மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 5 - மனித முகம்... சிங்க உடல்!

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

தீஷியஸ் எழுதிய நூல்கள் இரண்டு. முதலாவது, பண்டைய பாரசீகத்தைப் புரிந்துகொள்ள இன்றளவும் உதவும் ஆதார நூலாகக் கருதப்படும் ‘பெர்சிகா.’

‘ஹெரோடோட்டஸ் ஒரு பொய்யர். கட்டுக்கதைகள் புனைவதற்கு அவரை மிஞ்ச கிரேக்கத்தில் யாருமில்லை. இந்தியா கறுப்பா சிவப்பா என்றுகூட அவருக்குத் தெரியாது. ஆனால், நான் அப்படியல்ல. என் இரு கண்களால் கண்டதையும், என் இரு காதுகளால் கேட்டறிந்ததையும் நம்பத் தகுந்தவர்களிடம் விசாரித்து மட்டுமே நான் பதிவு செய்கிறேன். இந்தியா என்றால் என்னவென்பதை என் பதிவுகளிலிருந்து உலகம் தெரிந்துகொள்ளட்டும். ஹெரோடோட்டஸுக்கான மறுப்பாக என் நூல் நிலைபெறட்டும்.’

இப்படி ஓர் ஆர்ப்பாட்டமான முழக்கத்தோடு எழுத வந்தார் மற்றொரு கிரேக்கரான தீஷியஸ். ஹெரோடோட்டஸ் வாழ்ந்த அதே பொஆமு 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஹெரோடோட்டஸ் காலத்தில் இருந்த பாரசீகப் பேரரசு, இப்போது அகாமனிசியப் பேரரசாக மாறியிருந்தது. அடிப்படையில் இவர் ஒரு மருத்துவர் என்பதால், பாரசீக மன்னரான இரண்டாம் அர்தாசெர்கஸ் என்பவரின் பிரத்யேக மருத்துவராகவும் இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 5 - மனித முகம்... சிங்க உடல்!

மன்னர் எங்கு சென்றாலும் அவருடைய பரிவாரங்களோடு தீஷியஸும் சென்றுவிடுவார். போர்க்களத்தில் மன்னருக்குக் காயம் ஏற்பட்டால், உடனே சிகிச்சை அளிப்பார். மருத்துவத் தொழில் போக கிரேக்கர்களுடன் அரசியல் பேச்சுவார்த்தைகளிலும் இவர் ஈடுபட்டதாகத் தெரிகிறது. செல்வாக்குமிக்கவராக இருந்ததால் அரசு ஆவணங்களைப் பார்வையிடுவதற்கான அனுமதியையும் இவர் பெற்றிருந்தார்.

பின்னாள்களில் இவர் வரலாறு எழுத ஆரம்பித்தபோது, இந்த ஆவணங்கள் அவருக்கு உதவிக்கு வந்தன.

தீஷியஸ் எழுதிய நூல்கள் இரண்டு. முதலாவது, பண்டைய பாரசீகத்தைப் புரிந்துகொள்ள இன்றளவும் உதவும் ஆதார நூலாகக் கருதப்படும் ‘பெர்சிகா.’ இரண்டாவது, இந்தியா குறித்து இவர் எழுதிய ‘இண்டிகா.’ பாரசீகப் போர்கள் குறித்து எழுதும் இடத்தில் இந்தியர்களுக்குச் சில பக்கங்களை முதன்முதலில் ஒதுக்கியவர் ஹெரோடோட்டஸ் என்றால், முழுக்க முழுக்க ஒரு தனி நூலை எழுதியதோடு, `இந்தியா’ என்று தலைப்பும் இட்டவர் தீஷியஸ். கெடுவாய்ப்பாக இந்நூல் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. சின்னச் சின்ன துண்டுகளாக மற்றவர்கள் எடுத்தாண்ட மேற்கோள்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. ஆனால், தீஷியஸின் பெயரை நிலைநிறுத்துவதற்கு இந்த மேற்கோள்களின் பொட்டலமே போதுமானதாக இருக்கிறது.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 5 - மனித முகம்... சிங்க உடல்!

தீஷியஸ் கண்டுபிடித்த இந்தியா எப்படி இருந்தது? மிக மிக அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு நாடு இந்தியா. உலகம் முழுவதிலுமுள்ள மனிதர்களின் எண்ணிக்கையைக் கூட்டினாலும், இந்தியாவுக்குப் பக்கத்தில்கூட வர முடியாது. இந்தியாதான் உலகின் கடைசி நாடு. அதன் பிறகு எதுவுமில்லை என்று கிட்டத்தட்ட ஹெரோடோட்டஸின் பாணியில் இந்தியாவை விவரிக்கத் தொடங்குகிறார் தீஷியஸ். மற்ற பகுதிகளில் எப்படியோ, இந்திய வெயில் கொடுமையிலும் கொடுமை என்கிறார் தீஷியஸ். இந்தியாவில் பல இடங்களில் கதிரவன் பத்து மடங்கு பெரிதாகத் தோன்றுவதால், அங்கு வசிப்பவர்களெல்லாம் வதைபட்டு, மூச்சுத்திணறி இறந்து விடுகிறார்களாம்.

இந்தியர்கள் கறுத்த தோல் கொண்டவர்கள்தாம். ஆனால், அதற்கும் வெயிலுக்கும் தொடர்பில்லை. வெயிலே தோன்றாதபோதும் அவர்கள் கறுப்பாகவே இருக்கிறார்கள். இந்தியர்களின் இயல்பு அது என்கிறார் தீஷியஸ். இந்தியர்களின் தோல் தடிமனாக இல்லாமல் மெலிதாக அப்படியே எலும்போடு எலும்பாக ஒட்டிக்கொண்டு அமைந்திருக்கிறதாம். ஆண், பெண் இருவருக்கும் இது பொருந்தும். இரண்டு இந்தியப் பெண்களையும் ஐந்து ஆண்களையும் நேரில் கண்டு பரிசோதித்ததன் அடிப்படையில் இதை நான் எழுதுகிறேன் என்று சாட்சியமும் அளிக்கிறார் தீஷியஸ்.

இந்தியாவில் ஓங்கி உயர்ந்த மலைகள் உள்ளன. பலவிதமான மதிப்புமிக்க கற்களை அங்கிருந்து இந்தியர்கள் சேகரிக்கிறார்கள் என்கிறார் தீஷியஸ். இந்தியாவில் மழையே பெய்வதில்லையாம். அப்படியானால் நீருக்கு என்ன செய்கிறார்கள் என்று கேட்டால், நதிகளைக் கைகாட்டுகிறார். இந்த நதிகளில் ஒருவிதமான நீளமான புழு வசிக்கிறதாம். மீன் இருக்கிறது. ஆனால், வெயிலுக்கு பயந்து நதியின் ஆழத்தில் ஒளிந்துகொண்டு வாழ்கிறதாம். மழை மட்டுமல்ல, இடியோ மின்னலோ புயலோகூட இந்தியாவில் தோன்றுவதில்லை. பதிலாக, சூறாவளியும் பேய்க் காற்றும் உருவாகி, கண்ணில் படும் அனைத்தையும் இரக்கமின்றி அழிக்கின்றன என்கிறார்.

இந்திய விலங்கினங்கள் அளவில் பூதாகரமானவை என்கிறார் தீஷியஸ். எவ்வளவு பெரிய, எவ்வளவு வலிமையான சுவராக இருந்தாலும் இந்திய யானை ஒரு முட்டு முட்டினால் தீர்ந்தது கதை. இந்தியக் குரங்கின் வால் நான்கு முழம் நீண்டிருக்குமாம். இந்திய சேவலைப் பார்க்கும் எவரும் விழி விழியென்று விழிப்பார்களாம். அந்த அளவுக்குப் பருத்து இருக்குமாம்.

இந்தியக் கிளியும் ரொம்பவே பெரியதாம். கழுகு, பருந்தெல்லாம் கிளி பக்கத்தில்கூட வர முடியாதாம். சிவப்பு நிற அலகு, கறுத்த தாடி, நீலச் சிறகு என்று பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கும். வியப்பிலும் வியப்பாக அது இந்தியனைப்போலவே பேசவும் செய்கிறது என்றால் நம்புவீர்களா என்று பரவசத்தோடு கேட்கிறார் தீஷியஸ். இந்தியக் கிளி ஒருவேளை மனித நாக்கு கொண்டிருக்குமோ! எனில், இந்திய மொழி மட்டும்தான் பேசுமா அல்லது மற்ற மொழிகளும் பேசுமா? யார் கண்டது, கிரேக்கம் கற்றுக்கொடுத்தால் அதையும் கிரேக்கர்போல் சரளமாகப் பேசுமோ என்னவோ!

இந்தியா பன்றியைக் கண்டதில்லை. நாய் என்று ஒன்றை அழைக்கிறார்கள். ஆனால் நாய்போலவா அது நடந்துகொள்கிறது? கொஞ்சமும் பயமில்லாமல் சிங்கத்தோடு அல்லவா அது பாய்ந்து, பிறாண்டி சண்டை போடுகிறது? வெள்ளாடு, செம்மறி இரண்டும் கழுதையைவிடப் பெரியவையாம். ஒவ்வொன்றும் நான்கு முதல் ஆறு குட்டிகள் ஈனும். இரண்டுக்கும் பெரிய வால் இருக்கும். குட்டி ஈனும்போது தன் வாலை அவை கழற்றிவைத்துவிடும்.

`கிரிஃபின்’ என்றோர் உயிரினம் இந்தியாவில் வசிப்பதை உலகுக்கு முதலில் அறிவித்தவர் தீஷியஸ். அடிப்படையில் பறவை. ஆனால், ஓநாய்போல் வளர்ந்திருக்கும். நான்கு கால்களில் நடக்கும். விரல் நகங்களைப் பார்த்தால் சிங்கத்தின் நினைவு வரும். அதன் மார்பில் தொடங்கும் செந்நிறச் சிறகு உடலைப் போர்த்தும் இடத்தில் கறுப்பு நிறத்துக்கு மாறியிருக்கும். மிக வலுவான உயிரினம். இந்தியாவிலுள்ள சில மலைப்பகுதிகளில் தங்கம் மறைந்திருக்கிறது. ஆனால், அதை இந்தியர்களால் தேடியெடுக்க முடியாமல் போனதற்குக் காரணம் கிரிஃபின்களே என்கிறார் தீஷியஸ்.

`என்னது, தங்கத்தைக் கண்டறியும் எறும்பா? அப்படியொன்று இல்லவே இல்லை’ என்று சிரிக்கும் தீஷியஸ், வேறொரு தங்கக் கதையை விவரிக்கிறார். இந்தியாவில் குறிப்பிட்ட ஓரிடத்தில் நீரூற்று ஒன்று அமைந்துள்ளது. ஆண்டு முழுக்க அதிலிருந்து நீருக்கு பதில் தங்கம் திரவ வடிவில் பொங்கிக்கொண்டேயிருக்கும். ஒவ்வோர் ஆண்டும் நூறு ஜாடி தங்கத்தை ஒருவர் இங்கிருந்து பிடித்துக்கொள்ள முடியும். ஆனால் கவனம், இந்த ஜாடி மற்ற உலோகங்களில் அல்ல, களிமண்ணில் மட்டுமே உருவாக்கப்பட வேண்டும் என்று கவனப்படுத்துகிறார் தீஷியஸ். ஏன்? ஜாடியில் பிடித்த மறுகணம் தங்கம் உறைந்து ஒட்டிக்கொண்டுவிடும். வேறு உலோகமாக இருந்தால் தங்கத்தை ஜாடியிலிருந்து பிரிக்கவே முடியாமல் போய்விடும். மண் என்றால் தனியாக வந்துவிடும். வராவிட்டாலும் ஜாடியை உடைத்துத் தங்கத்தை எடுத்துவிட முடியும் அல்லவா?

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 5 - மனித முகம்... சிங்க உடல்!

மேற்படி நீரூற்று எவ்வளவு அகலத்தில் அமைந்திருக்கும், எவ்வளவு ஆழத்திலிருந்து தங்கத்தை எடுத்து வந்து பீய்ச்சியடிக்கும் என்பதையெல்லாம் புள்ளிவிவரங்களோடு விளக்குகிறார் தீஷியஸ். நீரூற்று இருக்கிறதல்லவா, அதே இடத்தில் அடியாழத்தில் தனித்துவமிக்க இரும்பு கிடைக்கிறதாம். அந்த இரும்பை கவனமாக எடுத்து, வார்த்து இதுவரை இரு வாள்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டுமே சிறப்புமிக்கவை. அந்த வாள்கள் இருக்கும் இடத்தில் ஆலங்கட்டி மழை இருக்காது, சூறாவளி நெருங்காது. இதெல்லாம் கற்பனையல்ல, நானே என் இரு கண்களால் பரிசோதித்திருக்கிறேன் என்கிறார் தீஷியஸ். எங்கே பார்த்தீர்கள் என்று கேட்டால், இரண்டுமே என்னிடம்தான் உள்ளன என்கிறார். ஒன்று பாரசீக மன்னர் கொடுத்தது, இன்னொன்று அம்மாவிடமிருந்து பெற்றுக்கொண்டது என்று விளக்கமளிக்கிறார்.

மார்டிசோரா எனும், இந்தியாவில் மட்டுமே வசிக்கும் ஓர் அரிய உயிரினத்தை முதலில் கண்டுபிடித்தவர் தீஷியஸ். சிங்கத்தின் உயரம் கொண்ட விலங்கு. தக்காளிப் பழ நிறம். நமக்கெல்லாம் ஒரு வரிசை பல் இருக்குமென்றால் மார்டிசோராவுக்கு மட்டும் பக்கத்துப் பக்கத்தில் மூன்று வரிசைகளில் பற்கள் அமைந்திருக்கும். நீல விழிகள். மனித முகம். மனித காதுகள். தேள்போல் கூர்மையான கொடுக்குகள் கொண்டிருக்கும். யாராவது நெருங்கினால் தன் வாலை ஒரு சுழற்று சுழற்றும். அவ்வளவுதான், இரண்டு கொடுக்குகளும் வாள்போல் சதையைச் சீவி எடுத்துவிடும்.

ஒருவேளை எதிரி தொலைவிலேயே நின்றுவிட்டாலும் மார்டிசோரா விடாதாம். தன் வாலை எதிரியை நோக்கித் திருப்பி நின்ற இடத்திலிருந்தே அம்புபோல் தன் கொடுக்கைச் செலுத்துமாம். சாதாரண அம்பு அல்ல, நச்சு தடவிய அம்பு என்பதால் யாராக இருந்தாலும் பிழைக்க முடியாது. யானையைத் தவிர எல்லா விலங்குகளையும் நின்ற இடத்திலிருந்தே அநாயாசமாகக் கொன்றுவிடும். நறுக்க நறுக்க நம் நகம் வளர்கிறது அல்லவா, அப்படியே கொடுக்குகளும் செலுத்தச் செலுத்த புதிது புதிதாக வளர்ந்துகொண்டே இருக்குமாம்.

தாவிப் பிடித்து எந்த விலங்கினத்தையும் உயிரோடு விழுங்கிவிடும் ஆற்றல் மார்டிசோராவுக்கு உண்டு என்கிறார் தீஷியஸ். மனிதர்களை ஒரே விழுங்கில் காலியாக்கிவிடும் என்றும் அவர் எச்சரிக்கிறார். இந்த அதிசய விலங்கை வேட்டை யாடும் இந்தியர்களும் இருக்கிறார்கள். மார்டி சோராவால் விழுங்கவும் முடியாத, கொடுக்கை ஏவிக் கொல்லவும் முடியாத ஒரே உயிரினமான யானையைப் பிடித்து வந்து ஏறி அமர்ந்துகொண்டு அம்பு மழை பொழிந்து கொல்வார்களாம்.

அடுத்து இந்தியர்களை வர்ணிக்கத் தொடங்குகிறார் தீஷியஸ். அதை வாசிக்கும்போது இவர் ஹெரோடோட்டஸுக்கு மறுப்பு எழுத வந்தாரா அல்லது அவரோடு போட்டி போட்டுக்கொண்டு புனைவு எழுத வந்தாரா என்னும் சந்தேகமே ஏற்படுகிறது.

(விரியும்)