மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 49 - அல்பெரூனியின் பார்வையில் இந்துக்கள்-II

அல்பெரூனி
பிரீமியம் ஸ்டோரி
News
அல்பெரூனி

வானியல், கணிதம் என்று தொடங்கி, அறிவியலோடு காலம் காலமாக இந்துக்கள் வளர்த்துவைத்திருந்த உறவை அறிந்து வியந்துபோனார்.

`என்னைப் போன்ற ஓர் அந்நியர், இந்து மதத்தைப் புரிந்துகொள்ள முயலும்போது ஏற்படும் முதல் உணர்வு, திகைப்பு’ என்கிறார் அல்பெரூனி. `அப்பப்பா, தொட்டதற்கெல்லாம் நூறு நூல்கள் இயற்றிவைத்திருக்கிறார்கள். நீதிநெறிகள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டுமா... இறைஞானத்தைத் தேடுபவரா நீங்கள்... துறவுநிலை குறித்து ஆய்வுசெய்ய வேண்டுமா... நீங்கள் கடவுளை அடையத் துடிப்பவரா அல்லது கடவுளாகவே மாறும் வேட்கை கொண்டவரா? கவலையே வேண்டாம். எல்லாவற்றுக்கும் இந்துக்கள் நூல்கள் இயற்றிவைத்திருக்கிறார்கள்’ என்கிறார் அல்பெரூனி.

`இந்துத் தத்துவம் என்று நுழைந்துவிட்டால் மீமாம்சம், யோகம், லோகாயதம் என்று தொடங்கி எண்ணற்ற சிந்தனைப் பள்ளிகள் உங்கள் முன் கடலென விரியும். ஒவ்வொரு தலைப்பிலும் எவ்வளவு நூல்கள் இருக்கின்றன, அவற்றின் தலைப்புகள் என்னென்ன, அவற்றின் உள்ளடக்கம் எப்படியிருக்கும் என்பதையெல்லாம் என்னைப் போன்ற ஒரு வெளிநாட்டுக்காரன் கண்டறிந்து சொல்லிவிட முடியும் என்றா நினைக்கிறீர்கள்? வாய்ப்பே இல்லை’ என்று கைகளைத் தூக்கிவிடுகிறார் அல்பெரூனி.

அதற்காகத் தன் கடமையிலிருந்து அவர் பின்வாங்கிவிடவும் இல்லை. சம்ஸ்கிருதம் கற்று, தன் அறிவைக் கூர்தீட்டிக்கொண்டு இயன்ற நூல்களையெல்லாம் தேடியெடுத்து வாசிக்கத் தொடங்கினார். இந்து மதத்துக்குள் அவர் எவ்வளவு ஆழ்ந்துபோனார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், எவ்வளவு காலம் அவர் இப்பணிக்குச் செலவிட்டார் என்பதைப் பார்த்தாலே போதும். 13 ஆண்டுகள்!

தத்துவம், சட்டம், காப்பியம், இலக்கியம் என்று பல தளங்களில் விரிந்து சென்றது அவர் ஆய்வு. வானியல், கணிதம் என்று தொடங்கி, அறிவியலோடு காலம் காலமாக இந்துக்கள் வளர்த்துவைத்திருந்த உறவை அறிந்து வியந்துபோனார். வேதங்கள், பகவத் கீதை, புராணங்கள், இதிகாசங்கள் உள்ளிட்டவை மட்டுமல்ல இந்து மதம். பதஞ்சலி யோக முறைகளும் இந்து மதம்தான். ஆரியபட்டா, பிரம்மகுப்தா, வராகமிஹிரர் போன்றோரின் அறிவியல் பங்களிப்புகளும் இந்து மதத்துக்குள்தான் நிகழ்ந்திருக்கின்றன என்று வாதிட்டார் அல்பெரூனி. இந்து மதம் அறிவியலுக்கு எதிரானதல்ல என்பதைத் தக்கச் சான்றுகளோடு மிக விரிவாக முதன்முதலில் பதிவுசெய்தவர் அல்பெரூனி. மொழி, இலக்கணம் சார்ந்த இந்துக்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையும் கவனப்படுத்த அவர் தவறவில்லை.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 49 - அல்பெரூனியின் பார்வையில் இந்துக்கள்-II

இதுவரை யாரும் செய்யாத இன்னொன்றையும் செய்தார் அல்பெரூனி. இந்தியா என்பது எங்கோ கிழக்கில், இருளில் தொலைந்துகிடக்கும் ஒரு துண்டு நிலமல்ல. உலகோடு சரி சமானமாக நின்று உரையாடும் தகுதியும், வலுவும், ஆற்றலும்மிக்கத் துடிதுடிப்பான பெருநிலம் அது. உரையாடுவதற்கு மட்டுமல்ல, உலகுக்குக் கற்றுக்கொடுக்கும் வல்லமையும் இந்தியாவிடம் நிறைந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து சொன்னார் அல்பெரூனி. இத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், இந்தியாவைக் கிரேக்கத்துக்கு அருகில் நிறுத்திவைத்து, வரலாற்றிலும் சிந்தனை மரபிலும் இரண்டும் எப்படி ஒத்திருக்கின்றன என்று ஆராய்ந்தார். சாக்ரடீஸ், பிதாகரஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோரை இந்து தத்துவாசிரியர்களோடும் சிந்தனையாளர்களோடும் ஒப்பிட்டு, ஒருவருக்கு மற்றொருவர் சளைத்தவரல்லர் என்று நிறுவினார்.

`இந்துக்கள்போல் பெருமிதங்களில் திளைக்கும் இன்னொரு மக்கள் கூட்டத்தைக் கண்டதில்லை’ என்கிறார் அல்பெரூனி. ஒருமுறை வானியல் தொடர்பான விவாதங்களுக்காகச் சில இந்துக்களைக் காணச் சென்றிருக்கிறார். எப்படியும் அவர்கள் தன்னைவிட நிறைய கற்றிருப்பார்கள் எனும் நம்பிக்கையில், ஒரு மாணவன்போல் அவர்கள் முன்பு அடக்கமாக நின்றிருக்கிறார். அவர்களுக்கு நிறைய தெரிந்திருந்தது உண்மைதான் என்றாலும், அல்பெரூனிக்கு அவர்களைக் காட்டிலும் மேலதிகம் ஆழமாகச் சில விஷயங்கள் தெரிந்திருந்தன. தனக்குத் தெரிந்ததை அவர்களோடு உற்சாகமாகப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார் அல்பெரூனி. தர்க்கம், கணிதச் சமன்பாடுகள் என்று பல தலைப்புகளில் விவாதம் சென்றிருக்கிறது. அல்பெரூனி பேசுவதைக் கேட்டு, வேறு பலரும் அவரைச் சூழ்ந்து நின்று கவனிக்கத் தொடங்கினார்கள். அப்போது அவரை நோக்கிப் பறந்துவந்த கேள்விகளில் ஒன்று அவர் புருவத்தை உயர்த்தியது. ‘இதையெல்லாம் நீங்கள் எந்த இந்து குருவிடமிருந்து கற்றுக்கொண்டீர்கள்?’

`என்னவோர் அசாத்திய நம்பிக்கை பார்த்தீர்களா?’ என்று மாய்ந்துபோகிறார் அல்பெரூனி. மேலான அறிவு என்றால் அதை இந்துவிடமிருந்து மட்டுமே ஒருவர் பெற முடியும் போலும்! அதேபோல், பிராமணர்களிடம் வெளிப்பட்ட அதீத பகட்டும் பெருமிதமும் அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அப்போது அவர்களோடு வானியல் தொடர்பாக உரையாடி அவர்களை ஆச்சர்யத்தில் தள்ளியிருக்கிறார். `பிராமணன் அல்லாத எனக்கும் அவர்களைவிட மேலான அறிவு இருக்கிறது என்பதை உணர்த்த, இப்படியெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது’ என்று அங்கலாய்க்கிறார் அல்பெரூனி. `எது எப்படியோ அவர்களைத் தோற்கடிக்கும்போது ஒருவித மகிழ்ச்சி உண்டாகத்தான் செய்கிறது’ என்றும் அவரே ஒப்புக்கொள்கிறார்.

`என்ன சொல்கிறோம் என்பதையே உணராமல், அவற்றின் பொருள் என்னவென்றும் தெரியாமல், வேத உச்சாடனம் செய்துகொண்டே இருக்கிறார்கள்’ என்று இன்னோரிடத்திலும் விமர்சனம் செய்கிறார் அல்பெரூனி. `சில பிராமணர்களுக்கு மட்டுமே பொருள் தெரிந்திருக்கிறது. அவர்களிலும் வெகு சிலர் மட்டுமே விவாதிக்க முன்வருகிறார்கள்’ என்கிறார். `ஏன் வேதத்தை எழுதிவைக்கக் கூடாது என்று கேட்டால், எழுதிவைத்துப் படித்தால் பலனிருக்காது. குறிப்பிட்ட பாணியில் ஏற்ற இறக்கத்தோடு ஓதினால் மட்டுமே பலன் ஏற்படும் என்றொரு காரணத்தைச் சொல்கிறார்கள். வேதம் எல்லோருக்குமானதல்ல. சத்திரியர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது. கற்றுக்கொள்ள மட்டுமல்ல, காதால் கேட்பதும்கூட அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருக்கிறது’ என்று எழுதுகிறார் அல்பெரூனி. பிறர் ஓதும்போது மறைந்திருந்து கேட்டால் சம்பந்தப்பட்ட நபரை இழுத்துச் சென்று தண்டனை வாங்கிக்கொடுக்க முடியுமாம். நாக்கைத் துண்டிப்பதுதான் ஒரே தண்டனை என்கிறார் அல்பெரூனி. ஒவ்வொரு வேதத்தின் சாரத்தையும் முறையாக அறிமுகம் செய்துவைப்பதோடு அவை எவ்வாறு ஓதப்படுகின்றன என்பதையும் விவரிக்கிறார் அல்பெரூனி.

`கிராமப்புறங்களில் வசிக்கும் இந்துக்கள் பலவிதமான ஆண், பெண் கடவுள்களை வழிபடுகிறார்கள். பண்டிதர்களுக்கு அவ்வளவு கடவுள்கள் இல்லை. கடவுள் ஆரம்பமோ முடிவோ அற்றவர். நிலையானவர். அழிவற்றவர். எங்கும், எதிலும் நிறைந்தவர் என்று விளக்குகிறார்கள். இந்த வேறுபாடும் எல்லா இடங்களிலும் இருப்பதுதான்’ என்கிறார் அல்பெரூனி. படித்தவர்களுக்குக் கடவுள் அரூபமானவராக இருக்கிறார். ஒரு கருத்தாக்கமாக அவரை உருவகம் செய்துகொள்ள அவர்களுக்குச் சாத்தியப்படுகிறது. எளிமையான மக்களால், அவர்களுடைய புலன்களால் நேரடியாக உணரக்கூடியதைக் கடந்து வேறொன்றை தரிசனம் செய்ய முடிவதில்லை. சடங்குகளும், விதிமுறைகளும், வழிகாட்டுதல்களும் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 49 - அல்பெரூனியின் பார்வையில் இந்துக்கள்-II

மரணம், அழிவு, ஆன்மா, மறுபிறப்பு ஆகிய கருத்தாக்கங்கள் அல்பெரூனியை அபாரமாக ஈர்த்திருப்பதை அவருடைய பகவத் கீதை வர்ணனைகளிலிருந்து உணர முடிகிறது. இவர்களை எப்படிக் கொல்வேன் என்று போர்க்களத்தில் மயங்கி நின்ற அர்ஜுனனை மீட்டெடுக்க, கிருஷ்ணர் முன்னெடுத்த தத்துவார்த்த உரையாடல்களிலிருந்து பல பகுதிகளை ஆர்வத்தோடு பதிவுசெய்கிறார் அல்பெரூனி. எல்லாமே முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்பதை நீ உணர்ந்தால், இந்த மயக்கம் உனக்கு ஏற்பட்டிருக்காது என்கிறார் கிருஷ்ணர். நம் ஆன்மா அழிவற்றது. அது மாற்றமில்லாதது. ஒரு மனிதன் குழந்தைப் பருவத்தைக் கடந்து இளமைக்குச் செல்வதுபோல் ஆன்மா நம் உடலில் நுழைந்து அங்கிருந்து இன்னோரிடத்துக்குச் செல்கிறது. ஆன்மா உடலோடு சேர்ந்து அழிவதில்லை. அது உடலைக் கடந்தது. ஆன்மா பிறப்பதுமில்லை, அழிவதுமில்லை. அது நிரந்தரமானது. இதை உணர்ந்த பின்னரும் யாராவது மரணம் குறித்து அஞ்சுவார்களா... உன்னால் ஒருபோதும் கொல்ல முடியாத ஆன்மாவைக் கண்டு நீ ஏன் மருள வேண்டும்? ஒருவேளை ஆன்மா அழிந்து போகக்கூடியது என்று நீ கருதுவாயானால், எப்படியும் அழிந்துபோகக்கூடிய ஒன்றை நினைத்து வருத்தப்படுவதால் என்ன ஆகிவிடப்போகிறது? பிறக்கும் எல்லாமே இறப்பைச் சந்திக்கின்றன. இறக்கும் எல்லாவற்றுக்கும் மறுபிறப்பு உண்டு. பிறப்பு, இறப்பு இரண்டும் உன் கையில் இல்லை. எனவே கவலையை விட்டொழி!

உடலின்றி ஆன்மா எப்படி வாழும், எங்கே வாழும் என்று தேடுகிறார். மேலுலகம், பாதாள உலகம், தேவலோகம், நரகம் என்று எல்லாவற்றையும் ஆராய்கிறார் அல்பெரூனி. பதஞ்சலியை விவாதித்துக்கொண்டிருக்கும்போது விஷ்ணுபுராணம் நினைவுக்கு வந்துவிடுகிறது. புண்ணியம், பாவம் இரண்டையும் இந்துக்கள் எவ்வாறு பார்க்கின்றனர் என்று இன்னொரு பகுதியில் ஆராய்கிறார். முல்டான் என்னும் இடத்தில் (இன்றைய பாகிஸ்தான்) இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாகச் சொல்லப்படும் சூரியக் கடவுளான ஆதித்யாவின் உருவச் சிலையை நமக்காக வர்ணிக்கிறார். காஷ்மீரில் அமைந்துள்ள சாரதா கோயிலையும் நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். அங்கே எப்படிச் செல்ல வேண்டும் என்று வழியும் காட்டுகிறார்.

அறிவியலும் ஜோதிடமும் பேசும் `பிருஹத் சம்ஹிதை’ என்னும் நூலிலிருந்து ஓர் அத்தியாயத்தைத் தேர்ந்தெடுத்து அறிமுகம் செய்கிறார். திருவுருவச் சிலைகளை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பதை விவரிக்கும் பகுதி அது. `நான் பேசிக்கொண்டிருக்கும் தலைப்புகளைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், மாணவர்கள் நிச்சயம் இதை வாசிக்க வேண்டும்’ என்னும் குறிப்போடு அல்பெரூனியின் அறிமுகம் தொடங்குகிறது. ராமர், நாராயணர், பலதேவர், பிரம்மன், ஸ்கந்தன், இந்திரன் என்று ஒவ்வொரு கடவுளையும் எப்படி கவனத்தோடு செதுக்க வேண்டும் என்பதை மிகுந்த அக்கறையோடு படிப்படியாக விளக்குகிறார் அல்பெரூனி.

வேதங்களையும், ஸ்லோகங்களையும், புராணங்களையும் விரித்துவைத்துக்கொண்டு, விதவிதமான திருவுருவச் சிலைகளை வியந்து வியந்து ரசித்தபடி நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதிச் செல்கிறார் அல்பெரூனி. எந்த இடத்திலும் அவருடைய இஸ்லாம் குறுக்கில் பாய்ந்து அவரைத் தடுக்கவில்லை. `இன்னொரு மதத்தின்மீது இப்படியெல்லாம் மையல் கொள்ளாதே’ என்று கண்டிக்கவில்லை. தன் இஸ்லாம் ஒருபோதும் அப்படிச் செய்யாது என்று அல்பெரூனிக்குத் தெரியும்!

(விரியும்)