
‘இந்தியர்கள் குறித்து மேலும் சிலவற்றைக் கேள்விப்பட்டேன். ஆனால், அவை நம்பத்தக்கவையாக இல்லை என்பதால் சேர்க்கவில்லை
இந்தியாவின் மையப் பகுதியில் ‘பிக்மி’ என்னும் அதிசய குள்ளர் இனம் பல்லாண்டுகளாக வசித்துவருவதை உலகம் அறிந்துகொண்டது தீஷியஸிடமிருந்துதான். பார்க்கச் சாதாரண மனிதர்கள்போலத்தான் இருப்பார்கள். சாதாரணமாக நம்மைப்போல் பேசுவார்கள், பழகுவார்கள், நடப்பார்கள், சிரிப்பார்கள், குடுகுடுவென்று ஓடுவார்கள்.

குள்ளர்களின் சராசரி உயரம் ஒன்றரை முழம். இருப்பதிலேயே நெட்டையானவர் இரண்டு முழம் இருப்பார். உருவம்தான் குறைவே தவிர தாடி ரொம்பவும் பெரியது. முழங்கால் வரையிலோ அல்லது தரையில் தவழும் வரையிலோகூட புஸுபுஸுவென்று வளர்ந்திருக்கும். தலைமுடியும் நல்ல அடர்த்தி. முடியே முழு உடலையும் மறைத்துவிடுவதால் தனியே ஆடை அணிய வேண்டிய அவசியம் குள்ளர்களுக்கு இல்லை. பொழுது போகாதபோது முடியைக் கையில் அள்ளி வைத்துக்கொண்டு வாரிவிட்டுக்கொள்வார்கள். நமக்குத்தான் பார்க்க ஒரு மாதிரியாக இருக்கும். முகத்தோடு ஒட்டிய சப்பையான மூக்கு. அழுக்கானவர்கள். மொத்தத்தில் அருவருப்பான தோற்றம்.
இருந்தாலும் இந்திய மன்னர்கள் குள்ளர்களை விரும்புவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வில் வித்தையில் அவர்களை மிஞ்ச யாருமில்லை. முயல் வேண்டுமா, நரி வேண்டுமா என்ன வேண்டும் என்று சொன்னால் போதும்... குள்ளர்கள் கூட்டம் பாய்ந்து சென்று வேட்டையாடி மன்னருக்கு வேண்டியதையெல்லாம் அள்ளிக் கொண்டுவந்துவிடும். மற்றவர்களைப்போல் வேட்டைக்கு நாய்களைக் கொண்டு செல்வதில்லை குள்ளர்கள். கழுகு, காகம் போன்ற பறவைகளின் உதவியால் இரையை மோப்பம் பிடித்து வீழ்த்துகின்றனர். யாரோ ஒரு மன்னரின் படையில் 3,000 குள்ளர்கள் இடம்பெற்றிருந்ததாக தீஷியஸ் கேள்விப்பட்டாராம்.

அடுத்து, சிந்து நதிக்கு அப்பாலுள்ள மலைப் பகுதியில் வசிக்கும் நாய் மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் தீஷியஸ். நாயின் தலையை மட்டும் பிய்த்து எடுத்து வந்து மனித உடலோடு பொருத்தினால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பார்கள். நிறம் என்னவோ மற்ற இந்தியர்களைப்போல் கறுப்புதான். வாள் போல் நீளமான நகங்கள் இருக்கும். இந்த நகத்தைக்கொண்டு விலங்குகளைக் கிழித்து தோலை உருவி ஆடையாக அணிந்து கொள்வார்கள். நாயின் பற்களைவிட அளவில் பெரிய பற்களைக் கொண்டிருப்பார்கள். பேச வராது என்பதால் குரைப்பார்கள். ஒரு நாய் குரைப்பது எப்படி இன்னொன்றுக்குப் புரியுமோ அப்படி ஒரு நாய் மனிதன் குரைத்தால் அதை இன்னொரு நாய் மனிதனால் புரிந்துகொள்ள முடியும்.
நாய் மனிதர்களுக்குப் பிற இந்தியர்களின் மொழி தெரியும். யாராவது அவர்களிடம் வந்து பேசினால் ஒரு சொல் விடாமல் புரிந்துகொள்வார்கள். திரும்பப் பேசவோ பதிலளிக்கவோ முடியாது! ஆனால், இது இந்தியர்களுக்குப் பெரிய பிரச்னையாக இல்லை. வாய்விட்டுப் பேச முடியாவிட்டாலும் வாலை ஆட்டியோ கையைக் காலை அசைத்தோ ஒரு நாய் தன் கோபத்தை, நட்பை, அன்பை, வெறுப்பை வெளிப்படுத்திவிடுகிறது அல்லவா? அதேபோல் நாய் மனிதரும் சைகை மூலமாகவும் உடல் அசைவுகள் மூலமாகவும் பிற இந்தியர்களோடு உரையாடிவிடுகிறார்கள். இவன் ஏதோ கதை அளக்கிறான் என்று நினைத்துவிடாதீர்கள். என்னிடம் நாய் மனிதர் பற்றிய ஒரு முக்கியமான புள்ளிவிவரம் இருக்கிறது என்று அறிவிக்கிறார் தீஷியஸ். அவருடைய கணிப்பின்படி நாய் மனிதரின் மக்கள்தொகை தோராயமாக 1,20,000 இருக்குமாம். கதை விடுபவர்கள் யாராவது இப்படி எண்ணிக்கையெல்லாம் சொல்வார்களா?
அடுத்து, பால் குடிக்கும் இந்தியர்கள். நதிக்கரையைவிட்டு வெகு தொலைவில் இவர்களுடைய குடியிருப்புகள் அமைந்துள்ளன. தாங்கள் வளர்க்கும் கால்நடைகளிலிருந்து பால் கறந்து அதை மட்டும் அருந்துவார்கள். அதைத் தவிர தலைகீழாக நின்றாலும் வேறு எதுவும் அவர்கள் வாய்க்குள் போகாது. சரி, உள்ளேதான் எதுவும் போவதில்லை. வெளியிலாவது வருமா என்றால் அதுவும் சிக்கல்தான். ஆமாம், அவர்கள் உடலில் எங்குமே சிறு ஓட்டையும் இல்லை என்பதால் நம்மைப் போல் அவர்களால் கழிவுகளை வெளியேற்ற இயலாது. குழந்தை முதல் பெரியோர் வரை எல்லோரும் பால் உணவுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக்கொண்டு விட்டார்கள். பரம்பரை வழக்கம்போல. விடிகாலை பால், மதியம் பால். மாலை வாக்கில் மூலிகை வேர் ஒன்றை உட்கொள்கிறார்கள். வயிற்றுக்குள் பால் கெட்டியாவதைத் தடுத்து திரவமாகவே வைத்திருக்கிறதாம் இந்த வேர். இரவானதும் முழுக்க வாந்தி எடுத்து வயிற்றைக் காலி செய்துகொள்வார்கள். காலையில் கண் விழித்ததும் புதிதாகப் பசிக்கும். இருக்கவே இருக்கிறது, பால்!
சில வகை மலைவாசிகள் இருக்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை சுமார் 30,000 இருக்கும். இந்த மலைவாசிகளுக்குப் பிறக்கும் ஆண், பெண் குழந்தை இரண்டுமே நரை முடியோடுதான் காட்சியளிக்கும். வயது கூடக் கூட வெள்ளை முடி கறுப்பாக ஆரம்பிக்கும். அறுபது வயதாகும்போது சும்மா கருகருவென்று அடர்த்தியோடு இருக்கும். ஒரு மலைப் பெண் தன் வாழ்நாளில் ஒரு குழந்தையை மட்டுமே பெற்றெடுக்கிறார். ஆண், பெண் இருவருக்கும் ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு காலிலும் தலா எட்டு விரல்கள் இருக்கும். காதுகள் இரண்டுதான். ஆனால் ஒவ்வொன்றும் முழங்கை வரை தொங்கும். முதுகை மூடும் அளவுக்குப் பின்னாலும் படர்ந்திருக்கும். ஒரு காது இன்னொரு காதைத் தீண்டியபடி அழகாக அசைந்தாடுவதைக் காணலாம். மலை ஆண்கள் வீரம் மிக்கவர்கள். இந்திய மன்னரொருவர் தன் படையில் 5,000 மலை வீரர்களை வைத்திருந்தாராம்.
அதன் பின் ஒற்றைக் கால் மனிதர்கள். ‘மோனோகோலி’ என்று அழைக்கப்படும் இவர்கள் அசாத்திய ஆற்றல்கொண்டவர்கள். இவர்கள் ஒரு காலால் அநாயாசமாகச் செய்யும் பலவற்றை, இரு கால்கள் வைத்துக்கொண்டு எவ்வளவு முயன்றாலும் நம்மால் செய்ய முடியாது என்கிறார் தீஷியஸ். எங்கிருந்தும் எங்கும் குதிப்பார்கள், வாய்பிளக்கச் செய்யும் வகையில் தாவுவார்கள். உடலை வில்லாக வளைப்பார்கள். வெயில் அதிகரிக்கும்போது நாமெல்லாம் நிழல் எங்கிருக்கிறது என்று தேடுவோம் அல்லவா? அவர்கள் அப்படியே நிலத்தில் சாய்ந்து ஓய்வெடுப் பார்கள். அப்படியென்றால் உடலெல்லாம் சுட்டுவிடாதா என்று கேட்டால், சுடாது. முறம் போல் அகன்றிருக்கும் காலை அப்படியே மேலே தூக்கினால் அது குடைபோல் உடலை மறைத்துக்கொள்ளும். ஆனந்தமாக உறங்கிவிடுவார்கள்.

மன்னர், மன்னர் என்று சில இடங்களில் வந்தாலும் எந்த மன்னர் என்று தீஷியஸ் நமக்குச் சொல்வதில்லை. குள்ளர் படை போல் யானைப் படையும் மன்னருக்கு மிகவும் பிடிக்குமாம். எதிரியோடு போருக்குச் செல்லும்போது ஒரு மன்னர் 1,20,000 யானைகளை அழைத்துச் செல்வாராம். யானைப் பாகன் என்ன சொன்னாலும் யானை கேட்குமாம். மக்கள் எவ்வளவு வேண்டுமானாலும் மது அருந்தலாம். ஆனால், மன்னர் எல்லை மீறக் கூடாதாம். ஏனென்று தீஷியஸ் சொல்லவில்லை.
நீதி வழங்குவது மன்னரின் வேலை. ஒருவர் குற்றவாளியா, நிரபராதியா என்பதைக் கண்டறிய மன்னர் ஓர் உபாயத்தைக் கடைப்பிடிப்பது வழக்கம். குறிப்பிட்ட நீருற்று ஒன்றிலிருந்து நீர் கொண்டுவரச் சொல்வார். அருந்தும் எவரையும் ஒரு நாள் முழுக்க மயக்கநிலைக்கு அழைத்துச் சென்றுவிடும் மாய நீர் அது. அதைக் கொடுத்த பிறகு விசாரணை நடத்தினால் மிதப்பில் இருக்கும் எல்லோரும் உண்மையை மட்டுமே சொல்வார்கள். குற்றவாளிக்கு ஒரே தண்டனைதான். பட்டினி போட்டுக் கொன்றுவிடுவார்கள்.
இந்தியர்கள் பொதுவாகவே நியாயத்துக்குக் கட்டுப்பட்டவர்களாம். மனித மாமிசம் சாப்பிடும் வழக்கம் நிச்சயம் இந்தியாவில் எங்குமில்லை என்று அடித்துச் சொல்கிறார் தீஷியஸ். எவ்வளவோ அதிசய விலங்குகள் இருந்தாலும் ஒற்றைக் கொம்பு கழுதை என்றால் இந்தியர்கள் அஞ்சுவார்களாம். தன் பின்னங்காலால் அது ஓர் உதைவிட்டால் எத்தனை பெரிய வீரனாக இருந்தாலும் அவன் கதை அதோடு தீர்ந்தது. பின்னால் போனால் இப்படி என்றால் முன்னால் போனால் கடித்துக் குதறியெடுத்துவிடும். கழுதைக் கறி கசக்கும் என்பதால் இந்தியர்கள் அதை உண்பதில்லை. கொம்பை மட்டும் பயபக்தியோடு பத்திரப்படுத்திக்கொள்வர்.
இந்தியர்களுக்குப் பல்வலி, தலைவலி, தொண்டைவலி, எரிச்சல் எதுவுமே ஏற்படுவதில்லை. கண்களிலும் கோளாறு உண்டாவதில்லை. பொதுவாகவே அவர்கள் ஆரோக்கியமானவர்கள் என்கிறார் தீஷியஸ். ஒரு சராசரி இந்தியர் 120, 130 அல்லது 150 ஆண்டுகள் வாழ்வார். 200 வயது இந்தியரைக் காண்பது அப்படியொன்றும் அதிசயம் கிடையாதாம். தன் துறை என்பதால் இந்திய சிகிச்சை முறைகள் குறித்தும் பேசுகிறார். இந்தியர்களுக்கு நல்ல மருத்துவ அறிவு இருக்கிறது. மரணத்தின் பிடியில் சென்றுவிட்டாலும் உருட்டிப் புரட்டி ஏதோ மாயம் செய்து உயிரை மீட்டெடுத்து விடுகிறார்கள். மூலிகை மட்டுமன்றி, பறவை, விலங்குகளின் உடல் பாகங்கள் ஆகியவற்றையும் சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறார்கள்.
கழுத்தே இல்லாதவர்கள், முதுகில் கண்கள் பொறிக்கப்பட்டவர்கள், ஆடுபோல் குட்டை வால் கொண்டவர்கள், ஏழு வயதிலேயே குழந்தை பெற்றெடுக்கும் பெண்கள், வேட்டையாடிய விலங்குகளைத் துண்டு துண்டாக வெட்டி சூரியனில் வாட்டிச் சாப்பிடும் மனிதர்கள் என்று மேலும் பலவிதமான அதிசய இந்தியர்களை தீஷியஸின் குறிப்புகளில் சந்திக்க முடிகிறது.

ஹெரோடோட்டஸ்போலவே இவரும் இந்தியாவை நேரில் கண்டதில்லை. இந்தியாவுக்குச் சென்று வந்தவர்கள் விவரித்த கதைகளையும், பாரசீக மக்கள் இந்தியா குறித்து கொண்டிருந்த கற்பனைகளையும் கலந்து அவர் தயாரித்த ரவா உப்புமாதான் ‘இண்டிகா.’ ராமாயணத்தை இயற்றிய வால்மீகி, தீஷியஸின் சமகாலத்தவர் என்று சொல்லப்படுகிறது. மகாபாரதம், உபநிடதம் என்று தொடங்கி பல புராணக் கதைகளை அவர் கேள்விப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. அவற்றிலிருந்தும் அவர் சில அதிசயங்களைத் தன் நூலில் கலந்திருக்கலாம்.
என்னென்னவெல்லாமோ விவரித்து முடித்துவிட்டு ஓரிடத்தில் தீஷியஸ் அடக்கமாக இப்படிச் சொல்கிறார். ‘இந்தியர்கள் குறித்து மேலும் சிலவற்றைக் கேள்விப்பட்டேன். ஆனால், அவை நம்பத்தக்கவையாக இல்லை என்பதால் சேர்க்கவில்லை!’
(விரியும்)