மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 46 - நான் கண்ட ராஷ்டிரகூடர்கள்!

ராஷ்டிரகூடர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராஷ்டிரகூடர்கள்

“அராபியர்களின் நுழைவைத் தடுத்து நிறுத்த, வட இந்திய மன்னர்கள் தீவிரமாகப் போராடிக்கொண்டிருந்தனர். அதில் வெற்றியும் பெற்றுவந்தனர்.”

மெகஸ்தனிஸ் என்றால் மௌரியர். யுவான் சுவாங் என்றால் ஹர்ஷர். அதேபோல் அல் மசுடி என்றால் ராஷ்டிரகூடர். `இந்தியாவின் தலைசிறந்த மன்னர் ராஷ்டிரகூடரே’ என்று அறிவிக்கிறார் அல் மசுடி. `இந்தியாவின் பெரும்பாலான சிறு, குறு மன்னர்கள் அவருடைய தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ராஷ்டிரகூடரைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள் என்று சொல்வதைவிட, அவர்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளனர் என்று சொல்வதே சரியாக இருக்கும். கடவுளை வழிபடும்போது, ராஷ்டிரகூடருக்கும் சேர்த்தே வேண்டிக்கொள்கிறார்கள். ராஷ்டிரகூடரின் அரண்மனையின் வேலைசெய்யும் பணியாளரைக்கூட ஏதோ பெரிய மனிதர்போல் மதிக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று வியக்கிறார் அல் மசுடி.

ராஷ்டிரகூடர்களின் எழுச்சி வியக்க வைக்கக்கூடிய ஒன்று. வடக்கில் நர்மதாவில் தொடங்கி தெற்கில் காவிரி வரை ஆட்சிப் பிரதேசத்தை விரிவாக்க முடிந்திருக்கிறது அவர்களால். இது ஏன் குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படுகிறது என்பதற்கான விடை, வரலாற்றைவிடப் புவியியலில்தான் அடங்கியிருக்கிறது. தக்காணத்தின் மேற்கிலும் வடக்கிலும் உருவாகும் அரசுகள் பொதுவாகப் பாலம்போல் ஊசலாடிக்கொண்டிருக்கும். மேலே போனால் வடக்கிலிருந்து அழுத்து வார்கள். கீழே சென்றால் தெற்கிலிருந்து எதிர்ப்பு வரும். வடக்கு அரசியல், தெற்கு அரசியல் இரண்டிலும் சிக்கிக்கொள்ளாமல், அடிபடாமல், உதை வாங்காமல் ஆட்சி செய்வதும் கயிற்றின்மீது குதிரை ஓட்டுவதும் ஒன்றுதான்.

அப்படியொரு சவாரியை வெற்றிகரமாகச் செய்தவர்கள் சாளுக்கியர்கள். அவர்களுக்குத் திறை செலுத்தி, தெற்கில் ஆட்சி செய்யத் தொடங்கியவர்கள்தான் ராஷ்டிரகூடர்கள். சாளுக்கியர்களின் கரம் சோர்ந்திருந்த ஒரு கட்டத்தில், சட்டென்று தாவி அவர்களை வீழ்த்திவிட்டு தங்கள் ஆட்சிப் பிரதேசத்தை விரிவாக்கிக்கொண்டார்கள். அதன் பிறகு இதையே ஓர் உத்தியாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்தனர். வடக்கு வாடினால் அங்கே ராஷ்டிரகூடர்களின் வாள் சுழலும். கீழே தெற்கு தேய்ந்தால் ராஷ்டிரகூடத் தவளையின் நாக்கு நீண்டு சென்று கைப்பற்றிவிடும்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 46 - நான் கண்ட ராஷ்டிரகூடர்கள்!

ஒவ்வொரு ராஷ்டிரகூடரும் 40 அல்லது 50 அல்லது அதைக் காட்டிலும் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்துவருவதாகக் குறிப்பிடுகிறார் அல் மசுடி. தந்திதுர்கா, கிருஷ்ணன், இரண்டாம் கோவிந்தன், துருவன், மூன்றாம் கோவிந்தன், அமோகவர்ஷன் என்று அடுத்தடுத்து வந்த மன்னர்கள் ராஷ்டிரகூடப் பேரரசை நன்றாக உருட்டித் திரட்டிப் பலப்படுத்தினார்கள். இவர்களில் அமோகவர்ஷன் ஒரு பக்கம் வீரத்துக்கு வீரம், இன்னொரு பக்கம் அன்போ அன்பு என்று கலவையாக வாழ்ந்திருக்கிறார். பல துறைமுக நகரங்கள் அவர் ஆட்சியில் செழித்து வளர்ந்திருக்கின்றன. அல் மசுடியின் வருகையின்போது ஆட்சியிலிருந்த ராஷ்டிரகூடர், மூன்றாம் இந்திரன்.

தக்காணத்தின் வரலாற்றை, குறிப்பாகக் கர்நாடகத்தின் முகத்தை மாற்றியமைத்தவர்கள் ராஷ்டிரகூடர்கள். அவர்களைச் சுருக்கமாக இப்படி அறிமுகப்படுத்தலாம். ஆழ்ந்த இறை நம்பிக்கையுள்ள இந்துக்கள். சிவனும் விஷ்ணுவும் அவர்களுடைய பிரதான கடவுள்கள். கலை, கட்டுமானம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்கள். ஒரே பாறையில் 100 அடி உயரத்தில் உருவான எல்லோரா கைலாசநாதர் கோயிலும், எலிபாண்டா குகைக் கோயில்களும் அவர்களுடைய புகழின் அழியாச் சாட்சியங்கள். அர்த்தநாரீஸ்வரர், மகேஷமூர்த்தி சிற்பங்கள் கலைப்படைப்பின் உச்சங்களாகக் கருதப்படுகின்றன. அக்ரஹாரங்களிலும் மடங்களிலும் சம்ஸ்கிருதம், வேதம், ஜோதிடம், தர்க்கம், புராணம் ஆகியவை கற்பிக்கப்பட்டன. கன்னடம், சம்ஸ்கிருதம் இரண்டுக்கும் ஆதரவு அளித்தனர். இந்துக் கோயில்கள் கட்டுவதில் காட்டிய அதே முனைப்பை, சமணர் கோயில்களைக் கட்டுவதிலும் காட்டியிருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தின் பட்டடக்கல்லில் அமைந்துள்ள அழகிய சமணக் கோயில் அதற்கான சான்று. இந்தத் தாராளப் போக்கினால் இந்து மதம்போலவே சமணமும் தழைத்தது.

சமணம் மட்டுமின்றி இஸ்லாத்தையும் ராஷ்டிரகூடர்கள் ஆதரித்ததை அல் மசுடியின் பதிவுகளைக்கொண்டு அறிய முடிகிறது. `வட இந்தியாவில் காணக் கிடைக்காத தனிச்சிறப்புமிக்க ஒரு குணநலன் இது’ என்று மனம் திறந்து பாராட்டுகிறார் அல் மசுடி. `ராஷ்டிரகூடர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்கள். இஸ்லாத்தை இந்துக்கள் வெறுமனே சகித்துக்கொள்வதோடு நிறுத்திக்கொள்வதில்லை. இஸ்லாத்தை அவர்கள் விரும்பவும் செய்கிறார்கள்’ என்கிறார் அல் மசுடி. `ஓர் இஸ்லாமியரால் தக்காணத்தில் தன் மத நம்பிக்கையைச் சுதந்தரமாக பின்பற்ற முடிகிறது. மசூதிகளில் சென்று நிம்மதியாக வழிபட முடிகிறது. ஒரு முஸ்லிம் எந்த இடையூறும் இன்றி ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகை நடத்துவதைக் கண்டேன்’ என்கிறார் அல் மசுடி.

`தெற்கில் மதச் சுதந்திரம் தழைப்பதற்கு ராஷ்டிரகூடர்களே காரணம்’ என்கிறார் அல் மசுடி. `நீதியின் ஒளியில் ஒரு மன்னர் ஆட்சி செய்யும்போது அவர் நிலத்தில் எல்லாவிதமான நம்பிக்கைகளும் தழைக்கின்றன. எல்லாச் சமயங்களும் வலுக்கின்றன. எல்லா நம்பிக்கைகளும் சமமாக அங்கீகரிக்கப்படுகின்றன. ராஷ்டிரகூடர்கள் நீதியின் பால் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்துக்களாக இருந்தாலும் மதச்சார்பற்றவர்களாக இருக்கிறார்கள். இந்துக்களுக்கு ஒரு நீதி, சமணர்களுக்கு ஒரு நீதி, இஸ்லாமியர்களுக்கு இன்னொரு நீதி என்று அவர்கள் பாகுபடுத்துவதில்லை. ஒரு மன்னரின் இடத்துக்கு இன்னொருவர் வந்தாலும் அவரும் மதச்சார்பற்றவராகவே இருக்கிறார். ராஷ்டிரகூட வம்சத்தை இதுவே வாழவைக்கிறது’ என்கிறார் அல் மசுடி.

குஜராத்தில் காம்பத் என்னும் இடத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கே ஒரு பிராமணர் ராஷ்டிரகூடரின் சார்பில் நிர்வாகம் செய்துவந்ததைக் கண்டார். இஸ்லாமியர்களின் நிலை அங்கு எப்படி இருக்கிறது என்று ஆராய்ந்திருக்கிறார். ராஷ்டிரகூடரின் நேரடி ஆட்சியில் இஸ்லாமியர்கள் எந்த அளவுக்கு மதிப்போடு நடத்தப்பட்டனரோ அதே மதிப்பை இங்கும் இஸ்லாமியர்கள் பெற்றதை அறிந்து மகிழ்ந்தார். நிர்வாகத்தை நடத்திவந்த பிராமணர், முஸ்லிம்களோடு அவர்களுடைய மத விவகாரங்கள் தொடர்பாக இயல்பாக உரையாடு கிறாராம். அவர்களுடைய தத்துவங்களையும் பார்வைகளையும் புரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறாராம்.

சால் என்னும் பகுதியில் (இன்றைய மகாராஷ்டிரா) சுமார் பத்தாயிரம் முஸ்லிம்கள் வசிப்பதாகச் சொல்கிறார். பாக்தாத் தொடங்கி பல பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் இங்கு வந்து இயல்பாகக் குடியேறியிருக்கிறார்களாம். அவர்களுடைய தேவைகளை கவனித்துக் கொள்வதற்கென்றே பிரத்யேகமாக ஓர் இஸ்லாமிய அதிகாரியை நியமித்திருக்கிறார்கள். இப்படியோர் ஆரோக்கியமான சூழலைத் தக்காணம் தவிர இந்தியாவில் வேறு எங்கும் அல் மசுடியால் காண இயலவில்லை.

`மதச்சார்பின்மை முதல் பலம் என்றால், ராணுவம் இரண்டாவது பலம். ராஷ்டிரகூட மன்னர் தன்னுடைய ராணுவத்தைத் தானே நேரடியாக நிர்வகிக்கிறார். படை வீரர்களுக்கும் தளவாடங்களுக்குமான நிதியை தானே தன் கஜானாவிலிருந்து அளிக்கிறார். பொதுவாக இஸ்லாமிய ஆட்சியாளர்கள்தான் இவ்வாறு செயல்படுவது வழக்கம். அந்த வழக்கத்தையே ராஷ்டிரகூடர்களும் பின்பற்றுவதை இங்கு வந்துதான் பார்த்தேன்’ என்கிறார் அல் மசுடி. ஒரு மன்னர் தன் படை வீரர்களுக்குச் செலவழிப்பது அதிசயம் என்றால் பொது வழக்கம்தான் என்ன? போர் என்று அறிவிப்பு வந்தால் தகுதி வாய்ந்த அனைத்து ஆண்களும் அவரவர் ஆயுதங்களோடு போருக்குக் கிளம்பி வந்துவிட வேண்டும். இது அரசுக் கட்டளை. அழைப்பு தவிர, வேறு எதுவும் மன்னரிடமிருந்து கிடைக்காது. அவ்வாறு இல்லாமல் ராணுவத்துக்குத் தனியே நிதி ஒதுக்கி தக்கவைத்துக் கொள்வதன் மூலம் ராஷ்டிரகூடர்களால் பல போர்களில் வெல்ல முடிகிறது என்கிறார் அல் மசுடி.

ராணுவம் குறித்து இன்னொரு செய்தியையும் பகிர்ந்துகொள்கிறார். தலைநகரம், மலைக்கு அருகில் இருப்பதாலும், பெரும்பாலும் மலை சூழ்ந்த பகுதிகளைத்தான் ராஷ்டிரகூடர் ஆள்கிறார் என்பதாலும் காலாட் படையின் எண்ணிக்கைதான் எப்போதும் அதிகம் இருக்குமாம்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 46 - நான் கண்ட ராஷ்டிரகூடர்கள்!

இரு பலங்களையும் விவரித்த பிறகு, இரண்டில் எது பிரதானமானது என்பதையும் அல் மசுடியே உணர்த்திவிடுகிறார். `எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் தன்மையின் மூலம் உள்நாட்டில் மட்டுமின்றி வெளி நிலங்களிலும் ராஷ்டிரகூடர்கள் தங்கள் செல்வாக்கைப் படரவிட்டிருக்கின்றனர். பாரசீகத்தோடும் அரேபியாவோடும் நல்ல வர்த்தக உறவுகளை வளர்த்துக்கொண்டிருந்த ஒரே ஆட்சியாளர் ராஷ்டிரகூடர் மட்டுமே’ என்கிறார் அல் மசுடி. எத்தகைய பின்னணியில் இந்த உறவு வளர்ந்திருந்தது என்பது முக்கியமானது. இந்தியாவைக் கைப்பற்ற அராபியர்கள் அடுத்தடுத்து பல போர்களை நடத்திவந்த காலம் அது. அராபியர்களின் நுழைவைத் தடுத்து நிறுத்த, வட இந்திய மன்னர்கள் தீவிரமாகப் போராடிக்கொண்டிருந்தனர். அதில் வெற்றியும் பெற்றுவந்தனர்.

இந்தியாவின் தலைப்பகுதி கொந்தளித்துக் கொண்டிருந்தபோது, தக்காணத்தில் ராஷ்டிரகூடர்கள் அராபியர்களோடு கைகுலுக்கிக்கொண்டிருந்தனர். துறைமுகங்கள் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தன. அராபியர்களும் வருவதும் போவதுமாக இருந்தனர். அராபிய வணிகம் மூலம் ராஷ்டிர கூடர்கள் நல்ல ஆதாயம் பெற்று வந்ததை கர்நாடகாவிலுள்ள தார்வாட் மாவட்டத்தில் கிடைத்த கல்வெட்டுகள் உறுதிசெய்கின்றன. வடக்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். நாங்கள் எங்களுக்குச் சரியென்று படுவதைத்தான் செய்வோம் என்பதே ராஷ்டிர கூடர்களின் அணுகுமுறையாக இருந்திருக்கிறது.

மொழி, பண்பாடு, அரசியல், சமயம், கட்டுமானம், போர்முறை என்று பலவற்றை ஒப்பிட்டுப் பார்த்துவிட்டேன். தக்காணம் எந்தவகையிலும் வட இந்தியாவைப்போலவே இல்லை. அது ஒரு தனி உலகமாகவே இருக்கிறது என்கிறார் அல் மசுடி. ராஷ்டிரகூடர்களின் இதயம்போல் எல்லோருடைய இதயமும் பரந்து விரிந்திருந்தால், இந்த உலகில் சண்டையோ சச்சரவோ என்றுமே இருக்க முடியாது அல்லவா?

(விரியும்)