மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 60 - முதல் ரஷ்யர்

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

கிராமப்புறங்களில் நடமாடிக்கொண்டிருந்த மக்களைக் கண்டதும், எல்லா அயல்தேசத்தவரைப் போல் நிகிடினும் திகைத்தார்.

இந்தியாவை நேரில் கண்டு எழுதிய முதல் ரஷ்யராக அஃபனாசி நிகிடின் கருதப்படுகிறார். மாஸ்கோவுக்கு வடமேற்கே அமைந்துள்ள வளம் கொழிக்கும் வணிக நகரமொன்றில் (ட்வெர்) பிறந்தவர். உலகம் முழுவதிலுமிருந்து பண்டங்களும், அவற்றுக்குச் சமமாகக் கதைகளும் ரஷ்யாவில் இறக்குமதி ஆகிக்கொண்டிருந்த காலம் அது. தங்கமும், வைரமும், பட்டும், நறுமணப்பொருள்களும் கொட்டிக்கிடக்கின்றன. இந்திய மண்ணில் கால்பதிக்கும் ஒவ்வொரு அயல்தேசத்தவரும், மனம் நிறைய மகிழ்ச்சியோடும், கைநிறைய செல்வத்தோடும்தான் திரும்பி வர முடியும் என்று மாலுமிகளும் வணிகர்களும் நம்பிக்கையூட்டினர்.

நிகிடின் தயாரானார். இந்தியாவில் கிடைக்காத ஒரே பொருள் குதிரை என்று சிலர் சொன்னதால், நல்ல குதிரையொன்றை ரஷ்யாவிலேயே வாங்கிக்கொண்டு தன் பயணத்தைத் தொடங்கினார் நிகிடின். கருங்கடல், காஸ்பியன் கடல், இரான், ஓமன், மத்திய கிழக்கு அனைத்தையும் கடந்து, அரபிக்கடல் வழியே 1469-ம் ஆண்டு குஜராத்தில் வந்திறங்கினார். அங்கிருந்து மகாராஷ்டிராவிலுள்ள இன்றைய ராய்காட் மாவட்டத்திலுள்ள சால் எனும் கிராமத்துக்குச் சென்றுசேர்ந்தார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 60 - முதல் ரஷ்யர்

கிராமப்புறங்களில் நடமாடிக்கொண்டிருந்த மக்களைக் கண்டதும், எல்லா அயல்தேசத்தவரைப் போல் நிகிடினும் திகைத்தார். இதென்ன இவ்வளவு குறைவான ஆடையணிந்துகொண்டு வெளியில் வருகிறார்கள்... பலர் அதுகூட அணிவதில்லையே... ஏன் தலையில் தொப்பி இல்லாமல் இருக்கிறார்கள்... வட்ட வடிவிலான தொப்பையைக்கூட ஏன் அவர்கள் மறைக்க முயலவில்லை... பெண்கள்கூடவா ஆடை குறித்து அக்கறை இல்லாமல் இருப்பார்கள்? `ஆடைதான் இல்லையே தவிர பலர் ஆபரணங்கள் அணிந்திருக்கிறார்கள்’ என்கிறார் நிகிடின். `வேகமாக, உறுதியாக நடைபோடுகிறார்கள்’ என்கிறார். கிராம மக்களும் தங்கள் பங்குக்கு ரஷ்யரை ஆச்சர்யத்தோடு வேடிக்கை பார்த்தனர். `யார் இவர்... இவர் ஏன் என்னென்னவோ புதிராக உடுத்திக்கொண்டிருக்கிறார்?’ ஆர்வம் தாளாமல் சிலர் நிகிடினைத் துரத்திக்கொண்டும் ஓடியிருக்கிறார்கள்.

பாதாமி சுல்தானகம் ஆட்சியிலிருந்த சமயம் அது. தலைநகரமாக முதலில் குல்பர்காவும் பின்னர் பிடாரும் இருந்தன. இரு இடங்களையும் பார்வையிட்டார் நிகிடின். விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட சில பிரதேசங்களிலும் ராய்ச்சூர், கோல்கொண்டா ஆகிய பகுதிகளிலும் பயணங்கள் மேற்கொண்டார். பிடாரில் பட்டும் குதிரைகளும் போக, கறுப்பு மனிதர்களும் விற்பனை செய்யப்படுவதைக் கண்டிருக்கிறார். தன்னுடைய உயர்ரக குதிரையை நல்ல விலைக்கு அங்கே விற்றுவிட்டு, மேற்கொண்டு பயணம் செய்வதற்கான பணத்தைத் தேற்றிக்கொண்டார். பிடாருக்கு மொத்தம் ஏழு நுழைவாயில்கள். ஒவ்வொன்றையும் ஆயுதம் தரித்த நூறு வீரர்கள் காவல் காக்கிறார்கள். உள்ளே வருவோர், போவோரிடம் விசாரித்து, அவர்கள் பெயரைப் பதிவேடுகளில் எழுதி வைப்பதற்கென்றே 100 பேர் இருப்பார்களாம். எண்ணிக்கையில் மிகை இருக்கக்கூடும் என்றாலும், பாதாமி மன்னர்கள் நகரைக் காக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்தக் குறிப்புகள்மூலம் அறிய முடிகிறது.

ஈத் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதை அழகாக விவரிக்கிறார் நிகிடின். மாளிகை மிக நேர்த்தியோடு அலங்கரிக்கப்பட்டிருக்கும். சுல்தான் தனது பரிவாரங்கள் சூழ நகரை அன்று வலம்வருவார். 300 யானைகள் வரிசையாக அசைந்தாடி வரும் காட்சியை என்னவென்று சொல்வது! ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புக்கு முன்பும் பின்பும் திரண்டுவருவார்கள். குதிரைகள் தகதகக்கும் தங்க வண்ண ஆடை அணிந்து குதிபோட்டு ஆடும். வாத்தியங்கள் இசைக்கும். அனுபவமிக்க நடனக்கலைஞர்கள் இசைக்கேற்ப ஒயிலாக ஆடுவார்கள். அந்தப்புரத்துப் பெண்கள் அணிவகுத்து வருவார்கள். சுல்தானை அருகில் சென்று காணக் கூட்டம் முண்டியடிப்பது வழக்கம். அவர்கள் சுல்தானை நெருங்காதவாறு தடுத்தாளும் பணி ஒரு யானைக்கு அளிக்கப்பட்டிருந்தது. கண்களைப் பறிக்கும் வண்ணத்தில் அந்த யானை ஆடை அணிந்திருக்கும். அதன் வாயில் பெரிய இரும்புச் சங்கிலி இணைந்திருக்கும். `என்னை மீறி சுல்தானை நெருங்கிவிடுவாயா என்ன?’ என்று அது மிரட்டுவதுபோல் இருக்கும்.

நிகிடினுக்கு இந்தியா பிடித்துப்போய்விட்டது போலும் என்று நினைத்தால், தவறு. `எல்லோரும் சொல்லியனுப்பியது வேறு. இங்கு நான் காண்பது வேறு. அப்படியொன்றும் பொன்னும், பொருளும், தங்கமும், வைரமும் இங்கே கொட்டிக் கிடக்கவில்லை. இந்தியா பற்றி நான் கேள்விப்பட்ட கதைகளெல்லாம் உண்மையிலேயே கதைகள்தான் போலிருக்கிறது’ என்று வருந்துகிறார் நிகிடின். `எங்கும் இஸ்லாமியர்கள் நிறைந்திருக்கிறார்கள். சுல்தானின் ஆட்சி மற்றவர்களைவிட அவர்களுக்கே உகந்ததாக இருக்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் ஆதாயங்களே இதற்குக் காரணம்’ என்கிறார் நிகிடின். `எல்லா வணிகர்களுக்கும் அல்ல, இஸ்லாமிய வணிகர்களுக்கே சந்தை அனுகூலமானதாக இருக்கிறது. எல்லாப் பண்டங்களுக்கும் அவர்களுக்கு வரி விலக்கு கிடைத்துவிடுகிறது. அதே பொருளை மற்றவர்கள் சென்று வாங்கினால் வரி தீட்டிவிடுகிறார்கள். மிளகு, சாயப்பொருள்கள் உள்ளிட்டவை நல்ல விலைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றுக்கான வரி மிக அதிகமாக இருக்கிறது. இங்கிருந்து நான் எதை வாங்கிக்கொண்டு போவதாம்’ என்று பொருமுகிறார் நிகிடின்.

பயபக்திகொண்ட கிறிஸ்தவர் அவர். `ரஷ்யாவைவிட்டு என்னென்னவோ நம்பிக்கைகள் உள்ள நிலங்களுக்குப் போகிறோமே, இது பாவமில்லையா...’ என்னும் கலக்கம் அவருக்கு இருந்திருக்கிறது. இந்தியா எனும் விநோத இடத்துக்கு வந்துசேர்ந்த பிறகு, ரஷ்யப் பாசம் இன்னமும் அதிகரித்திருக்கிறது. அதைப் பார்க்க முடியவில்லையே, இதைப் பார்க்க முடியவில்லையே, நட்பையும் உறவையும் பார்த்துப் பல காலம் ஆகிவிட்டதே என்று தவித்துப்போகிறார். தேவாலயங்கள், கிறிஸ்தவப் பண்டிகைகள், ஜபங்கள் ஆகியவற்றை அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்கிறார். `இல்லை, நான் ரஷ்யாவை மறக்கவில்லை’ என்று அடிக்கடி தனக்குள்ளே சொல்லிக்கொள்வார் போலிருக்கிறது.

இஸ்லாமியப் பண்பாட்டையும் அக்கறையோடுதான் அணுகியிருக்கிறார். அவர்களுடைய வழிபாட்டு முறைகள், பாடல்கள் ஆகியவற்றைக் கேட்டறிந்து தெளிவாகப் பதிவுசெய்கிறார். அவருக்குத் துருக்கிய மொழி தெரிந்திருக்கிறது. ஓர் இஸ்லாமியப் பெயரையும் தனக்குச் சூட்டிக்கொண்டிருக்கிறார். இஸ்லாமிய ஆடையணிந்து வலம்வந்திருக்கிறார். இஸ்லாமிய உணவு வழக்கத்தையும் கடைப்பிடித்திருப்பதாகத் தெரிகிறது. இதையெல்லாம் தொகுத்துப் பார்க்கும் சிலர், ஒருவேளை இந்தியா வந்த பிறகு நிகிடின் கிறிஸ்தவத்தைக் கைவிட்டுவிட்டு இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டுவிட்டாரோ என்றொரு ஐயத்தைக் கிளப்புகிறார்கள்!

இந்தியாவில் மொத்தம் 84 விதமான சமயங்கள் இருக்கின்றனவாம். ஒவ்வொருவரும் ஏதோவொரு கடவுளை நம்பி, ஏற்று, வணங்குகிறார்களாம். இந்துக்களை `காஃபிர்கள்’ என்று அழைக்கிறார். பலவித வடிவங்களில் உருவச்சிலைகளை அவர்கள் எழுப்பியிருக்கிறார்கள். யானை, குரங்கு போன்ற விலங்குகளையும் கடவுளாக மாற்றி வைத்திருக்கிறார்கள். `இந்துக்களுக்குள்ளேயே மாற்று நம்பிக்கை உள்ளவர்களோடு அவர்கள் ஒன்றுசேர்ந்து உண்பதில்லை. திருமண உறவு வளர்த்துக்கொள்வதில்லை’ என்கிறார்.

`நான் என்னை ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லி அவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர்கள் இயல்பாகப் பேசுகிறார்கள். ஒளிவுமறைவு இல்லாமல் நடந்துகொள்கிறார்கள். உண்ணும்போது, வியாபாரத்தில் ஈடுபடும்போது, வழிபாடு நடத்தும்போது நான் உடனிருப்பதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மது அருந்தும் வழக்கம் இந்துக்களிடம் இல்லை. திராட்சைப் பழச்சாறும், மரத்திலிருந்து ஏதோ ஒரு பானத்தை இறக்கியும் அருந்துகிறார்கள். முட்டை, கோழி, ஆடு, பன்றி என்று எல்லாவற்றையும் உண்கிறார்கள். மாடு மட்டும் விதிவிலக்கு. சாதம், பொங்கல், காய்கறிகள், நெய், பால் ஆகியவை பொது உணவுகள்’என்கிறார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 60 - முதல் ரஷ்யர்

ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலம் கோயிலை நோக்கி ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வதைக் கண்டிருக்கிறார். பலர் கால்நடையாகவும் சிலர் கால்நடைகள்மீதும் பயணம் செய்கிறார்கள். பசுவை வணங்குகிறார்கள். சாணியைப் பல வகைகளில் பயன்படுத்துகிறார்கள். விபூதிபோலவும் பூசிக்கொள்கிறார்கள். பசு எங்கள் அம்மா, எருது எங்கள் அப்பா என்று அவர்கள் சொல்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

மன்னர்கள் மனிதர்கள்மீது ஏறியமர்ந்து சவாரி செய்வதைக் கண்டு திகைக்கிறார். பல்லக்கில் செல்வதைத்தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்க வேண்டும். `பாதாமி சுல்தானுக்கும் விஜயநகரத்துக்கும் எலி - பூனை உறவு நிலவுகிறது. அடிக்கடி அவர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்’ என்கிறார் நிகிடின். `விஜயநகரம் எனக்குப் பிடித்திருக்கிறது. மலைகளும் வனங்களும் சூழ்ந்த அழகிய இடம். விஜயநகர மன்னர் பலம்மிக்கவராக இருக்கிறார். மொத்தத்தில் எல்லாவற்றிலும் சிறந்த இடம்’ என்கிறார்.

ராய்ச்சூர், கோல்கொண்டா பகுதிகளிலுள்ள வைரச் சுரங்கங்களைப் பார்வையிட்டிருக்கிறார். வைரத்தின் அளவு, சந்தை மதிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். கோழிக்கோடு குறித்தும், சிலோன் குறித்தும் பதிவுகள் உள்ளன என்றாலும் அங்கெல்லாம் அவர் சென்றாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. கோழிக்கோட்டிலும் அடிமை வியாபாரம் நடைபெற்றதாகச் சொல்கிறார்.

`ரஷ்யாவிலிருந்து கிளம்பி ஆறு ஆண்டுகள் ஆகியிருந்தன. மூன்று ஆண்டுகள் இந்தியாவிலேயே கழித்தாகிவிட்டது. வா, வா என்று வீடு ஓயாமல் அழைத்துக்கொண்டே இருந்தது. வீடு நினைவுக்கு வரும்போது நட்சத்திரங்களைப் பார்த்தபடி அமர்ந்துகொண்டிருப்பேன். அவை என்னை ஆற்றுப்படுத்துவதுபோல் உணர்வேன்’ என்று ஓரிடத்தில் எழுதுகிறார்.

மகாராஷ்டிராவிலிருந்து கிளம்பி எத்தியோப்பியா வழியாக மஸ்கட்டுக்கு முன்னேறிச் சென்றார். அடுத்து ரஷ்யாதான். ஆனால் அவருடைய பதிவு இந்த இடத்தில் முடிந்துவிடுகிறது. நிறைவடையவில்லை. எழுதிக்கொண்டே இருக்கும்போது சட்டென்று ஓரிடத்தில் நிறுத்திவிட்டதுபோல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அப்படியானால் அவர் இடையில் எங்கேனும் இறந்துவிட்டாரா... ரஷ்யா சென்று சேரவேயில்லையா? நட்சத்திரங்களால் மட்டுமே சொல்ல முடியும்.

(விரியும்)