மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 56 - துக்ளக் தர்பார்

துக்ளக் தர்பார்
பிரீமியம் ஸ்டோரி
News
துக்ளக் தர்பார்

துக்ளக் ஆட்சியில் இருந்த கால் நூற்றாண்டுக்காலமும் இப்படித்தான் இருந்தது. அவர் எப்போது, என்ன செய்வார் என்று ஒருவரும் எதிர்பார்க்க முடியாது

டெல்லியை அடைவதற்கு முன்பே நம்பிக்கையூட்டும் செய்திகள் இபின் பதூதாவை வந்தடைந்துவிட்டன. ‘டெல்லியில் முகமது பின் துக்ளக் என்பவர் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். தங்கமான மனிதர். வெளிநாட்டிலிருந்து வரும் உன்னைப்போன்ற அந்நியரை அவர் மதிக்கிறார். மிகுந்த அன்பு செலுத்தி வரவேற்கிறார்.’ முகமது பின் துக்ளக்கை எப்படிக் கவர வேண்டும் என்னும் ரகசியத்தை வேறு சில பயணிகளிடமிருந்து கற்றுக்கொண்டார். ‘சுல்தானுக்குப் பரிசுகள் என்றால் கொள்ளைப் பிரியம். எனவே அவரைப் பார்க்கப் போகும்போது நிறைய பரிசுகள் கொண்டு போ. `உங்களுக்காகவே இதைக் கொண்டுவந்தேன் சுல்தான்’ என்று அவரிடம் சொல். ஒரு கையால் நீ கொடுத்தால் அவர் நூறு கரங்களால் உனக்குத் திரும்பிச் செலுத்துவார்.’

தெரியாத நிலங்களிலிருந்து வரும் அந்நியர்களைக் கண்டால் அஞ்சுவதுதான் அப்போது பொதுவழக்கம். ஆனால், முகமது பின் துக்ளக் அந்நியர்களை வரவேற்று மகிழ்ந்ததோடு நில்லாமல், அவர்களுக்கு வேலையும் போட்டுக்கொடுத்து அருகில் வைத்துக்கொண்டார். நிர்வாகம் தொடங்கி நீதிமன்றம்வரை பல முக்கியமான பொறுப்புகளில் அவர் அயல்நாட்டவரைப் பணியமர்த்தினார். ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்? ஏனென்றால், அவர் முகமது பின் துக்ளக். அவர் எடுத்த பல முடிவுகளுக்கு இதற்கு மேல் விளக்கங்கள் கிடைக்காது.

டெல்லி சென்றதும் முதல் வேலையாக இபின் பதூதா எங்கிருந்தோ கடன் பெற்றுக்கொண்டு ஒட்டகங்களையும், குதிரைகளையும், வெள்ளை அடிமைகளையும் வாங்கி வைத்துக்கொண்டார். முகமது பின் துக்ளக்கைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்ததும், தனது பரிசுப் பொருள்களை அவருக்கு வழங்கி மரியாதை செலுத்தினார். அகமகிழ்ந்துபோன துக்ளக், பதில் மரியாதையாக பதூதாவுக்கு ஆயிரக்கணக்கான வெள்ளி தினார்களை அள்ளி வழங்கினார். கூடவே, நம்ப முடியாத அளவுக்கு மிகுதியாக மாவு, மாமிசம், சர்க்கரை உள்ளிட்ட உணவுப்பொருள்களையும் அளித்தார். இஸ்லாமிய சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதை அறிந்ததும், கையோடு நீதிபதியாகவும் பதூதாவை நியமித்துவிட்டார் துக்ளக். பதூதாவே இந்தப் பேரன்பை எதிர்பார்த்திருக்க மாட்டார்.

துக்ளக் ஆட்சியில் இருந்த கால் நூற்றாண்டுக்காலமும் இப்படித்தான் இருந்தது. அவர் எப்போது, என்ன செய்வார் என்று ஒருவரும் எதிர்பார்க்க முடியாது. `இனி டெல்லியல்ல தலைநகரம், தௌலதாபாத்’ என்றொரு முடிவை ஒருநாள் எடுத்தார் துக்ளக். அதற்கு அவரிடம் வலுவான காரணம் இருந்தது உண்மை. மங்கோலியர்கள் தொடர்ந்து படையெடுத்து டெல்லியை ஆக்கிரமிக்க முயன்றுவருகிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்த கடுமையாகப் போராடவேண்டியிருக்கிறது. எல்லையைக் காப்பதற்கு நேரத்தையும் பணத்தையும் செலவிடுவதற்கு பதில், எல்லையைத் திருத்தியமைப்பது சுலபமல்லவா?

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 56 - துக்ளக் தர்பார்

ஏன் தௌலதாபாத் என்றால் அது கடற்கரைக்கு அருகில் (இன்றைய மகாராஷ்டிரா) பாதுகாப்பான இடத்தில் அமைந்திருந்தது. முக்கியத் துறைமுகங்களுக்கு அருகில் ஒரு தலைநகரம் அமைந்திருப்பது வணிகத்துக்கு நல்லது. வரி வசூலும் அதிகரிக்கும். தவிரவும் இந்தியா என்பது வடக்கு மட்டுமல்ல. தக்காணமும் தெற்கும் துக்ளக்கின் ஆட்சியின் கீழ் புதிதாக வந்துசேர்ந்திருந்தன. இந்தப் புதிய பகுதிகள் டெல்லியைவிட்டு மிகவும் தள்ளி அமைந்துள்ளன. அவற்றை இணைத்துக்கொண்டு ஆட்சிசெய்ய வேண்டுமானால் தலைநகரம் அவர்களுக்கு அருகில் இருப்பதுதான் சரியாக இருக்கும். மதுரைக்கும் கர்நாடகத்துக்கும் அருகில் இருப்பது தௌலதாபாத் தானே தவிர, டெல்லியல்ல. எனவே, `தலைநகரை மாற்றுவோம்’ என்று 1329-ம் ஆண்டு உத்தரவிட்டார் துக்ளக்.

அவருடைய தர்க்கத்தில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால் தலைநகர் மாற்றம் என்பதை அதிகார மையத்தை மாற்றுவது, தலைமை அரசு அலுவல்களை மாற்றுவது என்பதோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. `மக்களையும் இங்கிருந்து அங்கே மாற்ற வேண்டும்’ என்று உத்தரவிட்டார் துக்ளக். காகிதத்தில் ஒரு பெயரை அடித்து, இன்னொன்றை எழுதுவதுபோல்தான் மக்களை ஓரிடத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றுவதும் என்று அவர் நினைத்துவிட்டார். `பல தலைமுறைகளாக ஓரிடத்தில் வேர்பிடித்து வாழ்ந்துவரும் மக்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியெடுத்து புதிய இடத்தில் நட்டால் அவர்களால் பிழைக்க முடியுமா?’ என்னும் கேள்வி துக்ளக்குக்கு எழவேயில்லை. பாதிக்கப்பட்டது என்னவோ மக்கள்தாம். புதிய தலைநகருக்கு வந்துசேர்ந்து மூட்டை முடிச்சுகளைக் கீழே வைப்பதற்குள் வட இந்தியா முழுக்க எதிர்ப்புகளும் கலகங்களும் வெடிக்க ஆரம்பித்துவிட்டன. சமாளிக்க முடியவில்லை துக்ளக்கால். பழைய உத்தரவைக் கிழித்து எறிந்துவிட்டு, `தௌலதாபாத் அல்ல, டெல்லிதான் தலைநகரம்’ என்று புதிய உத்தரவைப் பிறப்பித்தார். முதல் இடப்பெயர்ச்சியின் வடு மறைவதற்குள் இன்னோர் இடப்பெயர்ச்சிக்கு மக்கள் தயாராகவேண்டியிருந்தது.

இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் இன்னொரு திட்டத்தையும் வகுத்து முடித்திருந்தார் துக்ளக். டெல்லி சுல்தானகத்தில் அதுவரை தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்கள்தான் புழக்கத்தில் இருந்தன. துக்ளக் இந்த நடைமுறையை மாற்ற விரும்பினார். விலை மதிப்புமிக்க தங்கத்தையும் வெள்ளியையும் பயன்படுத்தி நாணயங்களை உருவாக்குவதற்கு பதில் செம்பு, பித்தளை போன்ற எளிதில் கிடைக்கும் உலோகங்களைப் பயன்படுத்தினால் என்ன... தங்கத்துக்கும் வெள்ளிக்கும் இருக்கும் அதே மதிப்பைப் புதிய செம்பு, பித்தளை நாணயங்களுக்கு அளித்துவிட்டால் போதாதா?

இது தர்க்கரீதியில் சரியான முடிவு மட்டுமல்ல, மிகவும் நவீனமான ஒரு முடிவும்கூட. காகித நோட்டுகளைக் கொடுத்துவிட்டு இன்று நாம் தங்கமும் வெள்ளியும் வாங்கிக்கொள்கிறோம் அல்லவா? அப்படியொரு பரிவர்த்தனையைத்தான் அன்றே நடத்த விரும்பினார் துக்ளக். `காகிதத்துக்கான மதிப்பை அதை வெளியிடும் அரசு நிர்ணயிப்பதுபோல், தனது புதிய நாணயங்களுக்கான மதிப்பை சுல்தானகம் நிர்ணயிக்கும்’ என்று அறிவித்தார் துக்ளக். சீனா ஏழாம் நூற்றாண்டிலேயே காகிதப் பணத்தைக் கொண்டுவந்துவிட்டது. மேற்குலகம் அதைச் செய்வதற்கு ஆயிரம் ஆண்டுகள் பிடித்தன. துக்ளக் அந்த வகையில் சந்தேகமின்றி ஒரு முன்னோடிதான்.

ஆனால் வழக்கம்போல் தனது முடிவின் சாதகங்களை மட்டுமே கண்டார் துக்ளக். புதிய நாணயங்கள் அதிரடியாக திடீரென்று மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டன. என்ன, ஏது என்று மக்கள் விளங்கிக்கொள்வதற்கு எந்த அவகாசத்தையும் அளிக்கவில்லை துக்ளக். புதிய நாணயங்களை துக்ளக் வெளியிட்டு முடிப்பதற்குள் போலி நாணயங்கள் வெள்ளம் போல் பாய்ந்து பெருக ஆரம்பித்துவிட்டன. எது அரசு நாணயம், எது போலி என்பதை மக்களால் பிரித்தறிய முடியாமல் போய்விட்டது. நாணயத்தின் மதிப்பு பாதாளத்துக்குச் சென்றது. வணிகம் வீழ்ந்தது. மக்கள் கடும் உளைச்சலுக்கு உள்ளாகினர். வேறு வழியின்றி புதிய நாணயங்களை துக்ளக் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

துக்ளக்கின் புதிய நாணயங்கள் குறித்து இபின் பதூதா தன் பதிவுகளில் எங்கும் குறிப்பிடவில்லை. எனவே, அவர் வருவதற்கு முன்பே துக்ளக் தனது நாணயங்களைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தலைநகரம் மாற்றப்பட்டது குறித்து பதூதா எழுதியிருக்கிறார். `துக்ளக்குக்கு அஞ்சி டெல்லி மொத்தமாகக் காலியாகிவிட்டது. எங்கும் வெறுமை படர்ந்திருந்தது. ஒரேயொரு மனிதன்கூட எஞ்சியிருக்கவில்லை’ என்கிறார் பதூதா. துக்ளக் தர்பார் குறித்து நமக்குக் கிடைக்கும் முக்கியமான குறிப்பு இவருடையது.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 56 - துக்ளக் தர்பார்

`என்றாலும் அவர் சொற்களை நாம் அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை’ என்று வாதிடுகிறார்கள் வரலாற்றாசிரியர்கள். `பெரும்பான்மை மக்கள் நிச்சயம் குடிபெயர்ந்திருப்பார்கள். கடைகள், சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும். மற்றபடி துடைத்து வைத்ததுபோல் ஒரு நகரை யாராலும் காலியாக்க முடியாது. வசதி வாய்ப்பற்ற பல குடும்பங்கள் டெல்லியில்தான் தங்கியிருந்திருக்கும். வசதி வாய்ப்புள்ளவர்கள், குறிப்பாக இஸ்லாமியர்கள்தான் துக்ளக்கின் முடிவால் அதிகம் பாதிப்படைந்திருப்பார்கள். அவர்களைத்தான் அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வெளியேற்றியிருப்பார்கள். இந்துக்கள் பலர் டெல்லியிலேயே தங்கியிருந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இபின் பதூதாவுக்குத் தனது அவையில் மரியாதைக்குரிய இடத்தை அளித்திருக்கிறார் துக்ளக். டெல்லியின் நீதிபதியாக ஆண்டுக்கு 12,000 தினார்களை பதூதா பெற்றுக் கொண்டிருக்கிறார். முக்கியமான பதவிதான். ஆனால் எத்தகைய வழக்குகள் அவரிடம் வந்தன, எத்தகைய தீர்ப்புகளை அவர் வழங்கினார் போன்ற விவரங்களையெல்லாம் பதூதா அளிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய பணி குறித்து அவர் வாயே திறக்கவில்லை.

ஒரு பக்கம் துக்ளக்கின் திறன்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. பாரசீகம், அரபு, துருக்கி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகள் அவருக்குத் தெரியும். மருத்துவத்துறையில் ஆர்வம்மிக்கவராக இருந்திருக்கிறார். தன் காலத்தைக் கடந்து முன்னகர்ந்து சென்று சிந்தித்திருக்கிறார். கற்றறிந்தவர்களை வரவேற்று ஆதரவு கொடுப்பவராக, அவர்களுடைய திறன்களை அங்கீகரிப்பவராக இருந்திருக்கிறார். ஒரு நல்ல புரவலராக விளங்கியிருக்கிறார். மதப்பற்றாளராக இருந்திருக்கிறார். பரிசுகளை அவர் அள்ளிக்கொடுக்கும்போது அருகில் இருந்து பார்க்கும் எவரும் அவரை மாபெரும் கொடையாளி என்றே அழைப்பர்.

இப்படி மட்டுமே துக்ளக் இருந்திருந்தால் வரலாறு அவரை வேறுவிதமாக நினைவுகூர்ந்திருக்கும். ஆனால் அவருக்கு இன்னொரு பக்கமும் இருந்தது. இபின் பதூதாவின் பதிவுகளைப் பார்வையிடும்போது அந்த இன்னொரு பக்கம் நம்மைத் தாக்குகிறது. ஒரு மாபெரும் சர்வாதிகாரியாக, முரண்களின் மூட்டையாக, தன்னுடைய ஆற்றல்கள் அனைத்தையும் தானே அழித்துக்கொண்டவராக துக்ளக் நமக்குக் காட்சியளிக்கிறார்!

(விரியும்)