
இந்த முறை காமாவின் ஆட்களில் சிலராலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை. கொள்ளையடிக்கலாம், தப்பில்லை. மோதல் என்று வந்துவிட்டால் கொல்லலாம், தப்பில்லை.
இந்தியாவிலிருந்து திரும்பிய வாஸ்கோ ட காமா, முன்பைவிடப் பளபளப்பானவராக மாறிவிட்டதைக் கண்டதும் ஐரோப்பாவெங்கும் இந்தியக் கனவு குபுகுபுவென்று எரிந்து, வளர ஆரம்பித்தது. எல்லோரும் இந்தியாவுடன் வணிக உறவை ஏற்படுத்திக்கொள்ளத் துடித்தார்கள். எல்லோரும் காமா போல் செல்வ வெள்ளத்தில் மிதக்க விரும்பினார்கள். தொடங்கிவைத்த போர்ச்சுகல் சும்மா இருக்குமா? பெட்ரோ காப்ரல் என்பவரின் தலைமையில், 13 கப்பல்களைக் கோழிக்கோட்டுக்குக் கையசைத்து அனுப்பிவைத்தது. கோழிக்கோட்டு ராஜாவோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, அங்கேயே ஓர் ஆலையைத் திறக்க வேண்டும். அப்படியே ஏகபோக வணிக உரிமையையும் பெற்றுவிட வேண்டும் என்பது போர்ச்சுகலின் விருப்பம்.
காப்ரியல் வந்தார்; அனுமதி பெற்றார்; வணிக ஆலையொன்றையும் தொடங்கினார். ஆனால், அரபு வணிகர்களிடமிருந்து எதிர்ப்புகள் வரத் தொடங்கின. எதிர்ப்பு மோதலாக வெடித்தபோது, இரு தரப்பினரும் தாக்கிக்கொள்ளத் தொடங்கினார்கள். உள்ளூர் வணிகர்களுக்கும் வெளியூர் வணிகர்களுக்கும் இடையிலான மோதல், விரைவில் போர்ச்சுகலுக்கும் கோழிக்கோட்டுக்குமான போராக மாறும் அளவுக்கு வளர்ந்து நின்றது. அதன் பிறகு கொச்சிக்குச் சென்று, அங்கிருந்து வெற்றிகரமாக ஊர் போய்ச் சேர்ந்தார்.
காமா, காப்ரியலுக்குப் பிறகு போர்ச்சுகல் மீண்டும் காமாவை அனுப்பிவைத்தது. ஏற்கெனவே இந்தியா எட்டிக்காயாகவே இருந்தது காமாவுக்கு. தன்னுடைய சகா காப்ரியல் அங்கே சந்தித்த சவால்களைக் கேள்விப்பட்டதும், பல மடங்கு ஆத்திரத்தோடு தனது இரண்டாவது பயணத்தைத் தொடங்கினார். அக்டோபர் 1502 -ல் கோழிக்கோட்டை வந்தடைந்தார். ஆனால், கரை சேர்வதில் அவசரம் காட்டவில்லை அவர். அரபுக் கப்பல் ஏதேனும் வருகிறதா என்று அமைதியாகக் காத்திருந்தார். பல தினங்களுக்குப் பிறகு ‘மிரி’ என்னும் பெயர்கொண்ட கப்பலொன்று கண்ணில்பட்டது. மெக்காவிலிருந்து புனித யாத்ரீகர்களைச் சுமந்துவந்த கப்பல் என்று தெரிந்ததும், காமா தன் ஆட்களோடு வழிமறித்து உள்ளே புகுந்தார்.
போர்ச்சுகீசியர்களைக் கண்டதுமே கப்பலிலிருந்த வணிகர்கள் ஆபத்தை உணர்ந்து, காமாவோடு பேச்சுவார்த்தையில் இறங்கினார்கள். `எங்களிடமுள்ள செல்வத்தையெல்லாம் தந்துவிடுகிறோம். எங்களை விட்டுவிடுங்கள்’ என்பதுதான் அவர்கள் கோரிக்கை. காமா முதலில் அவர்களிடமிருந்து விலை மதிப்புமிக்க பொருள்கள் அனைத்தையும் நிதானமாகக் கொள்ளையடித்தார். அடுத்து உணவுப் பொருள்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. இனி ஒன்றும் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்ததும் தன் ஆட்களிடம் திரும்பி, கப்பலைக் கொளுத்துமாறு உத்தரவிட்டார். வெறும் கப்பலை அல்ல, ஆட்களோடு சேர்த்து!

இந்த முறை காமாவின் ஆட்களில் சிலராலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை. கொள்ளையடிக்கலாம், தப்பில்லை. மோதல் என்று வந்துவிட்டால் கொல்லலாம், தப்பில்லை. ஆனால், ஒரு பாவமும் அறியாத மனிதர்கள் அல்லவா இக்கப்பலில் நிறைந்திருக்கிறார்கள்... தீயிட்டுக் கொளுத்தும் அளவுக்கு என்ன அவசியம் நேர்ந்துவிட்டது இப்போது... ஏன் இவ்வளவு வன்மம் காமாவுக்கு? அவர்கள் வாதிட்டுப் பார்த்தார்கள். பலனில்லை. பயணிகள் உள்ளே தள்ளிப் பூட்டப்பட்டனர். கப்பலுக்குத் தீவைக்கப்பட்டது. வெளியில் பாய்ந்தோடி வருபவர்கள் உடனுக்குடன் கொல்லப்பட்டனர்.
`எங்கள் நகைகளை எடுத்துக்கொண்டு எங்களை விட்டுவிடுங்களேன்’ என்று பெண்கள் கதறியிருக்கிறார்கள். `எங்கள் குழந்தைகளிடமாவது கருணை காட்டக் கூடாதா?’ என்று குழந்தைகளைக் கையில் ஏந்தியபடி காமாவிடம் ஓடியிருக்கிறார்கள். காமா ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. அனைத்தையும் நேரில் கண்ட போர்ச்சுகீசியர் ஒருவரின் குறிப்பு இது. ‘மெக்காவிலிருந்து வந்த கப்பலைச் சிறைபிடித்தோம். அதில் 380 ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். அவர்களிடமிருந்து 12,000 ட்யூக்கட்டுகள் (வணிகர்கள் பயன்படுத்திய தங்க, வெள்ளி நாணயங்கள்) பறித்துக்கொண்டோம். ஆயிரக்கணக்கான பொருள்களை எடுத்துக்கொண்டோம். பின்னர் எங்களிடமிருந்த வெடிமருந்தைக்கொண்டு அந்தக் கப்பலையும், அதில் இருந்த அனைவரையும் எரித்தோம்.’ 17 குழந்தைகள் எப்படியோ தப்பிவிட்டனர். அவர்கள் பின்னர் கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றப்பட்டு, போர்ச்சுகலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காமா எவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார் என்னும் செய்தி கோழிக்கோட்டு மன்னரைச் சென்று சேர்ந்துவிட்டது. காமாவின் நோக்கமும் அதுதான். முதன்முறை வந்தபோது இருந்த மன்னர் இறந்துவிட, அவரிடத்தில் இன்னொருவர் அமர்ந்திருந்தார். வெறிகொண்ட விலங்குபோல் பாய்ந்துவரும் போர்ச்சுகீசியரை எதிர்த்து நிற்பது ஆபத்தாக முடியும் என்று கருதிய புதிய மன்னர், அமைதித் தூது அனுப்பினார். இன்னமும் கோழிக்கோட்டுக்கு அருகில்தான் நங்கூரமிட்டுக் காத்திருந்தார் காமா. அவர் மனம் இன்னமும் அமைதிகொள்ளவில்லை என்பதால், அமைதித் தூதை அவர் ஏற்கவில்லை. இரண்டு கோரிக்கைகளை எழுப்பினார். `எனக்கு முன்பு வந்த காப்ரியல், பலத்த இழப்புகளைச் சந்தித்திருக்கிறார். அதற்கு இழப்பீடு வேண்டும். இரண்டாவது, கோழிக்கோட்டில் உள்ள அராபியர்கள் அனைவரையும் உடனடியாக நீங்கள் வெளியேற்ற வேண்டும்.’
மன்னர் அனுப்பிய பதில் இப்படி அமைந்திருந்தது. `நீங்கள் ஏற்கெனவே மிரி கப்பலைக் கொள்ளையடித்துவிட்டீர்கள். ஏற்கெனவே இழந்ததைவிடப் பல மடங்கு அதிகம் அதிலேயே உங்களுக்குக் கிடைத்திருக்கும். தவிரவும், போர்ச்சுகீசியர்களோடு மோதியதில் அதிக இழப்புகளைச் சந்தித்தவர்கள் நாங்கள்தாம். இங்கே ஆயிரக்கணக்கான அராபியர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் வெளியேற்றுவது சாத்தியமில்லை.’
சரி, பார்த்துவிடுவோம் என்று வெறியோடு மீண்டும் வேட்டையாடத் தொடங்கினார் காமா. சிறிய படகுகள் அடுத்தடுத்து சிறைப் பிடிக்கப்பட்டன. 34 படகோட்டிகள் தூக்கிலேற்றப்பட்டனர். பிறகு உடல்களைக் கீழே இறக்கி, தலை, கால், கை என்று தனித்தனியே வெட்டினர். எல்லாவற்றையும் படகில் தூக்கிப்போட்டார்கள். `இதைவிடக் கொடூரமான மரணத்தைச் சந்திக்கத் தயாராகுங்கள்’ என்னும் செய்தியோடு அந்தப் படகு மிதந்துவந்து கரை சேர்ந்தது. சில உடல் பாகங்கள் வெறுமனே கொடிக்கம்பங்களில் கட்டிவிடப்பட்டன. தாமதிக்காமல் குண்டுவீச்சும் தொடங்கியது. காமா முந்தைய பயணத்தில் பீரங்கியைக் கொண்டுவந்தபோதே அச்சத்தோடு கோழிக்கோடு மன்னர் இயன்ற அளவு கடல் பகுதியை ஒட்டித் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தார். பனைமரத்தின் தண்டுகளை நெருக்கமாகப் பிணைத்து தடுப்புவேலிபோல் அரண் அமைக்கப்பட்டிருந்தது. அதையும் மீறிப் பலர் கொல்லப்பட்டனர். கரையெங்கும் சடலங்களும் இடிபாடுகளும் குவிந்த பிறகே போதும் என்று அவருக்குத் தோன்றியது.
கொச்சிக்குச் சென்றார். எதுவுமே நடக்காததுபோல் நறுமணப் பொருள்களை வாங்கிக் கப்பலில் நிறைத்துக்கொண்டார். மன்னருடன் வணிக ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். இனி கப்பலில் இங்கு வந்துதான் எதையும் வாங்கவேண்டும் என்றில்லை. கொச்சியிலிருந்தே பண்டங்கள் போர்ச்சுகலுக்கு அனுப்பிவைக்கப்படும். அடுத்து கண்ணனூரிலிருந்து இஞ்சி ஏற்றிக்கொண்டார். விடைபெறும்போது, மலபார் படைகள் எதிர்கொண்டன. மூர்க்கத்தோடு திருப்பித் தாக்கி, பலரைக் கொன்றார் காமா. மீண்டும் கப்பல்கள் கொளுத்தப்பட்டன. ரத்தத்தில் தொடங்கி ரத்தத்தில் முடிந்தது காமாவின் இரண்டாவது இந்தியப் பயணம்.

16-ம் நூற்றாண்டு இப்படியாகத் தொடங்கியது இந்தியாவுக்கு. காமாவைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல போர்ச்சுசீகிய கப்பல்கள் இந்தியாவை நோக்கி நகர்ந்துவரத் தொடங்கின. மேற்குக் கரையோரம் சின்னச் சின்ன நிலப்பகுதிகளில் போர்ச்சுகீசியக் குடியேற்றங்கள் நிகழ்ந்தன. நல்லவேளையாக அவ்வாறு வந்தவர்கள் காமாபோல் இல்லாமல், வணிகத்தில் மட்டும் கவனம் செலுத்தினார்கள். போர்ச்சுகீசியக் கப்பல்களைப் பின்தொடர்ந்து அலை அலையாகப் பல ஐரோப்பியக் கப்பல்களும் இந்தியாவை வந்தடைந்தன.
அவர்களில் சிலருக்குத் திரும்பிப்போகும் விருப்பமே இல்லை. வணிகம் போக வேறு நோக்கங்களும் அவர்களுக்கு இருந்தன. இந்தியாவின் பிற பகுதிகளை ஆர்வத்தோடு சுற்றிவந்தார்கள். பரந்து விரிந்திருந்த இந்தியா அவர்களை மயக்கியது. மன்னர்களோடு ஒப்பந்தம் போட்டுக்கொள்வது அவர்களுக்கு எளிதாக இருந்தது. வணிகப் பகுதிகளை வளர்த்தெடுக்கத் தொடங்கினார்கள். கட்டுமானங்களில் இறங்கினார்கள். கோட்டைகளையும் தேவாலயங்களையும் உருவாக்க ஆரம்பித்தார்கள். எதிர் காலத்துக்கான முதலீடுகள் இவை என்னும் புரிதல் அவர் களுக்கு இருந்தது. இந்த முதலீடுகளும் அதன் பின்னாலிருந்த நோக்கங்களும் இந்தியாவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உருமாற்ற ஆரம்பித்தன. காமா தொடங்கி வைத்த மாற்றம் இது.
செப்டெம்பர் 1524-ல் மூன்றாம் முறையாக இந்தியாவுக்கு வந்தார் காமா. இந்தமுறை அவர் ஒரு போர்ச்சுகீசிய வைஸ்ராய். அப்போது அவர் வயது 55. இல்லை 66 என்பவர்களும் இருக்கிறார்கள். `நிர்வாகத்தை மாற்றப்போகிறேன், ஆட்களை மாற்றப்போகிறேன், எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தப்போகிறேன்’ என்று சொல்லி பணிகளை ஆரம்பித்தார். மூன்று மாதங்கள்கூட ஆகியிருக்காது. மலேரியா தாக்கி, கொச்சியில் இறந்துபோனார்.
போர்ச்சுகல், ஐரோப்பா, இந்தியா. காமாவின் தாக்கத்தை உணர்ந்த உலகின் மூன்று இடங்கள் இவை. நான்காவதாக ஓரிடத்தைச் சொல்ல வேண்டுமானால், உலகம் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒரு போர்ச்சுகீசியர் அவரை எப்படிக் காண்பாரோ அப்படி ஓர் அராபியரால் அவரைக் காண முடியாது. காமாவை ஐரோப்பா பார்க்கும்விதமும், இந்தியா பார்க்கும்விதமும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. ஒரு மகத்தான வீரராகவும், மாபெரும் கண்டுபிடிப் பாளராகவும் காமாவைக் கருதுபவர்கள் இன்றளவும் இருக்கவே செய்கிறார்கள். அவர் பறித்துக்கொடுத்த கனிகளை இன்றுவரை அவர்கள் சுவைத்துக் கொண்டிருப்பதால் உண்டான மயக்கம் அது!
(விரியும்)