
ஹர்ஷருக்கு ஒரு சகோதரியும் இருந்தார். அவர் பெயர் ராஜ்யஸ்ரீ. இவரைக் கிழக்கில் மௌகாரி நாட்டைச் சேர்ந்த கிரஹவர்மன் என்பவருக்கு மணம் முடித்துக் கொடுத்திருந்தார்கள்
மெகஸ்தனிஸ் தொடங்கி பாஹியான் வரையிலான பயணிகளின் குறிப்புகளில் காணப்படும் பொதுத்தன்மைகளில் ஒன்று, அவர்கள் யாருமே எந்த இந்திய மன்னரையும் விரிவாக விவரித்து எழுதியதில்லை என்பதுதான். கடமைக்குப் பெயரைக் குறிப்பிடுவது அல்லது அதையும்கூடக் குறிப்பிடாமலேயே இருந்துவிடுவதுதான் அவர்கள் வழக்கம். எழுதக் கூடாது என்றில்லை... ஒவ்வொருவரும் இந்தியாவில் ஒவ்வொன்றைத் தேடிவந்தனர். அந்த ஒன்றில் மட்டும் கவனத்தைக் குவித்தனர். யுவான் சுவாங்கும் அவ்வாறு வந்தவர்தான் என்றாலும், இந்தியா அவரைப் பிடித்து அங்குமிங்கும் இழுத்தது. `அதைப் பார், இதைப் பார்’ என்று அவர் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. பௌத்தம் எழுதவந்தவர் சமகால வரலாற்றையும் சேர்த்தே எழுதத் தொடங்கினார்.
ஹர்ஷர் குறித்து நமக்குக் கிடைக்கும் முதன்மைச் சான்றாதாரங்கள் இரண்டு. ஒன்று, ஹர்ஷரின் அரசவைக் கவிஞரான பாணபட்டர் இயற்றிய ஹர்ஷசரித்திரம். இரண்டாவது, யுவான் சுவாங்கின் பதிவு. ஹர்ஷர், புஷ்யபூதி வம்சத்தைச் சேர்ந்தவர். இந்த வம்சத்தின் நான்காவது மன்னர் ஹர்ஷரின் தந்தையான பிரபாகரவர்தனர். குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டியதன் மூலம் ஆட்சிப் பரப்பை விரிவாக்கியவராக இவர் அறியப்படுகிறார். இன்றைய டெல்லிக்கு வட மேற்கிலுள்ள தானேஸ்வரத்தைத் தலைநகராகக்கொண்டு இவர் ஆட்சி நடைபெற்றுவந்தது.
ஹர்ஷருக்கு ஒரு சகோதரியும் இருந்தார். அவர் பெயர் ராஜ்யஸ்ரீ. இவரைக் கிழக்கில் மௌகாரி நாட்டைச் சேர்ந்த கிரஹவர்மன் என்பவருக்கு மணம் முடித்துக் கொடுத்திருந்தார்கள். திருமணம் என்பது அரச குடும்பங்களைப் பொறுத்தவரை ஓர் அரசியல் செயல்பாடும்கூட. எதிரி நாட்டை நட்பாக்கிக்கொள்ளவும், ராஜ்ஜிய உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளவும் அரச குடும்பங்கள் பெண் கொடுத்து, பெண்கொள்வது வழக்கம். ராஜ்யஸ்ரீயும் இதற்கு விதிவிலக்கல்ல. திருமணத்துக்குப் பிறகு கிரஹவர்மன் மௌகாரி நாட்டின் மன்னராக முடிசூட்டிக்கொண்டார். மௌகாரியின் தலைநகரமான கன்னோசிக்கு ராஜ்யஸ்ரீ குடிபெயர்ந்தார். சிவனையும் விஷ்ணுவையும் அதுவரை வழிபட்டுவந்த ராஜ்யஸ்ரீ கன்னோசியில் தழைத்திருந்த பௌத்தத்தால் ஈர்க்கப்பட்டு அந்த மதத்தைத் தழுவியதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், முதியவரான பிரபாகரவர்தனர் மரணமடைகிறார். அவருடைய மூத்த மகனும், ஹர்ஷரின் அண்ணனுமான ராஜ்யவர்தனர் 605-ம் ஆண்டு மன்னராகப் பதவியேற்றுக்கொள்கிறார். கிரஹவர்மனுக்கு ஓர் எதிரி இருந்தான். அவன் மாளவ நாட்டு மன்னனான தேவகுப்தன். மௌகாரி நாட்டுக்கும் மாளவத்துக்கும் இடையில் பல்லாண்டுகளாகத் தீராத பகை நீடித்துவந்தது. ஒருநாள் திடீரன்று தேவகுப்தன் படையெடுத்து வந்து மௌகாரியை ஆக்கிரமித்தான். போரில் கிரஹவர்மன் கொல்லப்படுகிறான். ராஜ்யஸ்ரீ கடத்திச் செல்லப்படுகிறார். செய்தி அறிந்ததும் ராஜ்யவர்தனர் தன் தங்கையை மீட்பதற்கு படையோடு கிளம்புகிறார். மாளவ நாட்டை வென்றாலும், வங்கத்தைச் சேர்ந்த கௌடா மன்னரால் வஞ்சகமாகக் கொல்லப்படுகிறார்.
நிலைகுலைந்துபோகிறார் ஹர்ஷர். மன்னர் இல்லாத மக்கள் தனித்துவிடப்பட்டதுபோல் உணர்கிறார்கள்; அஞ்சுகிறார்கள். இந்த அசாதாரணமான சூழலில் மூத்த அமைச்சர் சபையைக் கூட்டுகிறார். ‘நம் நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். முதிய மன்னர் இறந்துவிட்டார். அவர் மகனும் இறந்துவிட்டார். இளவரசர் மட்டுமே இப்போது இருக்கிறார். கனிவானவர், மனிதத்தன்மையோடு நடப்பவர். கடமையுணர்வுகொண்டவர். கீழ்ப்படிந்து நடப்பவர். குடும்பத்தால் நேசிக்கப்பட்டவர். எனவே, மக்களின் நேசத்தையும் அவரால் வெல்ல முடியும்.’
`அமைச்சர்களின் ஆதரவும், மக்களின் ஆதரவும் திரண்டுவந்தபோதும் ஹர்ஷர் பதவியை ஏற்கத் தயங்கினார்’ என்கிறார் யுவான் சுவாங். அவரால் முடிவெடுக்க முடியவில்லை. `இறைவாக்கு கேட்டு நடப்போம்’ என்று முடிவெடுத்து கங்கை நதிக்கரையில் போதிசத்துவரின் சிலைக்கு முன்பு அமர்ந்து உண்ணா நோன்பைத் தொடங்கினார். விடை கிடைத்தது. பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவர் வயது 16. அரியணையில் அமர்ந்ததும் முதலில் அவர் செய்தது, தன் சகோதரி ராஜ்யஸ்ரீயை மீட்டது. கணவனோடு உடன்கட்டை ஏறுவதற்குத் தயாராக இருந்தவரை மனம் மாற்றி வீட்டுக்கு அழைத்துவந்தார் ஹர்ஷர்.
`ஷர்ஷரின் விரிவான பழிவாங்கும் படலம் அதன் பிறகு தொடங்கியது’ என்கிறார் யுவான் சுவாங். அடுத்த ஆறு ஆண்டுகளுக்குப் போர் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தவில்லை அவர். சவாலாக நின்ற அண்டை நாட்டு மன்னர்கள், அச்சுறுத்திய எதிரிகள், கலகக்காரர்கள் என்று தேடித் தேடி வேட்டையாடினார். அக்கம் பக்கத்து நாடுகளையெல்லாம் கைப்பற்றினார். வட இந்தியாவின் பெரும்பகுதி ஹர்ஷரின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துசேர்ந்தது. ஒரு பக்கம் நிலப்பரப்பையும், இன்னொரு பக்கம் படை பலத்தையும் அவர் அதிகரித்துக்கொண்டே போனதை யுவான் சுவாங் கவனப்படுத்துகிறார். 60,000 யானைகளும் ஒரு லட்சம் குதிரைகளும் கொண்ட இரு பெரும் படைகள் ஹர்ஷர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
ஒரிஸ்ஸா (இன்றைய ஒடிசா), சிந்த், காஷ்மீர் என்று ஆறு ஆண்டுக்காலம் ரத்த ஆறு பாய்ந்திருக்கிறது. 612-ம் ஆண்டுவாக்கில், முழுமையான வட இந்தியாவின் பேரரசராக ஹர்ஷர் அறியப்பட்டிருந்தார். அஸ்ஸாம், குஜராத் போன்ற நிலங்களை ஆண்டுவந்த மன்னர்களும்கூட ஹர்ஷரின் தலைமையை ஏற்றுக்கொண்டனர். சினம் தணிந்ததும், வம்சத்தின் பெருமிதம் நிலைநாட்டப்பட்டதும், போதும் போதுமெனும் அளவுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதும் ஹர்ஷர் ஒரு காரியம் செய்தார். தன் வாளைத் தூக்கிப்போட்டார். `அடுத்த 30 ஆண்டுகள் அவர் ஆட்சியில் முழு அமைதி நிலவியது’ என்கிறார் யுவான் சுவாங்.
இந்தப் பெரும் மாற்றத்துக்கு அவர் தழுவிய பௌத்தமும் ஒரு முக்கியமான காரணம். ஹர்ஷர் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை நிர்வாகத்துக்கும், மூன்றில் இரண்டு பங்கு நேரத்தை மதப் பணிகளுக்கும் செலவிட்டதாக யுவான் சுவாங் பதிவுசெய்கிறார். மதப் பணி என்பதை பௌத்தம் பரப்புதல் என்று மட்டும் சுருக்கிக்கொள்ள வேண்டாம். தினமும் ஆயிரம் புத்த பிக்குகளுக்கும் 500 பிராமணர்களுக்கும் உணவளிப்பது அவர் வழக்கமாக இருந்திருக்கிறது. சத்திரங்களை அமைக்கும்போதும் சரி, இன்னபிற வசதிகளைச் செய்துகொடுக்கும்போதும் சரி... பௌத்தர்களை மட்டும் மனதில்கொள்ளாமல் எல்லாச் சமயத்தினருக்கும், எல்லாமும் கிடைப்பதற்கு வழிவகுத்திருக்கிறார். அசோகர் வழியில், கனிஷ்கர் வழியில் ஹர்ஷர் பயணம் செய்திருப்பதாகத் தெரிகிறது.
‘மடாலயங்கள் எழுப்புவது தொடங்கி, புகழ்பெற்ற நாலந்தா பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவிகள் அளிப்பதுவரை ஹர்ஷரின் பௌத்தப் பணிகள் மெச்சத்தக்கவையாக இருந்தன’ என்று மனம் திறந்து பாராட்டுகிறார் யுவான் சுவாங். இந்தியா முழுவதிலுமிருந்து பிக்குகளைத் திரட்டி, பௌத்தக் கோட்பாடுகளை விவாதிப்பவராகவும், தத்துவார்த்தரீதியில் பௌத்தத்தை வலுப்படுத்துபவராகவும் திகழ்ந்திருக்கிறார். அசோகர்போல் ஆயிரக்கணக்கான தூண்களை இந்தியாவெங்கும் எழுப்பியிருக்கிறார். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை எல்லா ஏழைகளையும் திரட்டி உதவிகள் செய்வதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்.
`ஹர்ஷரை எல்லாத் தரப்பினரும் நேசிக்கிறார்கள்’ என்கிறார் யுவான் சுவாங். ஏடுகளைக் கற்றறிந்தவர்கள் ஹர்ஷரைத் தங்களில் ஒருவராகக் காண்கிறார்கள் என்றால், ஏதுமற்றவர்கள் அவரை ஒரு மீட்பராகக் காண்கிறார்கள். அறிவோடு பரிவும் இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது. அதனால்தான் ‘நல்லொழுக்கத்தின் சூரியன்’ என்று ஹர்ஷரை அழைத்து மகிழ்கிறார் யுவான் சுவாங்.
அவ்வப்போது நகர்வலம் செல்லும் வழக்கம் ஹர்ஷருக்கு இருந்திருக்கிறது. சிறு, குறு மன்னர்களை வரவழைத்துச் சந்திப்பதும் அவர்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம் என்று ஹர்ஷர் கருதியிருக்கிறார். ‘சர்வபள்ளிப்பட்டி’ என்றொரு பதவி இருந்தது தெரிகிறது. `கிராமங்களுக்குத் தலைமை தாங்குபவர்’ என்பது இதன் பொருள். `மற்ற பதவிகளைப் பொறுத்தவரை குப்தர் காலத்து நடைமுறையே பின்பற்றப்பட்டிருக்கலாம்’ என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.
மக்கள் வரிச்சுமையால் தத்தளிக்கக் கூடாது என்பதில் ஹர்ஷர் கவனமாக இருந்ததாக யுவான் சுவாங் எழுதுகிறார். ஒவ்வொரு விவசாயியும் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை மன்னருக்கு அளிக்க வேண்டும். `ஹர்ஷர், வைசியப் பிரிவைச் சேர்ந்தவர்’ என்கிறார் யுவான் சுவாங். இதை உறுதி செய்யும் சான்றுகள் எதுவுமில்லை. கிடைத்திருக்கும் கல்வெட்டு ஆதாரங்களின்படி புஷ்யபூதி வம்சத்தினர் சூரியனை வழிபட்டதாகத் தெரிகிறது. ஹர்ஷருக்கு முன்பாக அவர் அண்ணன் ராஜ்யவர்தனர் புத்தரை வழிபட்டிருக்கிறார். சிவனை வழிபட்டு வந்தபோதே ஹர்ஷருக்கு பௌத்தத்திலும் நாட்டம் ஏற்பட்டிருக்கிறது.

ஹர்ஷரின் கலைத்திறன் குறிப்பிடத்தக்கது. மூன்று நாடகங்களை ஹர்ஷரே எழுதியிருப்பதாகத் தெரிகிறது. அவை ரத்னாவளி, ப்ரியதர்ஷிகா, நாகநந்தா. முதலிரண்டும் நகைச்சுவைக் காதல் கதைகள். நாகநந்தா, ஒரு போதிசத்துவரைப் பற்றியது. இவைபோக, ஓர் இலக்கண நூலையும், இரண்டு சூத்திரங்களையும் இயற்றியிருக்கிறார். ஹர்ஷரே தன் கைப்பட சில கல்வெட்டு களை உருவாக்கியதாகவும் தெரிகிறது. இன்றைய உத்தரப்பிரதேசத்திலுள்ள பான்ஸ்கரா கல்வெட்டில் ஹர்ஷரின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது. அவருடைய அழகிய, ஓவிய பாணியிலான கையெழுத்தையும் அதில் காண முடிகிறது. `ஹர்ஷர் ஒரு தேர்ந்த வீணை இசைக் கலைஞரும்கூட’ என்கிறார் பாணபட்டர். கவிதைகளிலும் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. பாணபட்டர் போக, மயூரா என்னும் கவிஞரும் ஹர்ஷரின் அவையில் இடம் பெற்றிருக்கிறார்.
இந்தியாவின் தலைசிறந்த மன்னர்களில் ஒருவராக ஹர்ஷரை நிலைநிறுத்துகிறார் யுவான் சுவாங். ஹர்ஷர் மீது அவர் கொண்டிருந்த பேரார்வத்தை அவருடைய பதிவுகள் நமக்கு வெளிப்படுத்தி விடுகின்றன. ஒருதலை ஆர்வமாக இது நின்றுவிடவில்லை. யுவான் சுவாங்கின் புகழ் மெல்ல மெல்லப் பரவியதைத் தொடர்ந்து, ‘யார் இந்தச் சீனப் பயணி?’ என்று ஹர்ஷரும் ஆர்வத்தோடு விசாரித்திருப் பதாகத் தெரிகிறது. `கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பது சரிதான் போலிருக்கிறது!
(விரியும்)