மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 41 - நாளந்தா என்றோர் உலகம்

நாளந்தா
பிரீமியம் ஸ்டோரி
News
நாளந்தா

மரியாதைக்குரியவர் கண்ணசைத்ததும் ஓர் இருக்கை கொண்டுவரப்பட்டது. யுவான் சுவாங் அமர்ந்தார்.

சீனாவிலிருந்து புறப்பட்டு எட்டாண்டுகள் கழிந்த பிறகே, புத்தரோடு தொடர்புடைய நான்கு புனித இடங்களையும் யுவான் சுவாங்கால் தரிசிக்க முடிந்தது. புத்தர் பிறந்த லும்பினி, போதி மரத்தடியில் அமர்ந்து தியானம் புரிந்த புத்தகயா, முதல் போதனையை நிகழ்த்திய சாரநாத், பரி நிர்வாணம் அடைந்த குஷிநகர் ஆகியவையே அந்த நான்கு இடங்கள்.

இவற்றுள் சாரநாத் இந்துக்களின் புண்ணிய பூமியான வாரணாசியில் அமைந்திருந்தது. புத்தரைக் காண வந்தவரை முதலில் சிவனே வரவேற்றிருக்கிறார். ஆனால் யுவான் சுவாங் சங்கடப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, நூறடி உயரத்தில் கங்கை நதிக்கரையில் எழுந்தருளியிருந்த சிவனை ஆர்வத்தோடு கண்டு ரசித்திருக்கிறார். `பார்ப்போரைக் கவர்ந்திழுக்கும் பிரமாண்டமான சிலை’ என்றும் வர்ணிக்கிறார். அவர் கணக்கின்படி வாரணாசியில் நூறு தேவ கோயில்கள் அமைந்திருக்கின்றன. பத்தாயிரத்துக்கும் அதிகமான இந்துக்கள் வாழ்ந்துவந்தனர். `இறை நம்பிக்கையற்ற பலரும் வீதிகளில் சுற்றித் திரிகின்றனர். உடல் முழுக்க சாம்பலைப் பூசிக்கொண்டும், ஆடைகூட அணியாமலும் சிலர் உலா வந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன்’ என்கிறார்.

புத்தகயாவிலிருந்து 60 மைல் தொலைவில் இன்றைய பீகாரில் (அன்றைய மகதம்) அமைந்திருந்தது நாளந்தா. யுவான் சுவாங் குறித்துக் கேள்விப்பட்டு அங்கிருந்த நான்கு பிக்குகள் கிளம்பி வந்து அவரை வரவேற்றனர். நாளந்தாவின் அழைப்பை புத்தரின் அழைப்பாகவே ஏற்றுக்கொண்டார் யுவான் சுவாங். நாளந்தாவில் பத்தாயிரம் பேர் திரண்டுவந்து அவரை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ‘மரியாதைக்குரியவர்’ என்று அவர்கள் அழைத்த ஒருவரிடம் யுவான் சுவாங்கை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர் பெயர் சிலபத்திரா. ஆனால் மறந்தும் பெயரைக் குறிப்பிடக் கூடாது என்று அறிவுறுத்தியதோடு, அவருக்கு எப்படி மரியாதை செய்யவேண்டும் என்பதையும் விரிவாக விளக்கினார்கள்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 41 - நாளந்தா என்றோர் உலகம்

சீனப் பேரரசரைச் சந்திக்கச் செல்வதுபோல் பய பக்தியோடு நுழைந்து, குழந்தைபோல் கைகளாலும் முழங்கால்களாலும் தவழ்ந்து சென்று, தலை தரையில்படும்படி விழுந்து வணங்கியிருக்கிறார். மரியாதைக்குரியவர் கண்ணசைத்ததும் ஓர் இருக்கை கொண்டுவரப்பட்டது. யுவான் சுவாங் அமர்ந்தார். “சொல்லுங்கள். நீங்கள் யார்... உங்களுக்கு என்ன வேண்டும்?”

“தங்களிடம் யோக மரபுகள் கற்பதற்காக சீனா எனும் தேசத்திலிருந்து வந்திருக்கிறேன்” என்று யுவான் சுவாங் அடக்கத்தோடு அறிவித்தார். உடனே மரியாதைக்குரியவரின் கண்களிலிருந்து பொலபொலவென்று நீர் பெருக ஆரம்பித்துவிட்டது. அவர் உணர்ச்சிவசப்பட்டதற்கான காரணத்தை அருகிலிருந்தவர்கள் விளக்கினார்கள். மரியாதைக்குரியவரை ஒரு பெரும் நோய் தாக்கியிருக்கிறதாம். மூன்றாண்டுகளுக்கு முன்பு நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, வாழ்வை முடித்துக்கொள்ளும் மனநிலைக்கு அவர் வந்துவிட்டாராம். வடக்கிருந்து உயிர் துறக்கும் முடிவை அவர் எடுத்த நேரம் பார்த்து ஒரு கனவு வந்திருக்கிறது. மூன்று போதிசத்துவர்கள் தோன்றியிருக்கிறார்கள். முற்பிறவியில் செய்த ஊழ் காரணமாகவே இந்நோய் உங்களுக்கு வந்திருக்கிறது. உயிர் துறப்பது சரியான முடிவல்ல. யோக வழிமுறைகள் குறித்து அறியாத ஒருவர் உங்களிடம் வந்து `எனக்குக் கற்றுக்கொடுங்கள்’ என்று வேண்டி நிற்பார். அப்போது அவருக்குப் பாடம் எடுத்தால் உங்கள் நோய் நீங்கும்!

கனவைக் கேட்டதும் யுவான் சுவாங் உணர்ச்சிக்கடலில் மூழ்கிவிட்டார். பிறகென்ன? நாளந்தாவில் நான்காவது மாடியில் யுவான் சுவாங்குக்கு உடனே அறை ஒதுக்கிக்கொடுக்கப் பட்டது. யுவான் சுவாங் வருவதற்கு குறைந்தது 7 நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அது இயங்கி வந்திருக்க வேண்டும். இருந்தாலும் நாளந்தாவில் தங்கிப் படிப்பது எப்படியிருக்கும் என்பதை யுவான் சுவாங்கின் குறிப்புகளிலிருந்தே நம்மால் விரிவாக அறிந்துகொள்ள முடிகிறது. நாளந்தாவைக் காண முடியாத நம் ஏக்கம் அவர் குறிப்புகளை வாசிக்கும்போது ஓரளவுக்குக் குறையலாம். அதிகரிக்கவும் செய்யலாம்.

சுற்றிலும் செங்கல் சுவர். ஒரு கதவைத் திறந்து நடந்தால் நேராகப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றுவிடலாம். வழிபடவேண்டுமானால் மையத்துக்குச் செல்ல வேண்டும். அங்கேதான் எட்டு மடாலயங்கள் ஒரு தொகுப்பாக அமைந்துள்ளன. உள்ளே நடந்து செல்லும்போது அழகிய, உயரமான கோபுரங்களை நீங்கள் நிச்சயம் காண்பீர்கள். பல்கலைக்கழகக் கட்டடத்தின் உயரம் என்னவென்று தெரியவில்லை. யுவான் சுவாங் தங்கியிருந்தது நான்காம் மாடியில். அறையிலிருக்கும் ஜன்னலைத் திறந்தால் குளிர்ந்த காற்று வருடிக்கொடுக்கும். மேகங்கள் மிதந்து மிதந்து வருவதையும் போவதையும் காணலாம். பனி மூட்டமாக இருக்கும்போது, அருகிலிருக்கும் கோபுரம்கூடப் புகையில் கரைந்துவிடுமாம். மேகங்கள் எப்படிக் கலைந்தும் இணைந்தும் விதவிதமான உருவங்களைத் தோற்றுவிக்கின்றன என்பதைக்கூடக் கூர்ந்து கவனித்து மகிழ்ந்திருக்கிறார் யுவான் சுவாங்.

மொத்தம் பத்து குளங்கள். ஒவ்வொன்றும் பளிங்குபோல் தெளிந்து இருக்கும். மயக்கும் நீலத் தாமரையை அடர் சிவப்பு கனகாம்பரம் அடர்த்தியாகச் சூழ்ந்திருக்கும். பலவிதமான தாவரங்கள் வளாகம் முழுக்கச் செழித்திருக்கும். செம்மஞ்சள் ஆடை தரித்த பிக்குகள் எப்போதும் எங்காவது வருவதும்போவதுமாக இருப்பார்கள். அவர்களுடைய தங்குமிடம் எவ்வாறு இருக்கும், அவர்களுடைய இருப்பிடத்துக்கான முகப்பு எப்படி இருக்கும், மேற்கூரை எவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்பதையெல்லாம் துல்லியமாக வர்ணிக்கிறார் யுவான் சுவாங். மாணவர்களுக்கு உரை நிகழ்த்த எட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் ஐந்து கோயில்கள். மாணவர்களும் ஆசிரியர்களும் தங்குவ தற்கான வசதி தனித்தனியே செய்யப்பட்டிருந்தன. நூலகங்கள் அகண்டு விரிந்திருந்தன. தக்க இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் நின்றுகொண்டிருந்தன.

வளாகத்துக்குள் 300 அடி உயரத்தில் ஒரு பெரிய கோயில் அமைந்திருந்ததாகச் சொல்கிறார் யுவான் சுவாங். புத்தகயாவிலுள்ள மகாபோதி கோயிலை நினைவுபடுத்தும் வகையில், இக்கோயில் கட்டப்பட்டிருப்பதாகவும் அவர் சொல்கிறார். இன்று அதன் சிதிலங்களையே நம்மால் காண முடிகிறது. பித்தளையால் உருவான கோயிலொன்றை ஹர்ஷர் அங்கே உருவாக்கியதாகவும் குறிப்புகள் உள்ளன. யுவான் சுவாங் அதையும் கண்டிருக்கலாம். ஆனால் எழுதவில்லை.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 41 - நாளந்தா என்றோர் உலகம்

நாளந்தா வளாகத்தை ஆதரித்தவர்களில் முதன்மையானவர் ஹர்ஷர். கிட்டத்தட்ட 100 கிராமங்களை ஒதுக்கி, அவற்றிலிருந்து கிடைக்கும் வருமானத்தை நாளந்தா பெற்றுக்கொள்ளுமாறு அவர் ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கிராமங்களிலிருந்து ஒவ்வொரு நாளும் 200 விவசாயக் குடும்பங்கள் இணைந்து அரிசி, வெண்ணெய், பால் ஆகியவற்றைக் குறிப்பிடத்தக்க அளவில் திரட்டியெடுத்துச் சென்று நாளந்தாவுக்கு அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டிருந்தனர். துணிமணிகள், உணவு, பாய் படுக்கை, மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வழங்குவார்கள். நாளந்தாவிலுள்ள அனைவருடைய தேவைகளும் இவ்வாறு திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டன. தனக்கு என்னவெல்லாம் வழங்கப்பட்டன என்பதை யுவான் சுவாங் பகிர்ந்துகொள்கிறார். நல்ல, சத்தான உணவு. நீளமான, நறுமணமுள்ள மகாஷாலி அரிசி அளந்து கொடுக்கிறார்கள். மகதத்தில் மட்டுமே இந்த வகை அரிசி விளைகிறது. நல்ல நிறமும் சுவையும்கொண்டிருக்கிறது. நெய் தருவார்கள். மென்று, சுவைக்க 120 வெற்றிலைகள் அளிக்கப்பட்டன. ஏலக்காய் கிடைத்தது.

`ஒவ்வொரு நாளும் காலை மணியோசை கேட்கும். எல்லோரும் குளிக்க ஆரம்பிப்பார்கள். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கிலும், சில சமயம் ஆயிரக்கணக்கிலும்கூட பிக்குகள் குளத்துக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறேன்’ என்கிறார் யுவான் சுவாங். பத்து குளங்களும் நிரம்பி வழியுமாம். குளித்து முடித்ததும் வழிபாடு. அவரவர் அறையிலும் வழிபடலாம். கூட்டாகத் திரண்டும் வழிபடலாம். புத்தர், போதிசத்துவர், தாரா, ஹாரிதி போன்றோரை வழிபடுவது வழக்கம். ஊதுவத்தி, மலர்கள் ஆகியவற்றைக்கொண்டு வழிபடுவார்கள். ஹாரிதி சீன பௌத்தர்கள் விரும்பும் பெண் கடவுள். ஹாரிதிக்குக் குழந்தைகளை மிகவும் பிடிக்கும். குழந்தைகளைக் காக்கும் கடவுளாக மாறுவதற்கு முன்பு குழந்தைகளை விழுங்கும் பூதமாக ஹாரிதி இருந்திருக்கிறார். பௌத்தம்தான் அவரை மென்மைப்படுத்தி, கடவுளாக மாற்றியதாம். ஹாரிதியை ஏற்றுக்கொண்ட பிக்குகள் மட்டும் மலர்களுக்கு பதிலாக உணவுப்பொருள்கள் படைத்து வணங்குவது வழக்கம்.

வழிபாடு முடிந்ததும் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும். அங்கே ஆசிரியர்கள் முறை வைத்துக்கொண்டு உரை நிகழ்த்துவார்கள். பிறகு உணவு நேரம். அதற்கும் பிரத்தியேக மணியோசை உண்டு. பொதுச் சமையலறையோ உண்பதற்கான பொது இடமோ இருப்பதுபோல் தெரியவில்லை. பிக்குகள் தங்கியிருக்கும் இடத்துக்கே உணவு தேடிவரும். மீண்டும் வகுப்பறை. படிக்கலாம், விவாதிக்கலாம், உரைகள் கேட்கலாம். அதன் பிறகு வழிபாட்டு நேரம். தினமும் மூன்று முறை தொழ வேண்டும். ஒவ்வொரு முறையும் பொதுவிடத்தில் கூடுவது கடினம் என்பதால், மாணவர்களைத் தேடி வந்து பிக்குகள் உச்சாடனங்கள் செய்வார்கள். மாணவர் கூடியிருக்கும் ஒவ்வோர்அரங்குக்குள்ளும் சென்று ஐந்து சுலோகங்களைச் சத்தம் போட்டு இசைப்பார்கள். பணியாளர்களும் பாலகர்களும் நறுமணப் பொருள்களையும், மலர்களையும், விளக்குகளையும் ஏந்திக்கொண்டு பிக்குகளைப் பின்தொடர்வார்கள். இரவிலும் மணியோசை கேட்கும். முதல் மணியோசையும் இறுதி மணியோசையும் தியானத்துக்கும் உச்சாடனத்துக்கும் ஆனவை. இடைப்பட்ட நேரத்தில் உறங்கலாம்.

பெரும்பாலான பிக்குகளுக்கு தலா இரண்டு பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். யுவான் சுவாங்குக்கும் இந்த வசதி கிடைத்தது. வளாகத்துக்குள் அங்குமிங்கும் செல்வதற்குப் பல்லக்கு அளிக்கப்பட்டது. வெளியில் பயணம் மேற்கொள்வதற்கு வசதியாக ஒரு யானையும் அவருக்கென்றே ஒதுக்கப்பட்டது. சீனாவிலிருந்து வந்திருக்கும் பிக்கு என்பதால், யுவான் சுவாங்குக்கு இவையெல்லாம் கூடுதலாகக் கிடைத்தன. நாளந்தாவில் இருந்த ஆயிரக்கணக்கானவர்களில் பத்துப் பேருக்கு மட்டுமே இத்தகைய சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டன என்பதையும் கவனிக்க வேண்டும்.

(விரியும்)