
உண்டியலை உடைத்தால் காசு கிடைக்கும் என்பதுபோல், கோயிலை உடைத்தால் பொன்னும் பொருளும் கிடைக்கும் என்பது கஜினி முகமதுவுக்குத் தெரியும்;
பிர்தௌசி ஒரு புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர். அரண்மனைப் புலவரான இவரை ஒரு நாள் கஜினி முகமது அழைத்து, பாரசீகப் பேரரசின் மகத்தான வரலாற்றை எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார். `ஓ, தாராளமாக எழுதுகிறேன் மன்னா’ என்று மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்ட பிர்தௌசி, அடுத்த 27 ஆண்டுகள் உழைத்து, செதுக்கி உருவாக்கிய மாபெரும் காப்பியம்தான் ‘ஷாநாமா.’ 50,000 ஈரடிச் செய்யுள்களைக்கொண்டு கட்டமைக்கப்பட்ட ஷாநாமா உலகின் நீளமான காப்பியங்களில் ஒன்று. பாரசீகத்தின் வரலாற்றைத் தொன்மக் கதைகளோடு இணைத்து உருவாக்கப்பட்ட அழகிய படைப்பு இது. `கவலைப்படாமல் எழுதுங்கள், ஒவ்வொரு செய்யுளுக்கும் ஒரு தினார் அளிக்கிறேன்’ என்று ஊக்கமளித்திருந்தார் கஜினி முகமது.
கவிஞர் என்னவோ தன் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார். ஆனால் கஜினி முகமது ஒப்புக்கொண்ட சன்மானத்தை அளிக்க மறுத்துவிட்டார். வெகுண்டெழுந்தார் பிர்தௌசி. ‘ஏ, கொடுங்கோலனே! சிறுமை மிக்கவனே! என் சினமும் என் சொற்களிலிருந்து புறப்பட்டுவரும் தீயும் உன்னை நடுநடுங்க வைக்கும்! சொர்க்கம் உன்னை ஒருபோதும் மன்னிக்காது!’ ஒரு கவிஞனின் சாபத்துக்கு ஆளானதாலோ என்னவோ, வரலாற்றில் இவர் பெயரைச் சுற்றி அடர் இருள் இன்னமும் படர்ந்துகிடக்கிறது. இந்தியாவுக்கு இதுவரை வருகை தந்தவர்களில் அதிக வெறுப்பையும், அதிக எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொண்டவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் கஜினி முகமதுவின் பெயர் இடம்பெற்றுவிட்டது.

பாஹியானையும் யுவான் சுவாங்கையும் அறிவுச் செல்வம் கவர்ந்திழுத்தது என்றால், கஜினி முகமதுவை இந்தியாவின் பொருள் செல்வம் ஈர்த்தது. 1000-ம் ஆண்டுவாக்கில் பெரும் படையைத் திரட்டிக்கொண்டு வட இந்தியாவுக்குள் நுழைந்தார். இந்தியா குறித்துக் கேள்விப்பட்ட கதைகளெல்லாம் கதைகளல்ல என்பதைக் கண்ணாரக் கண்டார். உலகிலேயே வளமான இடம், உலகின் பலவீனமான இடமாகவும் இருந்ததைக் கண்டு அவர் கண்கள் விரிந்தன. வாள் துடித்தது.
அடுத்த 25 ஆண்டுகளில் 17 முறை படையெடுத்து இந்தியாவுக்கு வந்தார் கஜினி முகமது. கோடை விடுமுறைக்கு வருவதுபோல் கொளுத்தும் வெயிலில் புழுதி கிளப்பியபடி அவர் படைகள் வந்துசேரும். பருவமழை வருவதற்கு முன்னால் கிளம்பிச் சென்றுவிடும். மழை அதிகரித்து, பஞ்சாப் நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுவிட்டால் ஊர் போய்ச் சேர முடியாது என்பதால், இந்த ஏற்பாடுபோலும். தொடங்கியது வடக்கில் என்றாலும், மத்திய இந்தியா, கிழக்கு, தெற்கு என்று ஒவ்வோர் ஆண்டும் கொள்ளையை விரிவுபடுத்திக் கொண்டே சென்றார் கஜினி முகமது.
செல்வம் எங்கே இருக்கும் என்று தேட வேண்டிய அவசியமே இல்லை. உண்டியலை உடைத்தால் காசு கிடைக்கும் என்பதுபோல், கோயிலை உடைத்தால் பொன்னும் பொருளும் கிடைக்கும் என்பது கஜினி முகமதுவுக்குத் தெரியும்; உடைப்பார். தங்கம், வெள்ளி, ஆபரணங்கள் என்று வழிய வழிய சூறையாடி எடுத்துச் சென்றார். வட இந்தியாவை ஆண்டுவந்த பிரதிகாரப் பேரரசு, மத்திய இந்தியாவின் சந்தேலர்கள், குவாலியரின் ராஜபுத்திரர்கள் என்று யாராலும் கஜினி முகமதுவின் வருகையையும் கொள்ளையையும் தடுத்துநிறுத்த முடியவில்லை. கனோஜ், மதுரா, தானேஸ்வரம் ஆகிய பகுதிகள் கஜினி முகமது வந்துசென்ற பிறகு சிதிலங்களாகவே மாறிவிட்டன. எல்லாவற்றுக்கும் உச்சமாகக் கருதப்படுவது குஜராத் சோமநாதர் சிவன் கோயில் இடிப்பு.
அலெக்சாண்டருக்குப் பிறகு, நாம் சந்திக்கும் அடுத்த அந்நிய ஆக்கிரமிப்பாளர் கஜினி முகமது. கஜினி என்பது இப்போதைய ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஒரு நகரம். அங்கே பிறந்தவர் என்பதால் முகமதுவின் பெயரோடு ஊர் பேரும் ஒட்டிக்கொண்டுவிட்டது. அகண்ட கஜினி பேரரசு உருவாக்கும் பெருங்கனவோடு ஒரு பக்கம் ஆக்கிரமிப்பிலும், இன்னொரு பக்கம் கொள்ளையிலும் இறங்கினார் கஜினி முகமது. ஆட்சியிலிருந்த 30 ஆண்டுகளும் இந்த இரண்டும் தடையின்றித் தொடர்ந்தன. கோயில் சொத்துகளை மட்டுமின்றி, யானைகளையும் அவர் இங்கிருந்து கவர்ந்து சென்றிருக்கிறார். தவிரவும், இந்தியர்கள் பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அடிமைகளாகவும், போர் வீரர்களாகவும் அவர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பெருமளவிலான மதமாற்றங்களும் நடைபெற்றிருப்பதாகக் குறிப்புகள் சொல்கின்றன.
இங்கேதான் நம் பார்வை சிக்கலானதாக மாறுகிறது. கஜினி முகமது இந்தியாவில் இழைத்த கொடுமைகளுக்கான சான்றுகளை, அவரே அமர்த்திய அரசவை அறிஞர்களே போதுமான அளவுக்கு வழங்கியிருக்கிறார்கள். ஆனால், கொடுமைகள் என்னும் தலைப்பில் அல்ல. எங்கள் பேரரசர் எத்தனை ஆயிரம் இந்துக்களைக் கொன்றிருக்கிறார் தெரியுமா... இஸ்லாத்துக்கு விரோதமான எத்தனை கோயில்களை அவர் கரங்கள் உடைத்து நொறுக்கியிருக்கின்றன தெரியுமா... எத்தனை பேரை வாள் முனையில் அவர் மதமாற்றம் செய்து நம் மதத்தை உய்வித்திருக்கிறார் என்பதை அறிவீர்களா? என்கிறரீதியில் தங்கள் பேரரசரை ஏற்றியும் போற்றியும் அமைந்துள்ள பதிவுகள் இவை.
அதனாலேயே இவற்றை முழுக்க நம்பி ஏற்க இயலாது என்று ரொமிலா தாப்பர் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் வாதிடுகிறார்கள். சோமநாதர் கோயில் பற்றித் தனி ஆய்வு நூலையே அவர் எழுதியிருக்கிறார். கஜினி முகமது ஒரு கொடுங்கோலர்தான்; கொடுந்தவறுகள் இழைத்தவர்தான். கோயில்களிலிருந்து செல்வங்களை வாரிச்சுருட்டிக் கொண்டவர்தான். ஐயமில்லை. ஆனால், இவற்றுக்கெல்லாம் வகுப்புவாதச் சாயம் பூசுவது எந்த அளவுக்குச் சரியாக இருக்க முடியும்... மதம்தான் அவருடைய உந்துசக்தியா... இந்துக் கோயில்களை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவற்றை இடித்தாரா அல்லது கொள்ளையடிப்பதற்காக இடித்தாரா?
இந்துக்களுக்கு என்னென்ன கொடுமைகள் இழைத்தாரோ அதே கொடுமைகளைத்தான் தாம் ஆக்கிரமித்த பிற பகுதிகளிலும் கஜினி முகமது இழைத்திருக்கிறார். இந்துக்களிடமிருந்து மட்டுமல்ல, இஸ்லாமியர்களிடமிருந்தும் அவர் கொள்ளையடித்தார், அவர்களையும் அடிமைப்படுத்தியிருக்கிறார். அவரிடம் இருந்தது இந்து வெறுப்பு ஒன்றுதான் என்றால், தன் படைகளில் ஏன் அவர் இந்துக்களை இணைத்துக்கொள்ள வேண்டும்... சிப்பாய்களாக மட்டுமின்றி, ராணுவத் தலைமையிடங்களிலும் ஏன் இந்துக்களை அமர்த்த வேண்டும்?
கஜினி முகமது குறித்து இவ்வாறெல்லாம் நாம் இன்று உரையாடிக்கொண்டிருப்பதற்கும், கேள்விகள் எழுப்பிக்கொண்டிருப்பதற்கும் காரணம், அவரே நியமித்த வரலாற்றாசிரியர்கள் எழுதிவைத்துள்ள பதிவுகள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அல்பெரூனி. இந்தியாவுக்குப் படையெடுத்துவரும்போது அவருடன் இணைந்து வந்தவர் அல்பெரூனி. இணைந்து என்பதைவிட, அவரால் இழுத்துவரப்பட்டவர் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். கஜினி எதை விரும்புவாரோ அதை மட்டுமே எழுத முடியும் என்பதால், அவருடைய சாகசங்களை மட்டுமே முதலில் பதிவுசெய்தார் அல்பெரூனி. கஜினி இறந்த பிறகு, தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தன் மனதுக்குப்பட்டதை அச்சமின்றி, வெளிப்படையாக எழுத ஆரம்பித்தார். இந்தியாவிலேயே சில ஆண்டுகள் தங்கியிருக்கும் வாய்ப்பு அமைந்ததால், இந்தியாவை நுணுக்கமாக ஆராயவும், பதிவுசெய்யவும் அவருக்கு வாய்ப்பு அமைந்தது.

அல்பெரூனியை ஒரே சொல்லில் அறிமுகம் செய்ய வேண்டுமென்றால், `பல்துறையறிஞர்’ என்று அழைக்கலாம். அல் மசுடிபோலவே இவரும் இஸ்லாமிய மறுமலர்ச்சியால் வளர்த்தெடுக்கப்பட்டவர். இந்த நோக்கத்துக்காக, அந்த நோக்கத்துக்காக என்றில்லாமல், அறிவை அறிவுக்காகத் தேடிச் சேகரித்தவர். வானியல், கணிதம், இயற்பியல், புவியியல், இலக்கணம், மொழி, மருத்துவம், வரலாறு என்று அவர் ஆர்வம் செலுத்திய, ஆழப்படுத்திய துறைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இவர் போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு துறையையும் கற்றுத் தேர்ந்ததைப்போல், துறைகளும் அவர் எமக்கானவர் என்று போட்டிபோட்டுக்கொண்டு உரிமை கொண்டாடின. முதல் மானுடவியலாளர். ஒரு மதத்தை இன்னொன்றோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வுசெய்யும் ஒரு புதுத் துறையின் தந்தை. புவி அறிவியலின்கீழ் ஒரு பிரிவைத் தொடங்கிவைத்தவர். இந்தியவியலின் தந்தை. இப்படிப் பல புகழ் மகுடங்கள் அவருக்கு.
அல்பெரூனி எழுதிய புத்தகங்கள் என்று இன்று நம்மிடம் இருப்பவை 22. அறிவியல், தத்துவம், கணிதம் என்று பல துறைகளில் அவர் எழுதிவைத்தவை மொத்தம் 141 நூல்கள். இன்றைய உஸ்பெகிஸ்தானில் 973-ம் ஆண்டு பிறந்தவர் அல்பெரூனி. ஒரே நேரத்தில் இஸ்லாத்தின்மீதும் அறிவியலின்மீதும் அவர் ஆர்வம் படர்ந்தது. இறுதிவரை இரண்டிலும் அவர் தோய்ந்திருந்தார். புதிய மொழிகளைக் கற்பது அவருக்கு எளிதாக இருந்தது. சம்ஸ்கிருதம், ஹீப்ரூ, பாரசீகம், சிரியன், அரபு என்று தொடங்கி, பல மொழிகளை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டார். சாக்ரடீஸ், பிளேட்டோ தொடங்கி கிரேக்கச் சிந்தனையாளர்களின் தாக்கத்துக்கு உள்ளானார். அறிவுத் தேடல் அவரைப் பல இடங்களுக்கு இட்டுச் சென்றது. அங்கு சுற்றி, இங்கு சுற்றி கடைசியில் கஜினி முகமதுவின் நிழலில் ஒதுங்கினார்.
தன் வாள் முனையின் கீழ், அவரை அடக்கிவிட முடியும் என்றுதான் கஜினி நினைத்தார். அல்பெரூனியோ தனது பேனாவின் முனையால் கஜினியையும், கஜினியால் வெல்ல முடியாத இந்தியாவையும் ஒருசேர வென்றெடுத்தார்.
இந்தியா, கஜினி முகமதுவை வெறுத்தது. அல்பெரூனியை அள்ளியணைத்துக்கொண்டது. கஜினி இந்தியாவை இருளில் தள்ளினார் என்றால், அல்பெரூனி ஒளி பாய்ச்சினார். கஜினி, சுரண்டிச் சுரண்டி எடுத்துச் சென்றார் என்றால் அல்பெரூனி அள்ளி அள்ளி வழங்கிவிட்டுச் சென்றார். கஜினியின் மதம்தான் அல்பெரூனியின் மதமும். ஆனால் அல்பெரூனியின் நம்பிக்கை பரந்தும் விரிந்தும் இருந்ததால், இந்தியாவால் அவர் கரங்களுக்குள் கட்டுண்டு கிடக்க முடிந்தது.
(விரியும்)