
கஜினியின் கோயில் இடிப்புகளையும், கொள்ளைகளையும் வன்மையாகக் கண்டிக்கிறார் அல்பெரூனி.
முகமது கஜினியோடு இந்தியாவுக்கு வந்தபோது, அல்பெரூனியின் வயது 44. வானியலில் அவருக்கு இருந்த நிபுணத்துவம் காரணமாக ஜோதிடராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஒரு கொடுங்கோலரான கஜினி முகமதுவின் அவையில் ஏன் சேர வேண்டும் அல்பெரூனி? ஏனெனில், கஜினி முகமதுவுக்கு இன்னொரு முகம் இருந்தது. கவிஞர்கள், வரலாற்றாசிரியர்கள், கலைஞர்கள், பல்கலை நிபுணர்கள் போன்றோரைத் தன் அவையில் அவர் அமர்த்தியிருந்தார். ஷாநாமா இயற்றிய பிர்தௌசிக்குச் சன்மானம் அளிக்காமல் ஏமாற்றியவர்தான் என்றாலும், அவரிடமிருந்து நிதியுதவி பெற்றவர்கள் பலர். இந்தியா தொடங்கி பல இடங்களில் கொள்ளையடித்து எடுத்துவந்த செல்வத்தைக்கொண்டு கஜினியை அறிவு செழிக்கும் ஒரு பகுதியாக மாற்றியமைக்கும் முயற்சிகளில் கஜினி ஈடுபட்டிருக்கிறார்.
அதன் ஒரு பகுதியாக, திறமையாளர்களைக் கண்டறிந்து பல பகுதிகளிலிருந்து தன் அவைக்கு அழைத்துவந்திருக்கிறார் கஜினி முகமது. அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் அல்பெரூனி. ஒரு பேரரசரின் பாதுகாப்பில் இருப்பது, அறிவியல் ஆய்வுகளுக்கும் பயணங்களுக்கும் பயன்படும் என்பது அல்பெரூனியின் எதிர்பார்ப்பு. ஆனால், அதற்காகத் தன் விழுமியங்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை அவர். கஜினியின் அரசவையை அலங்கரித்த மற்றவர்களிடமிருந்து அல்பெரூனியை வேறுபடுத்திக் காட்டும் முக்கியமான அம்சம் இது.
கஜினியின் கோயில் இடிப்புகளையும், கொள்ளைகளையும் வன்மையாகக் கண்டிக்கிறார் அல்பெரூனி. சோமநாதர் கோயில் லிங்கத்தை கஜினி முகமது எவ்வாறு பொடிப் பொடியாக உடைத்து தன்னோடு எடுத்துச் சென்றார் என்பதையும், அவர் செயல்கள் இந்தியாவை எந்த அளவுக்கு ஆழமாக பாதித்தன என்பதையும் விரிவாக விவரிக்கிறார் அல்பெரூனி. இந்தியாவின் வளமையை கஜினி குலைத்துவிட்டார் என்று நேரடியாகவே குற்றம்சாட்டுகிறார். கஜினியின் ஆபத்தான படைகளைக் கண்டு அணுத்துகள்கள்போல் இந்துக்கள் எல்லாத் திசைகளிலும் சிதறி ஓடுவதைக் கண்டு உள்ளம் கலங்குகிறார்.

இந்தியர்கள் இதையெல்லாம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை. மன்னிக்கப்போவதும் இல்லை. இந்துக்களின் மனதில் கஜினி ஏற்படுத்திய வடுக்கள் ஆழமாகப் பதிந்துவிட்டன. அந்த வடுக்களின் கதைகளை அவர்கள் ஒரு மனதிலிருந்து இன்னொன்றுக்கு, ஒரு தலைமுறையிலிருந்து இன்னொன்றுக்கு, ஒரு காலத்திலிருந்து இன்னொரு காலத்துக்குக் கடத்திக்கொண்டேதான் இருக்கப்போகிறார்கள். கஜினிமீதான அவர்கள் வெறுப்பு ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள்மீதான வெறுப்பாக மாறவும்கூடும் என்று எச்சரிக்கிறார் அல்பெரூனி. எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசனம்!
இஸ்லாமியர்களிடமிருந்து மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லோரிடமிருந்தும் இந்துக்கள் வேறுபடுகின்றனர். வேறெவரையும்போலன்றி தனித்துச் சிந்திக்கிறார்கள். தனித்து இயங்குகிறார்கள். அவர்களுக்கு மட்டும் இது எப்படிச் சாத்தியமானது? இந்த அடிப்படையைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தோடு இந்து உலகை நெருங்கிச் சென்று ஆராயத் தொடங்கினார் அல்பெரூனி. இந்துக்களின் புனித ஏடுகள், தொன்மங்கள், இதிகாச புராணங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள் என்று எந்தவோர் அம்சத்தையும் விட்டுவிடாமல் கற்றுக் கொண்டதோடு நில்லாமல், ஒவ்வொன்றைப் பற்றியும் தன் பார்வையைப் பகிர்ந்துகொள்கிறார் அல்பெரூனி. நிறைகளை வியக்கும்போதும் சரி, குறைகளைக் கவனப்படுத்தும்போதும் சரி. தயக்கமே இல்லை அவரிடம்.
மொழியிலிருந்து தொடங்குகிறார். சம்ஸ்கிருதம் மிகவும் சிக்கலான மொழியாக இருக்கிறது. அரபுபோல் ஒரு சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. ஒன்றையே பல பெயர்களால் அழைக்கிறார்கள். எந்த இடத்தில், எவ்வாறு கையாளப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் எந்தவொரு சம்ஸ்கிருதச் சொல்லுக்கும் பொருள் கூற முடியும். புதிதாகக் கற்பவர்களுக்கு நிச்சயம் சம்ஸ்கிருதம் மிகக் கடினமாகவே இருக்கும். `இந்துக்களுக்குத் தங்கள் மொழிமீது மிகுந்த பெருமிதம் உள்ளது. ஆனால் இவ்வளவு கடினமாகவும், மற்றவர்கள் கண்டு அஞ்சும்படியாகவும் ஒரு மொழி இருப்பது பலமா, பலவீனமா?’ என்று கேள்வி எழுப்புகிறார் அல்பெரூனி.
`இந்துக்கள் தங்களுக்குள் சமயப் பூசல்கள் கொள்வதில்லை. அப்படியே மோதல்கள் வந்தாலும் கருத்துகள்தான் மோதிக்கொள்கின்றனவே ஒழிய, கரங்கள் அல்ல’ என்கிறார் அல்பெரூனி. ஆனால் அந்நியர்களோடு அவர்கள் காரசாரமான மோதலில் ஈடுபடுகிறார்கள். ‘மிலேச்சர்கள்’ என்று அந்நியர்களை அவர்கள் வகைப்படுத்துகிறார்கள். சக இந்துக்களைப்போல் மிலேச்சர்களை அவர்கள் நடத்துவதில்லை. மிலேச்சர்களை அசுத்தமானவர்களாகக் கருதி ஒதுக்குகிறார்கள். அவர்களோடு கலந்து பழகுவதில்லை. ஒன்று சேர்ந்து அமர்வதையும், உண்பதையும், ஏன் நீர் அருந்துவதையும்கூடத் தவிர்த்துவிடுகிறார்கள். அவ்வாறு செய்வது தங்கள் பரிசுத்தத்தைப் பாழாக்கிவிடும் என்று அஞ்சுகிறார்கள். மிலேச்சர்களோடு இந்துக்கள் நட்போ, திருமண உறவோ கொள்வதில்லை என்பதைத் தனியே சொல்லவேண்டியதில்லை அல்லவா?
சுத்தத்துக்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்கள் எதையெல்லாம் அசுத்தமாகக் கருதுகிறார்கள் என்பதைப் பார்த்தால் நமக்குக் குழப்பமாக இருக்கும். எடுத்துக்காட்டுக்கு, அந்நியர்களின் அடுப்பில் வெந்த உணவு அவர்களுக்கு அசுத்தமானது. அந்நியர் வீட்டு நீர் அருந்துவதற்கு ஏற்றதல்ல. நெருப்பிலும் நம் நெருப்பு, அவர்கள் நெருப்பு என்று பிரித்துப் பார்க்கிறார்கள். யார் வீட்டிலிருந்து வருகிறது என்பதைப் பொறுத்து நீரின் தூய்மை அமைகிறது. தம்மைப் போலல்லாதவர்களை அவர்கள் ஒருபோதும் அருகிலும் அனுமதிப்பதில்லை. இந்துக்கள் தங்கள் தனித்துவத்தைப் பேணும் முறைகளில் இதுவும் ஒன்றாக இருக்குமோ என்று யோசிக்கிறார் அல்பெரூனி.
`நம் ஆடை, நம் தோற்றம், நம் பழக்கவழக்கங்கள் அனைத்தும் அவர்களிடமிருந்து வேறுபடுவதைப் பார்த்துவிட்டு நம்மையெல்லாம் சாத்தானின் குழந்தைகள் என்று அவர்கள் கருதிவிட்டார்கள் போலிருக்கிறது. குழந்தைகளிடம் நம்மைப் பூச்சாண்டிபோல் காட்டுகிறார்கள். ஆனால், ஒன்றை இங்கே ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்’ என்கிறார் அல்பெரூனி. அந்நியர்களைப் பார்த்து அஞ்சும், குழம்பும் பண்பு இந்துக்களிடம் மட்டுமா இருக்கிறது... எல்லோருக்கும் இருப்பதுதானே?
தவிரவும், இந்துக்கள் பாவம் இல்லையா... அவர்கள் நாட்டுக்குள் மேலும் மேலும் இஸ்லாமியர்கள் ஊடுருவும் நிலையில் நம்மைக் கண்டு அஞ்சாமல் என்னதான் செய்வார்கள்... ஆக்கிரமிக்க வரும் இஸ்லாமியர்கள் (கஜினி முகமது போன்றவர்கள்) படுத்தியெடுக்கும்போது இந்துக்கள் நம்மை வெறுத்தொதுக்குவது இயல்புதானே... போட்டது போட்டபடி காஷ்மீருக்கும், காசிக்கும், வேறு பல பகுதிகளுக்கும் இந்துக்கள் தப்பியோடி மறைந்ததற்கு யார் காரணம்? அந்நியர்களோடு ஒன்று கலக்க இந்துக்கள் அஞ்சுகிறார்கள் என்பதை மாத்திரம் பதிவுசெய்தால் போதாது. அவர்கள் அச்சத்துக்கு இப்படிப்பட்ட அரசியல் காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணங்கள் வலுவானவை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்?’ என்று வாதிடும் அல்பெரூனி நம்மையெல்லாம் ஆச்சர்யப்படுத்துகிறார். தன்னுடைய தனிப்பட்ட அடையாளத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்துக்களின் நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்து ஆராயும் இந்தப் போக்கை அறிவியல் தவிர வேறு எது அவருக்கு அளித்திருக்க முடியும்?
இந்துக்கள் மீது அல்பெரூனி கொண்டிருந்த கரிசனம், இதுவரை வருகை புரிந்த எந்தப் பயணியிடமும் நாம் காணாத ஒன்று. இந்துக்களை அபார சக்திகள் கொண்டிருக்கும் அதிசயப் பிறவிகளாகவும் அவர் பார்க்கவில்லை; நாகரிக அளவுகோலில் தாழ்வானர்களாகவும் கருதவில்லை. அறிவியல் நோக்கில் அவர்களை உள்ளது உள்ளபடியே ஏற்றுக்கொண்டு ஆராய்கிறார் அல்பெரூனி.

`அந்நியர்களை ஒதுக்குவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஓர் இந்து, இன்னோர் இந்துவை அவர் வேறோரு சாதியைச் சார்ந்தவர் என்னும் ஒரே காரணத்துக்காக ஒதுக்குவதைத்தான் ஏற்க முடியவில்லை’ என்கிறார் அல்பெரூனி. மாற்றுச் சாதியினரோடு தன் அறிவைப் பகிர்ந்துகொள்ள ஓர் இந்து தயாராக இல்லை. ஒளிவுமறைவின்றி உரையாடுவதற்கு அவர் ஏனோ தயங்குகிறார். ஏன் இப்படிச் செய்ய வேண்டும்?
நால்வர்ணப் பாகுபாடு அல்பெரூனியின் மனதில் ஆழமாகப் பதிந்துபோனது. ஒரு வர்ணத்தார் இன்னொரு வர்ணத்தாருடன் அமர்ந்து உண்ண முடியாது. பலவிதமான பணிவிடைகளைச் செய்வதற்கென்றே ஒரு பிரிவை உருவாக்கிவைத்திருக்கிறார்கள். அந்தப் பிரிவிலிருப்பவர்கள் தாழ்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நான்கு வர்ணத்து மக்களோடும் இவர்கள் கலக்க முடியாது. நகரங்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் மிகவும் தள்ளி, தனியே இந்த மக்கள் வாழ்கிறார்கள். எந்தச் சாதியிலும் சேராத இன்னும் சிலர் இருக்கிறார்கள். ஹாடி (ஹரி என்றும் அழைக்கப்படும் பட்டியலின மக்கள்), டோமா (டோம்பா அல்லது டோம் என்றும் அழைக்கப் படுகிறார்கள்), சண்டாளர்கள் உள்ளிட்ட பெயர்கள் அவர்களுக்கு இடப்பட்டிருக்கின்றன. இழிவான, அசுத்தமான வேலைகள் மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. அவர் களுடைய குழந்தைகளை முறைதவறிப் பிறந்த குழந்தைகள்போல் மற்றவர்கள் பாவிக்கிறார்கள். சூத்திர ஆண்களுக்கும் பிராமணப் பெண்களுக்கும் முறையற்று பிறந்தவர்கள் என்றொரு முத்திரை அவர்கள்மேல் விழுந்துகிடப்பதையும் சுட்டிக்காட்டுகிறார் அல்பெரூனி.
நால்வர்ண முறையை பகவத் கீதை ஆதரிப்பதைத் தகுந்த சூத்திரங்களை எடுத்தாண்டு விவரிக்கிறார் அல்பெரூனி. `ஒருவன், தன் வர்ணத்துக்குரிய கடமைகளையும் பணிகளையும் புறக்கணித்துவிட்டு இன்னொன்றுக்கு மாறினால், அப்போதைக்கு அவனுக்கு மதிப்பு கிடைத்தாலும் இறுதியில் பாவத்தையே கொண்டுவந்து சேர்க்கும். வர்ண சட்ட திட்டங்களை மீறுவது சரியல்ல’ என்கிறது கீதை. இப்படியொரு விதியை ஒரு சமூகம் ஒருநாளும் பின்பற்றக் கூடாது. ஆனாலும், இந்து சமூகம் இப்படிப்பட்ட கறாரான விதிமுறைகளால்தான் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. இந்த அநீதியான விதிமுறை களைத்தான் இன்னமும் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று அல்பெரூனி வாதிடும்போது, அவர் எழுத்தில் கோபத்தையும் சோகத்தையும் காண முடிகிறது. கூடவே, `ஒரு மிலேச்சனான என்னால் இப்படி எழுதுவதைத் தவிர வேறென்ன செய்துவிட முடியும்?’ எனும் அவருடைய ஆற்றாமையையும் முயன்றால் நாம் கண்டுகொள்ளலாம்!
(விரியும்)