
சமூக வாழ்வை விவரிக்கும்போது, பண்டிகைகளை மறக்காமல் குறிப்பிடுகிறார் காண்டி.
இந்தியாவில் அதிக பலம்கொண்டவர் என்றால், அவர் விஜயநகர மன்னர்தான். திறமையானவர். அவருக்கு 12,000 மனைவிகள் உள்ளனர். அவர்களில் 4,000 பேர் மன்னரின் நடைப்பயணங்கள் எல்லாவற்றிலும் இடம்பெறுவார்கள். மன்னரை நிழல்போல் விடாமல் பின்தொடர்ந்து செல்வார்கள். சமையலறை அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. மன்னர் குதிரைப்பயணம் மேற்கொள்ளும்போது இவர்கள் விலகிக்கொள்வார்கள். குதிரையில் பின்தொடர்வதற்கென்று மேலும் 4,000 மனைவிகள் இருக்கின்றனர். மன்னர் இறக்க நேரிட்டால் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறுவதற்குக் குறைந்தது 2,000 முதல் 3,000 மனைவிகள் தயார்நிலையில் இருப்பார்களாம். `மறுமையிலும் என்னைப் பின்தொடர்வதற்கு உனக்குச் சம்மதமா?’ என்று கேட்டுவிட்டுத்தான் மன்னர் அவர்களைக் கைப்பிடிப்பாராம். நிக்கோலா காண்டி தீட்டும் சித்திரம் இது.
மன்னர் மட்டுமல்ல, விஜயநகர ஆட்சியில் ஓர் ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். கல்லானாலும் புல்லானாலும் உடன் விழுந்து வெந்துபோவதுதான் பெரும்பேறு என்று பெண்கள் கருதுவார்களாம். அச்சமின்றி தீக்குள் பாய்வார்களாம். `விஜயநகர காலத்தில் பலதார மணமும், உடன்கட்டை ஏறுதலும் இயல்பானவை’ என்கிறார் காண்டி.
சமூக வாழ்வை விவரிக்கும்போது, பண்டிகைகளை மறக்காமல் குறிப்பிடுகிறார் காண்டி. ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட மாதத்தில், மூன்று தினங்கள் நதியில் நீராடி, புத்தாடை அணிந்து, ஆடலும் பாடலுமாக விருந்து சமைத்து மகிழ்கிறார்கள். இரண்டாவது விளக்கேற்றும் விழா. கோயில் தொடங்கி வீடு, வாசல் என்று எல்லா இடங்களிலும் விளக்குகள் ஏற்றிவைத்துக் கொண்டாடுகிறார்கள். இரவு, பகலாக விளக்குகள் எரிகின்றன. இது தீபாவளியாக இருக்கும். சில கொண்டாட்டங்கள் ஒன்பது தினங்கள் நீண்டு செல்லும் என்கிறார். மகா நவமி அல்லது நவராத்திரியாக அது இருக்கலாம். மன்னர், சாமானியர் என்று வேறுபாடில்லாமல் எல்லோர்மீதும் வண்ணத்தைப் பீய்ச்சி அடித்து மக்கள் மகிழும் மூன்று நாள் ஹோலி பண்டிகையையும் விவரிக்கிறார்.

`திருமணம், பண்டிகை, வழிபாடு என்று எல்லா நிகழ்வுகளோடும் இசை பிணைந்திருக்கிறது. தாண்டியா தொடங்கி பலவிதமான நடனங்களை ஆடுகிறார்கள். சுற்றிச் சுற்றி வந்து பாடிக்கொண்டே ஆடுகிறார்கள். சிலர் நேர் வரிசையில் நின்றுகொண்டு ஒன்று சேர்ந்து பாடுகிறார்கள்’ என்கிறார்.
`செங்குத்தான மலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது விஜயநகரம். உறுதியான, பெரிய கற்களால் கட்டப்பட்ட மதில் நகரைக் காக்கிறது. பள்ளத்தாக்கு, மலைத்தொடர் என்று எங்கு போனாலும் மதில் சுவரைக் காண முடிகிறது’ என்கிறார் காண்டி. எல்லைப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே தீரவேண்டிய நிலையில் விஜயநகர மன்னர்கள் இருந்தனர். நீடித்த ஆட்சிக்கு அதுதான் முதல் நிபந்தனை.
வலுவான விஜயநகரப் பேரரசு உருவாவதற்கு இருநூறாண்டுகள் பிடித்திருக்கின்றன. படிப்படியாக கன்னட நிலத்தோடும், தெலுங்கு நிலத்தோடும் பிணைப்பை ஏற்படுத்திக்கொண்ட பிறகு இறுதியாக தெற்கில் தமிழ் நிலத்திலும் விஜயநகரப் பேரரசு விரிந்து படர்ந்தது. நிலையான, திடமான, ஒன்றுபட்ட ஓர் ஆட்சியை அமைக்கும் முயற்சிகளை விஜயநகர ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். `தெற்கிலுள்ள நாம் அனைவரும் ஒற்றுமையாக இல்லாவிட்டால் நமக்கு மிக அருகில் தக்காணத்திலுள்ள இஸ்லாமியர்கள் (பாமினி சுல்தானகம்) நம் நிலத்துக்குள் புகுந்துவிடுவார்கள். எனவே, விஜயநகரப் பேரரசின் கரங்களை வலுப்படுத்துங்கள்’ என்று மன்னர்கள் மக்களிடம் கேட்டுக்கொண்டனர். இது நல்ல பலனை அளித்தது. சுல்தானகத்துக்கு எதிராக ஓர் இந்து நிலத்தை, ஓர் இந்து அரசியல் அமைப்பைக் கட்டமைக்க விஜயநகரம் முயன்றது.
காண்டி போக, வேறு இருவரின் குறிப்புகளும் விஜயநகரத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. முதலாமவர், டோமிங்கோ பயஸ். குதிரை வணிகரான இவர், மற்ற வணிகர்களோடு இணைந்து 1520 வாக்கில் விஜயநகரம் வந்தார். போர்ச்சுகீசியர். இவர் வருகையின்போது ஆட்சியில் இருந்தவர் கிருஷ்ணதேவராயர். அவருடைய ஆளுமை குறித்து பயஸ் அளிக்கும் சுருக்கமான குறிப்பு இது. மாபெரும் வீரர். வெற்றியை நோக்கி ராணுத்தை வழிநடத்திச் செல்வதில் வல்லவர். அதிகாலையில் எழுந்துவிடுவார். துணிச்சல்மிக்கவர். எதிலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு அப்பழுக்கற்றவர்.
கிருஷ்ணதேவராயரின் நிர்வாகத்திறனுக்கு எடுத்துக்காட்டாக விஜயநகரத்தில் அவர் ஏற்படுத்திக் கொடுத்திருந்த நீர்ப்பாசன வசதிகளைக் குறிப்பிடுகிறார் பயஸ். `நெல், சோளம், கம்பு, பட்டு, பருத்தி, பருப்புகள், வெற்றிலை, ஏலக்காய் (உள்ளிட்ட நறுமணப் பொருள்கள்) என்று பெருகிய விளைச்சல் பேரரசின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது. ஒரு பக்கம் வேளாண் நிலமாகவும், மற்றொரு பக்கம் வணிக மையமாகவும் விஜயநகரம் திகழ்ந்துள்ளது. தங்கம், வெள்ளி, முத்து உள்ளிட்டவற்றை அயல்தேசத்தவரும் விலை கொடுத்து வாங்கிச் சென்றனர். அயல்நாட்டு வணிகர்களுக்கு விஜயநகரம் முக்கியமான தலமாக இருந்திருக்கிறது. வரி வசூல் சிறப்பாக நடைபெற்றது. சமூகத்தின் தேவைகளை உணர்ந்து திட்டங்கள் தீட்டப்பட்டன’ என்கிறார் பயஸ்.
கிருஷ்ணதேவராயர் 1520-ம் ஆண்டு முன்னெடுத்த ஒரு முக்கியமான போரைக் குறிப்பிடுகிறார் பயஸ். `ராய்ச்சூர் போர்’ என்று வரலாறு அதைக் குறித்துவைத்திருக்கிறது. பீஜப்பூர் சுல்தானகத்துக்கு எதிராக கிருஷ்ணதேவராயர் முன்னெடுத்த போர் அது. தக்காணத்தில் இன்றைய கர்நாடகாவில் அமைந்துள்ள பீஜப்பூரைத் தலைநகரமாகக்கொண்டு யூசுப் அடில் ஷா என்பவர் சுல்தானிய ஆட்சியை நடத்திவந்தார். வடக்கு கர்நாடகமும், தெற்கு மகாராஷ்டிரமும் இவர் ஆட்சியின் கீழ் அமைந்திருந்த பிரதேசங்கள்.
`டெல்லி சுல்தானகத்தின் வீழ்ச்சியிலிருந்து பாமினி சுல்தானகம் உதயமானது என்றால் பாமியினின் வீழ்ச்சியிலிருந்து பீஜப்பூர் சுல்தானகத்தை உருவாக்கினார் அடில் ஷா. எல்லை விரிவாக்கத்தில் எப்போதும் அக்கறை கொண்டிருந்தவர் கிருஷ்ணதேவராயர். தக்காணத்தின் வடக்கு, கிழக்குப் பகுதிகளையும் கலிங்கத்தையும் ஏற்கெனவே அவர் கைப்பற்றியிருந்தார். அதன் நீட்சியாக பீஜப்பூர் சுல்தானகத்தின் மீது படையெடுத்துச் சென்றவர் அடில் ஷாவை வீழ்த்தி, அவர் பிரதேசங்களை விஜயநகரத்தோடு இணைத்துக்கொண்டார். இந்த வெற்றிவிழாவை கிருஷ்ணதேவராயரோடு இணைந்து நானும் கொண்டாடினேன்’ என்கிறார் பயஸ்.
கிருஷ்ணதேவராயரின் விஜயநகரம் செழிப்பாகவும் அழகாகவும் இருந்தது என்கிறார் பயஸ். `எனது பயணத்தின்போது, வழியெங்கும் புளியந்தோப்புகளும் மாந்தோப்புகளும் பலாத்தோப்புகளும் காய்த்துக் குலுங்குவதைக் கண்டேன். எருது, ஆடு, மாடு போன்ற விலங்குகளையும் குயில், கௌதாரி, புறா போன்ற பறவைகளையும் வீடுகளில் வளர்க்கிறார்கள். தோட்டங்களில் திராட்சை, ஆரஞ்சு, முள்ளங்கி என்று காய்கனிகள் நிறைந்திருக்கின்றன’ என்கிறார். சந்தைகளில் என்னவெல்லாம் கிடைக்கின்றன என்று பட்டியலிடுகிறார். `வெள்ளிதோறும் நடைபெறும் சந்தைக்குச் சென்றால் கோழிகளும், குதிரைகளும், பன்றிகளும் கூச்சலிடும் சத்தங்களுக்கு மத்தியில் உங்களுக்குத் தேவைப்படும் அனைத்தையும் சகாய விலையில் வாங்கிக்கொள்ளலாம்’ என்கிறார் பயஸ். `இங்கு எத்தனை பேர் வாழ்கின்றனர், நகரம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது என்பதையெல்லாம் சொல்லலாம்தான். ஆனால் நான் சொல்லும் எண்களை எப்படியும் நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்பதால் விட்டுவிடுகிறேன்’ என்கிறார்!

எங்கு போனாலும் மக்கள் கூட்டம் என்கிறார் பயஸ். `நீர்ப்பாசனப் பணியொன்று நடைபெறுகிறது என்று சொன்னார்கள். போய் பார்த்தால் 20,000 பேர் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்’ என்று வாய் பிளக்கிறார். இந்தியாவில் ஏன் மக்கள்தொகை அதிகம் என்பதற்கான காரணத்தை காண்டி ‘கண்டுபிடித்து’ சொல்லியிருக்கிறார். அது பின்வருமாறு... `நம் நாடுகளில் ஒரே நேரத்தில் கொத்துக் கொத்தாகப் பலர் நோயுற்று இறப்பதைப் பார்த்திருக்கிறோம். இந்தியாவில் அப்படி நடைபெறுவதில்லை. இங்கே தொற்றுநோய் ஏற்படுவதேயில்லை. எனவே மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். பல்கிப் பெருகுகிறார்கள்.’
குழந்தைகள் பெரிய ஆடுகள் மேல் ஏறி அமர்ந்து திரிவதைக் கண்டிருக்கிறார் பயஸ். வட்ட வடிவப் படகில் 15 பேர் வரை ஏறி அமர்ந்துகொண்டு துங்கபத்திரா நதியைக் கடக்கிறார்கள். மூங்கிலும் விலங்குத் தோலும் சேர்த்து இந்தப் படகு உருவாக்கப்படுகிறது. எருதுகளும் குதிரைகளும் நதியில் நீந்திக் கரையேறுகின்றன என்கிறார்.
மற்றொரு போர்ச்சுகீசிய வணிகரான ஃபெர்னாவோ நுனெஸ் என்பவரும் 1535 வாக்கில் விஜயநகரம் வந்திருக்கிறார். கிருஷ்ணதேவராயரின் தம்பி அச்சுத தேவராயர் ஆட்சியிலிருந்த சமயம் அது. விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி தொடங்கியிருந்ததை இவர் கண்டார். வீழ்ச்சியின் வாசம் விஜயநகரத்தைச் சூழ்ந்துகொண்டிருந்தபோது அச்சுத தேவராயர் தனது 500 மனைவிகளுடன் வண்ணயமாக வாழ்ந்துவந்திருக்கிறார். தங்கமும் வெள்ளியும் பதித்த பல்லக்குகளில் மனைவிகள் ஊர்வலம் வருவார்களாம். `நகரமே செல்வத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறது. 700 உயர்ரக அராபியக் குதிரைகளையும் 400 யானைகளையும் மன்னர் வளர்த்துவந்தார்’ என்கிறார் நுனெஸ். இவற்றைப் பராமரிப்பதற்கே பெரும் பணம் மாதம்தோறும் செலவிடப்பட்டதாம்.
அச்சுத தேவராயர் இறந்து இருபது ஆண்டுகளில் வீழ்த்தப்பட்ட சுல்தானகங்கள் அனைத்தும் பொது எதிரியான விஜயநகரப் பேரரசை அழிக்கும் ஒற்றை நோக்கத்துடன் ஒன்றிணைந்தன. தலைக்கோட்டைப் போர், விஜயநகரப் பேரரசை முடிவுக்குக் கொண்டுவந்தது. மன்னர்கள் அதுவரை சேர்த்துவைத்திருந்த செல்வம் கொள்ளையடிக்கப்பட்டது. பல கட்டுமானங்கள் இடித்துச் சாய்க்கப்பட்டன. விஜயநகரத்தின் பளபளப்பையும் மினுமினுப்பையும் அழிப்பதற்குக் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் முழுமையாக உழைத்திருக்கிறார்கள்.
(விரியும்)