மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 42 - ஆசானும் மாணவனும்

ஆசானும் மாணவனும்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆசானும் மாணவனும்

நாளந்தா என்பது மூன்று சம்ஸ்கிருதச் சொற்களின் கூட்டுப்பெயர். பொருள், அறிவெனும் பரிசைத் தடையின்றி அள்ளிக்கொடுத்தல்.

எந்த நோக்கத்தோடு யுவான் சுவாங் சீனாவிலிருந்து கிளம்பினாரோ அந்த நோக்கம் நாளந்தாவில் நிறைவேறியது. மரியாதைக்குரிய சிலபத்திரா எடுத்த வகுப்புகளில், தன்னை முற்றிலுமாகப் பறிகொடுத்தார் யுவான் சுவாங். என்னுடைய வாழ்நாள் ஆசானை நான் கண்டுகொண்டேன் என்று சொல்லிச் சொல்லி மாய்ந்துபோனார். காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் சென்று இந்தியத் தத்துவ ஞானிகளோடு சில நூற்றாண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிறைவு அவருக்கு ஏற்பட்டது. அவ்வளவு அற்புதமாகப் பண்டைய இந்தியத் தத்துவங்களைச் சாறு பிழிந்து யுவான் சுவாங்குக்கு ஊட்டியிருக்கிறார் சிலபத்திரா. சில குறிப்புகள்படி அப்போது அவர் வயது 104!

எத்தனையோ அறிஞர்களைச் சந்தித்திருக்கிறார். எத்தனையோ பேரிடம் கற்றிருக்கிறார். இருந்தாலும் சிலபத்திராவைத் தன்னுடைய முதன்மை ஆசானாக யுவான் சுவாங் வரித்துக்கொண்டது ஏன்? அவர் அளிக்கும் விளக்கம் இது. `நான் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவன். எனவே, அதை மட்டும் போதிக்கிறேன் என்று அவர் ஒருபோதும் சொன்னதில்லை. பௌத்தத்தில் எவ்வளவு பிரிவுகள் உள்ளனவோ அனைத்தையும் அவர் கற்றுத் தேர்ந்திருந்தார். அனைத்திலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார். வேறுபாடு பாராட்டாமல் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அவர் எங்களோடு பகிர்ந்துகொண்டார். குழப்பமின்றி, தெளிவாக விரிவுரையாற்றுவார். நாத்திகர்களின் வாதங்களைக்கூட அழகாக அவர் எடுத்துச் சொன்ன விதம் என்னைக் கவர்ந்தது. ஐயமின்றி இந்தியாவின் ஆன்மிகத் தலைவர் அவரே.’

என்னென்ன தலைப்புகளில் வகுப்புகள் எடுக்கப்பட்டன என்பதை யுவான் சுவாங் விவரிக்கிறார். முதலில் பௌத்தம். மஹாயானத்தோடு பதினெட்டு வகை ஹீனயானமும் கற்றுக்கொடுக்கப்பட்டன. வேதம், தர்க்கவியல், இலக்கணம், இலக்கியம், பண்டைய இந்திய தத்துவம், மருத்துவம், கணிதம், வானியல் போன்றவையும் விரிவாக அறிமுகப்படுத்தப்பட்டன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வகுப்புகள். உலகின் பல மூலைகளிலிருந்தும் மாணவர்களும் அறிஞர்களும் வகுப்பறைகளில் திரண்டிருந்தனர். எல்லோரும் பௌத்தர்கள் என்றும் சொல்லிவிட முடியாது.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 42 - ஆசானும் மாணவனும்

முன்பே தெரியும் என்றாலும், நாளந்தாவில் சம்ஸ்கிருதத்தை மேலதிகம் ஆழமாக யுவான் சுவாங் கற்றுத்தேர்ந்தார். `அறிவை வசப்படுத்த வேண்டுமானால், முதலில் மொழியை வசப்படுத்துங்கள்’ என்கிறார் அவர். இந்தியர்களின் அறிவுக்கூர்மை அவர்களுடைய மொழிக்கூர்மையால் வந்த ஒன்று என்பது அவர் நம்பிக்கை. சம்ஸ்கிருதத்தையும் சீன மொழியையும் அருகருகில் நிறுத்தி ஒப்பிட்டு ஆராய்ந்தார். அந்த அணுகுமுறையை அப்படியே நீட்டித்து இந்திய பௌத்தத்துக்கும், சீன பௌத்தத்துக்கும் இடையிலான ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் அலசத் தொடங்கினார். இந்த ஒப்பீடு ஒரு பெரிய திறப்பை அவருக்கு அளித்தது. நாளந்தா, ஏடுகளை மட்டும் அவருக்கு அறிமுகப்படுத்தவில்லை. ஒரு ஏட்டை எப்படிப் பார்வையிட வேண்டும், எப்படி வாசிக்க வேண்டும், வாசித்ததை எவற்றோடெல்லாம் தொடர்புபடுத்தி அலச வேண்டும், அலசியதிலிருந்து எதையெல்லாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அனைத்தையும் நாளந்தா அவருக்குக் கற்றுக்கொடுத்தது. ஒரேயொரு தங்கக்காசு கிடைக்குமா என்று ஏங்கியவரின் கைகளைப் பிரித்து ஒரு புதையல் பானையைத் திணித்தது நாளந்தா.

நாளந்தா என்பது மூன்று சம்ஸ்கிருதச் சொற்களின் கூட்டுப்பெயர். பொருள், அறிவெனும் பரிசைத் தடையின்றி அள்ளிக்கொடுத்தல். இதைவிடவும் பொருத்தமான பெயர் இருந்துவிட முடியாது என்று நினைத்துக்கொண்டார் யுவான் சுவாங். இளையவர், மூத்தவர் என்று பேதம் பிரிக்காமல் எல்லோரும் எல்லோரோடும் விவாதித்தார்கள். ஒரு கேள்வியை யார் எழுப்புகிறார், அவர் வயது என்ன, பின்னணி என்ன என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்தக் கேள்விக்குக் கூட்டாக விடை தேடினார்கள். எல்லோரும், எல்லோருக்கும் கற்றுக்கொடுத்தார்கள். எல்லோரும், எல்லோரிடமிருந்தும் கற்றுக்கொண்டார்கள்.

ஐம்பது புத்தகங்கள் கற்றவர்கள் அனைவரிலும் சிறந்தவர்களாகக் கருதப்பட்டு மேல்நிலையில் வைக்கப்பட்டனர். யுவான் சுவாங் வந்தபோது ஒன்பது பிக்குகள் மட்டுமே உயர்நிலை மாணவர்களாக இருந்தனர். விரைவில் யுவான் சுவாங்குக்கும் அந்தச் சிறு குழுவில் இடம் கிடைத்தது. அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டு இந்தியாவின் நீள அகலங்களையெல்லாம் சுற்றித் திரிந்த பிறகு மீண்டும் நாளந்தாவுக்கு 642-ம் ஆண்டு இறுதியில் திரும்பிவந்தார் யுவான் சுவாங். முதல் வருகையின்போது அவர் மாணவர். இப்போது அவர் ஆசிரியர். எந்த வகுப்பறையில் அமர்ந்து கற்றாரோ அங்கே சென்று திரண்டிருந்த மாணவர்களுக்குப் பேருரை ஆற்றினார். கற்பித்தலிலும் சிறந்து விளங்கியதால், நூலொன்று எழுதுங்களேன் என்று கேட்டுக்கொண்டார்கள். போதித்தல் தொடர்பாக 3,000 செய்யுள் பத்தி அளவில் ஏடொன்றை எழுதினார். நாளந்தாவின் பாராட்டுகளை அள்ளிக்குவித்துக்கொண்ட அந்த ஏட்டை இன்று காண முடியவில்லை.

இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்டவராக மட்டுமின்றி, இந்தியாவுக்குத் தன்னால் இயன்றதை அளித்தவராகவும் யுவான் சுவாங் இன்று அறியப்படுகிறார். சீனாவில் கிடைக்காத ஏடுகளைக் கண்டறிந்து சுமந்துசென்றதைப் போலவே இந்தியர்கள் அறிந்திராத சீன ஏடுகள் எவையென்பதைக் கூர்ந்து கவனித்து அவற்றை அறிமுகப்படுத்தினார். அந்தவகையில் இருபெரும் நிலங்களின் பண்பாட்டுக் கலப்புக்கும், அறிவுப் பரிமாற்றத்துக்கும் யுவான் சுவாங் பங்களித்திருக்கிறார்.

தர்க்கங்களில் ஓடோடிச் சென்று கலந்து கொள்வார். தோற்க நேர்ந்தால் கவலையேகொள்ள மாட்டார். `ஆம், இவர் என்னை வென்றுவிட்டார். சீன பிக்கு தோற்றுப்போய்விட்டார்’ என்று ஒப்புக்கொள்வார். அடக்கமானவராக, எல்லோருக்கும் பிடித்தமானவராக, அமைதியானவராக இருந்தார். `ஆண்டுக்கணக்கில் இருந்துவிட்டேன். நான் கிளம்பட்டுமா?’ என்று அவர் விண்ணப்பித்துக்கொண்டபோது `அதெப்படி நீங்கள் அப்படிச் சொல்லலாம்...’ என்று அங்கிருந்தவர்கள் கிட்டத்தட்ட சண்டைக்கு வந்துவிட்டார்கள். `சீனா மோசமான நிலம். நீங்கள் அங்கிருக்க வேண்டியவரே இல்லை தெரியுமா?’ என்றெல்லாம்கூட வாதம்புரிந்து பார்த்தார்கள்.

யுவான் சுவாங்கின் மனதை மாற்ற முடியாது என்பது தெரிந்ததும், அவரைச் சிலபத்திராவிடம் அழைத்துச் சென்றார்கள். ஆசானின் சொல்லைக்கூட மீறிவிடுவாரா என்ன, அதையும் பார்த்துவிடுவோம்! ஆனால். ஆசான் தன் முன்னால் குழைவோடு நின்ற சீனரின் தவிப்பைப் புரிந்துகொண்டார். நாளந்தா ஒரு மகத்தான பூஞ்சோலையாக இருக்கலாம். யுவான் சுவாங்கோ துடிதுடிப்பான தேனீ. இதையும் கடந்து அவர் பறக்க வேண்டும். மேலும் பல சோலைகளில் தங்கி, தேன் திரட்ட வேண்டும். அவர் பாதையை முடக்குவது சரியல்ல என்பது அவருக்குத் தெரிந்தது. `போதிசத்துவரின் விருப்பம் எதுவோ அதுவே நிறைவேறட்டும். யுவான் சுவாங்கை யாரும் தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டாம்’ என்று அறிவித்ததோடு, மனமார தன் மாணவரை வாழ்த்தி, அறிவுறுத்தி வழியனுப்பிவைத்தார்.

சிலபத்திரா மரணப்படுக்கையில் இருந்தபோது யுவான் சுவாங் பயணத்தில் இருந்தார். `உங்களைப் பற்றி அவர் இப்போதும் விசாரிக்கிறார்’ என்று பிரதான பிக்கு ஒருவர் அவருக்கு எழுதியபோது யுவான் சுவாங் துடிதுடித்துப்போனார். `என் இதயத்தை யாரோ பிளந்ததுபோல் இருக்கிறது’ என்று கண்ணீரோடு பதில் அனுப்பினார். `துக்கப் பெருங்கடலில் கப்பல் கவிழ்ந்ததுபோல் தத்தளிக்கிறேன். இந்த வலியிலிருந்து நான் எப்படி மீளப்போகிறேன்! மீட்சி என்றொன்று உண்டா! மலைபோல் ஓங்கி உயர்ந்தவர் என் ஆசான். அவரைப் போன்ற தனித் தன்மைமிக்க ஓர் ஆசிரியரை இனி எங்கே நான் காண்பேன்! புத்தரின் பண்புகளையும், தத்துவ ஞானி நாகார்ஜுனரின் அறிவுக்கூர்மையும் இணைந்த பேரதிசயம் அல்லவா அவர்!

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 42 - ஆசானும் மாணவனும்

உண்மை தேடி நான் இந்தியா வந்தபோது நான் அறிவற்றவனாக இருந்தேன். அன்று என்னைக் கண்டவர்கள் சராசரி மனிதன் என்றே என்னை எடைபோட்டிருப்பார்கள். அது சரியான மதிப்பீடே. அப்படிப்பட்ட எனக்கு ஆசானைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்ததை என்னவென்று சொல்ல! அவருடைய அரவணைப்பு அல்லவா என்னை மாற்றியமைத்தது! அவரல்லவா என்னை உருவாக்கியவர்!

நான் விடைபெறுவதற்கு முன்பு அவர் எனக்கு ஓதிய அறிவுரைகள் இன்னமும் என் செவிகளில் பசுமையாக நிறைந்திருக்கின்றன. இவர் மேலும் மேலும் பல ஆண்டுகள் நீடித்து வாழ வேண்டும். அறியாமை இருள் அகற்றும் வெளிச்சத்தை அள்ளி அள்ளி இவ்வையகத்தின்மீது பாய்ச்ச வேண்டும் என்று விரும்பினேன். நம்மிடமிருந்து அவர் ஒருநாள் விடைபெற்றுச் சென்றுவிடுவார் என்று எண்ணியும் பார்த்ததில்லை நான். அந்த நினைப்பையே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே! என்னதான் செய்வது! உலகின் விதி இதுதான் என்றால், நீங்களும் நானும் என்னதான் செய்துவிட முடியும்?’

உணர்வுக்கடலில் தத்தளிக்கும் ஒரு மனிதரை இந்தக் கடிதத்தில் நாம் தரிசிக்கிறோம். மெல்ல மெல்லதான் தன்னை மீட்டெடுத்துக்கொண்டார் யுவான் சுவாங். தனது துக்கத்தையும் தவிப்பையும் பயணத்தில் தொலைத்துவிட முடியுமா என்று பார்த்தார். அஸ்ஸாமைக் கடந்துவந்து இப்போது ஒரிஸ்ஸாவில் திரிந்துகொண்டிருந்தார். இரவு நேர வானத்தைக் கண்டார். மேகம் இல்லாத தெளிவான இருள் வானம். அப்படியே பார்த்துக்கொண்டு நின்றார். மாணிக்கக்கல் ஒன்று தன்னந்தனியாக ஒளி வீசிக்கொண்டிருப்பது போல் இருந்தது. அப்படியொரு கல் அந்தரத்தில் தோன்றிவிட முடியாது என்பதை அவர் அறிவார். ஆனாலும், ஏன் அப்படியொரு காட்சி தோன்ற வேண்டும் என்றும் அவருக்குத் தெரியவில்லை. `இருள் நிரந்தரமில்லை’ என்று சொல்கிறதா மாணிக்கம் அல்லது `ஒளி நிரந்தர மில்லை’ என்று சொல்கிறதா இருள் வானம் அல்லது `இரண்டும் அருகருகில் இருப்பதுதான் வாழ்க்கை’ என்பதை வேறு யாரோ எனக்கு உணர்த்து கிறார்களா?

(விரியும்)