மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 45 - பண்டைய இந்து உலகம்

பண்டைய இந்து உலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
பண்டைய இந்து உலகம்

ஒருநாள் இந்துக்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் ஒரு மன்னரைத் தேர்ந்தெடுத்தனர். அவர் பெயர், அல் பிரம்மன்.

அல் மசுடி எப்போது பாக்தாத்திலிருந்து கிளம்பினார், எந்த வழியாக வந்தார், வழியில் எதையெல்லாம் கண்டார் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், 1,100 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 915-ல் இந்தியா வந்தடைந்தார் என்கின்றன குறிப்புகள். மற்ற எல்லோருக்கும் வாசல் திறந்ததுபோல், ஆப்கானிஸ்தான் பகுதி நுழைவாயிலாக இருந்து வரவேற்று இந்தியாவுக்கு அவரை அனுப்பிவைத்திருக்கிறது. இரண்டு ஆண்டுகள் இந்தியாவில் கழித்திருக்கிறார். இன்றைய மத்தியப்பிரதேசம், குஜராத், சிந்த் ஆகியவை அவர் அதிகம் சுற்றித் திரிந்த பகுதிகள். சுற்ற முடியாத பகுதிகள் குறித்துத் தரவுகள் சேகரித்துத் தனது பதிவுகளை எழுதியிருக்கிறார்.

இரண்டு வழிகளில் அவர் தகவல்கள் திரட்டியிருப்பதாகத் தெரிகிறது. முதலாவது, கள ஆய்வு. மலை, மேடு, காடு, வீதி என்று அலைந்து, ஆராய்ந்து அனுபவங்களைத் திரட்டுவார். விதவிதமான மனிதர்களிடம் உரையாடி, அவர்களிடமிருந்து வரலாற்றுக் குறிப்புகளும் செவிவழிக் கதைகளும் பெற்றுக்கொள்வார். வணிகர்கள், மாலுமிகள், ராணுவ வீரர்கள், உள்ளூர் வரலாற்றைத் தெரிந்து வைத்திருப்பவர்கள், வழிபாட்டு இடங்களை நிர்வகிப்பவர்கள், மத அறிஞர்கள் என்று பலரிடம் அல் மசுடி உரையாடி, குறிப்பெடுத்துக் கொண்டிருப்பது தெரிகிறது.

இரண்டாவது, ஏடுகள். அவருக்கு முந்தைய காலங்களில் எழுதப்பட்ட அராபிய நூல்களையும் பிற மொழிபெயர்ப்புகளையும் வாசித்து ஒரு குறிப்பிட்ட நிலத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வது இரண்டாவது வழி. இஸ்லாமிய மறுமலர்ச்சி காரணமாக எல்லா வகையான ஏடுகளும் குறைந்த விலையில் அப்போது கிடைத்துவந்தன. ஏற்கெனவே பதிப்பிக்கப்பட்டவை போக, அல் மசுடியே பல இடங்களிலிருந்து ஆவணங்களைத் திரட்டியிருப்பது தெரிகிறது. கல்வெட்டுகள், பண்டைய பதிவுகள், அரசு நிர்வாக ஆவணங்கள், கோயில் ஆவணங்கள் என்று பலதரப்பட்ட தரவுகளைத் திரட்டியதோடு அவற்றையெல்லாம் தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 45 - பண்டைய இந்து உலகம்

ஆரம்பகால இந்தியாவின் கதையை அவர் சித்திரிக்கும்விதத்தைப் பார்க்கும்போது, இந்த இரு வழிகளும் அவருக்கு உதவியிருப்பது தெரிகிறது. ‘முன்பொரு காலத்தில், அதாவது மிக மிகப் பழங்காலத்தில் உலகம் மிகவும் அமைதியாக இருந்தது. மனிதர்கள் மிகவும் நல்லவர்களாக இருந்தனர். தேசங்கள் அடுத்தடுத்து தோன்ற ஆரம்பித்தன. அந்த வரிசையில் இந்தியாவும் பிறந்துவந்தது. இந்தியா தோன்றியதும் இந்துக்களும் தோன்றினர்.

ஒருநாள் இந்துக்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் ஒரு மன்னரைத் தேர்ந்தெடுத்தனர். அவர் பெயர், அல் பிரம்மன். மன்னர்களின் மன்னராக, சிறந்தவர்களிலும் சிறந்தவராக அவர் திகழ்ந்தார். அவர் ஆட்சி பொற்காலம் என்று சொல்லும்படியாகச் செழிப்பானதாக இருந்தது. அல் பிரம்மனின் வழிகாட்டுதலின்படி, அறிவில் சிறந்தவர்கள் முன்வந்து இந்தியாவை வழிநடத்தத் தொடங்கினார்கள். முக்கியப் பொறுப்புகள் அவர்களிடம் வந்துசேர்ந்தன. மாபெரும் கட்டுமானங்களை அவர்கள் எழுப்பினார்கள். கோள்களை ஆய்வுசெய்து பன்னிரண்டு ராசிகளைக் கண்டுபிடித்தார்கள். வாளையும் வேலையும் இன்னபிற ஆயுதங்களையும் படைத்தார்கள்.

அல் பிரம்மன் இந்துக்களை ஆண்டார் என்றால், அவருக்கும் மேலாக இருந்தபடி அனைத்தையும் கவனித்துக்கொண்டவர் சூரியன். அல் பிரம்மன் 366 ஆண்டுகள் ஆண்ட பிறகே இறந்துபோனார். அவருக்குப் பிறகு அவர் சந்ததியினர் வரிசையாக இந்தியாவை ஆண்டனர். அல் பிரம்மனின் வழித்தோன்றல்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டனர். இன்னமும்கூட அவர்கள் அதே பெயரில்தான் இந்தியாவில் அறியப்படுகிறார்கள்’ என்கிறார் அல் மசுடி.

‘இந்தியா உருவான காலம் தொடங்கி இன்றுவரை, சமூகத்தின் உயர்ந்த இடத்தைப் பிராமணர்கள் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் எல்லோரும் பிராமணர்களை மதிப்போடு நடத்துகிறார்கள். நம் எல்லோரையும்விட பிராமணர்கள் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். பிராமணர்கள் இந்துக்களிடமிருந்து தங்களைத் தோற்றத்திலேயே வேறுபடுத்திக் காட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் மாமிசம் உண்பதில்லை. மஞ்சள் நிற நூலொன்றைக் கழுத்தில் குறுக்காக அணிந்துகொள்கிறார்கள். ஆண்கள், பெண்கள் இருவருமே இதை அணிந்துகொள்கிறார்கள்’ என்கிறார் அல் மசுடி.

அல் மசுடிக்குத் தத்துவம் பிடித்தமான துறை. அரிஸ்டாட்டில் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர். எனவே இந்து தத்துவங்கள் மீதும் அவர் ஆர்வம் திரும்பியிருக்கிறது. ‘பண்டைய இந்தியாவில் ஏழு துறவிகள் இருந்தனர் (சப்த ரிஷிகளாக இருக்கலாம்). தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுவதுதான் அவர்களுடைய வேலை. அவர்கள் தங்களுக்குள் ஒன்றுகூடி அவ்வப்போது விவாதிப்பது வழக்கம்’ என்கிற அல் மசுடி, அவர்கள் விவாதம் எப்படியிருக்கும் என்பதற்கு உதாரணமாக ஓர் உரையாடலை நமக்குத் தருகிறார்.

‘நாமெல்லாம் எங்கிருந்து வந்தோம்... எங்கே சென்றுகொண்டிருக்கிறோம்... நாம் சூன்யத்திலிருந்து தோன்றி ஞானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோமா அல்லது ஞானத்தோடு தோன்றி சூன்யத்தை அடைவதற்காகப் பயணம் செய்துகொண்டிருக்கிறோமா... நம்மையெல்லாம் உருவாக்கி, உடலையும் உயிரையும் கொடுத்து இயங்க அனுமதிப்பதன் மூலம் கடவுள் பெறும் ஆதாயம் என்ன... நாமெல்லாம் மறைந்து போய்விட்டால் கடவுள் சந்திக்கும் இழப்புதான் என்ன... கடவுளும் நம்மைப் போன்றவர்தானா... அவருக்கும் விருப்பு வெறுப்புகள் இருக்குமா... அவரைப் புரிந்துகொள்வது ஏன் கடினமாக இருக்கிறது... ஏன் சிரமப்பட்டு நம்மை உருவாக்க வேண்டும், நாம் வாழ்வின் சுகங்களையெல்லாம் அனுபவித்து முடித்ததும் ஏன் சிரமப்பட்டு அழிக்க வேண்டும்?’

இப்படி ஒரு தத்துவ விவாதத்தை எழுவரும் சேர்ந்து தொடங்குவார்கள். பிறகு ஒருவர் மாற்றி ஒருவர் விவாதிப்பார்கள். இறுதியில் முடிவுபோல் ஏதோ ஒன்று கிட்டும். எல்லோரும் இவர்களுடைய விவாதங்களை ஊன்றி கவனித்து தெளிவடைவார்கள். சப்த ரிஷிகள் வந்தடைந்த முடிவை எல்லோரும் ஏற்றுக்கொண்டு இன்புறுவார்கள். இதுதான் பண்டைய இந்தியாவின் வழக்கம். இப்படித்தான் தத்துவம் வளர்ந்தது என்கிறார் மசுடி.

‘தத்துவத்திலிருந்துதான் பிளவுகளும் தோன்றியிருக்கின்றன. இந்துக்களில் ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்கென்று வகுக்கப்பட்டுள்ள நெறியைப் பின்பற்றும் முறை பண்டைய காலங்களில் நிலவிவந்தது. காலப்போக்கில் இந்த ஒழுங்குமுறை குலைந்தது. எனவே, பல்வேறு துண்டுகளாக அவர்கள் சிதறிப்போயினர்‘ என்கிறார் அல் மசுடி.

பண்டைய இந்துக்கள் உலகை எவ்வாறு கண்டனர்? ‘70,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகம் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளும் என்று அவர்கள் நம்பினர். அது நடக்கும்போது பழைய உலகம் மறைந்து புதிய உலகம் உதிக்கும். பழைய உலகின் தாவரங்களும் விலங்குகளும் இருந்த இடத்தில் புதிய தாவரங்களும் விலங்குகளும் உருவாகும். புதிதாக உருவாகி வருபவை முன்பைவிடக் கூடுதல் வளர்ச்சியைப் பெற்றிருக்கும். சில இந்துக்கள் காலத்தை ஒரு சக்கரமாக உருவகித்தனர். பழைய உலகம் மறையாது. சுழற்சியில் திரும்பிவரும்; மறையும்; மீண்டும் தோன்றும்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 45 - பண்டைய இந்து உலகம்

பண்டைய இந்தியாவை ஆண்ட ஒரு மன்னன்தான் சதுரங்க விளையாட்டைக் கண்டுபிடித்தான். அது குறித்து ஒரு நூலையும் அவன் இந்துக்களுக்காக எழுதிவைத்திருக்கிறான். இந்தியாவைப் பொறுத்தவரை சதுரங்கம் வெறும் விளையாட்டு மட்டுமல்ல. சதுரங்கக் கட்டங்களை நட்சத்திரங்களோடு தொடர்புபடுத்தி ஏதேதோ கணக்கீடுகளை அவர்கள் செய்கிறார்கள். போரில் எதிரியை வெல்வதற்கான வியூகங்கள் வகுக்கவும் சதுரங்கம் பயன்படுகிறது. எதிரிகளின் படைகள் என்று சொல்லி சதுரங்கக் காய்களை எதிர்ப் பக்கம் நிற்கவைத்துவிட்டு, அவர்களுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்று தம்முடைய சிப்பாய்களை அங்கும் இங்கும் நகர்த்தி, யோசிக்கிறார்கள். சதுரங்கக் கட்டங்களைக் கொண்டு பெருக்கல் வாய்ப்பாடு தொடர்பான சில ரகசிய சூத்திரங்களையும் அவர்கள் உருவாக்கியிருப்பதாகத் தெரிகிறது’ என்கிறார் அல் மசுடி.

‘இந்துக்கள் மது அருந்துவதில்லை’ என்கிறார் அல் மசுடி. மத நம்பிக்கைக்கு எதிரானது என்பதால் அல்ல. ‘மது அருந்தினால் புத்தி மயக்கம்கொள்ளும். மூளையால் நேராகச் சிந்திக்க முடியாது. சிந்திக்கவும் தர்க்கம் செய்யவும் இயலாது போனால் யார் வேண்டுமானாலும் தர்க்கத்தில் உங்களைத் தோற்கடித்துவிட முடியும். உங்கள்மீது ஆதிக்கம் செலுத்தவும் முடியும். இந்த அவலத்தை அனுமதிக்கக் கூடாது என்றால், மதுவைவிட்டு விலகியிருப்பதுதான் ஒரே வழி. மக்கள் மட்டுமல்ல, மன்னனும்கூட மது அருந்துவதில்லை. மது அருந்தும் மன்னன் தன் மணிமகுடத்தை இழக்கிறான்! தள்ளாடும் புத்தியோடும் உடலோடும் இருப்பவனால் எப்படி இந்தியாவை ஆள முடியும்?’

இப்படிச் சின்னச் சின்ன குறிப்புகளாக அடுக்கிக்கொண்டே போகிறார் அல் மசுடி. சில இடங்களில் பண்டைய இந்தியாவின் கதையைத் தனியாகவும், சில இடங்களில் சமகால இந்தியாவோடு இணைத்தும் அவர் விவரித்துச் செல்கிறார். இதில் அல் மசுடியின் முக்கியமான பண்பொன்றை கவனிக்க வேண்டும். ஆழ்ந்த நம்பிக்கையுள்ள இஸ்லாமியர் என்றாலும், இந்து மதத்தை மிகுந்த மரியாதையோடு மட்டுமே அவர் அணுகுகிறார். இந்துக்களின் நம்பிக்கைகளை, அவர்களுடைய பெருமிதங்களை, அவர்களுடைய கதைகளை, அவர்களுடைய பார்வைகளை அவர் புரிந்துகொள்ள மட்டுமே விரும்பினார். இப்படியொரு கதையை பிராமணர்கள் சொல்கிறார்கள், இந்துக்கள் இதை இப்படிப் பார்க்கிறார்கள் என்பதோடு முடித்துக்கொண்டு விடுவார். எதையும் மதிப்பீடு செய்வதில்லை. விமர்சிப்பதில்லை. அந்நிய நிலம், அந்நிய மதம், அந்நியப் பண்பாடு என்றாலும் பரிவோடு மட்டுமே எழுத முடிகிறது அவரால். பயண இலக்கிய வரலாற்றில் அதிகம் காணக் கிடைக்காத ஒரு பண்பு இது!

(விரியும்)