
காமாவின் பயண அனுபவங்களையும், பார்வைகளையும் அவரோடு வந்த ஒருவரில் (அவர் பெயர் தெரியவில்லை) பதிவுகள் வாயிலாக அறிந்துகொள்கிறோம்.
வாஸ்கோ ட காமாவுக்கு ஒரு வழக்கம் இருந்தது. கரை ஒதுங்கவேண்டிய இடம் கண்களுக்குத் தெரிந்துவிட்டால் உடனே அங்கே சென்றுவிட மாட்டார். தன் கப்பலிலிருந்து ஓர் ஆளைப் பிடித்து சின்னப் படகில் அனுப்பிவைப்பார். அவர் சென்று, அது என்ன மாதிரியான இடம், அங்கிருப்பவர்கள் எப்படிப்பட்ட ஆட்கள், போர்ச்சுகலிலிருந்து ஒரு கப்பல் நுழைந்தால் அதை வரவேற்பார்களா, எதிர்ப்பார்களா என்பதையெல்லாம் தீர விசாரித்துவிட்டு வருவார். அவர் வரும்வரை காத்திருப்பார்கள். வரவேயில்லையென்றால் அது ஆபத்தான இடம் என்பது தெரிந்துவிடும். கிளம்பிவிடுவார். விசாரிக்கப்போனவர் என்னவானால் அவருக்கு என்ன!
மலபார் கடற்கரை பாதுகாப்பானது என்பதை இவ்வாறு உறுதி செய்துகொண்ட பிறகே இந்தியாவில் காமா தனது கால்களைப் பதித்தார். கோழிக்கோட்டை அப்போது சமுத்திர ராஜா என்பவர் ஆண்டுவந்தார். காமா வந்தபோது அவர் ஊரில் இல்லை. உள்ளூர் பிரமுகர் ஒருவர் பல்லக்கும் பரிவாரமும் அனுப்பி, காமாவை வரவேற்று அழைத்துச் சென்றார். ஒயிலாக அமர்ந்துகொண்டு ஊரை வேடிக்கை பார்த்தபடி காமா சென்றார் என்றால், வேடிக்கை பார்க்கும் அவரை வழிநெடுகிலும் குழுமி நின்று மக்கள் வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர்.

வழியில் ஒரு கோயிலை காமா கண்டிருக்கிறார். பல்லை வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் உருவம், நான்கைந்து கைகளோடு இருக்கும் மனிதர்கள் என்று வித்தியாசமான சுவர் ஓவியங்களைக் கண்டிருக்கிறார். வெற்று உடலின்மீது வெள்ளை நூல் அணிந்திருக்கும் புரோகிதர்களும் காட்சியளித்திருக்கிறார்கள். கழுத்து, மார்பு, நெற்றி என்று பல இடங்களில் வெள்ளை, வெள்ளையாக ஏதோ பூசிக்கொண்டிருக்கும் மனிதர்களையும் வீதிகளில் கண்டிருக்கிறார். இவருக்கு முன்பு இதே காட்சிகளைக் கண்ட பலரும் ‘இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?’ என்று குழம்பியதுண்டு. காமாவின் குழப்பமோ வேறு. ‘இங்குள்ள கிறிஸ்தவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?’ இந்திய கிறிஸ்தவர்கள் ஏன் உடலில் ஏதோ சாயம் பூசிக்கொள்கிறார்கள்... இந்திய கிறிஸ்தவர்கள் ஏன் தேவாலயத்தில் என்னென்னவோ வரைந்து வைத்திருக்கிறார்கள்... இந்திய கிறிஸ்தவர்கள் ஏன் ஆடையணியத் தயங்குகிறார்கள்... நூல் அணியும் வழக்கத்தை எங்கிருந்து கிறிஸ்தவர்கள் கற்றார்கள்?
அவருக்குத் தெரிந்த சமூகவியல் கோட்பாடு ஒன்று. ஒரு மனிதன் கிறிஸ்தவனாகப் பிறக்கிறான் அல்லது முஸ்லிமாக. அவருக்குத் தெரிந்த புவியியல் கோட்பாடு ஒன்று. ஒரு நாடு கிறிஸ்தவ நாடாக இருக்க வேண்டும் அல்லது இஸ்லாமிய நாடாக. அவருக்குத் தெரிந்த மானுடகுலத் தத்துவம் ஒன்று. கிறிஸ்தவம் நல்லது, இஸ்லாம் கெட்டது. முதல் பார்வையிலேயே ‘இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடு’ என்பதை அவர் கண்டுபிடித்துவிட்டார். இறக்கும்வரை தன் முடிவை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.
காமாவின் பயண அனுபவங்களையும், பார்வைகளையும் அவரோடு வந்த ஒருவரில் (அவர் பெயர் தெரியவில்லை) பதிவுகள் வாயிலாக அறிந்துகொள்கிறோம். கோழிக்கோடு மக்களை அவர் பின்வருமாறு விவரிக்கிறார். கறுத்த தோல்கொண்டவர்கள். சிலர் நீண்ட தலைமுடியும் நீண்ட தாடியும் வைத்திருக்கிறார்கள் என்றால், சிலர் கச்சிதமாகக் கத்தரித்து வைத்திருக்கிறார்கள். இன்னும் சிலரோ முழு மொட்டை போட்டுக்கொள்கிறார்கள். காதுகளில் துளையிட்டுக்கொண்டு, துளையில் தங்கத்தை அணிந்துகொள்கிறார்கள். பெண்கள் காண்பதற்கு அசிங்கமாக இருக்கிறார்கள். அவர்கள் உடல் சிறியதாக இருக்கிறது. காது, கழுத்து என்று நிறைய நகைகள் போட்டுக்கொள்கிறார்கள். கால் விரல்களைக்கூட விட்டுவைக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
கோழிக்கோட்டில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார் காமா. வியாபாரம் செய்வதற்கு மன்னரின் அனுமதி தேவை என்பதால் அவரைச் சந்திக்கும் முயற்சிகளில் இறங்கினார். நான் போர்ச்சுகல் மன்னரின் அரசுத் தூதுவர். என் மன்னர் அப்படிப்பட்டவர், இப்படிப்பட்டவர். எங்கள் நாடு அவ்வளவு செழிப்பானது என்று கதைகள் சொல்லி இதோ உங்கள் மன்னருக்கான பரிசுகள் என்று சில மூட்டைகளையும் அரண்மனையில் ஒப்படைத்தார். குறைந்தது ரத்தினக் கம்பள வரவேற்பு கிடைக்கும் என்பது அவர் எதிர்பார்ப்பு. மூட்டைகளைத் திறந்து பார்த்திருக்கிறார்கள் அமைச்சர்கள். கைகழுவும் பாத்திரம், தொப்பி, எண்ணெய் பீப்பாய், சர்க்கரை, தேன் போன்றவை தட்டுப்பட்டிருக்கின்றன. `செழிப்பான தேசத்திலிருந்து நீ கொண்டுவந்த பரிசு மூட்டை இதுதானா?’ என்று விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள். அவமானம் பிய்த்துத் தின்றது காமாவை. பரிகசித்த அமைச்சர்கள் முஸ்லிம்களாக இருந்துவிட்டது அவர் கோபத்தைக் கிளறிவிட்டது.
எப்படியோ சமுத்திர ராஜாவைச் சந்தித்து, `இது என் மன்னரின் பரிசு அல்ல, என் பரிசுதான். அடுத்தமுறை என்னவெல்லாம் கொண்டுவருகிறேன் பாருங்கள்’ என்று குழைந்து அவர் அனுமதியையும் பெற்றுக்கொண்டுவிட்டார். தொடக்கத்தில் உள்ளூர் மக்கள் ஆர்வத்தோடுதான் அவரை வரவற்றிருக்கிறார்கள். அதற்கு முன்பு அவர்கள் பெருமளவில் அராபியர்களோடு மட்டுமே வர்த்தகம் செய்திருக்கிறார்கள் என்பதால், மேற்கிலிருந்து புதிதாக வந்திருக்கும் அந்நியர்மீது அவர்களுக்கு இயல்பாகவே ஆர்வம் உண்டானது. ஆனால் காமா தேவையற்ற அச்சங்களால் அலைக்கழிக்கப்பட்டார். அனுமதி கொடுப்பதுபோல் கொடுத்து சமுத்திர ராஜா நம்மைச் சிறைப்படுத்திவிட்டால் என்ன செய்வது... என்னைப் பரிகசித்த அமைச்சர்கள் மற்ற இஸ்லாமியர்களோடு சேர்ந்துகொண்டு எனக்கு எதிராக ஏதேனும் சதி செய்தால் என்னவாகும்? தவிரவும், சமுத்திர ராஜாவின்மீதும் அவருக்கு ஏகப்பட்ட கடுப்பு. ஒரு கிறிஸ்தவராக இருந்துகொண்டு இந்த மன்னர் ஏன் இஸ்லாமிய அமைச்சர்களோடு இணைந்திருக்கிறார்... ஒரு சக கிறிஸ்தவனாக இருந்தும் ஏன் என்னை அவர்களோடு சேர்ந்து பரிகசிக்கிறார்?
அந்த மன்னர் உண்மையில் ஓர் இந்து. ஆனால் காமாவுக்குத்தான் இந்து மதம் என்றொன்று இருப்பதே தெரியாதே! அவருடைய நடை, உடை, பாவனைகளைப் பார்த்தால் நிச்சயம் இஸ்லாமியர் கிடையாது என்பது தெரிகிறது. இஸ்லாமியர் அல்லாத ஒருவர் கிறிஸ்தவராகத்தானே இருந்தாக வேண்டும்? சமுத்திர ராஜா என்று சொல்ல வாய் வரவில்லை என்பதால் ‘சமோரின்’ என்று அழைத்தார் காமா. அது ஒரு பொதுப்பெயராகவே பின்னர் நிலைத்துவிட்டது. மலபாரில் இருந்தவரை மட்டுமல்ல, அங்கிருந்து கிளம்பி வீடு போய்ச் சேர்ந்த பிறகும்கூட, அவர் தன் நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்தார். இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடு. கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் நாடு. நம்மைப் போன்ற கிறிஸ்தவ மன்னன் ஒருவன்தான் மலபாரை ஆண்டுவருகிறான்.
ஒரு வணிகராக காமா கடைவிரிப்பதற்குள், அங்கிருந்த இஸ்லாமியர்களுக்கு வந்திருப்பது வணிகரல்ல, வரும் வழியில் அரபுக் கப்பல்களைக் கொள்ளையடித்த கடற்கொள்ளையர் என்பது தெரிந்துவிட்டது. எனவே அவரிடம் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் ஒதுங்கியே சென்றனர். அவர்களை மட்டுமல்ல, எவரையும் நம்பத் தயாராக இல்லை காமா. யாரைப் பார்த்தாலும் சந்தேகம், அச்சம், பீதி, வெறுப்பு, பகையுணர்ச்சி. ஒன்றுக்கு இரண்டாக விலைவைத்து சில பண்டங்களை அவருக்கு விற்க வந்தனர் சிலர். வாங்கி வைத்துக்கொண்டார். செம்மண்ணோடு சேர்ந்திருக்கும் இஞ்சியைக்கூட மூட்டையாக வாங்கிக்கொண்டார். மட்டரகமான பட்டை, லவங்கப் பொருள்களுக்கு இரட்டிப்பு விலை சொன்னபோது பதில் பேசாமல் கொடுத்தார். கொல்லம் சென்றார். அங்கே வணிகம் செய்ய முயன்றார். பலனில்லை. இது நம் சந்தையல்லவா... இங்கே ஏன் ஒரு போர்ச்சுகீசியர் மூக்கை நுழைக்க வேண்டும் என்று அரபு வணிகர்கள் கருதினர். அங்கிருந்த இஸ்லாமியர்களும் அவரைப் புறக்கணித்தனர். மலபாரில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார் காமா. அவரால் அவர் நினைத்த விலைக்கு எதையும் வாங்க முடியவில்லை; எதையும் விற்கவும் முடியவில்லை.

13 ஆகஸ்ட், 1498 அன்று காமா விடைபெறுவதற்குத் தயாரானார். விற்பனையாகாத பொருள்களை மலபாரில் இறக்கிவைத்துவிட்டு சில ஆட்களையும் விட்டுச் செல்லலாம் என்று முடிவெடுத்தார் காமா. ஆனால், மன்னரை நம்பத் தயாராக இல்லை அவர். `உங்களை நம்பி என் பண்டங்களையும் ஆட்களையும் நான் விட்டுச் செல்வதுபோல், என்னை நம்பி நீங்கள் சிலரை என்னோடு அனுப்பி வைக்கமுடியுமா?’ என்று மன்னருக்குச் செய்தி அனுப்பினார். `நீ பண்டங்களை விட்டுச் செல்ல வேண்டுமானால், அதற்கு வரி செலுத்த வேண்டும்’ என்று பதில் அனுப்பினார் மன்னர். மன்னருக்கும் காமா மீது நம்பிக்கையில்லை என்பதால் போர்ச்சுகீசியர்களைக் கண்காணிப்பில் வைத்திருக்குமாறு எச்சரித்து வீரர்களை அனுப்பிவைத்தார். `என் அனுமதியின்றி யாரும் காமாவின் கப்பல்களுக்குச் சென்று எந்தப் பொருளும் வாங்கக் கூடாது’ என்றும் உத்தரவிட்டார். அவர் உத்தரவை மீறி சில வணிகர்கள் படகில் சென்று காமாவின் கப்பலை அடைந்தபோது, காமா அவர்களைச் சிறைப் பிடித்துக்கொண்டார்.
மன்னரிடம் இல்லாத வீரர்களா, படைகளா, ஆயுதங்களா? இருந்தாலும் அவர் காமாவிடம் சீற்றம் கொள்ளாததற்குக் காரணம், காமாவின் கப்பல்களில் பொருத்தப்பட்டிருந்த பீரங்கிகள். மன்னருக்கு பீரங்கி பரிச்சயமில்லை என்பதாலும், காமா கொள்ளையடிக்கவும் கொல்லவும் தயங்காதவர் என்று அவர் நம்பியதாலும் பேச்சுவார்த்தைக்கு இறங்கினார். `என்னுடைய வணிகர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு, இங்கிருந்து கிளம்பிப் போ. உன்னையும் உன் கப்பல்களையும் விட்டுவிடுகிறேன்’ என்றார். இருவரும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள். காமா எதைத்தான் மதித்திருக்கிறார்? வீம்புக்குச் சில பண்டங்களை வரியும் செலுத்தாமல் மலபாரில் விட்டுவைத்தார். பணயக் கைதிகளில் சிலரை விடுவிக்காமலேயே தப்பிச் சென்றார். கோழிக்கோட்டில் மன்னரின் 70 கப்பல்கள் காமாவை வழிமறித்துப் போரிட்டன. போர்ச்சுசீகியர்கள் எதிர்த்து போரிட்டனர். அதற்குள் புயல் காற்றும் வீசத் தொடங்கிவிட்டதால் காமா வெற்றிகரமாகத் தப்பிச் சென்றுவிட்டார்.
போர்ச்சுகலில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மலபாரில் வாங்கிய பண்டங்கள் அனைத்தையும் 60 மடங்கு அதிக விலைவைத்து அங்கே விற்றார். ஆனாலும் அவருக்குத் திருப்தியில்லை. இரண்டாம் இந்தியப் பயணத்துக்குத் தயாரானார். இந்த முறை அவர் நோக்கம் ஒன்றுதான். இந்தியாவைப் பழி வாங்க வேண்டும்!
(விரியும்)