மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 54 - பாண்டிய நாட்டுக் கதைகள்-II

பாண்டிய நாட்டுக் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பாண்டிய நாட்டுக் கதைகள்

மது அருந்துபவர்கள் மதியிழந்தவர்கள். கடல் பயணம் செய்பவர்கள் காசுக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள். இந்த இருவரும் மதிக்கப்படுவதில்லை.

அல் பெரூனியிடமிருந்த பரந்து விரிந்த அறிவோ அறிவியல் பார்வையோ மார்கோ போலோவிடம் இல்லை. அவர் ஒரு வணிகர். `போய் வந்து கதைகள் சொல்லு’ என்று குப்லாய் கான் அவருக்கு உத்தரவிட்டிருந்தார். மார்கோ போலோ செய்தது அதைத்தான். அவர் ஒரு சிறந்த கதைசொல்லி. எளிமையான, அப்பாவித்தனமான கதைசொல்லி.

அவருடைய பாண்டிய நாட்டுக் கதைகள் தொடர்கின்றன. `பாண்டிய நாட்டு மக்கள் சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தினமும் இரு வேளை குளிக்கிறார்கள். குளிக்காதவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். வலது கையால் மட்டுமே உண்கிறார்கள். எல்லாச் சுத்தமான காரியங்களுக்கும் வலது கைதான் நீண்டுவருகிறது. அசுத்தமான பணிகளுக்கென்றே இடதுகையை ஒதுக்கிவைத்திருக்கிறார்கள். தண்ணீர் குடிக்கக்கூட இன்னொருவரின் கோப்பையை அவர்கள் பயன்படுத்துவதில்லை. ஒருவேளை இன்னொருவரின் பாத்திரத்திலிருந்து நீர் அருந்தும் அவசியம் ஏற்பட்டுவிட்டால், பாத்திரத்தை வாயிலிருந்து இயன்றவரை தூக்கிப் பிடித்து அங்கிருந்து சாய்த்து, உதடு படாமல் லாகவமாகக் குடிக்கிறார்கள். கைகளில் நீரை ஏந்தி அருந்தும் வழக்கமும் இருக்கிறது.

மது அருந்துபவர்கள் மதியிழந்தவர்கள். கடல் பயணம் செய்பவர்கள் காசுக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள். இந்த இருவரும் மதிக்கப்படுவதில்லை. அவர்களை யாரும் சாட்சி சொல்ல அழைப்பதில்லை. கடன் வாங்கிவிட்டுத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பவரை வழிக்குக் கொண்டுவர அவரைச் சுற்றி ஒரு வளையத்தைக் கடன் கொடுத்தவர் வரைகிறார். அது ஒரு சிறை. கணக்கு தீர்க்காமல் வெளியில் வருபவரின் கதை தீர்க்கப்படும். எனவே, எல்லோரும் வளையத்துக்கு அஞ்சினார்கள்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 54 - பாண்டிய நாட்டுக் கதைகள்-II

நானே அப்படியொரு நிகழ்வை என் இரு கண்களால் கண்டேன். அயல்நாட்டு வணிகரிடமிருந்து ஒரு மன்னர் குறிப்பிட்ட தொகையொன்றைக் கடனாகப் பெற்றுக்கொண்டு, கையோடு அதை மறந்துவிட்டாராம். வணிகர் சிலமுறை நினைவுபடுத்தியும் பணம் வரவில்லையாம். ஒருநாள் மன்னர் குதிரையில் சென்றுகொண்டிருந்ததைக் கண்ட வணிகர், விரைந்து சென்று மன்னரைச் சுற்றி ஒரு வளையத்தைப் போட்டுவிட்டார். சட்டென்று குதிரையை நிறுத்திவிட்டார் மன்னர். ஒரேயோர் அங்குலம்கூட நகரவில்லை அவர். வணிகருக்குப் பைசல் செய்து முடித்த பிறகே குதிரை கிளம்பியதாம். இதைக் கண்ட மக்கள் `ஆகா, மன்னரென்றால் இப்படியல்லவா நீதியுணர்வோடு இருக்க வேண்டும்’ என்று ஆரவாரம் செய்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

ஜூன், ஜூலை, ஆகஸ்ட். இந்த மூன்று மாதங்கள் தவிர மற்ற எல்லா மாதங்களும் வெயில் கொளுத்தியெடுக்கிறது. இந்த மூன்று மாதங்களாவது மழை பெய்கிறதே என்று நிம்மதி கொள்ளவேண்டியதுதான். இல்லாவிட்டால் கடும் வறட்சி மக்களைத் தின்றுவிடும்.

மக்கள் ஜோசியத்தை மதிக்கிறார்கள். ஒரு மனிதனின் குணாதிசயங்களை ஜோசியத்தால் கண்டுபிடித்துவிடமுடியும் என்று நம்புகிறார்கள். சகுனம் பார்க்கிறார்கள். ஒரு பறவையோ, விலங்கோ தோன்றினால் அதன் பொருள் இதுதான் என்று கணித்துவிடுகிறார்கள். ஒருவர் தன் பாட்டுக்கு எங்காவது சென்றுகொண்டிருப்பார். யாராவது தும்மினால் போச்சு! அவர் அதை நல்ல சகுனம் என்று நினைத்தால் மட்டுமே தொடர்ந்து நடப்பார். இல்லாவிட்டால் பயணத்தை முறித்துக்கொண்டு வந்த வழியே திரும்பிவிடுவார். ஒரு குழந்தை பிறந்ததும் ஓடோடிச் சென்று நாள், நட்சத்திரம், நிலாவின் தோற்றம் போன்றவற்றைக் குறித்து வைத்துவிடுகிறார்கள். அந்தக் குழந்தை வளர்ந்து பெரிய ஆள் ஆனாலும் இந்தக் குறிப்புகளைக் கொண்டே அவருடைய குணாதிசயங்களை அறிந்துகொள்கிறார்கள். ஜோசியர்கள், மந்திரவாதிகள், மாயக்காரர்கள் என்று பலரிடமிருந்தும் மக்கள் வழிகாட்டுதல்கள் பெற்றுக்கொள்கிறார்கள். இவர்கள் அளவுக்கு ஆழமாக உலகில் வேறு யாரும் மந்திர, தந்திரங்களில் நம்பிக்கை வைத்திருப்பார்களா என்று தெரியவில்லை.

ஒரு பையனுக்கு 13 வயது ஆகிவிட்டால் அவனை வீட்டிலிருந்து துரத்திவிடுகிறார்கள். 20 அல்லது 24 ஆடுகள் அல்லது அந்த மதிப்புக்குச் சமமான தொகையை அவனுக்கு முதலீடாகப் கொடுக்கிறார்கள். அதன் பிறகு தன் வாழ்வை அவன்தான் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும், தன் செலவுகளை அவன்தான் கவனித்துக்கொள்ள வேண்டும். அவன் ஆடு மேய்ப்பானோ, முத்துக் குளிப்பானோ, ஓடியாடி உழைப்பானோ, பெற்றோர் தலையிட மாட்டார்கள்.

காடை மட்டும்தான் அதேபோல் இருக்கிறது. மற்ற பறவைகளும் விலங்குகளும் பார்ப்பதற்குப் புதியனவாக உள்ளன. வௌவால் என்றொரு பறவை இருக்கிறது. இது இரவு நேரங்களில் மட்டும் பறக்கும். மற்ற பறவைகள்போல் உடலில் இறகுகள் கிடையாது. இது வல்லூறு அளவுக்குப் பெரிதாக இருக்கிறது. இங்கே உள்ள வல்லூறு காகம் போல் கறுத்திருக்கிறது. நம் வல்லூறுவைவிட வேகமாகப் பறந்து செல்கிறது. இங்குள்ள குதிரைகள் வேக வேகமாக இறக்கின்றன என்று சொன்னேன் அல்லவா? அதற்குக் காரணம் மனிதர்கள்போலவே கருதி அதற்கும் அரிசிச் சோறும் இறைச்சியும் பொங்கிப் போடுவதுதான் என்பது தெரிகிறது.

இங்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே பலர் ஒருவித இலையை வாய்க்குள் போட்டு சதா குதப்பிக்கொண்டே இருக்கிறார்கள். எப்போதும் எச்சில் துப்பிக்கொண்டே இருக்கிறார்கள். யாரேனும் இழிவு செய்தால் முகத்திலேயே உமிழ்ந்துவிடவும் தயங்குவதில்லை. மன்னர்கூட இலையோடு இன்னபிற சமாசாரங்களைச் சேர்த்துச் சுவைத்து மென்றுகொண்டிருக்கிறார். கேட்டால் உடம்புக்கு நல்லது என்று சாதிக்கிறார்கள்.

பெண் குழந்தைகளைக் கோயில்களில் நேர்ந்துவிடும் வழக்கம் இங்கே இருக்கிறது. அப்பா, அம்மா இருவரும் இணைந்து தங்களுக்கு மிகவும் பிடித்த கடவுளுக்குத் தங்கள் பெண் குழந்தையை ஒப்படைத்துவிடுகிறார்கள். விழா, கொண்டாட்டம் என்றால் இந்தப் பெண்களைத்தான் அர்ச்சகர்கள் வரவழைக்கிறார்கள். கடவுள் சிலைக்கு முன்பு அவர்கள் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். கடவுளுக்கு உணவு சமைக்கும் பணியையும் இந்தப் பெண்களே செய்கிறார்கள். இறைச்சி தொடங்கி எல்லாவிதமான பண்டங்ளையும் இவர்கள் தங்கள் கைப்பட உருவாக்கி, தட்டுகளில் நிரப்பி கடவுளுக்குப் படைக்கிறார்கள். கடவுள் தங்கள் உணவை ஏற்றுக்கொள்ளும்வரை ஆடல்களிலும் பாடல்களிலும் ஈடுபடுகிறார்கள். அதன் பிறகு தட்டுகளைச் சேகரித்து கடவுள் உண்டது போக மிச்சமுள்ள உணவை மிகுந்த மகிழ்ச்சியோடு இந்தப் பெண்கள் உண்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் பலமுறை இந்தச் சடங்கு நடைபெறும். கோயில் பெண்கள் திருமணமாகிச் செல்லும்வரை அவர்கள் இந்தப் பணிவிடைகளைத் தொடர்கிறார்கள்.’

தேவதாசிகள் குறித்து மார்கோ போலோ அளிக்கும் இந்தச் சித்திரம் முக்கியமானது. தன் இணையோடு கோபம்கொண்ட ஆண் கடவுள்களை அமைதிப்படுத்தவே பெண்கள் நடனமாடுகிறார்கள் என்று அர்ச்சகர்கள் சொன்னதாக அவர் பதிவுசெய்கிறார். பெண்கள் ஆடையின்றி நடனமாடுவதாகவும் சொல்கிறார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 54 - பாண்டிய நாட்டுக் கதைகள்-II

புனித தோமா (தாமஸ்) பற்றிய ஆரம்பகாலக் குறிப்புகளை வழங்கியவர்களில் மார்கோ போலோவும் ஒருவர். அவரைப் பொறுத்தவரை தோமா கொல்லப்பட்டது மாபாருக்கு அருகில்தான். `ஆப்பிரிக்கப் பகுதிகளில் பலரைக் கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றிய பிறகு இறைப்பணிக்காக இங்கே வந்தார் தோமா. ஒருநாள் அவர் கடவுளைப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். மயில்கள் அவரை எப்போதும் சூழ்ந்திருப்பது வழக்கம். அவை அதிகம் வாழும் பகுதி இது. அந்தப் பக்கம் வந்த சிலை வழிபாட்டாளர் ஒருவர் மயிலைக் கண்டதும் விரைந்து அம்பு செலுத்தியிருக்கிறார். அந்த அம்பு தோமாவின் வலது பக்கம் பாய்ந்து அவரை வீழ்த்திவிட்டது. ஆள் அரவமற்ற, வணிகர்கள்கூட அதிகம் செல்லாத ஓரிடத்தில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் புனிதப் பயணமாக அங்கே செல்கிறார்கள். அங்கிருந்து மண் எடுத்து வந்து பாதுகாக்கிறார்கள், நோயுற்றவர்களுக்கு மருந்துபோல் தருகிறார்கள்.’ (புனித தோமா சென்னையில் கொல்லப்பட்டதாகவும் மயிலாப்பூரில் அவர் கல்லறை இருப்பதாகவும் நம்பப்படுகிறது).

`புழு, பூச்சிக்குக்கூட ஆன்மா இருக்கிறது. எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது’ என்று வாதிடும் சமணர்களைக் கண்டு வியக்கிறார். பச்சைக் காய்கறிகளைக்கூட வாடிய பிறகே உண்கிறார்கள். ஆடை அணியாமல் வெறும் தரையில் படுத்து உறங்குகிறார்கள் என்று குறிப்பிடுகிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப் பக்கம் சுற்றி வந்திருக்கிறார் மார்கோ போலோ. `இது ஒரு முக்கியமான துறைமுக நகரம். குதிரைகள் தொடங்கி ஏராளமான பண்டங்கள் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன’ என்கிறார் போலோ. `காயல்’ என்று இந்த இடத்தை அழைக்கிறார். இப்பகுதியையும் சுற்றுவட்டாரத்தையும் புகழும் செல்வமும் குவிந்திருக்கும் ஒரு மன்னர் ஆண்டுவருகிறார். சிறந்தவர். நிர்வாகத்திறன் மிக்கவர். அயல் தேசத்தவரையும் வணிகரையும் மதித்து வரவேற்கிறார். அவருக்கு 300 மனைவிகள் உள்ளனர் என்று அவரை வர்ணிக்கிறார் போலோ. அந்த மன்னர், முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன். `தென்னிந்தியாவின் வெவ்வேறு பகுதிகளை ஆண்டுவந்த ஐந்து சகோதரர்களில் இவர் ஒருவர்’ என்கிறார் போலோ. ஐவரும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வது வழக்கமாம். நிலைமை தீவிரமாகும்போது அவர்கள் அம்மா உள்ளே புகுந்து, நீங்கள் இதற்குமேல் சண்டையிட்டால் உங்களுக்குப் பாலூட்டிய என் மார்பையும் உங்களைப் பெற்றெடுத்த வயிற்றையும் கிழித்துக்கொள்வேன் என்று கத்தியோடு மிரட்டுவாராம். உடனே ஐவரும் பணிந்துவிடுவார்களாம்.

வெனிஸ் திரும்பிய பிறகு மார்கோ போலோ மக்களிடம் தன் அனுபவங்களை ஆசையாசையாகப் பகிர்ந்துகொண்டார். ஆனால் அவற்றை நம்பியவர்கள் வெகு சிலரே. இறக்கும் தறுவாயில் இருந்தபோதும்கூட அவரிடம் கேட்டிருக்கிறார்கள். `போலோ, நீங்கள் எழுதியிருப்பவையெல்லாம் உண்மைதானா?’ அவர் அளித்ததாகச் சொல்லப்படும் பதில் பிரபலமானது. ‘நான் கண்டதில் பாதியைக்கூட உங்களுக்கு இன்னும் சொல்லவில்லை.’

(விரியும்)