மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 37 - பெஷாவரிலிருந்து காஷ்மீருக்கு

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

ஸ்வாட் பிக்குகள் பிக்குகள்போலவே நடந்துகொள்வதில்லை. பௌத்த நெறிகளைப் பரப்புவதும் நல்வழிப்படுத்துவதும்தானே அவர்கள் பணி?

இன்றைய பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் மனதில்வைத்துக்கொண்டு யுவான் சுவாங்கின் குறிப்புகளை வாசித்தால், அவர் நமக்குத் தொடர்பில்லாத வேறோர் உலகில் பயணம் செய்திருக்கிறார் என்றே கருதவேண்டியிருக்கிறது அல்லது நாம்தான் அவர் உலகிலிருந்து நகர்ந்து வந்துவிட்டோமா? அவர் கண்ட நிலம் இன்று இல்லை. அவர் வழிபட்ட பௌத்த நினைவிடங்கள் சிதிலமடைந்துவிட்டன அல்லது தகர்க்கப்பட்டுவிட்டன. பௌத்தத்தின் கதையைக் கேட்கவே வேண்டாம். யுவான் சுவாங் காலத்திலேயே அந்த மதம் பொலிவிழக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வருத்தத்தைச் சுமந்துகொண்டுதான் அவர் இந்தியப் பயணத்தையே தொடங்கவேண்டியிருந்தது.

பெஷாவரைக் கடந்து (ஆயிரம் குடும்பங்கள் மட்டுமே அங்கே இருந்திருக்கின்றன!) ஸ்வாட் பள்ளத்தாக்கை வந்தடைந்தபோது, பௌத்தம் விழுந்துகிடந்ததைக் கண்டு கலங்கினார் யுவான் சுவாங். பெயருக்குச் சில மகாயான பௌத்தர்கள் தட்டுப்பட்டனர். அவர்களிடம் பேசிப் பார்த்தார். ஏடுகளில் புலமைமிக்கவர்களாகத்தான் அவர்கள் இருந்தனர். என்ன கேட்டாலும் கண்களை மூடிக்கொண்டு கடகடவென்று அவர்களால் ஒப்பிக்க முடிந்தது. ஆனால், அதற்குமேல் அவர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கெள்ள முடியவில்லை. இப்போது நீங்கள் சொன்ன சூத்திரத்திலுள்ள இந்தச் சொல்லுக்கு என்ன பொருள் என்று கேட்டபோது பதில் கிடைக்கவில்லை. சொற்களை வெறும் சொற்களாக மட்டுமே அவர்கள் உள்வாங்கியிருக்கிறார்கள் என்பது புரிந்தது.

இது போக, இன்னொரு குற்றச்சாட்டும் அவர்கள்மீது சுமத்தப்பட்டிருந்தது. ஸ்வாட் பிக்குகள் பிக்குகள்போலவே நடந்துகொள்வதில்லை. பௌத்த நெறிகளைப் பரப்புவதும் நல்வழிப்படுத்துவதும்தானே அவர்கள் பணி? அதை விட்டுவிட்டு மாயாஜாலம் செய்கிறேன், பேய் ஓட்டுகிறேன், மந்திரம் போடுகிறேன் என்று ஏதேதோ அமானுஷ்யங்களில் தலையை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை எப்படி பௌத்தர்கள் என்று அழைக்க முடியும்? ஆனால், யுவான் சுவாங்குக்கு இது பெரிய முரணாகத் தெரியவில்லை. `ஆம், நான் கற்ற பௌத்தத்திலும் இவையெல்லாம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்காக இவர்களை நான் ஒதுக்க மாட்டேன். மந்திரமும் தந்திரமும் பௌத்தத்தின் ஒரு பகுதிதான் என்கிறாயா... அதற்கான சான்று உன்னிடம் இருக்கிறதா... எந்த ஏட்டில் இந்த அமானுஷ்ய சடங்குகள் இருக்கின்றன என்று எனக்குக் காட்டு’ என்று கேட்பேன். அவர்களோடு அமர்ந்து உரையாடவும் விவாதிக்கவும் நான் தயார். இதுதான் யுவான் சுவாங்கின் கட்சி. பௌத்தத்தின் எல்லாப் பரிமாணங்களையும் அவர் தெரிந்துகொள்ள விரும்பினார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 37 - பெஷாவரிலிருந்து காஷ்மீருக்கு

யுவான் சுவாங் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டவர். அவருக்கு விருப்பமான புத்தர், மைத்திரேயர். பௌத்த மரபுகளின்படி எதிர்காலத்தில் இந்த உலகில் அவதரிக்கப்போகிற போதிசத்துவர் அவர். அதாவது, கௌதம புத்தரின் மறுபிறப்பு. மனிதன் தர்மத்தைத் துறக்கும்போது, எது தர்மம் என்பதே தெரியாமல் தவிக்கும்போது மைத்திரேயர் தோன்றி தூய்மையான தர்மத்தை உலகுக்கு அருள்வார் என்பது அவர் நம்பிக்கை. கடந்தகாலத்தின் மீதோ நிகழ்காலத்தின் மீதோ அல்ல; எதிர்காலத்தின் மீதே யுவான் சுவாங் தன் கண்களைப் பதித்திருந்தார். நாம் எல்லோருமே எதிர்காலத்தை நோக்கித்தான் பயணம் செய்துகொண்டிருக்கிறோம் இல்லையா?

அடுத்து, காந்தாரம். புத்தருக்கும் காந்தாரத்துக்குமான பிணைப்பு நெருக்கமானது. 2 அல்லது 3-ம் நூற்றாண்டுக்கு முன்பு புத்தருக்கு உருவமில்லை. மனித உருவில் அவரை வெளிப்படுத்துவது சாத்தியமில்லை என்று கருதி சில குறியீடுகளை மட்டும் புத்தருக்காக முன்பு பயன்படுத்தினார்கள். எடுத்துக்காட்டுக்கு, காலியாக இருக்கும் சிம்மாசனத்தைக் காட்டினால் அது புத்தர் அமர்ந்த சிம்மாசனம் என்று நாம் பொருள்கொண்டு வணங்க வேண்டும். ஸ்தூபம் அல்லது போதி மரம் அல்லது தர்ம சக்கரம் ஆகியவையும் புத்தருக்கான குறியீடுகளாகப் புரிந்துகொள்ளப்பட்டன.

ஆக, ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக புத்தரைக் கற்பனை செய்துவைத்திருந்தனர். காந்தாரத்தில்தான் (மதுராவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்) முதன்முறையாக புத்தர் மனித உருவில் பிறந்துவருகிறார். போதிசத்துவரின் உருவமும் முதலில் காந்தாரத்தில்தான் உருவானது. இந்த இருவருக்கும் என்ன வேறுபாடு? புத்தநிலையை அடைய விரும்பும் எவரும் புத்தரின் ஆசியோடு போதிசத்துவராக உயரலாம் என்கிறது தேராவாத பௌத்தம்.

காந்தாரச் சிற்பங்களைக் கண்டு களித்த பிறகு, சிந்து நதியைக் கடந்து முன்னேறினார் யுவான் சுவாங். சிந்து நதியின் அலை ஒவ்வொன்றும் மலையளவுக்கு உயர்ந்ததாம். அலையின் சீற்றம் குதிரையின் பாய்ச்சலை அவருக்கு நினைவுபடுத்தியதாம். அப்படியே தட்சசீலத்தை ஒரு சுற்று சுற்றிவந்தார். அங்குமிங்குமாக மடாலயங்கள் தென்பட்டன என்றாலும், உள்ளே ஆள் அரவமில்லை. புதர் மண்டிக்கிடந்த சில மடாலயங்களுக்குள் நுழையவே அச்சமாக இருந்தது. காலடி எடுத்துவைக்கும்போது கூரை உடைந்து விழுந்தால் என்னாவது? மடாலயத்தின் கதி மட்டுமல்ல, தட்சசீலத்தின் கதியே இப்படித்தான் இருந்தது. காஷ்மீரை அண்டி இயங்கிவந்தது. ஆட்சி என்று பெரிதாக எதுவுமில்லை. இருந்தவர்களும் நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு ஒருவரையொருவர் அடித்துக்கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட நிலத்தில் பௌத்தத்துக்கு என்ன வேலை இருக்க முடியும்?

இதற்குமேல் இங்கே வேலையில்லை என்று காஷ்மீரை நோக்கி முன்னேறினார். மலைத் தொடர்களைக் கடந்துவருவது பெரும் சவாலாக இருந்தது. பல இடங்களில் சங்கிலித் தொடர்போல் பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தன. `யார் மீது என்ன கோபமோ தெரியவில்லை, ஜீலம் ஆறு தொடர்ந்து கொந்தளித்துக்கொண்டிருந்தது’ என்று குறிப்பிடுகிறார்.

கைவசம் அறிமுகக் கடிதம் இருந்ததால், காஷ்மீர் தன்னை வரவேற்கும் என்று யுவான் சுவாங் எதிர்பார்த்தது என்னவோ உண்மைதான். ஆனால் திக்குமுக்காடச் செய்யும் அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அலங்கரிக்கப்பட்ட யானையின்மீது அமரவைத்து அமர்க்களமாக நகருக்கு அழைத்துச் சென்றார்கள். அவரை வரவேற்க மன்னரே நேரடியாகக் கிளம்பிவந்தார். அதுவும் எப்படி? அமைச்சர்களோடும், ஆயிரம் பிக்குகளோடும், மாலை மரியாதையோடும். தவிரவும், வீதியின் இரு மருங்கிலும் மக்கள் திரண்டு மலர்களைத் தூவி வணங்கினர். யுவான் சுவாங் நிச்சயம் மிரண்டுபோயிருக்க வேண்டும். எதற்கு இந்த அதிகப்படியான வரவேற்பு? காஷ்மீரி பிக்குகள் பின்னர் விளக்கினார்கள். `நேற்று இரவு எங்களுக்கு ஒரு கனவு வந்தது. சீனாவிலிருந்து ஒரு வித்தியாசமான பிக்கு, ஏடுகள் தேடி புனிதப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவர் உங்கள் நிலத்துக்கும் வருவார் என்று இறைவாக்கு குறிப்பிட்டது. அதனால்தான் ஏதோ எங்களால் இயன்ற அளவுக்கு மரியாதை செய்கிறோம். உங்களுக்கு எதுவும் குறையில்லையே?’

அரண்மனையில் யுவான் சுவாங்குக்கு இடம் ஒதுக்கித் தரப்பட்டது. கிடைத்த வாய்ப்பை அவர் தவறவிடவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகள் (631-633) காஷ்மீரில் தங்கியிருந்தார். ஏடுகளைத் தேடியெடுத்து வாசித்தார். அரண்மனைச் சேவகர்கள் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்தனர். பிரதியெடுப்பதற்கு 20 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பதால் பௌத்த ஆய்வுகளில் மூழ்கிப்போனார் யுவான் சுவாங். சில முக்கியமான ஏடுகளைத் தருவித்து பிரதிகள் எடுத்துக்கொண்டார். பௌத்த கோட்பாடுகளை விரித்து எழுதத் தொடங்கினார்.

சிதிலங்களைக் கண்டு கண்டு சோர்ந்துபோயிருந்தவருக்கு காஷ்மீரின் பௌத்தம் நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. காஷ்மீரின் அழகு அவர் மனதைக் கொள்ளைகொண்டது. ஓங்கி உயர்ந்த மலைகளும், பள்ளத்தாக்குகளும், பூக்கள் கொஞ்சும் வனங்களும், இடை இடையில் எழுந்தருளியிருந்த மடாலயங்களும் அவர் உற்சாகத்தை அதிகப்படுத்தின. தன்னுடைய பயணக் குறிப்புகளில் காஷ்மீருக்கு கணிசமான பக்கங்களை அவர் ஒதுக்கினார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 37 - பெஷாவரிலிருந்து காஷ்மீருக்கு

`காஷ்மீர், பொன் விளையும் பூமி’ என்கிறார் யுவான் சுவாங். `காய்களும் கனிகளும் மலர்களும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. குங்குமப்பூ தொடங்கி ஏராளமான மருத்துவச் செடிகள் உள்ளன. காஷ்மீரத்துக் குதிரைகள் திடமாக இருக்கின்றன. மக்கள் அடக்கமானவர்களாகக் காட்சியளிக் கிறார்களென்றாலும் தோற்றத்தைக்கொண்டு முடிவு கட்டிவிட முடியாது. ஒரு நல்ல டிராகனின் அரவணைப்பு அவர்களுக்குக் கிடைக்கிறதோ என்னவோ...’ என்கிறார் யுவான் சுவாங்.

காஷ்மீரில் நூறு மடாலயங்கள் இருப்பதாகவும், 5,000 பிக்குகள் வாழ்வதாகவும் குறிப்பிடுகிறார். பார்க்க வேண்டிய புனித இடங்களும் நிறையவே இருக்கின்றனவாம். எங்கே போனாலும், புனித இடங்களைத் தேடிச் சென்று பார்த்துவிடுபவர் என்றாலும், காஷ்மீரில் அவர் கவனம் முழுக்க முழுக்க ஏடுகளிடமே குவிந்திருந்தது. பயணத்துக்குக் குறைவான நேரத்தையும் வாசிப்பிலும் எழுத்திலும் அதிக நேரத்தையும் அவர் செலவிட்டிருக்கிறார். புதையல் போல் அறிவில் சிறந்த ஆசிரியர்களும் காஷ்மீரில் அவருக்குக் கிடைத்திருக்கிறார்கள். வசுபந்து, வினிதபிரபா, சந்திரவர்மன், ஜெயகுப்தா எனச் சிலருடைய பெயர்களையும் குறிப்பிடுகிறார்.

‘என்னை உங்கள் மாணவராக ஏற்பீர்களா?’ என்று கேட்டு ஒவ்வொருவரிடமும் தனித்தனியே பயின்றிருக்கிறார். பௌத்தம் பிரதானம் என்றாலும், அதையும் கடந்து தத்துவம், மொழி, இலக்கணம், தர்க்கம் ஆகிய தலைப்புகளிலும் ஆர்வம் செலுத்தியிருக்கிறார். காலையில் ஒரு வகுப்பு, மாலை இன்னொருவரிடம் வேறு வகுப்பு என்று ஓடியோடியும் படித்திருக்கிறார். `நீங்கள் ஏன் இங்கேயே இருந்துவிடக் கூடாது? என் காலத்துக்குப் பிறகு இங்கே வகுப்பு எடுப்பதற்கு நீங்கள்தான் சரியான நபர்’ என்று சில ஆசிரியர்களே பாராட்டும் அளவுக்கு யுவான் சுவாங் ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்திருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, காஷ்மீருக்கும் யுவான் சுவாங்கைப் பிடித்துப்போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

(விரியும்)