மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 51 - மங்கோலியரும் ஐரோப்பியரும்

மங்கோலியரும் ஐரோப்பியரும்
பிரீமியம் ஸ்டோரி
News
மங்கோலியரும் ஐரோப்பியரும்

மூன்று அந்நியர்களில் ஒருவர் மார்கோ போலோ. உடன் வந்தவர்கள் அவருடைய அப்பாவும் மாமாவும்.

மூவரும் அந்நியர்கள் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்துவிட்டதால், வெனிஸ் மக்கள் இயன்றவரை அவர்களிடமிருந்து ஒதுங்கி ஒதுங்கிச் சென்றனர். மூவரின் ஆடைகளும் நைந்திருந்தன. பல இடங்களில் கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தன. ஏதேதோ மூட்டை, முடிச்சுகளைச் சுமந்துகொண்டிருந்தார்கள். முகங்கள் வாடி வதங்கியிருந்தன. உடலெல்லாம் அழுக்கு. அநேகமாக, கிழக்கிலிருந்து வரும் துருக்கியர்களாக இருக்கலாம். அஞ்சாமல் நிற்கும் சிலரை நெருங்கி, அந்தக் கையையும் இந்தக் கையையும் ஆட்டி ஏதோ கேட்கிறார்கள். அவர்கள் பேசுவது எந்த மொழி என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இது பயத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. யார் இவர்கள்... எதற்காக வெனிஸ் வந்திருக்கிறார்கள்... இவர்களால் நமக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா?

மூன்று அந்நியர்களில் ஒருவர் மார்கோ போலோ. உடன் வந்தவர்கள் அவருடைய அப்பாவும் மாமாவும். பாரசீகம், திபெத், சீனா, மங்கோலியா, பர்மா, சியாம், சுமத்ரா, ஜாவா, சிலோன், இந்தியா என்று கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் சுற்றித் திரிந்துவிட்டு மூவரும் வெனிஸ் வந்திருக்கிறார்கள். பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக அல்ல. பயணத்தை முடித்துக்கொண்டு இறுதியாக அவர்கள் வந்து சேர்ந்திருக்கும் இடம் அது. மார்கோ போலோ தன் வாழ்வில் பலதரப்பட்ட நிலங்களைக் கண்டிருக்கிறார். பல்வேறு மொழிகள் பேசும், பல்வேறு பண்பாட்டுப் பின்புலங்களைச் சேர்ந்த வெவ்வேறு இனக்குழுக்களைச் சந்தித்திருக்கிறார். திடுதிடுப்பென்று ஓரிடத்துக்குச் சென்று நிற்கும்போது, அங்கிருப்பவர்கள் எவ்வளவு பதற்றம் கொள்வார்கள் என்பது அவருக்குத் தெரியும். தான் ஆபத்தானவன் அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்த எவ்வளவு பிரயத்தனப்பட வேண்டும் என்பதை அவர் அறிவார்.

ஆனால் வெனிஸும்கூட அப்படியேதான் தன்னை நடத்தும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. `மற்றவர்களுக்கு வேண்டுமானால் நான் ஓர் அந்நியர். வெனிஸுக்குமா? என்னை விடுங்கள், என் அப்பாவையும் மாமாவையும் கண்டுமா அவர்கள் அஞ்ச வேண்டும்? மற்றவர்களைப்போல் வெனிஸும் எங்களை அயல் தேசத்தவர் என்று கருதிவிட்டதா?’

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 51 - மங்கோலியரும் ஐரோப்பியரும்

உண்மையில் அப்படித்தான் வெனிஸ் நினைத்துவிட்டது. போலோ குடும்பத்தைச் சேர்ந்த மூவரையும் முற்றிலுமாக மறந்தேபோய்விட்டது வெனிஸ். ‘இது எங்கள் சொந்த ஊர். எங்கள் வீடு இங்கேதான் இருக்கிறது. அதற்குத்தான் நாங்கள் வழி கேட்கிறோம்’ என்று என்னதான் அவர்கள் சத்தமிட்டு விளக்கினாலும் ஊர் மக்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. புரியாத மொழியில் கீச்சிடுபவர்களை எப்படி நம் ஊர்க்காரர்கள் என்று சொல்ல முடியும்? நாம் பேசுவது அவர்களுக்குப் புரியவில்லை என்பது மூவருக்கும் புரிகிறது. ஆனால், எவ்வளவு முயன்றும் மூவராலும் தங்கள் தாய்மொழியை நினைவுபடுத்திக்கொள்ள முடியவில்லை. மொழியும் தெரியாமல், முகவரியும் தெரியாமல் எங்கோ காட்டில் வந்து சிக்கிக்கொண்டதுபோல் ஆகிவிட்டது அவர்களுக்கு. எங்கெங்கோ ஒய்யாரமாக உலா வந்தவர்களுக்குச் சொந்த ஊர் பெரும் புதிராக மாறிவிட்டது.

கனவுபோல் அடிமனதில் தேங்கியிருந்த கலங்கலான காட்சிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்து, தட்டுத் தடுமாறி ஒரு வழியாக வீட்டைக் கண்டுபிடித்து கதவைத் தட்டினால், யாரோ வெளியில் வந்து ‘என்ன வேண்டும்?’ என்றார்கள். ‘இது எங்கள் வீடு. நீங்கள் எங்கள் உறவினர்கள். எங்களை நினைவில்லையா? நாங்கள் போலோக்கள். எங்களை உள்ளே அனுமதியுங்கள்’ என்று மூவரும் மன்றாடினார்கள். ‘என்னது போலோக்களா... அவர்கள்தான் எப்போதோ இறந்துபோய்விட்டார்களே!’ என்று சொல்லி, பட்டென்று கதவை அடைத்துவிட்டார்கள் வீட்டிலிருந்தவர்கள்.

பஞ்சாயத்தைத் தீர்த்துவைக்க பக்கத்து ஊர்களிலிருந்து வெவ்வேறு உறவினர்கள் திரண்டுவந்தனர். மூவரையும் அமரவைத்துக் குடும்பக் கதைகளிலிருந்து பல கேள்விகள் எழுப்பினார்கள். நீண்ட விசாரணை நடைபெற்றது. `ஆம், இவர்கள் நம் போலோக்கள்தான்’ என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகே அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகுதான் வெனிஸ் உற்சாகமாக மூவரையும் தழுவிக்கொண்டது. `நீங்கள் எங்கெல்லாம் சென்றுவந்தீர்கள்... என்னவெல்லாம் பார்த்தீர்கள்?’ என்று அனைவரும் கேட்க, மார்கோ போலோ தன் அனுபவங்களை விவரிக்கத் தொடங்கினார். இன்றுவரை அவர் கதைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது உலகம்.

1254-ம் ஆண்டு, வெனிஸில் பிறந்தார் மார்கோ போலோ. உலகின் முக்கியமான வர்த்தக நகரமாக வெனிஸ் அப்போது உயர்ந்திருந்தது. கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்ட 118 சின்னச் சின்னத் தீவுகளின் தொகுப்புதான் வெனிஸ். மார்கோ போலோ பிறந்த அதே ஆண்டு, அப்பா நிகோலோவும் மாமா மஃபியோவும் ஆசியாவுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். இருவரும் வணிகர்கள். 15 ஆண்டுகள் கழித்து அவர்கள் வீடு திரும்பியபோது, மார்கோவின் அம்மா இறந்துபோயிருந்தார். மார்கோ தன் தந்தையை முதன்முதலில் சந்தித்தபோது அவர் வயது 15. இரண்டாண்டுகள் கழித்து அவர்கள் மீண்டும் கப்பல் ஏறியபோது மார்கோவும் அவர்களோடு இணைந்துகொண்டார். மூவரும் சீனாவை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

மார்கோ போலோவுக்கு மட்டும்தான் அது முதல் சீனப் பயணம். மற்ற இருவருக்கும் சீனா ஏற்கெனவே நன்கு அறிமுகமாகியிருந்தது. கவனிக்கவும், ஐரோப்பாவுக்கே சீனா முறையாக அறிமுகமாகாத காலம் அது. ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களே உலகில் இருக்கின்றன என்று ஐரோப்பியர்கள் நம்பிக்கொண்டிருந்த காலமும்கூட. `அபாயகரமான இடம்’, `உலகின் கோடியில் அமைந்துள்ள மர்ம இடம்’ என்றெல்லாம் சீனா அப்போது அழைக்கப்பட்டு வந்தது. ஒதுக்கப்பட்டும் வந்தது. அப்படி என்னதான் ஆகிவிடும் பார்த்துவிடுவோமே என்று துணிந்து உள்ளே நுழைந்ததோடு, அங்கே ஆட்சி புரிந்துகொண்டிருந்த பேரரசர் குப்லாய் கானுக்கும் நெருக்கமானவர்களாக மாறினார்கள் இரண்டு போலோக்களும். குப்லாய் கான் தன் வாழ்நாளில் முதன்முறையாகச் சந்தித்த ஐரோப்பியர்கள் இந்த இருவரும்தான் என்பதால், அவர்களை ஏதோ அதிசயப் பொருள்கள்போல் கருதி மதித்தார் அவர். மீண்டும் வர வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, வரும்போது என்னவெல்லாம் வாங்கிவர வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

அவர் கேட்காததையும் இரு போலோக்கள் கொண்டு சென்றனர். மார்கோ போலோ. வெனிஸிலிருந்து கிளம்பி குப்லாய் கானின் அரண்மனைக்கு வந்துசேர மூன்றரை ஆண்டுகள் பிடித்தன. அமைதியாகத் தன் முன் வந்துநின்ற 21 வயது மார்கோ போலோவைக் கண்டதும், அவரைவிட மூன்று மடங்கு வயதில் மூத்த குப்லாய் கானுக்குக் குதூகலம் பிறந்துவிட்டது. யார், என்ன என்று விசாரித்துத் தெரிந்துகொண்டார். குப்லாய் கானின் விழிகள் கருத்திருந்தன. தோல் நிறமற்று, வெளிறிப்போயிருந்தது. சுமாரான உயரம் என்று குப்லாய் கான் பற்றிய தன் முதல் மனப்பதிவைப் பதிவுசெய்கிறார் மார்கோ போலோ.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 51 - மங்கோலியரும் ஐரோப்பியரும்

குப்லாய் கான், செங்கிஸ்கானின் பேரன். மங்கோலிய மன்னர். சீனாவை முழுமையாக வென்று, சீனப் பேரரசராகவும் விரிந்தவர். சீனாவை ஆண்ட முதல் சீனரல்லாதவர் இவரே. இன்றைய பீஜிங்கில் அவர் அரண்மனை அமைந்திருந்தது. அது குளிர்கால அரண்மனை. ஷங் டு எனும் இடத்திலுள்ள கோடைக்கால மாளிகையில், போலோக்கள் தங்கவைக்கப்பட்டனர். வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த மாளிகையைக் கண்டு தீராத வியப்பில் ஆழ்ந்துபோனார் மார்கோ போலோ. உள்ளே அமைந்திருந்த தோட்டத்தில் பத்தாயிரம் குதிரைகள் இருந்தனவாம். (மார்கோ போலோ, ஒரு கதைசொல்லியும்கூட என்பதை மறந்துவிடக் கூடாது!) குப்லாய் கான் தனக்குப் பிடித்த ஒரு குதிரையில் ஏறியமர்ந்து தோட்டத்தை வலம்வருவார். அவர் பின்னால் இன்னொரு குதிரை. அதற்கும் பின்னால் அவர் வளர்த்த கருஞ்சிறுத்தை பாய்ந்தோடி வரும்.

கலைப் பொருள்கள், ஓவியங்கள் ஆகியவற்றைச் சேகரிப்பதில் குப்லாய் கானுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஒரு நல்ல மரத்தை எங்காவது கண்டால், யானையை அனுப்பி வேரோடு பிடுங்கி வரச்செய்து தன் தோட்டத்தில் நட்டுக்கொள்வாராம். குப்லாய் கான் வேட்டையாடச் செல்லும்போது அவரோடு 5,000 வேட்டை நாய்கள் செல்லுமாம். குப்லாய் கானுக்கு எல்லாவற்றையும் பிரமாண்டமாகச் செய்து பார்க்க வேண்டும். `பெரிதினும் பெரிது கேள்’ என்பதுதான் மார்கோ போலோவின் வழக்கமும். பெரிய கனவுகளை மட்டுமே காணத் தெரியும் அவருக்கு. அதனால்தான் மங்கோலியருக்கும் ஐரோப்பியருக்கும் ஏற்பட்ட இறுக்கமான பிணைப்பு எந்தவகையிலும் யாரையும் ஆச்சர்யப்படுத்தவில்லை. மார்கோ போலோவைத் தன்னுடைய தூதுவராக நியமித்த குப்லாய் கான், அடுத்த 17 ஆண்டுகள் அவரை இந்தியா உட்பட பல இடங்களுக்கு அனுப்பிவைத்தார்.

எதற்காக என்பதை குப்லாய் கானும் சொல்லவில்லை. மார்கோ போலோவும் விளக்கவில்லை. `நான் என் பணியை மிக நன்றாகச் செய்து முடித்தேன்’ என்று மட்டுமே சொல்கிறார் அவர். ஊர் சுற்றிப் பார்க்க அனுப்பினார் என்பது தொடங்கி, உளவறிந்து வருவதுதான் அவருக்கு இடப்பட்ட பணி என்பதுவரை பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. எது எப்படியோ இருவருக்கும் இந்த ஏற்பாடு பிடித்துப் போய்விட்டது. கனவு கண்ட இடங்களையெல்லாம் கண்டுதீர்த்தார் மார்கோ போலோ. தன்னால் நேரில் சென்று காண இயலாத இடங்களையெல்லாம் மார்கோ போலோ திரும்பி வந்து சொன்ன கதைகள் வாயிலாகத் தரிசித்து மகிழ்ந்தார் குப்லாய் கான். 13-ம் நூற்றாண்டு இந்தியாவை நாமும் மார்கோ போலோவின் எழுத்துகள் வாயிலாகவே இன்று தரிசிக்கிறோம்!

(விரியும்)