
கிட்டத்தட்ட வாழ்நாள் முழுக்க உற்சாகம் பொங்கப் பொங்க உலகைச் சுற்றித் தீர்த்திருக்கிறார்
இந்தியாவை முதன்முதலில் எழுத்தில் பதிவுசெய்த ஹெரோடோட்டஸிலிருந்து தொடங்கினோம். அலெக்சாண்டர் தொடங்கி மெகஸ்தனிஸ் வரை இந்தியாவுக்கு வருகைதந்த சில கிரேக்கர்களைச் சந்தித்தோம். அவர்கள் விடைபெற்றுச் சென்ற பிறகு, சீன பௌத்தர்கள் இருவரின் கரங்களைப் பற்றிக்கொண்டு இந்தியாவை ஒரு சுற்று சுற்றினோம். கிரேக்கர்களின் இந்தியா ஓர் அதிசய உலகமாக விரிந்தது என்றால், சீனர்களின் இந்தியா பௌத்தத் தலமாகத் திகழ்ந்தது. கிரேக்கர்கள் கற்பனையைக் குழைத்து எழுதினார்கள் என்றால், சீனர்கள் பக்தியில் திளைத்து எழுதினார்கள். அடுத்து, முற்றிலும் புதிய கண்களைக்கொண்டு வேறொரு இந்தியாவைக் கண்டுபிடிப்போம்.
அந்தக் கண்களின் உரிமையாளர், அல் மசுடி. (முழுப் பெயர், அபு அல் ஹசன் அலி இபன் அல் ஹுசைன் இபன் அலி அல் மசுடி). 896-ம் ஆண்டு வாக்கில் பாக்தாத்தில் பிறந்தார். தந்தை அப்துல்லா இபன் மசுட், நபிகள் நாயகத்தின் தோழர்களில் ஒருவர். இதுதான் அல் மசுடியின் பின்னணி. இந்த இரு வரிகள் மட்டும்தான் அவரைப் பற்றி நமக்குத் தெரியும். அதுவும்கூட அவரே எழுதிவைத்திருந்ததால்.
`இது போதாது. உங்கள் வாழ்க்கையை விரிவாகச் சொல்லுங்கள்’ என்று அவரிடம் கேட்டிருந்தாலும், தான் சென்றுவந்த இடங்களின் கதைகளைத்தான் அடுத்தடுத்து அவர் விவரித்திருப்பார். கிட்டத்தட்ட வாழ்நாள் முழுக்க உற்சாகம் பொங்கப் பொங்க உலகைச் சுற்றித் தீர்த்திருக்கிறார். நினைவு தெரிந்த நாள் தொடங்கி, நினைவு மங்கலாகி மறைந்தேபோன இறுதிக்காலம் வரை வீட்டுக்கு வெளியில்தான் வாழ்ந்திருக்கிறார். `நான் பயணம் செய்கிறேன். எனவே வாழ்கிறேன்’ என்பதுதான் அவருடைய வாழ்க்கைத் தத்துவமாக இருந்திருக்கும்.
அரேபியா, பாரசீகம், ஆர்மீனியா, ஜார்ஜியா, சிரியா, எகிப்து, கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியா என்று அவர் பயணம் செய்த நிலங்கள் வளர்ந்துகொண்டே போகின்றன. இந்தியப் பெருங்கடல், செங்கடல், மத்திய தரைக்கடல், காஸ்பியன் கடல் அனைத்திலும் மிதந்திருக்கிறார். எப்படி இங்கெல்லாம் போனார்... யாருடனாவது இணைந்து போனாரா அல்லது தனியாகவா... இந்த இடங்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்னும் உந்துதலை எங்கிருந்து பெற்றார்... இவ்வளவு இடங்களைப் பார்ப்பதற்கு எவ்வளவு செலவாகியிருக்கும்... எங்கிருந்து அவருக்குப் பணம் கிடைத்தது... பாஹியானுக்கும் யுவான் சுவாங்குக்கும் பௌத்த மன்னர்கள் ஆதரவு அளித்ததுபோல் அராபியர் என்பதால் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஆதரவு இவருக்குக் கிடைத்ததா... ஆமென்றால், இஸ்லாமியச் செல்வாக்கின் நிழலே படாத இடங்களுக்கும் அல்லவா சென்றிருக்கிறார்... எப்படிச் சாத்தியமானது?

அல் மசுடி ஒரு வணிகராக இருந்திருக்கலாம். எனவே, உலகத் தொடர்புகளும் நிதியும் கிடைப்பது சுலபமாக இருந்திருக்கும் என்று சிலர் யூகிக்கிறார்கள். மற்றபடி, புதிய நிலங்களைக் காண வேண்டும்; புதிய மக்களைச் சந்திக்க வேண்டும்; புதிது புதிதாகக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்னும் துடிதுடிப்பை அவர் எங்கிருந்து பெற்றார் என்பதைச் சொல்லிவிடலாம். சமகாலத்திலிருந்து.
அந்த வகையில், அல் மசுடி நற்பேறு பெற்றவர். அவர் பிறந்த இடம், பிறந்த காலம் இரண்டுமே அசாத்தியமான சிறப்புமிக்கவை. `இஸ்லாமியப் பொற்காலம்’ என்று வரலாறு கட்டம்கட்டிக் குறித்துவைத்திருக்கும் காலத்தைச் (8-13-ம் நூற்றாண்டுவரை) சேர்ந்தவர் அல் மசுடி. அந்தப் பொற்காலம் பிறந்தது அவர் பிறந்த பாக்தாத்தில். உலகின் பெருமிதமாக பாக்தாத் உயர்ந்திருந்த சமயம் அது. இன்றும் மலைக்கவைக்கும் மாபெரும் அறிவியக்கப் பணிகளைப் பாக்தாத் அப்போதே முன்கை எடுத்து ஆரம்பித்துவைத்தது. இதைச் செய்தவர் அன்றைய ஆட்சியாளர் ஹரூன் அல் ரஷித். `நல்லறிவு இல்லம்’ (பைத் அல் ஹக்மா) என்னும் பெயரில் ஒரு பிரமாண்டமான நூலகத்தை அவர் பாக்தாத்தில் உருவாக்கினார். இந்தியாவுக்கு ஒரு நாளந்தா என்றால், மேற்குக்கு இந்த நூலகம்.
ஆயிரம் யானைகளின் பசியை ஒன்று சேர்த்ததுபோல் அறிவுப்பசி கொண்டிருந்தது பாக்தாத். பெரும் ஆள் படையைத் திரட்டி ஊர், உலகிலுள்ள எல்லா நூல்களையும் அள்ளியெடுத்து வந்து அரபியிலும் அராமிக்கிலும் மொழிபெயர்த்தார்கள். எந்தத் துறையையும் விட்டுவைக்கவில்லை. இந்தக் கருத்து நமக்கு ஒத்துவருமா, இது நமக்குத் தேவைதானா, இதை மொழிபெயர்த்தால் நம் நம்பிக்கைகளுக்கு ஏதேனும் இக்கட்டுகள் நேருமா என்றெல்லாம் ஒருவரும் தயங்கவில்லை. அரிய நூல்களைத் தேடித் தேடிச் சேர்த்தார்கள். தேடித் தேடி மொழிபெயர்த்தார்கள். `உலகின் மாபெரும் மொழிபெயர்ப்பு இயக்கம்’ என்று இந்நிகழ்வைச் சொல்லலாம். `நானும் ஏன் இதில் பங்கேற்கக் கூடாது?’ என்று தேனீபோல் உலகெங்குமிருந்து அறிஞர்களும் ஆய்வாளர்களும் பாக்தாத்தை மொய்த்துக்கொண்டனர்.
பாக்தாத்தின் அறிவுத் தேடல் ஓர் ஆரோக்கியமான கிருமிபோல் மெல்ல மெல்ல பிற நிலங்களுக்கும் பரவத் தொடங்கியபோது உலகம் ஒரு பெரும் மறுமலர்ச்சியை தரிசித்தது. கல்வி, சட்டம், மதம், தத்துவம், கணிதம், இயற்பியல், வானியல், உயிரியல், மருத்துவம், இலக்கியம், கட்டடக்கலை என்று தொடங்கி, இன்று நமக்குப் பழக்கமான எல்லாத் துறைகளிலும் புத்தொளி பரவியது. புது ரத்தம் பாய்ச்சப்பட்டது. பல துறைகள் புத்துயிர்ப்பு பெற்று எழுந்து நின்றன. இஸ்லாமிய அறிவொளி இயக்கத்தைக் கண்டு வியந்த ஐரோப்பா, அவர்களிடமிருந்து பிரதிகளைப் பெற்றுக்கொண்டு தங்கள் மொழிக்குக் கொண்டுசெல்ல ஆரம்பித்தது.
சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ தொடங்கி கிரேக்க செவ்வியல் படைப்புகள் பலவற்றை மறுகண்டுபிடிப்பு செய்து மொழியாக்கம் செய்து உலக்கு வழங்கியவர்கள் இஸ்லாமிய அறிஞர்கள்தாம்.
இஸ்லாமிய அறிவொளி எந்த மொழியைத் தீண்டுகிறதோ அந்த மொழி, முன்பைக்காட்டிலும் அடர்த்தியாகச் சுடர்விட்டு எரிந்தது. எடுத்துக்காட்டுக்கு, அரபுத் தத்துவ நூல்களைச் சிலர் லத்தீனுக்கு மொழிபெயர்த்து எடுத்துச் சென்றனர். லத்தீன் தத்துவங்களின் வரலாறே அதன் பிறகு வேறொன்றாக மாறிப்போனது. இந்த மாற்றங்களின் ஒரு பகுதியாக, பல பிரதேசங்களை உள்ளடக்கிய பரந்து விரிந்த இஸ்லாமியப் பேரரசு ஒன்று முதன்முறையாக வரலாற்றில் உருவானது.
ஆயிரம் ஆண்டுகள் கழித்து இதையெல்லாம் பார்க்கும்போது, எல்லாமே நமக்கு விநோதமாகத் தோன்றும்; அதிர்ச்சியாகவும். வாரி வாரி வழங்கும் இடத்தில் இஸ்லாமிய உலகமும், நன்றியோடு பெற்றுக்கொள்ளும் இடத்தில் மேற்குலகமும் ஒரு காலத்தில் இருந்திருக்கும் என்பதை இன்று நம்மால் கற்பனையாவது செய்து பார்க்க முடிகிறதா? `அறிவொளி இயக்கத்தின் பிறப்பிடம்’ என்று ஐரோப்பாவை இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அந்த அறிவொளி இயக்கத்துக்கான விதைகளை அளித்தது இஸ்லாமிய உலகம். பற்றிக்கொள்ள ஏதுமின்றி பரிதவித்துக்கொண்டிருக்கும் இன்றைய பாக்தாத்திலிருந்து தான் ஒரு பெரும் பாய்ச்சல் அன்று நிகழ்ந்திருக்கிறது.

அல் மசுடி இஸ்லாமிய மறுமலர்ச்சியின் குழந்தை. அவரிடமிருந்தது இஸ்லாமிய உலகின் அறிவுப்பசி. அதுதான் அவர் தேடலைத் தொடங்கி வைத்தது. அதுதான் அவரை வீட்டிலிருந்து கிளப்பி, `உலகம்தான் உன் வீடு’ என்று வழியனுப்பிவைத்தது. இன்னும் இன்னும் செல்ல வேண்டும். இன்னும் இன்னும் கற்க வேண்டும். கற்றுக்கொண்டதை யெல்லாம் உலகோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவரை ஓயாமல் தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தது அந்தப் பசிதான்.
பயணி என்பது மட்டுமல்ல அவர் அடையாளம். அல் மசுடி ஒரு வரலாற்றாசிரியர். புவியியலில் தடம் பதித்தவர். இத்துறையின் வரலாற்றை எழுதுபவர்கள் இவரைப் பொருட்படுத்தியே ஆக வேண்டும். வானியலில் அவர் செலுத்திய ஆர்வம் அசாதாரணமானது. பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. கணிதம் அவருக்குப் பிடித்தமான மற்றொரு துறை. மதம் அவருக்கு நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயம் மட்டுமல்ல. மதத்தின் ஆன்மாவை அவர் விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறார். பண்பாடுகள், மரபுகள், மொழிகள் ஆகியவை அவரை ஈர்த்த மற்ற துறைகள். இந்தத் துறைகள் எல்லாவற்றையும் அவர் கவனம் செலுத்தி ஆராய்ந்திருக்கிறார். எல்லாவற்றைக் குறித்தும் விரிவான பதிவுகள் செய்திருக்கிறார்.
‘அராபியர்களின் ஹெரோடோட்டஸ்’ என்று அல் மசுடியை உலகம் அழைக்கிறது. வரலாற்றைப் புரிந்துகொள்ளும் முறையை, பதிவுசெய்யும் போக்கைத் தனக்கேயுரிய தனித்துவமான முறையில் அரபுலகில் தொடங்கிவைத்தவர் இவரே. முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை அல் மசுடி எழுதியிருப்பதாகத் தெரிகிறது. நமக்குக் கிடைத்தவை இரண்டு மட்டுமே. சந்தேகமின்றிப் பேரிழப்புதான். ஆனால், அவருடைய முக்கியத்துவத்தை உணர்த்த இந்த இரு நூல்களே போதும்.
`அல் மசுடி ஒரு கலைக்களஞ்சியம்’ என்கிறார்கள் அவரை வாசித்தவர்கள். `தனது எழுத்துகள் வாயிலாக இந்தியாவை, மத்திய கிழக்கு நாடுகளுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் அல் மசுடி’ என்கிறார் மௌலானா அபுல் கலாம் ஆஸாத். `அல் மசுடி ஓர் உலகப் பயணி. சிறந்த வரலாற்றாசிரியர். அவருக்கும் அவரைப் போன்ற பிற பயணிகளுக்கும் நாம் தக்க மரியாதை செலுத்த வேண்டும். அவர்களுடைய பதிவுகள் மூலம்தான் கடந்த காலத்தை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது’ என்கிறார் ஜவஹர்லால் நேரு.
அல் மசுடியை அறிமுகம் செய்துகொண்டுவிட்டோம். இனி அவர் கண்டுபிடித்த இந்தியாவை ஆராய்வோம்.
(விரியும்)