
இங்கே ஒரு மலை இருக்கிறது. யாராலும் அதில் ஏற முடியாது, அவ்வளவு உயரம். நம் அனைவருக்கும் தந்தையான ஆதாமின் கல்லறை அங்கே இருப்பதாகச் சொல்கிறார்கள்
மார்கோ போலோவின் தென்னிந்தியா சிலோனில் ஆரம்பிக்கிறது. `அந்தமான் தீவிலிருந்து சற்றே தென்மேற்கில் ஆயிரம் மைல் கப்பலில் பயணம் செய்தால் சிலோனை வந்தடைந்துவிடலாம்’ என்கிறார் போலோ. ‘சீலான்’ என்பது அவர் அழைக்கும் பெயர். இப்போதிருப்பதைக் காட்டிலும் சிலோன் ஒரு காலத்தில் பெரிதாகவே இருந்தது. கடல் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கியது போக எஞ்சியிருக்கும் துண்டைத்தான் நாம் இன்று பார்க்கிறோம். `சிறியதாக இருந்தாலும் சிறந்த இடம்’ என்று சொல்லிவிட்டு சிலோனின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்.
`சிலோன் மக்கள் உருவச்சிலையை வழிபடுபவர்கள். இடையில் ஒரு துண்டு துணி போக, பெரும்பாலும் ஆடையின்றியே திரிந்துகொண்டிருக்கிறார்கள். சிலோனின் ஒரு மன்னர் இருக்கிறார். அவர் பெயர் செண்டேமெய்ன். (யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை). கோதுமையைக் காண முடியவில்லை. அரிசிதான் சாப்பிடுகிறார்கள். எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். இறைச்சியும் பாலும் நிறைய கிடைக்கின்றன. உலகின் சிறந்த மரங்களை இங்கே காண முடியும். மரத்திலிருந்து ஒரு வகையான மதுவைப் பிழிந்து எடுக்கிறார்கள்.
இங்கு கிடைப்பதைப் போன்ற மாணிக்கக் கற்களை உலகில் வேறு எங்கும் நீங்கள் காண முடியாது. சிலோன் மன்னரிடம் தனித்துவமான ஒரு மாணிக்கம் இருக்கிறது. அது எப்படி இருக்கும் என்று சொல்கிறேன். உள்ளங்கை அளவுக்கு அகலம். மனிதக் கரம் அளவுக்குத் தடிமன். நெருப்புபோல் சிவந்திருக்கும். எங்கள் பேரரசர் விரும்புகிறார். நீங்கள் எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார் என்று குப்லாய் கானிடமிருந்து சில தூதுவர்கள் வந்து ஒருமுறை கேட்டார்களாம். `இந்த மாணிக்கம் எங்கள் மூதாதையரிடமிருந்து என் கரங்களுக்கு வந்திருக்கிறது. உயிரே போனாலும் தர மாட்டேன்’ என்று சிலோன் மன்னர் சொல்லிவிட்டாராம்.

இங்கே ஒரு மலை இருக்கிறது. யாராலும் அதில் ஏற முடியாது, அவ்வளவு உயரம். நம் அனைவருக்கும் தந்தையான ஆதாமின் கல்லறை அங்கே இருப்பதாகச் சொல்கிறார்கள். கல்லறை என்னவோ இருக்கிறதுதான். ஆனால் அதற்குள் இருப்பவர் ஆதாம் அல்ல, போர்கன் என்கிறார்கள் வேறு சிலர். யார் போர்கன் என்று கேட்டால், `மனிதர்களுள் மேலானவர், புனிதர்களிலும் புனிதர்’ என்று புகழ்கிறார்கள்.’ ஆதாமைக் காட்டிலும் உயர்ந்த இன்னொருவர் யாராக இருக்க முடியும் என்னும் கேள்வியோடு தன் தேடலைத் தொடங்கியபோது, அவருடைய கதை மார்கோ போலோவுக்குக் கிடைத்திருக்கிறது.
சீறும் பேரும் மிக்க ஓர் அரசரின் மகன், போர்கன். எல்லோரும் அரசருக்குக் கட்டுப்பட்டு பய பக்தியோடு இருந்தார்கள். போர்கனைத் தவிர. இருப்பது ஒரு மகன். அவனோ எதிலும் ஆர்வம் செலுத்துவதில்லை. அப்படியானால் எனக்குப் பிறகு ஆட்சி நிர்வாகத்தை யார் ஏற்று நடத்துவது என்று தவிக்கிறார் அரசர். போர்கனை வழிக்குக் கொண்டுவருவதற்காக `இந்தா மணிமுடி, இந்தா செல்வம்’ என்று என்னென்னவோ கொடுத்துப் பார்க்கிறார். போர்கன் மயங்குவதாக இல்லை. ஒரு மாளிகையைக் கட்டி அங்கே தன் மகனைக் குடியமர்த்துகிறார். சேவை செய்ய அழகிய பெண்களை நியமிக்கிறார். அவர்களுடைய ஆடல், பாடல்களில் மகன் ஈர்க்கப்படுகிறானா பார்ப்போம் என்று காத்திருக்கிறார். போர்கனுக்கோ ஞானம் தவிர வேறு எதிலும் நாட்டமில்லை.
மாளிகையில் தனிமையில் வாழும் போர்கனை வெளியுலக வாழ்வின் நிழல்கூடத் தீண்டவில்லை. எந்த அளவுக்கு என்றால் இறப்பு என்றால் என்னவென்பதையே அவன் அறியாமல் இருக்கிறான். நோய் என்றால் என்னவென்பதையும் அவன் அறிந்திருக்கவில்லை. தன் மகன் இன்பங்களில் மட்டுமே திளைக்க வேண்டும் என்று கருதி அரசர் செய்துள்ள ஏற்பாடு இது. ஒருநாள் போர்கன் தடைகளை மீறி வெளியில் வருகிறான். அசைவற்றுக் கிடக்கும் ஒரு மனிதனின் உடலை முதன்முதலாக அவன் காண்கிறான். தளர்ந்த, நோயுற்ற ஒரு கிழவனையும் அவன் பார்க்க நேர்கிறது. போர்கனை இந்தக் காட்சிகள் உலுக்குகின்றன. எல்லோருக்கும் நோய் வருமா... எல்லோரும் முதுமையை அடைவார்களா... எல்லா உடல்களும் ஒருநாள் அசைவற்று வீழ்ந்துவிடுமா? கேள்விகள் அவனை விழிப்புறச் செய்கின்றன. தீராத தேடலொன்று அவனை உந்தித் தள்ளுகிறது. மாளிகையிலிருந்து ஓர் இரவு வெளியேறி காடு, மேடு என்று திரிந்து மலைகளை அடைகிறான். அங்கேயே வாழ ஆரம்பிக்கிறான்.
இப்படியாக புத்தரின் கதையை விவரிக்கும் மார்கோ போலோ தகுந்த இடத்தில் ஒரு சின்ன திருகு திருகுகிறார். `எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபட்டு, எல்லோரிடமிருந்தும் ஒதுங்கி, ‘ஒரு கிறிஸ்தவரைப்போல்’ அந்த மகான் மலையில் வாழ்ந்துவந்தார்’ என்கிறார் போலோ. அதோடு விட்டுவிடவில்லை அவர். போர்கன் மட்டும் கிறிஸ்தவராக இருந்திருந்தால், இந்நேரம் நம் இயேசு நாதரின் புனித குமாரனாக மாறியிருக்கலாம் என்றொரு ரகசிய ஏக்கப் பெருமூச்சையும் வெளியேற்றுகிறார். கத்தோலிக்க கிறிஸ்தவரான மார்கோ போலோவுக்கு சிலோனின் குமாரன் மனித குமாரனாகத் தோன்றியதில் வியப்பு இருக்க முடியாது அல்லவா?
இந்தக் கதை எப்படி முடிகிறது என்றால், மலையில் இறந்த போர்கனின் உடலைக் கண்டறிந்து அரசரின் முன்பு கொண்டுவருகிறார்கள் ஊர் மக்கள். சோகத்தில் ஆழ்ந்துவிடும் அரசர், தன் மகனின் உருவத்தைத் தங்கத்தால் வடிக்கச் செய்து அவனைக் கடவுளாக மாற்றி, தன் ஆட்சியிலுள்ள எல்லோரும் அவரை வணங்க வேண்டும் என்று சொல்லிவிடுகிறார். இதுதான் சிலோன் கண்ட முதல் உருவச்சிலை. இன்று நாம் காணும் எல்லாச் சிலைகளும் இதிலிருந்தே பிறந்து வந்தன என்கிறார் மார்கோ போலோ. இந்தியாவிலிருந்து மூலக்கதையைப் பெற்றுக்கொண்டு அதில் சில மாற்றங்களை மேற்கொண்டு ஒரு புதிய புத்தரை சிலோன் உருவாக்கியிருக்கலாம். அப்படியொரு புத்தரின் கதையைத்தான் மார்கோ போலோ கேட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சிலோனிலிருந்து கிளம்பி 1292-ம் ஆண்டு வாக்கில், 300 பணியாளர்களைக்கொண்ட ஒரு வணிகக் கப்பலில் சோழ மண்டலக் கடற்கரைக்கு வந்துசேர்கிறார் மார்கோ போலோ. அவர் முதலில் நுழைந்தது தஞ்சாவூரில். அப்போது அங்கே ஆட்சியில் இருந்தவர்கள் பாண்டியர்கள். `இது மிக அழகிய இடம்’ என்று எடுத்த எடுப்பிலேயே நற்சான்றிதழ் கொடுத்துவிடுகிறார். பிறகு பாண்டிய நிலத்தின் கதைகளைச் சொல்லத் தொடங்கிவிடுகிறார். சிலோனில் மாணிக்கம் என்றால் இங்கே முத்து. அபரிமிதமாக ஆற்றில் கொட்டிக்கிடக்கிறது. முத்துகளை எப்படிச் சேகரிக்கிறார்கள் தெரியுமா?
சிலோன் தீவுக்கும், பாண்டியர்களின் நிலப்பகுதிக்கும் இடையில் பாயும் ஆறு இருக்கிறதல்லவா? அது அதிக ஆழமற்றது. முத்து சேகரிப்பவர்கள் கப்பல்களையும் படகுகளையும் எடுத்துக்கொண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்த ஆற்றுப் பகுதிக்கு வந்துவிடுகிறார்கள். முதலில் அவர்கள் செல்வது பட்டளம் (சிலோன்) பகுதிக்குத்தான். அங்கிருந்து 60 மைல் தொலைவிலுள்ள வளைகுடாவுக்குள் நுழைகிறார்கள். கப்பல்களில் இருப்பவர்கள் அனைவரும் இப்போது சிறிய படகுகளுக்கு மாறுகிறார்கள். தகுந்த இடம் வந்ததும் முத்துக் குளிப்பவர்கள் ஆற்றுக்குள் பாய்கிறார்கள்.

மூச்சை அடக்கிக்கொண்டு சிப்பிகளைத் தேடுகிறார்கள். முத்துகளோடு இருக்கும் சிப்பிகளைத் தேர்ந்தெடுத்து இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் வலை போன்ற பையில் நிரப்புகிறார்கள். பை ஓரளவுக்கு நிறைந்ததும் மேலே எழும்பி, நீந்தி, படகை அடைகிறார்கள். பையில் இருந்த முத்துகளைக் கொட்டிவிட்டு மீண்டும் ஆற்றுக்குள் குதிக்கிறார்கள். ஒருவர் எவ்வளவு நேரம் மூச்சை அடக்கிக்கொண்டு நீருக்குள் பணியாற்றுவார் என்பது அவரவர் திறமையை, அனுபவத்தைப் பொறுத்தது. சில சமயம் சிப்பி கிடைப்பதற்கு அதிக நேரமாகலாம். அப்போது அடிக்கடி மேலே வந்து வந்து மூச்சு வாங்கிவிட்டு மீண்டும் கீழே போவார்கள். சிப்பி என்னும் மெல்லுயிருக்குள் முத்து அமர்ந்திருக்கும். சின்னச் சதைத் துணுக்குபோல் ஓட்டோடு அது ஓட்டிக்கொண்டிருக்கும். சிறியதும் பெரியதுமாக இருக்கும் முத்துகளைப் படகில் இருப்பவர்கள் தனியே பிரித்தெடுப்பார்கள்.
முத்துக்குளிக்கச் செல்லும் படகுகள் வணிகர்களுக்குச் சொந்தமானவை. ஒவ்வொரு வணிகரும் முத்துக் குளிப்பதற்கென்று ஆள்களை ஊதியம் கொடுத்து நியமித்திருப்பார்கள். கிடைக்கும் முத்துகளில் பத்தில் ஒரு பங்கை மன்னருக்குச் செலுத்திவிட வேண்டும். பணியாள்கள், மன்னர் போக ‘மீன் மயக்குபவர்களுக்கும்’ ஒரு பங்கு கட்டணம் கொடுக்க வேண்டும். நீருக்குள் குதித்து முத்துக்குளிப்பவர்களைத் திமிங்கலம் போன்ற ஆபத்தான மீன்களிடமிருந்து மீட்கும் முக்கியமான பணியை இந்த மந்திரவாதிகள் செய்கிறார்கள். இவர்கள் என்ன செய்து மீன்களை மயக்குகிறார்கள் என்பதையும் போலோ விவரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் ஒரு நாள் மட்டும்தான் இவர்களுடைய மாயம் வேலை செய்யுமாம். எனவே மறுநாள் முத்துக்குளிக்கும்போது மீண்டும் மீன் மயக்குபவர்களின் உதவியை நாடிப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவர்களைக் கடந்து நேரடியாக ஆற்றில் குதித்தால் அதோடு கதை முடிந்தது என்று எச்சரிக்கிறார் போலோ.
மீனை மயக்குபவர்களை ‘அப்ரயமான்’ என்று அழைக்கிறார் போலோ. மந்திரம், தந்திரமெல்லாம் தெரிந்திருப்பதால் ஒருவேளை இவர்கள் பிராமணர்களாக இருக்குமோ என்று சிலர் சந்தேகிக்கிறார்கள். மீன்கள் போக, பறவைகளையும் இன்னபிற உயிரினங்களையும் இவர்களால் மயக்கி, கட்டுக்குள் வைத்திருக்க முடியுமாம். போலோவும்கூட இப்படித்தான் தன் கதைகளால் வாசகர்களை மயக்கி, கட்டுக்குள் கொண்டுவருகிறார்.
(விரியும்)