மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 4 - தங்க எறும்புகளும் மனிதர்களை உண்பவர்களும்!

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

எறும்பு தோண்டி வீசும் மணலைச் சேகரிப்பதற்கென்றே இந்தியர்கள் பாலைவனத்தை நோக்கிப் படையெடுப்பது வழக்கம்.

மணல், மணல், மணல். திரும்பும் பக்கமெல்லாம் மணல் மட்டுமே இருக்கும் பெரும் பாலைவனப் பிரதேசம் அது. இங்கே ஒரு வகை எறும்புகள் கும்பல் கும்பலாக மறைந்திருக்கின்றன. கிரேக்கத்தில் நாம் வழக்கமாகக் காணும் எறும்புதான். ஆனால், அளவில் பெரியதாகவும் அச்சமூட்டும்படியும் இருக்கும். நாயைவிட உயரம் குறைவு, நரியைவிடப் பெரியது. இப்படியொரு எறும்பைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த எறும்பைப் பற்றித்தான் நான் உங்களுக்கு அடுத்துச் சொல்லப்போகிறேன் என்கிறார் ஹெரோடோட்டஸ்.

இந்தியாவிலும்கூட எல்லா இடங்களிலும் இதைக் காண முடியாது. நான் குறிப்பிட்ட பாலைவனத்தில் மட்டுமே இருக்கும். இந்த எறும்புகள் அதிசயமானவை மட்டுமல்ல, எக்கச்சக்க மதிப்புகொண்டவை என்பதால் இவற்றை வேட்டையாடுவதற்கு நான், நீ என்று கடும் போட்டி நிலவுவது வழக்கம். எறும்புகளை வேட்டை யாடுவதற்கென்றே போர்க்குணம்கொண்ட இந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமே இவை சிக்கும். அவர்களும்கூட மிகுந்த கவனத்தோடுதான் எறும்பு பிடிக்கப்போவார்கள்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 4 - தங்க எறும்புகளும் மனிதர்களை உண்பவர்களும்!

அடியாழம் செல்லும்வரை எறும்பு தனது கூர்மையான கைகளையும் கால்களையும் கொண்டு மணலைக் குடைந்துகொண்டே போகும். அவ்வாறு உள்ளே செல்லும்போது அது வெளியேற்றும் மணல் சிறு குன்று அளவுக்கு உயர்வதைப் பார்க்க முடியும். இந்த மணல் குன்றில்தான் ரகசியமே அடங்கியிருக்கிறது. எறும்பு பிடிக்க முடியாதவர்கள்கூட அது தோண்டிப்போடும் மணல் கிடைக்கிறதா என்று ஆசையோடு தேடுவார்கள். காரணம், மணலில் நிரம்பியிருக்கும் தங்கத் துகள்கள்.

எறும்பு தோண்டி வீசும் மணலைச் சேகரிப்பதற்கென்றே இந்தியர்கள் பாலைவனத்தை நோக்கிப் படையெடுப்பது வழக்கம். அதற்கென்று ஒரு முறை இருக்கிறது. மூன்று ஒட்டகங்களோடுதான் வழக்கமாகச் செல்வார்கள். மூன்றும் ஒரே கயிற்றால் பிணைக்கப்பட்டிருக்கும். இரண்டு பக்கமும் ஆண் ஒட்டகங்கள், நடுவில் பெண். அந்தப் பெண் ஒட்டகத்தின்மீது அமர்ந்துதான் மற்ற இரு ஒட்டகங்களையும் சேர்த்துச் செலுத்த வேண்டும். கவனம், ஏதோ ஒரு பெண் ஒட்டகம் அல்ல; மிகச் சமீபத்தில் கன்று ஈன்ற தாய் ஒட்டகமாகப் பார்த்து, பரிசோதித்து அழைத்து வர வேண்டும். அந்த வகை ஒட்டகத்தால் குதிரையைப்போல் வேகமாகப் பாய முடியும். குதிரையைக் காட்டிலும் அதிக பாரத்தையும் சுமக்க முடியும்.

நல்ல வெயில் பிளக்கும்போது, வெப்பம் உடலைப் பிய்த்துத் தின்னும்போது பாலைவனத்துக்குள் நுழைய வேண்டும். அப்போதுதான் எறும்புகள் வெளியில் வர பயந்து வளைக்குள் இளைப்பாறிக்கொண்டிருக்கும். கிரேக்கத்தில் நல்ல வெயில் அடிக்கும்போது மதியம் எப்படி இருக்குமோ அதைக்காட்டிலும் தீவிரமான வெயிலைக் காலையிலேயே இந்தியாவில் காண முடியும். மாலை வர வர, நல்ல காற்று வர ஆரம்பித்து இரவில் குளிர ஆரம்பிக்கும்.

உச்சி வெயிலில் பாலைவனம் செல்லும் இந்தியர்கள், மணல் குன்றுகள் அதிகமிருக்கும் இடம் பார்த்து ஒட்டகத்தை நிறுத்தி, பைகளை இறக்கி, மளமளவென்று மணலை அள்ளிப் போட்டுக்கொண்டு விரட்டு, விரட்டு என்று ஒட்டகத்தை விரட்டியோடி மறைவார்களாம். பயம்தான் காரணம். மனிதர்களின் காலடி நடமாட்டத்தை உணர்ந்தும், மோப்பம் பிடித்தும் எறும்புகள் வெளியில் வந்து துரத்த ஆரம்பித்துவிட்டால் அவ்வளவுதானாம்! இந்த உலகிலேயே அந்த எறும்புகள்போல் வேகமாகத் துரத்தியோடும் இன்னோர் உயிரில்லை. இந்தியர்கள் கொஞ்சம் தாமதம் செய்தாலும் விரட்டிப் பிடித்துவிடுமாம். பிடித்துவிட்டால் ஒருவர்கூட உயிரோடு வீடு திரும்ப முடியாது.

இது இந்தியர்களுக்குத் தெரியும் என்பதால் கொண்டுவந்த பையை மட்டும் ஒழுங்காக நிரப்பிக்கொண்டு, சத்தமே போடாமல் ஓட்டமெடுத்துவிடுவார்கள். இரண்டு ஆண் ஒட்டகங்கள் பார்த்தாமல்லவோ? அவற்றுக்கு எறும்புகளைக் கடந்து ஓடும் அளவுக்கு உடலில் வலுவில்லையாம். நடுவில் இருக்கும் பெண் ஒட்டகம்தான் சிலிர்த்துக்கொண்டு இரு பக்கங்களிலும் வரும் ஆண் ஒட்டகங்களையும், தன் மேல் அமர்ந்து வரும் ஆளையும், தங்க மூட்டைகளையும் இழுத்துக்கொண்டு பாய்ந்து ஓடி அனைவரையும் காப்பாற்றுமாம்!

எறும்புகளைப் பிடிக்கும் இந்தியர்கள் தனி வகையினர். அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கும். கடுமையாகச் சண்டையிட்டு எறும்புகளை அவர்கள் சிறைப்பிடித்து எடுத்துச் செல்வார்கள். அந்த எறும்புகளைப் பழக்கப்படுத்தினால் அது எங்கு தங்கம் இருக்கும் என்று காட்டிவிடும். பாரசீக மன்னர் தன் கட்டுப்பாட்டில் சில எறும்புகளை வைத்திருக்கிறாராம். அனைத்தும் இந்தியர்கள் சிறைப்பிடித்து கொடுத்தவை என்கிறார் ஹெரோடோட்டஸ்.

எறும்பாவது, தங்கமாவது? வளமான கதை என்பதைத் தவிர இதில் வேறெதுவும் இல்லை என்று பலர் இதை ஒதுக்கித் தள்ளினர். ஆனால் பெரிய மனிதர் சொல்லியிருக்கிறாரே, அப்படியோர் எறும்பு இருந்தாலும் இருக்கலாமல்லவா என்று புதையல் தேடுபவர்கள் தொடங்கி ஆய்வாளர்கள் வரை பலரும் நிலத்தையும், மணலையும், ஏடுகளையும் சலித்தெடுக்கத் தொடங்கினர். நீண்ட, நீண்ட தேடலின் முடிவில் சிந்துநதியின் மேற்பகுதியில், இமயமலைக்கு அருகில் பருத்த உடலும் அடர்த்தியான வாலையும் கொண்டிருக்கும் ‘மர்மோட்’ எனப்படும் ஒரு வகை அணிலை அவர்கள் கண்டுபிடித்தனர்.

ஹெரோடாட்டஸின் விவரணைக்கு ஏற்றாற்போல் இந்த மர்மோட், மணலைக் குடையும் வழக்கத்தைக்கொண்டிருந்தது. ஆராய்ந்தபோது மணலில் தங்கத் துகள்கள் தென்பட்டன. பல தலைமுறைகளுக்கு முன்பு அங்கு வசித்த மினாரோ எனப்படும் பழங்குடிகள் இந்தத் துகள்களைச் சேகரித்துவந்ததாகவும் தெரியவந்தது. அவர்களுடைய இன்றைய வழித்தோன்றல்களும் இதை உறுதி செய்கிறார்கள். இந்தியப் பகுதியில் இருப்பவர்கள் மட்டுமல்ல... நதிக்கரைக்கு அந்தப் பக்கம் பாகிஸ்தானில் இருக்கும் மினாரோ பழங்குடிகளும் இந்தக் கதைகளை அவர்களுடைய முன்னோர் களிடமிருந்து கேள்விப்பட்டிருக்கிறார்களாம். மர்மோட் அணிலுக்கும், மலை எறும்புக்கும் பாரசீகத்தில் கிட்டத்தட்ட ஒரே பொருள் என்பதால், ஹெரோடோட்டஸின் எழுத்துகளை மொழிபெயர்க்கும்போது குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விளக்கங்களையெல்லாம் ஏற்க மறுப்பவர்களும் இருக்கிறார்கள்.

ஹெரோடோட்டஸின் மற்றொரு கதையும் இதேபோல் ஒரு நீண்ட தேடுதலைத் தொடங்கி வைத்ததோடு, பலரை அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் தள்ளியது. பல்வேறு பழங்குடிகளை விவரித்துக்கொண்டே வரும் இடத்தில், ஒரு நாடோடிக்குழுவை (ஆங்கிலத்தில் ‘படேய்’) ஹெரோடோட்டஸ் அறிமுகப்படுத்துகிறார். மற்றவர்களைவிட அடர்த்தியான கறுப்பு நிறத்தில் இவர்கள் இருப்பார்களாம். இவர்களுடைய பழக்கவழக்கங்களெல்லாமே புதிரானவை. எடுத்துக்காட்டாக, அவர்கள் குழுவைச் சேர்ந்த ஆணொருவர் நோய் வாய்ப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு நெருக்கமான மற்றோர் ஆணுக்குச் சொல்லி அனுப்புவார்கள். அவர் வந்து ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு, நோயாளியை அதே இடத்தில் கொன்றுபோடுவார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 4 - தங்க எறும்புகளும் மனிதர்களை உண்பவர்களும்!

நோய்தானே வந்திருக்கிறது, ஏன் கொன்றாய் என்று கேட்டால், பிறகு என்ன செய்வதாம்? நான் கொல்லாமல் போனால் நோய் தீவிரமாகி அவர் உடலைப் பாழாக்கிவிடும் அல்லவா என்பார். நல்ல உடல் ஒன்று கண்முன்னால் வீணாவதை அவர் பொறுத்துக்கொள்ள மாட்டாராம். புரிகிறது அல்லவா? மனித உடல் உட்பட எல்லாவற்றையும் உண்ணும் வழக்கம் கொண்டவர்களாம் இவர்கள். ஒருவேளை நோயாளி பெண் என்றால் அவரை மற்றொரு பெண் வந்து கொல்வாராம். வயதில் மூத்தவர்களை அள்ளிச் சென்று பலிகொடுத்து அவர் உடலைப் புசிக்கும் சடங்கும் இருக்கிறதாம். ஆனால், வயது முதிரும்வரை யாரை அவர்கள் விட்டுவைக்கப்போகிறார்கள் என்று சொல்லி இக்கதையை முடிக்கிறார் ஹெரோடோட்டஸ்.

இத்தகைய சில கதைகளை விவரிக்கும்போது கவனத்தோடு அவர் ஒரு குறிப்பைக் கொடுத்துவிடுவார். ‘‘நான் நேரில் கண்டு எழுதிய குறிப்புகள் அல்ல இவை. இந்தியாவுக்குச் சென்று வந்த பயணிகள் சொன்னதைத்தான் நான் பதிவு செய்திருக்கிறேன்!’’

ஆனால், ஆய்வாளர்களால் இதை அவ்வளவு சுலபமாகக் கடந்து செல்ல முடியவில்லை. எறும்புகளைத் தேடியதைப்போல் கடந்த 200 ஆண்டுகளில் படேய் பழங்குடிகளையும் சிலர் தேடியிருக்கிறார்கள். சுமத்திரா தீவில் நர மாமிசம் சாப்பிடும் வழக்கம்கொண்ட பழங்குடிகள் இருப்பதாகப் பேச்சு வந்தது. சொல் ஆராய்ச்சியில் இறங்கிய சிலர், படேய் என்னும் பெயருக்கும் லடாக்குக்கும் தொடர்பிருப்பதாக வாதிட்டனர். இந்தியர்களாக இருக்க வாய்ப்பில்லை; ஒருவேளை துருக்கியப் பழங்குடிக் குழுக்களைச் சேர்ந்தவர்களில் ஒருவராக இருக்குமோ என்று அந்தப் பக்கம் போனார்கள் சிலர். இன்னும் சிலரோ இல்லை, இந்தியாவில்தான் நாம் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சாதித்தனர்.

பழங்குடிச் சமூக மக்கள் எண்ணற்ற சடங்குகளைக் கடைப்பிடிப்பவர்கள். விலங்குகளைப் பலியிடும் வழக்கம் அவர்களுக்கு உண்டு. வேண்டுதல் அல்லது பிற காரணங்களுக்காக கை அல்லது காலை வெட்டியெடுத்து அளிக்கும் வழக்கத்தைச் சிலர் பின்பற்றியதாகத் தெரியவருகிறது. இப்படி ஏதேனும் ஒரு காட்சியைப் பயணிகள் கண்டிருக்க வேண்டும் அல்லது, யாரிடமாவது கேள்விப்பட்டிருக்க வேண்டும். சுற்றிலும் ஆட்கள் சூழ்ந்திருக்க நடுவில் ரத்தத்தில் மிதக்கும் உடலைக் கண்டதும் அவர்களாகவே என்னென்னவோ கற்பனையில் இறங்கியிருக்க வேண்டும். தன் காதில் வந்து விழுந்ததைக் கேள்வியின்றி அப்படியே ஹெரோடோட்டஸும் பதிவு செய்திருக்க வேண்டும் என்கிறார்கள் வேறு சில ஆய்வாளர்கள். இது ஏற்கத்தக்கதாகவே இருக்கிறது. சுவையான கதைகளை அவர் தவறவிடுவதேயில்லை.

பழத்திலிருந்து தோன்றும் அதிசயத் துணி (பருத்தி) குறித்து ஓரிடத்தில் மாய்ந்து போயிருக்கிறார். எறும்புகள் மட்டுமல்ல, இந்தியாவின் பறவைகள், விலங்குகள் அனைத்தும் அளவில் பல மடங்கு பெரியவையாம். குதிரை மட்டுமே அவரிடமிருந்து பிழைத்திருக்கிறது. அது பெரிதல்ல. ஆனால் கிரேக்கத்தில் இருப்பதைவிட அளவில் சிறியதாம். இப்படிப் பல சுவையான குட்டித் தகவல்களை இந்தியா குறித்த பகுதியிலிருந்து திரட்டியெடுக்க முடியும். ஹெரோடோட்டஸ் ‘கண்டுபிடித்த’ இந்தியாவில் பிழைகளைச் சுட்டிக்காட்டுவது சுலபம். ஆனால், வியக்கவைக்கும் அளவுக்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா என்றால் என்னவென்பதை அவர் துல்லியமாக விவரித்துவிட்டார்.

இந்தியா என்பது பல்வேறு மக்கள் குழுக்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு உணவு வழக்கங்கள், பல்வேறு பருவ காலங்கள், பல்வேறு ஆடைகள், பல்வேறு பண்பாட்டுக் கூறுகள், பல்வேறு சடங்குகள் கொண்ட ஓர் அதிசயப் பெருநிலம். ஹெரோடோட்டஸின் இந்தப் பார்வையில் ஒரு சிறு தவற்றையாவது நம்மால் கண்டுபிடிக்க முடியுமா?

(விரியும்)