மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 39 - இரு இந்திய மன்னர்கள்

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்னும் உணர்வோடு தன் நாட்டில் ஒருவரும் விலங்குகளை பலியிடக் கூடாது என்று ஹர்ஷர் தடை விதித்துள்ளார்.

பாஹியான் வந்தபோது மதுராவில் பௌத்தமும் இந்து மதமும் `நான் இந்தப் பக்கம் வளர்கிறேன், நீ அங்கே வளர்ந்துகொள்’ என்பதுபோல் பேசிவைத்துக்கொண்டு வளர்ந்திருந்தன. யுவான் சுவாங் கண்ட மதுராவில் எல்லாப் பக்கங்களிலும் இந்து மதம் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தது. சந்து பொந்துகளில் பௌத்தத்தைத் தேட வேண்டியிருந்தது. `மதுரா என்றால் புத்தர்’ என்னும் நிலை, `மதுரா என்றால் கிருஷ்ணர்’ என்று மாறிப்போயிருந்தது. நாங்களும் இருக்கிறோம் என்னும் கதையாக, கிட்டத்தட்ட 2,000 பௌத்தர்கள் இந்துக்களோடு கலந்து வாழ்வதாக யுவான் சுவாங் குறிப்பிடுகிறார். சமணர்களும் மதுராவில் வாழ்ந்துவந்தனர்.

யுவான் சுவாங்குக்கு கங்கை நதி பிடித்திருந்தது. `அள்ளிக் குடித்தால் நீர் இனிக்கிறது. ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு வண்ணத்தில் நதி பாய்கிறது. அலைகள் பெரிதாக உள்ளன. உள்ளே பலவிதமான அற்புத உயிர்கள் வாழ்கின்றன. ஆனால் அஞ்ச வேண்டாம், அவை நம்மை ஒன்றும் செய்வதில்லை’ என்கிறார் யுவான் சுவாங். கங்கை இந்துக்களின் புனித நதி என்பதை அவர் அறிவார். கரையெங்கும் இந்துக்கள் அணிவகுத்து நின்று வழிபடு வதையும் அவர் கண்டிருப்பார். அதிலெல்லாம் அவருக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் `கங்கையில் குளித்தால் நோய்கள் நீங்கும், பாவம் ஒழியும், புண்ணியம் கிடைக்கும்’ என்றெல்லாம் சொல்லப்படுவதை அவர் ஏற்கத் தயாராக இல்லை. இவற்றையெல்லாம் நம்ப முடியவில்லை. எல்லாம் கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகள் என்று நிராகரிக்கிறார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 39 - இரு இந்திய மன்னர்கள்

எதையும் பகுத்தறிந்தே ஏற்பார்போலும் என்று நினைத்துவிட வேண்டாம். பௌத்த அற்புதக் கதைகள் அனைத்தையும் நம்புபவர்தான். முற்பிறவி, மறுபிறவி கதைகளையெல்லாம் ஏற்பவர்தான். புத்தர் தோன்றி நிகழ்த்தும் அதிசய அற்புதங்களையெல்லாம் உண்மையாக நம்புபவர்தான். இதே கங்கையில் அடியாழத்தில் அதிசய விலங்குகள் வசிப்பதாகச் சொன்னபோது மறு பேச்சின்றி ஏற்றுக் கொண்டதோடு, காதில் விழுந்ததை அப்படியே பதிவும் செய்தவர்தான். ஆனால் ஒரு பௌத்தராக இருந்துகொண்டு இந்து நம்பிக்கைகளையெல்லாம் ஏற்றுக்கொண்டுவிட முடியாது அல்லவா? ஏற்கெனவே பௌத்தம் தேய்ந்துகொண்டிருக்கிறது. இதில் இந்து புராணக் கதைகளையெல்லாம் நம்ப ஆரம்பித்துவிட்டால் பௌத்தத்தின் கதி என்னவாகும்? அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. அவரவர் புனிதம் அவரவருக்கு. கங்கை இந்தியாவின் புனிதம் என்றால், சீனாவுக்கு மஞ்சள் ஆறு புனிதம். `எங்கள் வழியில் நீங்கள் வர வேண்டாம். உங்கள் வழிக்கு நாங்கள் வர மாட்டோம்.’ இதுதான் யுவான் சுவாங்கின் பார்வை.

இந்து மதம் வேண்டுமானால் பெரும் நிலவாக இருக்கலாம். எனக்கு நட்சத்திரங்கள் போதும் என்று மதுராவில் அங்குமிங்கும் சிதறிக்கிடந்த பௌத்த மடாலயங்களைத் தேடித் தேடி தரிசித்தார் யுவான் சுவாங். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று எங்கு சென்றாலும் கனிஷ்கர் புகழ் பாடும் பௌத்தர்கள் சிலரையாவது அவர் சந்தித்துவிடுவது வழக்கம். மதுராவிலும் அப்படிச் சிலர் இருந்தனர். இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மன்னரின் புகழ் இன்னமும் மங்காமல் இருக்கும் அதிசயத்தைக் கண்டு அவர் மகிழ்ந்தார்.

யுவான் சுவாங்கைக் கவர்ந்த முதல் இந்திய மன்னராக கனிஷ்கர் இருக்கிறார். கனிஷ்கர் சந்தேகமின்றி ஒரு முன்மாதிரியான மன்னர். பண்பானவராகவும், கனிவானவராகவும், சமத்துவத்தின்மீது நம்பிக்கைகொண்டவராகவும் அவர் இருந்திருக்கிறார். `இந்தியாவை ஆண்ட சிறந்த மன்னர்களின் வரிசையில் கனிஷ்கர் வகிக்கும் இடம் முதன்மையானது’ என்கிறார் யுவான் சுவாங்.

`ஒரு மன்னராக மட்டுமல்ல, ஒரு பௌத்தராகவும் அவர் தன்னிகரற்றவர்’ என்று புகழ்கிறார் யுவான் சுவாங். அதற்கான காரணத்தையும் அவரே விவரிக்கிறார். ஒரு மூத்த பிக்குவிடம் கனிஷ்கர் தினமும் பாடம் கற்பது வழக்கம். பலவிதமான கோட்பாடுகளை, பலவிதமான பார்வைகளைக் கற்றுக்கொண்ட பிறகு, கனிஷ்கருக்கு ஓர் அடிப்படையான ஐயம் எழுந்தது. பிக்குவிடம் அதை அவர் பகிர்ந்துகொண்டார். `நீங்கள் கற்றுக்கொடுக்கும் பாடம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாக இருக்கிறது. சில சமயம் நேற்று சொன்னதை இன்று மாற்றிச் சொல்கிறீர்கள். எல்லாமே பௌத்தம்தான் என்கிறீர்கள். அப்படியானால் புத்தர் முரண்பாடுகள் கொண்டவராக இருந்தாரா... அவருடைய உபதேசங்களில் எது சரியானது என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?’

பிக்கு விளக்கினார். `புத்தர் ஒருவர்தான். ஆனால் அவருடைய மாணவர்கள் கணக்கற்றவர்கள். புத்தரின் சொற்களுக்கு அவர்கள் பலவிதமாகப் பொருள் கொண்டிருக்கிறார்கள். எனவே நமக்குப் பலவிதமான கோட்பாடுகள் கிடைத்துள்ளன. அவை ஒன்றையொன்று ஆதரிக்கலாம், எதிர்க்கவும் செய்யலாம். ஒரு மாணவர் அகலமாகவும் ஆழமாகவும் கற்றாக வேண்டும். கற்கக் கற்கத் தெளிவு கிடைக்கும்.’ பிக்குவின் விளக்கத்தை கனிஷ்கர் ஏற்றுக்கொண்டார். கனிஷ்கரின் வழியை யுவான் சுவாங் ஏற்றுக்கொண்டார். `எது சரியான பௌத்தம்?’ எனும் கேள்வியை அவர் ஒருபோதும் எழுப்பிக்கொள்வதில்லை. கனிஷ்கரைப்போல் எல்லா வழிகளும் புத்தரை நோக்கியே எனும் உணர்வோடு எல்லாக் கோட்பாடுகளையும் அவர் கற்றுக்கொண்டார்.

யுவான் சுவாங்கைக் கவர்ந்த இரண்டாவது மன்னர், ஹர்ஷர். கங்கையை ஒட்டி தெற்கில் இன்றைய கனோஜ் (கான்பூரிலிருந்து 50 மைல் தொலைவில்) பகுதியைத் தலைநகராகக்கொண்டு ஹர்ஷரின் ஆட்சிப் பிரதேசம் விரிந்திருந்தது. யுவான் சுவாங் வந்து சேர்ந்தபோது, ஹர்ஷர் நகருக்கு வெளியில் இருந்தார். ஆனால், சந்திப்பதற்கு முன்பே ஹர்ஷர் பற்றிய ஒரு நல்ல சித்திரம் யுவான் சுவாங்கின் மனதில் உருவாகிவிட்டது. கோட்டைகளையும் வீதிகளையும் வலம்வந்தபோது, தான் கண்ட காட்சிகளைவைத்தே ஹர்ஷர் எப்படிப்பட்ட மன்னர் என்பதை ஊகித்துவிட்டார் யுவான் சுவாங். ஒரு பயணிக்கு மட்டுமே இப்படிப்பட்ட உள்ளுணர்வு ஏற்படும். பெரும்பாலும் அந்த உள்ளுணர்வு சரியாகவே இருக்கும்.

ஹர்ஷர் தனது ராஜ்ஜியத்தை வலிமையானதாக வைத்திருந்தார். பாதுகாப்பு அரண்கள், அகழிகள், கண்காணிப்புக் கோபுரங்கள் என்று ஒரு ராணுவ கேந்திரம்போல் நிலத்தை மாற்றியமைப்பது அப்படியொன்றும் கடினமானதல்ல. எல்லோரும் செய்வதுதான். ஆனால் ஹர்ஷருக்கு வலிமை மட்டும் நிறைவைக் கொடுத்துவிடவில்லை. வலிமையான நகரம் என்பது புறத்தோற்றம். அகம் எளிமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று ஹர்ஷர் கருதினார். கண்கவரும் தோட்டங்கள் அமைக்கப்பட்டன. ஏரிகள் வெட்டப்பட்டன. கேளிக்கை அரங்கங்கள் வடிவமைக்கப்பட்டன. ஹர்ஷர் எவ்வளவு அழகுணர்ச்சி கொண்டவராக இருக்கிறார் என்பதை ஒரு சுற்று சுற்றி வந்தாலே தெரிந்துகொண்டுவிட முடியும்.

`மக்கள் செல்வந்தர்களாக இருந்தனர். பெருமளவில் வணிகர்களாக இருந்ததால், பகட்டாக அவர்களால் வாழ முடிகிறது’ என்கிறார் யுவான் சுவாங். மதுராபோலன்றி கனோஜில் (`கன்யகுப்ஜா’ என்பது அப்போது வழக்கத்திலிருந்த பெயர்) நூறு மடாலயங்கள் இருந்தன. பத்தாயிரம் பிக்குகள் வாழ்ந்தனர். சமீபத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பிக்குகளை அவர் எங்கும் கண்டதில்லை என்பதால் கனோஜ் அவரைக் கவர்ந்துவிட்டது. இதற்குக் காரணம், ஹர்ஷர்தான் என்று இன்னொரு புகழ் மாலையை மன்னருக்குச் சூட்டுகிறார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 39 - இரு இந்திய மன்னர்கள்

ஹர்ஷவர்தனர் என்றும் அழைக்கப்பட்ட ஹர்ஷர் 606 முதல் 647-ம் ஆண்டுவரை ஆட்சி செய்தவர். வட இந்தியாவை ஒருங்கிணைத்தவராக வரலாறு அவரை நினைவுகூர்கிறது. வடக்கு, வடமேற்கு என்று தொடங்கி தெற்கில் நர்மதை ஆறு வரையிலான மிகப்பெரிய நிலப்பரப்பைத் தன் கட்டுப்பாட்டின்கீழ் கிட்டத்தட்ட முழுமையாகக் கொண்டுவந்தவர் ஹர்ஷர். சாளுக்கிய மன்னரான இரண்டாம் புலிகேசி மட்டும் தடுத்து நிறுத்தாமல் போயிருந்தால், தெற்கிலும் அவர் ஆட்சி நீண்டிருக்கும். தன்னை ஒரு சைவராக முன்னிறுத்திக்கொண்டவர் ஹர்ஷர். ‘பரம மஹேஸ்வரா’ என்றே ஆரம்பகாலக் கல்வெட்டுகள் அவரைக் குறிப்பிடுகின்றன. பின்னர் மனமாற்றம் கொண்டு பௌத்தத்தைத் தழுவியிருக்கிறார். எப்போது, எந்தப் பின்னணியில் என்பது உறுதியாகத் தெரியவில்லை. பிற்காலத்தில்தான் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.

ஏதோ ஹர்ஷரின் வாழ்க்கை வரலாற்றை எழுதப்போகிறவர்போல் அவரைப் பற்றிய பல தகவல்களை யுவான் சுவாங் தேடித் தொகுத்திருப்பதுபோல் தெரிகிறது. அவருடைய பதிவுகள் வாயிலாகவே ஹர்ஷர் நமக்கு நெருக்கமானவராக மாறுகிறார். அவர் ஒரு தூய பௌத்தர் என்கிறார் யுவான் சுவாங். புத்தர் பயணம் மேற்கொண்ட இடங்களில் பல நினைவிடங்களை உருவாக்கியிருக்கிறார். கங்கைக் கரையில் நூறடி உயரம்கொண்ட ஆயிரக்கணக்கான தூண்களை எழுப்பியிருக்கிறார். எல்லா மன்னர்களையும்போல் ஆயுதம் தாங்கிய வீரர்களின் அணிவகுப்பைக் கண்டுகளித்து வந்தவர், பௌத்த சாரம் உள்ளிறங்கிய பிறகு, மத ஊர்வலத்தை ஊக்குவிக்க ஆரம்பித்திருக்கிறார். எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்னும் உணர்வோடு தன் நாட்டில் ஒருவரும் விலங்குகளை பலியிடக் கூடாது என்று ஹர்ஷர் தடை விதித்துள்ளார். ஏழைகளும் பயணிகளும் தங்குவதற்கு வசதியாகப் பல இடங்களில் சத்திரங்களையும் அவர் கட்டியிருப்பதாகத் தெரிகிறது.

மதத்தையும் ஆட்சியையும் சரியான விதத்தில் ஒன்று கலந்தவராக யுவான் சுவாங்கின் கண்களுக்கு ஹர்ஷர் புலப்பட்டிருக்கிறார். முதல் பயணத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு அமையாவிட்டாலும், இந்தியாவைவிட்டு வெளியேறுவதற்கு முன்பு நேருக்கு நேராக ஹர்ஷரைச் சந்தித்துவிடுகிறார் யுவான் சுவாங்.

(விரியும்)