இந்தச் சிலையோ இந்து கடவுள்களை பௌத்தம் இணைத்துக்கொள்ள முயன்ற கதையை நமக்குச் சொல்கிறது.
மகிழ்ச்சி சரி... ஜலாலாபாத்தைக் கண்டதும் யுவான் சுவாங் அயர்ச்சி அடைந்தது ஏன்? `இந்த இடம், அந்த இடம் என்று சொல்லிப் பல இடங்களுக்கு என்னை அழைத்தார்கள். தரிசனம் என்று சொல்லி ஒவ்வோரிடத்திலும் அதைக் கொடுங்கள், இதைக் கொடுங்கள் என்று கட்டணம் கேட்டு வாங்கிக்கொண்டே யிருந்தார்கள்’. ஜலாலாபாத்தில் மட்டும் 50 தங்க நாணயங்கள், 1,000 சிறிய வெள்ளி நாணயங்கள், நான்கு பட்டுப் பதாகைகள், இன்னபிற துணி வகைகள், அங்கிகள் ஆகியவற்றை யுவான் சுவாங் செலுத்தவேண்டியிருந்தது. துறவை வலியுறுத்தும் ஒருவரை தரிசிக்க ஒருவருக்கு இவ்வளவு செல்வம் தேவைப்படுவது பெருத்த முரண் இல்லையா... வணிகம் தேவைதான். அதற்காக புத்தரையே ஒரு பண்டமாக மாற்றுவது அறம்தானா?
(விரியும்)