
தத்துவ நூல்களுக்கு சீனாவில் பஞ்சமில்லை என்றாலும், ஒரு தனித்துவமான துறையாக தர்க்கவியல் அங்கே வளர்த்தெடுக்கப்படவில்லை.
யுவான் சுவாங்கைப் பொறுத்தவரை காஷ்மீர் ஒரு நகரமல்ல, பல்கலைக்கழகம். வசுபந்து, அசங்கா என்று தொடங்கி பல இந்தியத் தத்துவ ஆசிரியர்களின் படைப்புகள் அவருக்கு காஷ்மீரில்தான் அறிமுகமாகின. பௌத்தக் கோட்பாடுகளைவிட, புனிதச் சூத்திரங்களைவிட அதிக ஆர்வத்தோடு தர்க்கவியலை அவர் கற்றுக்கொண்டார். ‘இந்தியா உங்களுக்கு அளித்ததில் மதிப்பு வாய்ந்தது எது?’ என்று அவரிடம் கேட்டிருந்தால், ஒரு நொடியும் யோசிக்காமல், `தர்க்கவியல்’ என்றே யுவான் சுவாங் சொல்லியிருப்பார். இந்த அளவுக்கு யுவான் சுவாங் தர்க்கவியல்மீது ஆர்வம்கொண்டதற்குக் காரணம், அதை அவர் முதலில் கண்டது இந்தியாவில் என்பதால்தான். கண்டதும் காதல்.
தத்துவ நூல்களுக்கு சீனாவில் பஞ்சமில்லை என்றாலும், ஒரு தனித்துவமான துறையாக தர்க்கவியல் அங்கே வளர்த்தெடுக்கப்படவில்லை. அப்படியொன்று இருப்பதே அங்கு பலருக்குத் தெரியாது என்றுகூடச் சொல்ல முடியும். எனவே பேரார்வத்தோடு சில ஏடுகளைத் தேர்ந்தெடுத்து, சம்ஸ்கிருதத்திலிருந்து சீனத்துக்கு மொழிபெயர்த்தார் யுவான் சுவாங். இந்திய தர்க்கவியலை சீனாவுக்கு அறிமுகம் செய்தவர்களில் யுவான் சுவாங் முதன்மையானவர்.
விட்டால் இன்னும் பத்தாண்டுகள்கூட காஷ்மீரில் இருந்திருப்பார். ஆனால், இந்தியா என்பது காஷ்மீர் மட்டும் கிடையாதே! ஒரு வழியாக மனதைத் தேற்றிக்கொண்டு காஷ்மீரைவிட்டுக் கீழிறங்கினார். கங்கைச் சமவெளியைக் கடந்து, வட இந்தியாவை அடைவது அவர் திட்டம். ஆனால் அதற்குள் வந்துவிட்டது ஆபத்து. யுவான் சுவாங்கின் கேரவான் முன்னேறிச் சென்றுகொண்டிருந்த போது, இன்றைய சியால்கோட்டில் 50 கொள்ளையர்கள் சூழ்ந்துகொண்டனர். பட்டும் பகட்டுமாக ஊர்வலம் சென்றுகொண்டிருந்த கூட்டத்தைக் கண்டதுமே, `இன்று நல்ல வேட்டை’ என்று கொள்ளைக் கூட்டத்துக்குத் தெரிந்துவிட்டது. வாளைக் காட்டி மிரட்டி, அனைவரையும் கட்டிப்போட்டனர். மூட்டை, முடிச்சுகள் ஒன்றுவிடாமல் கைப்பற்றப்பட்டன. கட்டியிருந்த ஆடையைக்கூட விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றையும் பிடுங்கிய பிறகும் அவர்களுக்கு நிறைவில்லை. கால்நடைகள்போல் அனைவரையும் மறைவான இடத்துக்கு இழுத்துச் சென்றனர். மொத்தமாகக் கொன்றுபோடுவதுதான் திட்டம்போலிருக்கிறது.

இதை எப்படியோ உணர்ந்துவிட்ட ஒரு பிக்கு யுவான் சுவாங்கை எச்சரிக்க, இருவரும் தப்பியோடினர். அருகிலிருந்த கிராமத்துக்குச் சென்று தகவல் சொல்ல, அங்கிருந்தவர்கள் பிக்குகளை விடுவித்தனர். கொள்ளையடித்த செல்வத்தை மீட்டெடுக்க முடியவில்லை. `அது போய்விட்டதே, இது போய்விட்டதே...’ என்று பலரும் வருந்தினாலும் உயிராவது பிழைத்தோமே என்று தேற்றிக்கொண்டனர். அவர்களுக்குப் புரியாதது ஒன்றுதான். `இங்கே இவ்வளவு நடந்திருக்கிறதே... இந்த யுவான் சுவாங்கின் முகத்தில் ஒரு சிறு சலனமாவது தெரிகிறதா பாருங்களேன்... எப்படி அவரால் அலட்டிக்கொள்ளாமல் அமைதி காக்க முடிகிறது?’ அந்த ஒரு தருணத்தில் மட்டுமல்ல, பெரும்பாலான தருணங்களில் அவர் இலை மேல் நீராகத்தான் இருந்திருக்கிறார். எது வருகிறதோ வரட்டும். எது போகிறதோ போகட்டும். ஒரு பௌத்தராக உணர்வுகளை வெல்லத் தெரிந்திருந்தது அவருக்கு. எங்கும் வேர் பிடித்து நின்றுவிடக் கூடாது என்பதை ஒரு பயணியாக அவர் நன்கு உணர்ந்திருந்தார். எனவே, எதுவும் அவரை எளிதில் அசைத்துவிடுவதில்லை.
அடுத்து வந்து சேர்ந்த இடத்தை ‘சீனாபுதி’ என்று யுவான் சுவாங் அழைக்கிறார். இது சீன உச்சரிப்பு.
பஞ்சாபுக்கு அருகில் இருக்கும் இன்றைய ஃபிரோஸ்பூரை ஒட்டியுள்ள ஒரு பகுதி இது. `நல்ல விளைச்சலுள்ள அதேசமயம் மரங்கள் அதிகமில்லாத இடம்’ என்கிறார் யுவான் சுவாங். `நல்ல நிர்வாகம். அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது போலிருக்கிறது. மக்கள் எளிமையானவர்களாக இருக்கிறார்கள். படித்த மக்கள் பௌத்தர்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள் வேறு நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள். கடவுள் நம்பிக்கையற்றவர்களும் இங்கே இருக்கவே செய்கிறார்கள்’ என்கிறார் யுவான் சுவாங்.
அங்கே வினிதபிரபா என்னும் இளவரசரை யுவான் சுவாங் சந்திக்க நேர்ந்தது. இரண்டு ஆச்சர்யங்கள். வினிதபிரபா இளவரசர் மட்டுமல்ல பிக்குவும்கூட என்பதால், பௌத்த ஏடுகள் பலவற்றை அவர் கற்றுத் தேர்ந்திருந்தார். `எனக்கு தர்க்கவியல் பிடிக்கும். உங்களுக்கு அதில் ஈடுபாடு உண்டா?’ என்று அவர் கேட்டதும், `ஆகா... இதென்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்..’ என்று உற்சாகமடைந்தார் யுவான் சுவாங். `அப்படியானால், நானே உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன்’ என்று வினிதபிரபா சொன்னதும், அட்டைபோல் அரண்மனையில் ஒட்டிக்கொண்டுவிட்டார் யுவான் சுவாங்.
காஷ்மீரைவிட்டு அவர் வெளியேறினாலும், காஷ்மீர் அவரைவிட்டு வெளியேறவில்லை போலிருக்கிறது. அங்கே விட்ட பாடங்களை அழகாக இங்கே தொடர்ந்தார். மகாயான பௌத்தத்தில் தேர்ச்சிபெற்றவராக இருந்தார் வினிதபிரபா. ஓராண்டுக்காலம் வினிதபிரபாவிடமிருந்து பல ஏடுகளைக் கற்றுக்கொண்டார் யுவான் சுவாங். தர்க்கவியலில் வசுபந்துவும் அசங்காவும் இணைந்து வளர்த்த ஒரு துறை, யோகாகார கருத்தியல். இதற்கு வினிதபிரபா விளக்கவுரை இயற்றியிருந்தார். அவரே யுவான் சுவாங்குக்குச் சொல்லியும் கொடுத்தார். இனிப்புபோல் பாவித்து, சுவைத்து மகிழ்ந்தார் யுவான் சுவாங்.

பலரும் நினைப்பதுபோல் தர்க்கவியல் அப்படியொன்றும் நம் மூளையைக் கசக்கிப் பிழிந்துவிடும் துறையல்ல. எளிமையான, தொடர்ச்சியான கேள்விகள் மூலம் நாம் சிந்திக்கும் முறையை மாற்றும் அல்லது கூர்தீட்டும் கருவி அது. எடுத்துக்காட்டுக்கு, ‘மிலிந்தாவின் கேள்விகள்’ என்னும் தொகுப்பை எடுத்துக்கொள்வோம். மிலிந்தா என்னும் அரசரும், நாகசேனா என்னும் பௌத்த அறிஞரும் மேற்கொண்ட உரையாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பௌத்தக் கோட்பாடுகளில் தொடங்கி படிப்படியாக உலகம், மனிதன், வாழ்க்கை, வாழ்வின் பொருள், கடவுள், அறம், ஆன்மா என்று பல பொதுவான தலைப்புகளில் இருவரும் விவாதிக்கிறார்கள். அதிலிருந்து ஒரு சிறு பகுதி.
`மதிப்புமிக்க பிக்குவே, இந்தக் கம்பம்தான் ரதமா?’
`இல்லை, மன்னா!’
`அச்சுதான் ரதமா?’
`இல்லை, மன்னா!’
`சக்கரம், கூரை, கொடிக்கம்பம், குடை, ஆரம், சவுக்கு இவற்றில் எதையேனும் ரதம் என்று அழைக்கலாமா?’
`இல்லை, மன்னா!’
`அப்படியானால் கம்பம், அச்சு, சக்கரம், கூரை, கொடிக்கம்பம், குடை, ஆரம், சவுக்கு இவையெல்லாம் சேர்ந்த கலவைதான் ரதம். சரியா?’
`இல்லை, மன்னா!’
இவை எல்லாமே ரதத்தின் பாகங்கள். ஆனால் இவற்றில் எதுவொன்றையும் ரதமல்ல. எல்லாவற்றையும் கலந்தால் ரதம் உருவாகிவிடுமா என்றால் அதுவும் இல்லை. அப்படியென்றால் எதை நாம் ரதம் என்று அழைக்க முடியும்? எதையுமே ரதம் என்று அழைக்க முடியாது. அப்படியென்றால் ரதம் என்ற ஒன்று இல்லை என்று சொல்லிவிடலாமா? சொல்லிவிடலாம்தான். ஆனால் இல்லாத ஒன்றுக்கு ரதம் என்று ஒரு பெயர் இருக்கவேண்டிய அவசியமென்ன? ஆ, பெயர்! அப்படியானால் ரதம் என்பது ஒரு பெயரா... பெயர் மட்டுமேவா? ரதம் என்பது ஒரு பெயர் என்றால், மனிதன் என்பதும் ஒரு பெயர். வாழ்க்கை என்பதும் ஒரு பெயர். வெறும் பெயரை வைத்துக்கொண்டுதான் நாம் இவ்வளவு அமர்க்களங்கள் செய்து கொண்டிருக்கிறோமா?
அதேபோல் மெழுகுவத்தியை வைத்துக்கொண்டு மாபெரும் பௌத்தத் தத்துவ விசாரணையை வளர்த்தெடுத்திருக்கிறார்கள். சுடர்விட்டு நின்று நிதானமாக எரிந்துகொண்டிருக்கிறது மெழுகுவத்தி. இப்போது எரிந்துகொண்டிருப்பது எந்தச் சுடர்... இரவு தொடங்கும்போது ஏற்றி வைத்தோமே அதுவா... அதே சுடர்தான் நள்ளிரவிலும் நின்று எரிந்துகொண்டிருக்கிறதா... பொழுது விடிந்ததும் நாம் காணும் சுடர், முந்தைய இரவின் சுடரா அல்லது புதிதாகப் பிறந்ததா?
மழைக்காலம் தொடங்கியது. அரண்மனையிலிருந்து விடைபெற்றுக்கொண்டார். கிழக்கு பஞ்சாபிலுள்ள இன்றைய ஜலந்தரை 634-ம் ஆண்டு அடைந்தார். அப்போது அதன் பெயர் ஜலந்தாரா. மழை முடியும்வரை அங்கேயே இருந்தார். வெயில் தொடங்கியதும் பயணம் ஆரம்பமானது. மலைத்தொடர்களையும் சரிவான பள்ளத்தாக்குகளையும் கடந்து குலு பள்ளத்தாக்குக்கு வந்து சேர்ந்தார். இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள அழகிய இடம்.
குலுவில் இருபது மடாலயங்களை யுவான் சுவாங் கண்டார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிக்குகள் இருந்தனர். பெரும்பாலானோர் ஹீனயானப் பிரிவைச் சேர்ந்தவர்கள். மற்றபடி காண்பதற்கு அதிக இடங்கள் இல்லை என்பதால், குலுவில் வாழ்க்கை பொதுவாக எப்படி இருக்கிறது என்னும் தேடலில் இறங்கினார். அகண்டு விரிந்த கானகம்போல் இருந்தது பள்ளத்தாக்கு. தாவரங்களில் மருத்துவக் குணம் கொண்ட மூலிகை வகைகள் மிகுந்திருந்ததைக் கண்டார். மூலிகை வேர்கள் பல்வேறு சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. இப்படியோர் இடத்தில் வாழ்ந்தால் நோய் எங்கே வரப்போகிறது என்று நீங்கள் நினைத்தால் தவறு. கழலை, கட்டி போன்ற உபாதைகளால் அவதிப்படுபவர்கள் இங்கே ஏராளம் என்கிறார் யுவான் சுவாங். இது ஒரு கூர்மையான அவதானிப்பு. இன்றும்கூட குலுவிலும் அதையொட்டியுள்ள பகுதிகளிலும்தான் கழலை நோயால் தாக்குண்டவர்கள் மிகுந்திருக்கின்றனர்.
குலுவைத் தொடர்ந்து அதே பாதையில் முன்னேறியிருந்தால் லே, லடாக் போன்ற கண்கவரும் இடங்களைக் கண்டிருக்கலாம். ஆனால் யுவான் சுவாங் தன் வழித்தடத்தை மாற்றிக் கொண்டார். யமுனையையும் கங்கையையும் கடந்து மதுராவை நோக்கி முன்னேறினார். மூலிகைகள் வளரும் அதே இடத்தில் நோயும் படர்கிறது. செல்வம் ஓரிடத்தில் குவிகிறது. பின்பு அங்கிருந்து மறைகிறது. எனில், ஆரோக்கியத்தின் இன்னொரு பெயர்தான் நோயா... இருப்பின் இன்னொரு பெயர்தான் இழப்பா?
(விரியும்)