
நள்ளிரவு ஆகிவிட்டது என்றாலும், யுவான் சுவாங்கைத் தானே முன்வந்து வரவேற்றார் ஹர்ஷர். நாளந்தா அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
இந்தியா, யுவான் சுவாங்கின் இரண்டாவது தாய்நாடாக மாறியிருந்தது. சீனா அவர் பிறப்பிடம் என்றால், இந்தியா அவரை அள்ளியெடுத்து, அறிவுப்பால் புகட்டி, வளர்த்தெடுத்த வளர்ப்பிடம். தன் உள்ளங்கை ரேகைபோல் இந்தியாவின் வரைபடத்தை இப்போது அவர் அறிந்துவைத்திருந்தார். பணிவான பிக்குகள் தொடங்கி படோடோபமான மன்னர்கள் வரை பலர் அவருக்கு நெருக்கமானவர்களாக மாறியிருந்தனர். ‘யுவான் சுவாங் என்னோடுதான் தங்கியிருக்க வேண்டும்’ என்று அஸ்ஸாம் மன்னரும், ‘இல்லை, அவர் என்னை அறிவார். என் அரண்மனையில்தான் அவர் இருக்க வேண்டும்’ என்று ஹர்ஷரும் ஒருமுறை சொற்போர் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர் செல்வாக்கு பலமாகப் படர்ந்திருந்தது. `இது என் நிலம்’ என்று யுவான் சுவாங்கால் உரிமையோடு இந்தியாவை அணைத்துக்கொள்ள முடிந்தது என்றால், `இவர் என்னுடையவர்’ என்று இந்தியாவும் அவர் கரங்களைப் பற்றிக்கொண்டது. ஒரு பயணி இதைவிடத் தன் வாழ்நாளில் வேறு என்ன எதிர்பார்த்துவிட முடியும்?
யுவான் சுவாங்கின் பயணம் தெற்கிலும் நீண்டு சென்றது. கோசலம், ஆந்திரம் வழியாக நீண்ட வனப் பகுதிகளைக் கடந்து திராவிட நாட்டில் அமைந்துள்ள ‘காஞ்சிபுலோ’ எனும் பகுதிக்கு வந்து சேர்ந்தார். பெயரைப் பார்க்கும்போதே அது காஞ்சிபுரம் என்று தெரிந்துவிடுகிறது. `பழமும் பூவும் செழித்து வளரும் வளமான பூமி’ என்று காஞ்சியை அழைக்கிறார் யுவான் சுவாங். `பல்லவர் தலைநகரமான காஞ்சியின் மக்கள் வீரமிக்கவர்களாகவும், நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், நன்கு கற்றறிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் பேசுவதையும் எழுதுவதையும் பார்க்கும்போது அது இந்தியாவின் எந்த மொழிபோலவும் இல்லை. நூறு பௌத்த மடாலயங்களும், 80 தேவ கோயில்களும் காஞ்சியில் இருக்கின்றன. இந்தக் கோயில்களில் பெரும்பாலானவை திகம்பரர்களுடையவை’ என்று குறிப்பிடுகிறார். பௌத்த மடாலயங்களில் சிறிது காலம் தங்கியிருந்து அங்குள்ள ஏடுகளைக் கற்றார். மனம் நிறைந்துபோனது. வீடு திரும்பும் பெரும் பயணம் தொடங்கியது காஞ்சியிலிருந்துதான்.

ஒரேயொரு சந்திப்பு மட்டும்தான் எஞ்சியிருந்தது. `விடைபெறுவதற்கு முன்பு நிச்சயம் உங்களை வந்து பார்ப்பேன்’ என்று ஹர்ஷரிடம் வாக்குறுதி அளித்திருந்தார். அதை நிறைவேற்றவேண்டிய தருணம் வந்துவிட்டது என்று நினைக்கும்போதே, `மறக்காமல் என்னை வந்து பாருங்கள்’ என்று அஸ்ஸாம் மன்னர் ஒரு தூதுவரைவிட்டு செய்தி அனுப்பியிருந்தார். மறுக்க முடியவில்லை. பலத்த வரவேற்புகளுக்கு மத்தியில் இரண்டு மாதங்கள் அஸ்ஸாமில் தங்கினார். ஒரிஸ்ஸா போர்க்களத்திலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்த ஹர்ஷருக்கு இந்தத் தகவல் சென்று சேர்ந்ததும், `அதெப்படி நீங்கள் அஸ்ஸாமுக்குப் போகலாம்? கையோடு கிளம்பி வந்துசேரவும்’ என்று உத்தரவு பிறப்பித்தார். `என்ன பெரிய ஹர்ஷர்... அவர் சொன்னால் அனுப்பிவிட வேண்டுமா?’ என்று ஆரம்பத்தில் முரண்டு பிடித்தாலும், பின்னர் பணிந்து யுவான் சுவாங்கை வழியனுப்பி வைத்தார் அஸ்ஸாம் மன்னர். இவ்வளவுக்கும் அவர் ஓர் இந்து. ஏனோ யுவான் சுவாங்கை அவருக்கு அவ்வளவு பிடித்துவிட்டது.
நள்ளிரவு ஆகிவிட்டது என்றாலும், யுவான் சுவாங்கைத் தானே முன்வந்து வரவேற்றார் ஹர்ஷர். நாளந்தா அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். யுவான் சுவாங் இயற்றிய நூல்கள் குறித்தும் விசாரித்தார். யுவான் சுவாங்கின் தர்க்கத்திறனை நேரில் கண்டு ரசிக்கும் பொருட்டு மாபெரும் விவாதக் களமொன்றை ஹர்ஷர் கட்டமைத்தார். ஐந்து நாள்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் வெவ்வேறு தத்துவப் பின்புலத்தைச் சேர்ந்தவர்களோடு யுவான் சுவாங் விவாதங்களை நடத்தினார். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ‘மோட்சா’ என்னும் பெயரில் தான தருமங்கள் அளிக்கும் நிகழ்வொன்றை ஹர்ஷர் நடத்துவது வழக்கம். யுவான் சுவாங் அந்நிகழ்விலும் கலந்துகொண்டார். ஹர்ஷர் தன்னிடமிருந்த விலைமதிக்க முடியாத செல்வங்களையெல்லாம் வாரி வாரி வழங்குவதைக் கண்ணால் கண்டதாக யுவான் சுவாங் குறிப்பிடுகிறார். சீனா திரும்பியதும் ஹர்ஷர் குறித்து அவர் எழுதிய பதிவில் இச்செய்தி இடம்பெற்றுள்ளது. சக பௌத்தர் எனும் வகையில் ஹர்ஷர் மீது யுவான் சுவாங் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் அவருடைய பதிவில் நிறைந்திருக்கின்றன. இந்தியாவின் மகத்தான தலைவர் என்று ஹர்ஷரை உயர்த்திக்காட்டுகிறார் யுவான் சுவாங்.
ஹர்ஷரின் அன்பு அரவணைப்பிலிருந்து விடுபடுவதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது யுவான் சுவாங்குக்கு. `விடுவீர்களா... மாட்டீர்களா?’ என்று சண்டை மட்டும்தான் போடவில்லை. மனதைத் திடப்படுத்திக்கொண்டு சீனருக்கு ஹர்ஷர் ஏப்ரல் 643-ல் ஒருவழியாக விடைகொடுத்து அனுப்பிவைத்தார். தன்னிடமிருந்த சிறந்த யானையைத் தேர்ந்தெடுத்து அதில் யுவான் சுவாங் அமர்வதை உறுதிசெய்துகொண்டார். தங்கம், வெள்ளி என்று தொடங்கி பலவிதமான மூட்டைகள் தனித்தனி வண்டிகளில் ஏற்றப்பட்டன.
ஹர்ஷருக்கும் யுவான் சுவாங்குக்குமான உறவு இந்தியா-சீனா உறவாகவும் பரிமளித்தது. சீன டாங் மன்னர் டாய்சோங் குறித்து சிறப்பான முறையில் யுவான் சுவாங் நிகழ்த்திய உரையால் கவரப்படும் ஹர்ஷர், சீன அரசவைக்குத் தன்னுடைய தூதுவர்களை நட்புரீதியில் அனுப்பிவைத்தார். சீன மன்னர், பதிலுக்குத் தன் தூதுவர்களை ஹர்ஷரின் அவைக்கு அனுப்பிவைத்தார். ஆனால் சீனத் தூதுக்குழு இந்தியாவை நெருங்கிக்கொண்டிருக்கும்போதே ஹர்ஷர் இறந்துவிட, வம்சத் தொடர்ச்சி இல்லாததால் அவருடைய பேரரசும் அவரோடு சேர்ந்து முடிவுக்குவருகிறது.
திரும்பிச் செல்லும்போது இந்தியா குறித்த மிக உயர்ந்த சித்திரம் அவர் மனதில் உருவாகியிருந்தது. அந்தச் சித்திரத்தை வீடு திரும்பியதும் யுவான் சுவாங் பதிவுசெய்தார். இந்தியாவின் பௌத்த வரலாற்றை எழுதுபவர்களுக்கு இன்றளவும் அவருடைய குறிப்புகள் உதவிக்கு வருகின்றன. கூடவே, இந்தியர்களின் சமூக வாழ்க்கை குறித்த தன் மனப்பதிவுகளையும் பொருத்தமான இடங்களில் எழுதிவைக்க அவர் தயங்கவில்லை.
அரிய ஏடுகள், கையெழுத்துப் படிகள், சித்திரங்கள், மொழிபெயர்ப்புகள், குறிப்புகள், நினைவுச்சின்னங்கள், சிலைகள் என்று மலையளவு மதிப்பு வாய்ந்த பெட்டகங்களைச் சுமந்து சென்றுகொண்டிருந்தார் யுவான் சுவாங். கண்கள் கனவுகளில் தோய்ந்திருந்தன. சிந்து நதியில் மிதந்துகொண்டிருந்தபோது திடீரென்று எதிர்பாராத வகையில் சூறாவளிக் காற்று வீசுகிறது. படகுகள் தள்ளாடத் தொடங்குகின்றன. கரை ஒதுங்குவதற்குள் ஒரு படகு கிட்டத்தட்ட முழுக்கச் சாய்ந்துவிடுகிறது. சித்தம் துடிதுடிக்க, கலங்கிப்போனார் யுவான் சுவாங். படகில் இருந்தவரை மீட்டுவிட்டார்கள் என்றாலும் ஐம்பது கையெழுத்துப் பிரதிகள் நீருக்குள் பாய்ந்துவிட்டன. யுவான் சுவாங் தேடித்தேடி ஒரு மூட்டைக்குள் சேகரித்துவைத்திருந்த தாவர விதைகளும் மூழ்கிப்போயின.
விரைவில் தன்னை மீட்டெடுத்துக்கொண்டார் யுவான் சுவாங். கணக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். என்னென்ன பிரதிகள் மூழ்கிப்போயின என்று பட்டியலிட்டார். தகவல் அறிந்து அப்பகுதியைச் சேர்ந்த மன்னர் விரைந்து வந்து யுவான் சுவாங்கைச் சந்தித்தார். `எனக்கு இன்னின்ன ஏடுகள் வேண்டும். தயவுசெய்து பெற்றுக்கொடுக்க முடியுமா?’ என்று அவரிடம் விண்ணப்பித்துக்கொண்டார் யுவான் சுவாங். தொலைந்த அனைத்தும் திரும்பக் கிடைக்க இரு மாதங்கள் பிடித்தன. அந்த இரு மாதங்களும் இடத்தைவிட்டு நகரவில்லை யுவான் சுவாங். ஒரு துண்டுச்சீட்டு பாக்கியில்லாமல் எல்லாம் கிடைத்துவிட்டதை உறுதிசெய்துகொண்ட பிறகே பயணம் மேற்கொண்டு தொடர்ந்தது.

கிட்டத்தட்ட அதே வழித்தடம். அதே கடினமான பாதைகள், பாலைவனங்கள், மலைத்தொடர்கள், கானகங்கள். அதே காரவன் நெடும்பயணம். 645-ம் ஆண்டு தொடங்கும்போது சீனாவை நன்றாக நெருங்கியிருந்தார் யுவான் சுவாங். கிளம்பிச் சென்று 16 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தாய்நிலத்தை மீண்டும் கண்டார். முறையான அனுமதி இல்லாததால் சீன அரசருக்குத் தெரியாமல் மறைந்து மறைந்து தப்பியோடி வந்தது அவர் நினைவுக்கு வந்தது. அலைபாயும் மனம்கொண்ட, குழப்பமுள்ள ஒரு மாணவனை சீனா அனுப்பிவைத்திருந்தது. ஒரு மகத்தான தத்துவவாதியை, நன்கு கனிந்த ஒரு பௌத்தரை, கூர்மையான ஒரு சிந்தனையாளரை சீனாவுக்குத் திருப்பியனுப்பியிருந்தது இந்தியா. பட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாக மாறும் அதிசயத்துக்குச் சற்றும் குறைவில்லாத அதிசயம் இது.
வீடு திரும்பிய பௌத்தரை மிகுந்த ஆரவாரத்தோடும் உற்சாகத்தோடும் வரவேற்றது சீனா. யுவான் சுவாங்குக்குத் தக்கமுறையில் எவ்வாறு மரியாதை செலுத்துவது என்று தெரியாமல் தவித்தார் பேரரசர் டாய்சோங். அரசுப் பதவி, அங்கீகாரம், வெகுமானம், பட்டம் என்று என்னென்னவோ அளிப்பதாகச் சொல்லிப் பார்த்தார். எதற்கும் இணங்கவில்லை யுவான் சுவாங். `நான் ஒரு துறவி. இறக்கும்வரை அவ்வாறு இருக்க மட்டுமே விரும்புகிறேன்’ என்று சொல்லிவிட்டார் அவர். எல்லாப் பரபரப்புகளிலிருந்தும் விலகிக்கொண்டார். ஒரு மடாலயம் அவரைத் தலைமை தாங்குமாறு கேட்டுக்கொண்டது. ஏற்றுக்கொண்டார். கொண்டுவந்த மூட்டைகளையெல்லாம் ஒவ்வொன்றாகப் பிரிக்க ஆரம்பித்தார். இளம் பிக்குகளிடம் சில ஏடுகளைக் கொடுத்து மொழிபெயர்க்குமாறு கேட்டுக் கொண்டார். அவர்கள் பிரதியை ஊன்றி வாசித்து, செப்பனிட்டார்; வகுப்புகள் எடுத்தார்; அனுபவங்கள் பகிர்ந்துகொண்டார். மடாலயத்தில் ஒரு நூலகத்தை உருவாக்கும் பணியில் இறங்கினார்.
அறுநூறு பிரதிகள். ஏழு புத்தர் உருவச்சிலைகள். நூற்றுக்கும் அதிகமான நினைவுப்பொருள்கள். 664-ம் ஆண்டு இறக்கும்போது யுவான் சுவாங்கின் சொத்து மதிப்பு இது!
(விரியும்)