
அல்பெரூனி அரபு மொழியில் எழுதிய இந்தியப் பதிவுகள், 1888-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்தபோது அதில் பல சொற்கள் லத்தீனில் இருந்தன
இந்தியாவின் விரிவும் ஆழமும் அல்பெரூனியை அச்சுறுத்தவில்லை. அப்படியே அச்சுறுத்தியிருந்தாலும் அதை அவர் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஒவ்வொரு கடலிலிருந்தும் கைகொள்ளும் அளவுக்கு நீரை அள்ளியெடுத்து, இதுதான் இந்தியக் கலை, இதுதான் இந்தியத் தத்துவம், இதுதான் இந்தியச் சமூகம், இதுதான் இந்தியச் சிற்பவியல், இதுதான் இந்திய வரலாறு என்று துறைவாரியாக இந்தியாவை உலகுக்குக் காட்சிப்படுத்தினார் அல்பெரூனி. இவ்வாறு தொகுத்து அளிக்கும் முயற்சி உலகுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்குமேகூடப் புதிது. பரந்து, விரிந்த இந்தியா எந்தவொரு தனிச் சிமிழுக்குள்ளும் அடங்காது. பரந்து, விரிந்துதான் அதை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை முதலில் கண்டறிந்தவர் அல்பெரூனி.
`இந்தியவியலின் தந்தை’ என்று அல்பெரூனி அழைக்கப்படுவது மிகவும் பொருத்தமானது. தனி மனிதராக அவர் தொடங்கிவைத்த பெரும் பணியை அவருக்குப் பிறகு மீண்டும் தொடர்வதற்கு ஐரோப்பியர்களுக்குப் பல நூற்றாண்டுகள் பிடித்தன. அப்போதும்கூடக் குழுவாக இணைந்துதான் இந்தியாவை அவர்கள் தொகுத்தார்கள். அல்பெரூனிபோல் பல துறைகளில் ஆழங்கால்பட்ட இன்னொரு அயல் தேசத்துப் பயணியை இந்தியா அதற்குப் பிறகு சந்திக்கவில்லை என்றே சொல்லிவிடலாம்.
ஏன் இவ்வளவு கடவுள்கள் இருக்கிறார்கள் என்பது தொடங்கி, ஏன் இந்துக்கள் இறந்தவர்களை எரிக்கிறார்கள் என்பதுவரை இன்றும் பல அயல் தேசத்தவர்களால் விளங்கிக்கொள்ள முடியாத புதிர்களுக்கு அல்பெரூனி அப்போதே விரிவான விளக்கங்களை அளித்திருக்கிறார். அவருடைய மதிப்பீடுகள் கறாரானவை. `இந்துக்கள் அழகிய காவியங்கள் படைத்திருக்கிறார்கள்; அர்த்தமற்ற சொற்குவியல்களையும் உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் ஆன்மிகம் ஆழமானது; ஆன்மிகம் என்று சொல்லி ஏதேதோ பித்தலாட்டங்களையும் செய்கிறார்கள். அவர்களுடைய பழங்காலம் நிகழ்காலத்தைக் காட்டிலும் அற்புதமானதாக இருக்கிறது. அதேசமயம் எந்நேரமும் பழம்பெருமைகளில் ஊறித் திளைத்துக்கொண்டிருப்பதால், அறிவியலில் இன்னும் அதிகம் சாதிக்க முடியாமல் தேக்கமடைந்திருக்கிறார்கள். இந்துக்களிடமிருந்து கொள்ளவேண்டியதைக் கொண்டு, தள்ளவேண்டியதை கவனமாகத் தள்ள வேண்டும்’ என்கிறார் அல்பெரூனி.

அல்பெரூனி அரபு மொழியில் எழுதிய இந்தியப் பதிவுகள், 1888-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்தபோது அதில் பல சொற்கள் லத்தீனில் இருந்தன. ஆங்கில வாசகர்கள் படிக்கவேண்டிய ஒரு நூலில் ஏன் சம்பந்தமில்லாமல் லத்தீன் நுழைய வேண்டும்? ஒருசில சொற்கள் என்றாலும் பரவாயில்லை. குறிப்பிட்ட ஒரு பகுதியில் வரும் அல்பெரூனியின் நீள நீளமான அரபு பத்திகளை ஏன் மொழிபெயர்ப்பாளர் முழுக்கவே லத்தீனில் மாற்றிக் கொடுக்க வேண்டும்... அவை கடினமானவையா... ஆங்கிலத்தில் அவற்றை அளிக்க முடியாதா... ஆங்கிலம் தெரிந்த எல்லோருக்கும் லத்தீனும் தெரிந்திருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை அல்லவா?
உண்மையில் மொழிபெயர்ப்பாளரின் எதிர்பார்ப்பும் அதுதான். அல்பெரூனியின் ஆங்கிலப் பதிப்பை விக்டோரியன் காலத்துப் பெண்கள் எடுத்துப் படிப்பார்கள். அவர்களில் பலருக்கு லத்தீன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அப்பகுதிகளை அவர்கள் கடந்து சென்றுவிட வேண்டும் என்று மொழிபெயர்ப்பாளர் விரும்பினார். அவருடைய அச்சத்துக்குக் காரணம், இந்தியர்களின் பாலியல் நாட்டங்களை அல்பெரூனி எந்தவிதப் பதற்றமுமின்றி, விவரித்து எழுதியிருந்ததுதான். ஆண்களின் நாட்ட மென்றாலும்கூடப் பரவாயில்லை. பெண்கள் இதையெல்லாம் உரக்க விவாதிக்கலாமா? அப்படியே விவாதிக் கிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், அல்பெரூனி அதையெல்லாம் பதிவு செய்யவேண்டிய அவசியமென்ன? இந்தியப் பெண்களுக்கு வேண்டுமானாலும் இதெல்லாம் இயல்பானவையாக இருக்கலாம். விக்டோரியப் பெண்கள் கண்களில் பட்டுவிட்டால் துடித்துவிட மாட்டார்களா அவர்கள்?
அல்பெரூனி ஒரு மானுடவியலாளராகவும் இருந்ததால், இந்து வாழ்வின் பிற கூறுகளைப்போல் பாலியலையும் அவரால் இயல்பானதொன்றாக எடுத்துக்கொள்ள முடிந்தது. தன்னுடைய ஆங்கில மொழிபெயர்ப்பாளரைச் சந்திக்க நேர்ந்திருந்தால், அவர் இவ்வாறு சொல்லியிருப்பார். ‘நண்பரே, காமசூத்திரம் இயற்றிய நிலம் இது. இந்நிலத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால், உங்கள் மனதைத் திறந்து வைத்திருக்கவேண்டியது அவசியம். இந்தியா உலகிலுள்ள மற்ற நாடுகளைப்போல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மதிப்பீடுகளை இந்துக்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் ஏன் எதிர்பார்க்க வேண்டும்... உள்ளதை உள்ளபடி நான் பதிவுசெய்தபடி, உள்ளது உள்ளபடி மொழிபெயர்க்க நீங்கள் ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்?’
‘ஒரு நாடு வித்தியாசமாக இருக்கிறது, குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் புதிரானவர்கள், அவர்கள் நாகரிகமற்றவர்கள் என்றெல்லாம் சொல்லும்போது நாம் மற்றவர்களைப் பற்றிப் பேசுவதைவிட, நம்மைப் பற்றியே பேசுகிறோம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்’ என்பார் அல்பெரூனி. பிரச்னை அவர்களிடம் இல்லை, நம்மிடம்தான். விரியவேண்டியது நம் மனம், அவர்களுடையதல்ல. நெருங்கவேண்டியது நாம், அவர்களல்ல. நமக்குப் பரிச்சயமில்லாத நிலங்களையும் மதங்களையும் மனிதர்களையும் எப்படி அணுக வேண்டும் என்பதற்கான அடிப்படை இலக்கணமாக அல்பெரூனியின் நூல் இன்றளவும் திகழ்கிறது.
இந்துக்கள்மீது அவருக்கிருந்த மிகப்பெரும் குறை, அவர்கள் தங்கள் நிலத்தின் வரலாற்றை அக்கறையோடு எழுதிவைக்கவில்லை என்பதுதான். `கடந்த காலத்தின்மீது இந்துக்கள் ஏன் ஆர்வமற்றவர்களாக இருக்க வேண்டும்... தெளிவான காலவரிசையின்படி இந்தியாவின் வரலாற்றை இன்று எழுத முடியாமல் போனதற்குக் காரணம், இந்தியர்களின் பொறுப்பின்மைதான் அல்லவா? எந்தெந்த மன்னர்கள் எங்கெங்கே ஆண்டிருக்கிறார்கள், அவர்கள் ஆட்சி எவ்வளவு காலம் நீடித்தது என்னும் கேள்விக்கு விடை அறிய மிகவும் மெனக்கெடவேண்டியிருக்கிறது. அவர்கள் அளிக்கும் தகவல்கள் முன்பின் முரணாக இருக்கின்றன என்பதோடு, காலவரிசையில் இடையிடையே நீண்ட இடைவெளிகளும் விழுந்துவிடுகின்றன. எங்கெல்லாம் தரவுகள் இல்லையோ அங்கெல்லாம் கட்டுக்கதைகளை நிரப்பத் தொடங்கிவிடுகிறார்கள். இதை என்னால் ஏற்க முடியவில்லை’ என்கிறார் அல்பெரூனி. `எனக்கு இது தெரியவில்லை. என்னால் இதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. இதற்கான பொருளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு என் வாசிப்பில் ஆழமில்லை’ என்று அல்பெரூனி வெளிப்படையாகச் சில இடங்களில் எழுதியிருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த நேர்மையைத்தான் அவர் இந்தியர்களிடமும் எதிர்பார்த்திருக்கிறார்.
தன் புத்தகத்தை அயல்நாட்டு வாசகர்கள்தான் அதிகம் படிப்பார்கள் என்பது அவருக்குத் தெரியும். அவர்களுக்கான புத்தகமாக இது இருக்க வேண்டும் என்பதுதான் அவர் விருப்பமும். ஆனால் அதற்காக ‘ஜனரஞ்சகமாக’ எழுதுவதற்கு அவர் தயாராக இல்லை. இந்தியா என்றவுடன் பலரும் எதிர்பார்க்கும் அதிசயங்களையும் அற்புதங்களையும் ஆங்காங்கே நுழைத்து வாசகர்களை ஈர்க்கவோ, திருப்திப்படுத்தவோ அவர் விரும்பவில்லை. ஆழமாக வாசிக்கும் வழக்கமில்லாதவர்களுக்கு அவர் அளிக்கும் புள்ளிவிவரங்களும், முன்னெடுக்கும் தத்துவ விசாரணைகளும், அறிவியல் விவாதங்களும் பல இடங்களில் சலிப்பையே வரவழைக்கும். அல்பெரூனி இதற்கெல்லாம் கவலைப்பட்டதுபோல் தெரியவில்லை. அவர்களுக்குப் பிடிக்க வேண்டும், இவர்களைக் கவர வேண்டும் என்றெல்லாம் எண்ணிக்கொண்டு வரலாறு எழுதுவது சாத்தியமில்லை. அதற்கென்று ஒரு முறையியல் இருக்கிறது. அப்படி மட்டுமே எழுத முடியும் என்பார் அல்பெரூனி.
அல்பெரூனியின் வரலாற்றியல் பார்வை நவீனமானது, மதச்சார்பற்றது. `நான் ஒரு முஸ்லிம். எனக்கு என் மதம் உயர்வானது. அந்த நம்பிக்கையிலிருந்து ஓரங்குலம்கூட நான் விலகப்போவதில்லை. ஆனால் இந்து மதத்தை ஆராயும் இடத்தில் என் மதத்தின் மேன்மையை நான் நிறுவிக்கொண்டிருக்க மாட்டேன். ஒப்பீடு போக வேறு வகையில் என் மதம் என் எழுத்தில் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்வேன்.’ இன்றைய அறிவுத்துறையினர் பயன்படுத்தும் ஒப்பீட்டு ஆய்வுமுறைதான் அவருடையதும். இஸ்லாம், கிறிஸ்தவம், சூஃபியிசம், சொராஷ்ட்ரியம், கிரேக்க மதங்கள் என்று விரிவான தளங்களில் இந்து மதத்தைப் பொருத்தி அவர் ஆராயும்போது, இந்து மதம் தனித்தீவாக அல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுல வரலாற்றில் ஓர் அங்கமாகப் பொலிந்துவருகிறது.
வடக்கு, வடமேற்கு ஆகியவைதான் அல்பெரூனி பயணம் செய்த இந்தியப் பகுதிகள். குறிப்பாக பஞ்சாபிலும், காஷ்மீர் எல்லைப் பகுதிகளிலும் அவர் வாழ்ந்திருப்பதாகத் தெரிகிறது. கஜினி முகமதுவின் படைகளோடுதான் அவர் பெரும்பாலும் இருந்தார் என்பதால், பிற பகுதிகளுக்குச் செல்வதற்கான வாய்ப்பு அமையவில்லை. எனவே ஏடுகள், ஆவணங்கள், செவிவழிக்கதைகள் என்று பலவற்றைத் தன் அனுபவங்களோடு இணைத்துக்கொண்டே அவர் இந்தியாவைத் தொகுத்தார். எங்கே எப்படிப்பட்ட தரவுகளைக் கையாள வேண்டும், எவை நம்பத்தக்கவை போன்றவற்றை அவருடைய வாசிப்பும் அறிவும் தீர்மானித்தன.

எடுத்துக்காட்டுக்கு, 11 நகரங்களின் பரப்பளவை அவரே நேரில் சென்று பார்த்து, உறுதிசெய்து ஓரிடத்தில் பதிவுசெய்திருக்கிறார். தன்னால் உறுதி செய்ய முடியாத தரவுகள் குறித்து எழுதும்போது, `இதை நான் சேகரித்து மட்டும் தந்துள்ளேன்’ என்று அறிவித்துவிடுகிறார். `வட இந்திய நிலப்பரப்புகள், ஆறுகள், கடல்கள், சாலைகள், மலைகள் ஆகியவற்றை அவர் துல்லியமாக விவரித்திருப்பதைப் பார்க்கும்போது, அவர் பலமுறை கஜினியோடு இந்தியாவுக்கு வருகை தந்திருக்க வேண்டும்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். கஜினி சிறையில் அடைத்த இந்துக்களிடம் நீண்ட நேரம் உரையாடியும் அல்பெரூனி தகவல் சேகரித்திருக்கக்கூடும்.
அல்பெரூனியின் பார்வையில் 11-ம் நூற்றாண்டு வட இந்தியா ஒன்றுபட்ட ஒரே ஆட்சிப்பரப்பாக இல்லை. `சின்னச் சின்னத் துண்டுகளை வெவ்வேறு ஆட்சியாளர்கள் ஆண்டுவந்தனர். அவர்களுக்குள் ஒருங்கிணைப்பில்லை. தங்கள் நிலத்தை மட்டுமே அவர்கள் பார்த்துக்கொண்டனர். பிற பகுதிகள் குறித்து அவர்கள் அக்கறைகொள்ளவில்லை. அந்த வகையில் கஜினி முகமது போன்ற அந்நியர்கள் ஊடுருவுவதற்கும், கொள்ளையடிப்பதற்கும், ஆக்கிரமிப்பதற்கும் ஏற்ற சூழலை இந்தியா தன்னையும் அறியாமல் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. இது உண்மையிலேயே பெருந்துயர்’ என்கிறார் அல்பெரூனி.
(விரியும்)