
இந்தியா மட்டுமின்றி ஆசியா, ஐரோப்பா என்று உலகெங்கும் இஸ்லாமியர்களின் கரம் மேலோங்கிக்கொண்டிருந்த காலம் அது.
`பயணம், சாகசங்களுக்கான நூறு கதவுகளைத் திறந்துவிடுகிறது. உங்கள் இதயத்துக்கு இறக்கைகளைப் பொருத்துகிறது. பயணம், உங்களைப் பேச்சற்றவராக மாற்றுகிறது. அதேசமயம் உங்களை ஒரு கதைசொல்லியாகவும் உருமாற்றுகிறது’ என்கிறார் இபின் பதூதா.
முகமது கஜினியின் நோக்கம் சூறையாடுவது மட்டுமே. இந்தியாவை ஆளும் திட்டம் அவருக்கு இல்லை என்று பார்த்தோம். முகமது கஜினி மறைந்து 150 ஆண்டுகள் கழித்து, 1192-ம் ஆண்டு டெல்லியை ஆக்கிரமித்தார் முகமது கோரி. கஜினிபோல் இல்லாமல், அவர் தான் ஆக்கிரமித்த பகுதிகள் அனைத்தையும் ஆள விரும்பினார். புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளை ஆள்வதற்குத் தன்னுடைய ராணுவ ஜெனரல்களை அவர் நியமித்தார். சில இடங்களில் துருக்கியர்களை நியமித்தார். இன்னும் சில இடங்களில் முன்னாள் அடிமைகளையும், அவர்களுடைய வாரிசுகளையும் பதவியில் அமர்த்தினார்.
வட இந்தியாவை நிர்வகிக்கும் பொறுப்பு குத்புதீன் ஐபக் என்பவருக்கு அளிக்கப்பட்டது. அவர் ஒரு முன்னாள் அடிமை. குத்புதீன் ஐபக் குழந்தையாக இருந்தபோதே, அவருடைய துருக்கிய பெற்றோர் காசுக்கு அவரை விற்றுவிட்டார்கள். பாரசீகத்தில் வில் வித்தை, குதிரையேற்றம் போன்றவற்றை அவர் கற்றுக்கொண்டார். அதன் பிறகு அவருடைய எஜமானர் முகமது கோரிக்கு குத்புதீனை விற்றுவிட்டார். ஆண் வாரிசு இல்லாத முகமது கோரி, குத்புதீன் ஐபக்கின் திறமைகளால் கவரப்பட்டார். `மாலிக்’ என்னும் பட்டத்தையும் அவருக்கு வழங்கிச் சிறப்பித்தார். முகமது கோரி இறந்ததும், சுல்தானாக மாறினார் குத்புதீன் ஐபக். அவரைத் தொடர்ந்து வேறு சில முன்னாள் அடிமைகள் டெல்லியின் சுல்தானாகப் பதவியேற்றனர். `தில்லி சுல்தானகம்’ என்றும், `அடிமை வம்சம்’ என்றும் அவர்கள் ஆட்சி அழைக்கப்பட்டது. இந்திய துணைக்கண்டத்தில் அமைந்த முதல் இஸ்லாமிய ஆட்சிமுறை இதுவே. முகலாயர்கள் வரும்வரை சுல்தானிய ஆட்சிமுறை வட இந்தியாவில் நீடித்தது.

இந்தியா மட்டுமின்றி ஆசியா, ஐரோப்பா என்று உலகெங்கும் இஸ்லாமியர்களின் கரம் மேலோங்கிக்கொண்டிருந்த காலம் அது. இன்றைய ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இரான், வட இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கோர் பேரரசை முகமது கோரி ஒருபக்கம் கட்டமைத்திருந்தார். மற்றொரு பக்கம் சிலுவைப் போர்களில் கிறிஸ்தவ நாடுகளை வென்று, ஐரோப்பாவிலும் இஸ்லாமிய ஆட்சியை மலரச் செய்திருந்தனர் இஸ்லாமிய மன்னர்கள். இந்தப் பின்னணியில் 12-ம் நூற்றாண்டு தொடங்கி, இந்தியாவை நோக்கி வரும் இஸ்லாமியப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்க ஆரம்பித்தது. அவர்களில் ஒருவர் மொராக்கோவைச் சேர்ந்த இபின் பதூதா.
இஸ்லாமியச் சட்ட நிபுணர்கள் நிரம்பிய ஒரு குடும்பத்தில் 1304-ம் ஆண்டு பிறந்தவர் இபின் பதூதா. அதே துறையில்தான் அவரும் பயின்றார். 1325-ம் ஆண்டு, தனது 21-வது வயதில் ஒரு கழுதையில் ஏறி அமர்ந்துகொண்டு, தன்னந்தனியாக வீட்டிலிருந்து புறப்பட்டார். மெக்காவுக்குப் புனித ஹஜ் யாத்திரை செல்வதுதான் அவர் இலக்கு. ஒன்றரை ஆண்டுகளில் அவர் யாத்திரையும் முடிந்துவிட்டது. ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. `இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். அப்படியே இராக்கைப் பார்த்துவிட்டால் என்ன? இராக் பார்த்துவிட்டோம். இங்கிருந்து பாரசீகம் அப்படியொன்றும் தொலைவு கிடையாது என்கிறார்களே... ஒரு நடை போய் பார்த்தால்தான் என்ன?’
சாகசத்தின் சுவை அவரை அலைக்கழித்தது. `இங்கே வா, இங்கே வா...’ என்று புதிய நாடுகள் அவரை இழுத்துக்கொண்டே இருந்தன. வட ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, இந்தியா, மத்திய ஆசியா, தென் கிழக்கு ஆசியா, சீனா என்று சுற்றித்திரிந்தார். `சரி வீட்டுக்குப் போகலாம்’ என்று ஒரு வழியாக அவர் முடிவெடுப்பதற்குள் 30 ஆண்டுகள் முடிந்துபோயிருந்தன. 75,000 மைல்களை அவர் கடந்திருந்தார். வரைபடத்தை விரித்து வைத்துக்கொண்டு அவர் சென்ற பாதையைப் பின்தொடர்ந்து, இன்று ஒருவர் பயணம் செய்தால் நாற்பதுக்கும் அதிகமான நாடுகளை அவர் காண்பார்.
நீளமான அரபுத் தலைப்பைக்கொண்டிருக்கும் பதூதாவின் பயணக் குறிப்புகள் ‘ரிஹ்லா’ என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்றன. வெறும் பயண நூல் மட்டுமல்ல இது. பகுதியளவில் அது அவருடைய சுயசரிதை. பகுதியளவில் அது அவர் வாழ்ந்த காலத்தின் பண்பாட்டு வரலாறு. விரிவான விவரிப்புகளை உள்ளடக்கிய ஓர் இலக்கியப் பிரதியாகவும் அதைக் கொள்ள முடியும். `இன்ன தேதியில் அங்கே சென்றேன், இன்ன தேதியில் அவரைச் சந்தித்தேன்’ என்று நாட்குறிப்புபோல் அவர் தன் நூலை எழுதவில்லை. தான் கண்டதையும், உணர்ந்ததையும், கற்றதையும் தொகுத்துக்கொண்டே செல்வதுதான் அவருடைய எழுத்துமுறை.
இபின் பதூதாவின் இந்தியப் பயணம் தொடங்கியது 1330-ம் ஆண்டு (அல்லது 1332). பொதுவாக அரபிக்கடல் வழியாக இந்திய மேற்குக் கரையை வந்தடைவதுதான் அப்போது வழக்கமாக இருந்தது. ஆனால், இபின் பதூதா எப்போதும் நேர் வழியில் செல்ல மாட்டார். சென்று கொண்டே இருக்கும்போது கிடைக்கும் ஆனந்தம் சென்றடைந்துவிடும்போது நின்றுவிடுகிறது அல்லவா? எனவே வடக்கில் தொடங்கி எகிப்து, சிரியா வழியாக ஆசியா மைனருக்குச் சென்று, அங்கே ஒரு சுற்று சுற்றிவிட்டு, கருங்கடல் வழியாக மேற்கு மத்திய ஆசியாவை வந்தடைந்தார். அங்கிருந்து பைஜாண்டியப் பேரரசின் தலைநகரமான கான்ஸ்டான்டிநோபிள் சென்றார். ஆசியப் புல்வெளிப் பிரதேசங்களில் அலைந்தார். அங்கிருந்து குராசான், ஆப்கானிஸ்தான் வழியாக சிந்து நதிக்கரையைத் தொட்டார். செப்டம்பர் 1333 அல்லது 1335 வாக்கில் அவர் இந்தியாவில் காலடி எடுத்துவைத்தார்.
இந்தியா ஏன் வந்தார் என்பதற்குச் சொல்லப்படும் கதை இது. ஒருமுறை அலெக்சாண்டிரியாவில் இருந்தபோது, இபின் பதூதா ஒரு துறவியைப் பார்த்தாராம். `நீ ஊர், உலகமெல்லாம் சுற்றித் திரியப்போகிறாய். நிச்சயம் இந்தியாவுக்குப் போவாய். அங்கே என்னைப்போலவே துறவியாக வாழும் என் தம்பியைப் பார்ப்பாய்’ என்று அவர் ஆரூடம் சொன்னாராம். `இந்தியா செல்ல வேண்டும் என்னும் எண்ணம் எனக்கு அப்போதுதான் தோன்றியது’ என்கிறார் பதூதா. ஆரூடத்தின் முதல் பகுதி பலித்திருக்கிறது. ஆனால் தம்பி துறவியை அவர் பார்த்ததுபோல் தெரியவில்லை.
13-ம் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்தே இந்திய துணைக்கண்டத்தின் தலைநகரமாக டெல்லி உருமாற ஆரம்பித்துவிட்டது. ஆரம்பத்தில் குத்புதீன் ஐபக் போன்ற துருக்கியர்களின் செல்வாக்கு டெல்லியில் மிகுந்திருந்தது. அவர்களுக்குப் பிறகு கில்ஜி வம்சத்தினர் வந்தனர். இபின் பதூதாவின் வருகையின்போது துக்ளக் வம்சத்தினர் பலத்தோடு இருந்தனர்.
கல்வெட்டுகள், நாணயங்கள், அரசவை ஆவணங்கள், வரலாற்றுப் பதிவுகள் என்று சுல்தானிய காலகட்டத்தின் அரசியல் கட்டமைப்பைப் புரிந்துகொள்ள இன்று நமக்குப் பலவிதமான சான்றுகள் உள்ளன. டெல்லியில் இருந்துகொண்டு வட இந்தியாவை ஆட்சி செய்வது சுல்தானியர்களுக்கு எளிதாக இருக்கவில்லை என்பது தெரிகிறது. டெல்லியில் இருந்துகொண்டு சிந்துவையும் வங்காளத்தையும் ஒழுங்குபடுத்துவதற்குள் உயிர்போய்விட்டது சுல்தான்களுக்கு. கொஞ்சம் அசந்தாலும் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் புரட்சி, கலகம், போராட்டம் என்று வாளைத் தூக்கிவிடுகிறார்கள். ஓரிடத்தைச் சமாளிப்பதற்குள் இன்னோர் இடத்தில் குழப்பம் மூண்டுவிடும். உள்நாட்டுச் சவால்களைச் சமாளித்து முடிப்பதற்குள், ஆப்கானிஸ்தானிலிருந்து மங்கோலியப் படைகள் புறப்பட்டு வந்துவிடும். உயிரைக் கொடுத்து அவர்களைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

இதற்கு நடுவில் வணிகத்தை வளர்க்க வேண்டும். வருமானம் ஈட்ட வேண்டும். மக்களை நிர்வாகம் செய்ய வேண்டும். இஸ்லாத்தை வளர்க்க வேண்டும். இந்தியாவின் பிற பகுதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக டெல்லியோடு இணைக்க வேண்டும். டெல்லியை ஆக்கிரமிப்பது எளிது. நிர்வகிப்பதோ மலையைப் பிளப்பதற்குச் சமமானது என்பதை சுல்தானியர்கள் தங்கள் அனுபவங்கள் வாயிலாக நன்றாகவே உணர்ந்துகொண்டனர். எடுத்துக்காட்டுக்கு, தென்னிந்தியாவையும் சுல்தானியர்கள் வெற்றிகொண்டனர் என்றாலும் டெல்லியிலிருந்துகொண்டு தெற்கை ஆள்வது இயலாத காரியம் என்பதை உணர்ந்து அந்தப் பகுதியைச் சுதந்தரமாகச் செயல்படுவதற்கு அனுமதித்தார்கள். அவ்வளவு தூரம்கூட வேண்டாம். கங்கைச் சமவெளிப் பகுதிகளை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில்கூட சுல்தானியர்களால் ஊடுருவ முடியவில்லை. எனவே, சின்னச் சின்ன ஆட்சியாளர்கள் அங்கே சுதந்தரமாக ஆட்சி செய்துவந்தனர்.
என்றாலும், அவ்வப்போது இந்தியாவின் பிற பகுதிகளுக்குப் படைகளை அனுப்பி கட்டாய வரி வேட்டையில் இறங்கினார்கள். நிலம் படைத்த செல்வந்தர்கள் வழிக்குக் கொண்டுவரப்பட்டனர். நிலம் அளவிடப்பட்டு, வரி கட்டாயப்படுத்தப்பட்டது. இவையெல்லாம் போக, சூறையாடும் வழக்கமும் ஒருபக்கம் தொடர்ந்துகொண்டே இருந்தது.
மிகவும் கொந்தளிப்பான, மிகவும் சவாலான ஒரு காலகட்டமாக இருந்தபோதும் இந்தியக் கலை, இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை சுல்தானியர்கள் தொடங்கிவைத்தார்கள் என்பதையும் சொல்லத்தான் வேண்டும். அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் துருக்கிய, இஸ்லாமியக் கூறுகள் அழுத்தமாக இடம்பெற ஆரம்பித்தன. மத்திய ஆசியாவிலும் மேற்கு ஆசியாவிலும் மங்கோலியர்கள் ஏற்படுத்திய சேதங்களைக் கண்டு அஞ்சிய இஸ்லாமியக் கவிஞர்களும், அறிஞர்களும், தத்துவவியலாளர்களும், கற்றறிந்த ஆன்றோர்களும் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். எடுத்துக்காட்டுக்கு, மாபெரும் கவிஞரும் இசைக் கலைஞருமான அமிர் குஸ்ரோவின் பெற்றோர் செங்கிஸ் கானின் ஆக்கிரமிப்புகளிலிருந்து தப்பிப் பிழைத்து வந்தவர்கள்தாம்.
இந்தப் பின்னணியில்தான் மிகுந்த நம்பிக்கையோடு இபின் பதூதா டெல்லியில் காலடி எடுத்துவைத்தார்.
(விரியும்)