
15-ம் நூற்றாண்டு ஐரோப்பாவில் போர்ச்சுகீசியர்களும் ஸ்பானியர்களும்தான் கடல் பயண ஆய்வுகளில் முன்வரிசையில் இருந்தனர்.
`இந்தியாவைக் கண்டுபிடித்தது யார்?’ என்னும் வினாவை இணையத்தில் எழுப்பினால் நமக்குக் கிடைக்கும் விடை, `வாஸ்கோ ட காமா’ என்பதுதான். அமெரிக்காவுக்கு கொலம்பஸ் எப்படியோ, அப்படி இந்தியாவுக்கு (அல்லது ஆசியாவுக்கு) வாஸ்கோ ட காமா என்று வாதிடும் கட்டுரைகளையும் அதே இணையத்தில் காண முடியும். இதை ஏற்க வேண்டுமானால், போர்ச்சுகலிலிருந்து அவர் 15-ம் நூற்றாண்டில் கிளம்பி வரும்வரை இந்தியா முழு இருளில் ஒளிந்துகொண்டிருந்தது என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். அது அவ்வளவு சுலபம் இல்லை, அல்லவா?
எனில், ஏன் இந்தக் கண்டுபிடிப்புக் கதை இன்னமும் மறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது? ஒரு சிறிய குழப்பத்தால் நேர்ந்துவிட்ட பிரச்னை இது. வாஸ்கோ ட காமா இந்தியாவை அல்ல, இந்தியாவுக்கான கடல்வழியைத்தான் கண்டுபிடித்தார். மேற்கிலிருந்து ஒருவர் இந்தியாவுக்கு வர வேண்டுமென்றால் ஒரு வழிதான் உண்டு. பட்டுப்பாதை. அதில் பயணம் செய்வது எவ்வளவு கடினமானது என்பதை நாம் ஏற்கெனவே இங்கே விரிவாகப் பார்த்திருக்கிறோம். ஒரு சொட்டு நீர்கூடக் கிடைக்காத பாலைவனங்களையும், ஆபத்தான காட்டுப் பகுதிகளையும், கடினமான மலைத்தொடர்களையும் கடந்து வருபவருக்கே இந்திய தரிசனம் சாத்தியம். தேவதைக் கதைகளில் வரும் ஏழு கடல், ஏழு மலை போன்றதுதான் இதுவும்.
கிழக்கில் கிடைக்கும் நறுமணப் பொருள்களும், தங்க ரத்தினங்களும் வேண்டும், ஆனால் பட்டுப்பாதை வேண்டாம் என்று நினைக்கும் ஐரோப்பியர்களுக்கும் எந்த மாற்றும் இல்லாமல் இருந்தது. அரேபியா வழியாகவும், பாரசீகம் வழியாகவும் இதே பண்டங்களைப் பெற முடியும் என்பது உண்மை. ஆனால், தரத்திலும் சரி... விலையிலும் சரி இந்தியப் பண்டங்களுக்கு அருகில்கூட இவை வருவதில்லை. தவிரவும், ஐரோப்பாவுக்கும் அரபுலகுக்குமான உறவு என்பது அடிப்படையில் பூனை, எலி உறவுதான். எனவே கிழக்குக்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தே தீரவேண்டிய கட்டாயத்துக்கு ஐரோப்பா தள்ளப்பட்டது.
கடல்வழியைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், நீண்ட தூரங்களுக்குப் பயணம் செய்வதற்கு ஏற்ற வலுவான கப்பல்களை முதலில் உருவாக்க வேண்டும். அதற்கு நல்ல முதலீடு தேவை. கப்பல்களை உருவாக்கிய பிறகு, அவற்றை வழிநடத்திச் செல்ல திறமையான மாலுமிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இரண்டும் கிடைத்த பிறகு, நாலா பக்கமும் கப்பல்களை அனுப்பி ஆய்வுசெய்ய வேண்டும். கரையைவிட்டுக் கிளம்பிச் செல்லும் கப்பல்கள் திரும்ப வீடு வந்து சேரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்காமல் போவதற்கே வாய்ப்புகள் அதிகம்.

15-ம் நூற்றாண்டு ஐரோப்பாவில் போர்ச்சுகீசியர்களும் ஸ்பானியர்களும்தான் கடல் பயண ஆய்வுகளில் முன்வரிசையில் இருந்தனர். வலுவான கப்பல்களை உருவாக்கி, தூர தேசங்களுக்குச் செலுத்தும் ஆற்றல் இந்த இருவருக்குத்தான் இருந்தது. இரண்டுமே செல்வச் செழிப்புமிக்க நாடுகள். நானா, நீயா போட்டியும் இந்த இருவருக்கும் இடையில் மட்டுமே நடந்துகொண்டிருந்தது. இரண்டுமே கத்தோலிக்க நாடுகள். எனவே, போப் தலையிட்டு இருவரையும் ஆற்றுப்படுத்தினார். `உலகம் பரந்து விரிந்திருக்கிறது. அதை அடக்கியாளும் பலம் உங்கள் இருவருக்கும்தான் இருக்கிறது. நீங்கள் உங்களுக்குள் மோதிக்கொள்வதைத் தவிர்த்துவிட்டு வெளியில் கவனம் செலுத்துங்கள்! உலகின் ஒரு பகுதியை ஸ்பெயின் ஆராயட்டும். இன்னொரு பகுதியை போர்ச்சுகல் எடுத்துக்கொள்ளட்டும். ஒருவர் பகுதிக்குள் இன்னொருவர் நுழைய வேண்டாம்.’
இது வேலை செய்தது. இந்தியா உள்ளிட்ட கிழக்கு போர்ச்சுகீசியர்களுக்குச் சென்றது. இங்கேதான் வாஸ்கோ ட காமா நமக்கு அறிமுகமாகிறார். பயணத்துக்கு முந்தைய அவர் வாழ்க்கை குறித்து அதிக விவரங்கள் இல்லை. பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், மாளிகையோடு அவருக்கு எப்போதும் நல்லுறவு இருந்திருக்கிறது. ஒருமுறை பிரான்ஸ் போர்ச்சுகலைத் தாக்கியபோது, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காமாவை பிரான்ஸுக்கு அனுப்பிவைத்தார் போர்ச்சுகல் மன்னர். பதிலடி கொடுக்கும் வகையில், பிரெஞ்சுக் கப்பல்களைக் கைப்பற்றுவதுதான் அவருக்கு இடப்பட்டிருந்த பணி. மன்னரும் மற்றவர்களும் மகிழும்படி அதை அவர் செய்து முடித்தார்.
ஆனால் காமா பிரபலமடைந்தது அவருடைய இந்தியப் பயணத்தால்தான். இந்தியாவுக்கான கடல்வழியைக் கண்டுபிடிக்குமாறு போர்ச்சுகல் மன்னரான முதலாம் மானுவேல் ஜூலை 1497-ல் வாஸ்கோ ட காமாவை வழியனுப்பி வைத்தார். லிஸ்பனிலிருந்து கிளம்பிய அந்தக் கப்பல்களில் காமாவோடு பயணம் செய்த பணியாளர்களில் குற்றவாளிகள், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் ஆகியோரும் இருந்தனர். உயிரோடு திரும்பி வந்தால் மட்டுமே அதிர்ச்சியடைய வேண்டும் என்னும் புரிதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவர்கள். கடற்கொள்ளையர்களோடு மோதுவது உள்ளிட்ட ஆபத்தான பணிகளை இவர்களைப் பணயம்வைத்துச் செய்துகொள்ளலாம்.
இப்படியாக காமாவின் பயணம் ஆரம்பமானது. மொத்தம் நான்கு கப்பல்கள். மூன்று பயணக் கப்பல்களில் 170 பேர் நிறைந்திருந்தனர். ஒரு கப்பல் உணவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டது. உள்ளதில் பெரியது காமாவின் சௌ காப்ரியல். மூன்று பாய் மரங்களும், ஆறு பாய்களும், 20 பீரங்கிகளும் பொருத்தப்பட்டிருந்தன. தொடக்கத்தில் வழக்கமான பாதையில்தான் முன்னேறினார்கள். லிஸ்பனிலிருந்து ஆப்பிரிக்கக் கரையை ஒட்டியே கப்பல்கள் சென்றன. இன்றைய சியாரா லியோன் பகுதி வந்ததும் காமா வழித்தடத்தை மாற்றியமைத்தார். முன்னதாக பார்த்தலோமியோ டயஸ் என்னும் புகழ்பெற்ற பயணி கண்டுபிடித்திருந்த புதிய வழியை அடியொற்றி நிலநடுக்கோட்டைக் கடந்து, தெற்கு அட்லாண்டிக் பகுதிக்குள் வெற்றிகரமாக நுழைந்தார். நம்பிக்கை உண்டானது.
கிளம்பிய மூன்று மாதங்களில் நிலத்தையே பார்க்காமல் 10,000 கி.மீ கடந்திருந்தார் காமா. அன்றைய தேதியில் அது ஒரு சாதனை. பின்னரே கரை ஒதுங்கி, ஓய்வெடுத்துக்கொண்டார்கள். மார்ச் 1498 மொசாம்பிக் தீவை அடைந்தனர். அராபியர்கள் அதிகமுள்ள பகுதி என்பதால் நடை, உடை, பாவனை அனைத்திலும் முஸ்லிமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். சுல்தானைச் சென்று சந்திக்கும் அளவுக்குச் சென்றுவிட்டார். ஒப்பனை பொருந்தவில்லையா அல்லது எங்கேனும். ஏதேனும் தவறிழைத்துவிட்டாரா என்று தெரியவில்லை, ஒருநாள் குட்டு வெளிப்பட்டுவிட்டது. ஓட ஓடத் துரத்தியடிக்க ஆரம்பித்தார்கள் மக்கள். கிட்டத்தட்ட ஓடிவர வேண்டியதாகிவிட்டது.
கென்யா அருகில் இன்னொரு வேடத்தையும் காமா போடவேண்டியிருந்தது. கடல் கொள்ளையர். (அது வேடமல்ல, அதுதான் அவர் என்பார்கள் பலர்). தன்பாட்டுக்குச் சென்றுகொண்டிருந்த அரபுக் கப்பல்களை வழிமறித்துத் தாக்கி, அதிலுள்ள பண்டங்களைக் கொள்ளையடித்தார்கள் காமாவின் ஆட்கள். கென்யாவின் கரையோர நகரமான மொம்பாசாவில் கால்பதிக்கும் முதல் போர்ச்சுகீசியர் என்னும் பெருமை காமாவுக்கு வந்தது. ஆனால், கால்வைத்தவுடனேயே எதிர்ப்புகள் வலுக்க ஆரம்பித்துவிட்டதால் அங்கிருந்து விரட்டப்பட்ட முதல் போர்ச்சுகீசியர் எனும் அவப்பெயரும் அப்போதைக்கு அப்போதே வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது.
ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக்கொண்டு, கிழக்குக் கடற்கரையிலிருந்த மலிந்தி என்னும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். இந்தியக் கனவுக்கு அங்கிருந்து பக்கம். இந்தியா செல்வதற்கான வழிகளை அங்கே விசாரித்துத் தெரிந்துகொண்டார் காமா. தென்மேற்குப் பருவக் காற்றைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பயணம் செய்தால் இந்தியாவை அடைந்துவிடலாம் என்பது தெரிந்தது. அவ்வாறு இதற்கு முன்பு இந்தியா சென்ற மாலுமிகள் இருக்கிறார்களா என்று தேடி அப்படிப்பட்ட ஒருவரைப் பணியில் அமர்த்திக்கொண்டார் காமா. ஏப்ரலில் இறுதிக்கட்டப் பயணத்தைத் தொடங்கினார்கள். எதிர்பார்த்தபடியே புதிய மாலுமியின் அறிவும் அனுபவமும் கைகொடுத்தன.

மலிந்தியிலிருந்து கிளம்பிய 23 நாள்களில் மலபார் கடற்கரை தென்பட்டுவிட்டது. உற்சாகக் கூச்சலிட்டு அனைவரும் மகிழ்ந்தார்கள். மரணப் போராட்டம் முடிவுக்கு வந்ததுபோலிருந்தது பலருக்கும். 11 மாதப் பயணம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. 20 மே, 1498 அன்று காமாவின் கப்பல்கள் கோழிக்கோட்டுக்கு வடக்கே நங்கூரமிட்டு நின்றன. ஐரோப்பாவிலிருந்து இந்தியா வந்தடைந்த முதல் ஐரோப்பியக் கப்பல்கள் இவை. ஐரோப்பாவிலிருந்து கடல் வழியே இந்தியாவை வந்தடைய முடியும் என்பதை நிரூபித்த முதல் பயணியாக வாஸ்கோ ட காமா மாறினார். இதைத் தவறாகப் புரிந்துகொண்ட சிலர், காமா வந்துதான் இந்தியாவைக் கண்டுபிடித்தார் என்று நினைத்துவிட்டனர்.
அதோடு நில்லாமல், கொலம்பஸுக்குப் பக்கத்தில் அவரைக் கொண்டுசென்றும் நிறுத்தினர். ஸ்பெயினுக்கு கொலம்பஸ் என்றால் போர்ச்சுகலுக்கு காமா! அமெரிக்கா ‘கண்டுபிடிக்கப்பட்டு’ 500 ஆண்டுகள் கழிந்துவிட்டதை 1992-ம் ஆண்டு ஸ்பெயின் ‘கொண்டாட’ முடிவெடுத்தபோது உலகெங்கிலுமிருந்து எதிர்ப்புகள் வெடித்தன. `கொலம்பஸ் வருவதற்கு முன்பே அமெரிக்கா இருந்தது. அவர் செய்ததெல்லாம் ஏற்கெனவே அங்கு வசித்தவர்களை இனப்படுகொலை செய்தது மட்டும்தான். 10 மில்லியன் பூர்வீகக் குடிகள் கொலம்பஸின் வரவால் கொல்லப்பட்டனர், பாதிக்கப்பட்டனர். இதில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது?’ என்று கோபத்தோடு ஸ்பெயினிடம் திருப்பிக் கேட்டார்கள் எதிர்ப்பாளர்கள்.
இதிலிருந்து பாடம் படித்துக்கொள்ள மறுத்துவிட்டது போர்ச்சுகல். இந்தியாவுக்கான கடல்வழியை காமா கண்டுபிடித்த 500-வது ஆண்டுவிழாவை நாங்களும் கொண்டாடப் போகிறோம் என்று அறிவித்தது. இந்தக் கொண்டாட்டத்தில் இந்தியாவும் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தது. இந்தியா அதை ஒப்புக்கொண்டதுதான் கொடுமை. கொலம்பஸ் விழாவுக்கு எழுந்த அதே எதிர்ப்புகள், காமா விழாவுக்கும் எழுந்ததைக் கண்டு அப்போதைய பிரதமர் ஐ.கே.குஜ்ரால் அவசரமாகப் பின்வாங்கவேண்டியிருந்தது. காமா இந்தியாவில் என்ன செய்தார் அல்லது இந்தியாவை என்ன செய்தார் என்பது தெரிந்திருந்தால், அழைப்பு வந்ததுமே போர்ச்சுகலுக்குத் தன் கண்டங்களைத்தான் தெரிவித்திருக்கும் இந்தியா!
(விரியும்)