மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 64 - அக்பர் ஏன் இப்படி இருக்கிறார்?

அக்பர்
பிரீமியம் ஸ்டோரி
News
அக்பர்

தன் காலத்து வழக்கப்படி முடியைக் கத்தரித்துக்கொள்வதில்லை அவர். தொப்பிக்கு பதிலாகத் தலைப்பாகைபோல் ஒன்றை அணிகிறார்.

இந்திய வரலாற்றில் அசோகருக்கு அடுத்து அதிகம் கொண்டாடப்படும் ஓர் அரசராக அக்பர் திகழ்கிறார். தாமரைபோல் விரிந்திருந்த அவர் மனமே அதற்குக் காரணம். மாற்றுச் சமயங்களோடு, மாற்று நம்பிக்கைகளோடு, மாற்றுப் பண்பாடுகளோடு ஆர்வத்தோடு அவர் உரையாடினார். எல்லோரிடமிருந்தும் எல்லாவற்றிடமிருந்தும் கற்றுக்கொண்டார். அறிவும் அதிகாரமும் தன் கண்களை மறைக்காமல் இருக்க இயன்றவரை பாடுபட்டார். மதங்கள் மனிதர்களைப் பிரிக்கக் கூடாது, இணைக்க வேண்டும் என்று கனவு கண்டார். போர்ச்சுகலிலிருந்து கத்தோலிக்க பாதிரியார் அன்டோனியோ மான்செரெட், அக்பரின் அரசவைக்கு வருகை தந்தபோது அவரை வரவேற்று சில ஆண்டுகள் விருந்தினராகத் தங்கவைத்தார். அக்பர் குறித்து அந்தப் பாதிரியார் எழுதிவைத்த குறிப்புகளிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.

`நாங்கள் சென்று சந்தித்தபோது, அக்பரின் வயது 38. முன்பின் தெரியாதவர்கள்கூட அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் ஓர் அரசராகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். அகன்ற தோள்பட்டை, குதிரையோட்டத்துக்கு ஏற்ற உறுதியான கால்கள், மெலிதான பழுப்பு நிறத் தோல். தன் தலையை வலதுபக்கத் தோள் பக்கமாகக் கொஞ்சம் சாய்த்தவாறு இருப்பார். விரிந்த நெற்றி. சூரிய வெளிச்சம்பட்டு கடல் தகதகவென்று மின்னுவதைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அப்படியொரு மினுமினுப்பை அவர் கண்களில் தரிசிக்கலாம். மெலிதான புருவங்கள். நேரான, சிறிய மூக்கு. மூக்கு துவாரங்கள் நன்றாகத் திறந்திருக்கும். இடது பக்க மூக்குக்கும் மேலுதடுக்கும் நடுவில் ஒரு சிறிய மச்சத்தைக் காணலாம்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 64 - அக்பர் ஏன் இப்படி இருக்கிறார்?

தன் காலத்து வழக்கப்படி முடியைக் கத்தரித்துக்கொள்வதில்லை அவர். தொப்பிக்கு பதிலாகத் தலைப்பாகைபோல் ஒன்றை அணிகிறார். அதற்குள் தலைமுடியைச் சுருட்டி வைத்துக்கொள்கிறார். இந்தியர்களுக்கு இப்படி அணிவதுதான் பிடித்திருக்கிறது, இதுதான் அவர்கள் வழக்கம் என்பதால், அவரும் தலைப்பாகை அணிகிறாராம். தாடியை மழித்துக்கொள்கிறார். மீசைவைத்திருக்கிறார். தாடி இல்லாததால் துருக்கிய இளைஞன் போன்ற தோற்றமே இருக்கிறது. நடக்கும்போது இடதுகாலைக் கொஞ்சம் நொண்டி நடப்பதுபோல் இருக்கிறது. ஆனால், அந்தக் காலில் காயம் எதுவும் இல்லை. பருத்தும் இல்லை, மெலிந்தும் இல்லை; உறுதியான உடல் அவருடையது. அவர் சிரிக்கும்போது முகமே கோணலாக மாறிவிடும். அவர் கோபம் கொண்டால் அந்தக் கோபத்தில் ஒரு கம்பீரம் இருக்கும். தன்னை நாடி வருபவர்களோடு அவர் எந்த அளவுக்கு இயல்பாகப் பழகுவார் என்பதை விவரித்தால், அது ஏதோ மிகைபோல் தோன்றக்கூடும். சாமானியர் தொடங்கி பிரமுகர் வரை எவரோடும் இனிமையாகப் பேசக்கூடியவர்.

வேட்டையாடுவது அக்பருக்குப் பிடிக்கும். யானைச் சண்டை, காளைச் சண்டை, கோழிச் சண்டை போன்ற விளையாட்டுகளை ரசிப்பார். வித்தியாசமான பறவையைக் கண்டால் ஆர்வம் கொள்வார். வித்தியாசமாக எது இருந்தாலும் பிடிக்கும். சிலசமயம் அவரைப் பார்க்கும்போது ஓய்வில் இருப்பதுபோல் தோன்றும். தோற்றப்பிழை. பொறுப்புகளைத் தலையிலிருந்து அவர் இறக்கிவைப்பதே இல்லை.

ஆடை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்கக் கூடாது, காலணி இப்படி அணியலாம், அப்படி அணியக் கூடாது என்றெல்லாம் முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலவும் கட்டுப்பாடுகளை அவர் பொருட்படுத்துவதில்லை. தனக்குப் பிடித்ததை அணிந்துகொள்கிறார். ஐரோப்பிய வாள், கேடயம் அவருக்குப் பிடிக்கும். அவரைச் சுற்றி 20 பாதுகாவலர்கள் எப்போதும் இருக்கிறார்கள். அவரும் எப்போதும் ஆயுதம் தரித்திருக்கிறார்.

அவர் அரண்மனை அழகானது. பாதுகாப்பானது. பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டது. அக்பருக்குக் கட்டடக்கலை தெரியும் என்பதால், சிலசமயம் அவரும் தொழிலாளர்களோடு இணைந்து பணியாற்றுவார். உள்ளே நிறைய புறாக்கள் வளர்க்கிறார். சீட்டி ஒலி எழுப்பினால் புறாக்கள் படபடவென்று சத்தமெழுப்பியபடி பறந்து, (நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள்) சொல்லிவைத்தாற்போல் ஒரே மாதிரி காற்றில் தலைகீழாகத் திரும்பி, அழகாக நடனமாடி நம்மையெல்லாம் மகிழ்வித்துவிட்டு ஒன்றுபோல் பறந்துவந்து என் வேலை முடிந்தது என்று அமர்ந்துகொள்ளும்.

படித்தவர்களையும் சான்றோர்களையும் எப்போதும் அருகில் வைத்துக்கொள்கிறார். அவர் தேவைக்கு ஏற்ப தத்துவம், சமயம், ஆன்மிகம் என்று பலவற்றை அவர்கள் விவரிக்கிறார்கள். பண்டைய மன்னர்கள் பற்றியும் அவர்களுடைய புகழ்மிக்கச் செயல்பாடுகள் பற்றியும் சொல்லச் சொல்லிக் கேட்பார். அமைதியாக அமர்ந்து எல்லாவற்றையும் கேட்டுக்கொள்வார். எல்லாவற்றையும் அப்படியே கிரகித்துக்கொண்டுவிடுவார். எது சரி, எது தப்பு என்பதை விரைவில் கண்டுபிடித்துவிடுவார். நல்ல நினைவுத்திறன். அவரால் எழுதவோ, படிக்கவோ முடியாது. ஆனால், அப்படியொரு குறை அவரிடம் இருப்பதுபோலவே காட்டிக்கொள்ள மாட்டார். யார், எதை, எங்கே கேட்டாலும் தன் கருத்தைத் தெளிவாகவும் அழகாகவும் அவர் எடுத்துவைக்கும் விதத்தைக் காணும் எவரும் இவர்தான் எவ்வளவு கற்றிருக்கிறார் என்று தன்னை மறந்து வியப்பார்கள்!

நாட்டை நிர்வகிக்கவும், அரண்மனையை நிர்வகிக்கவும் தகுந்த ஆட்களை நியமித்திருக்கிறார். இருபது இந்துக்கள் தலைமைப் பொறுப்புகள் வகிக்கிறார்கள். இவர்களில் சிலர் அக்பருக்கு ஆலோசனைகளும் வழங்குவார்கள். இன்னும் சிலர் அக்பரின் குழந்தைகளுக்கு வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். இந்த இந்துக்கள் அக்பருக்கு உண்மையானவர்களாக நடந்துகொள்கிறார்கள். அக்பர் அவர்களை மிகுந்த நம்பிக்கையோடு எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்கிறார். தன் குழந்தைகளுக்கு எழுதவும் படிக்கவும் தெரிய வேண்டுமென்பதில் அக்பர் தெளிவோடு இருக்கிறார். வீர விளையாட்டுகளிலும் அவர்களை ஈடுபடுத்துகிறார். போர்ப்பயிற்சி அளிக்கச் சிறந்த ஆசிரியர்களை நியமித்திருக்கிறார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 64 - அக்பர் ஏன் இப்படி இருக்கிறார்?

ஒரு முடிவு எடுப்பது குறித்துத் தன் ஆலோசகர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே கருத்து சேகரிக்கிறார். எல்லோருடைய கருத்தும் எதில் ஒத்துப்போகிறது, எதில் மாறுபடுகிறது என்று அலசி அதன் அடிப்படையில் ஒரு முடிவை எடுப்பார். பல சமயங்களில் அவர் முன்கூட்டியே ஒரு முடிவை எடுத்திருப்பார். ஆனால் அதை வெளிப்படுத்தாமல், நீங்கள் என்ன சொல்கிறீர்கள், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ஒவ்வொருவரிடமும் கேட்பார். அவர்களும் அவர் முடிவையே பிரதிபலித்தால், உடனே முடிவெடுத்து உத்தரவு போட்டுவிடுவார். யாரேனும் முரண்பட்டால், என்ன ஏது என்று விசாரித்து, தேவைப்பட்டால் தன் முடிவை மாற்றியமைக்கவும் தயங்க மாட்டார்.

அரசரின் அலுவல் பணிகளை கவனித்து, குறிப்புகள் எழுதுவதற்கு எழுத்தர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர் எடுக்கும் முடிவுகள், அவர் போடும் உத்தரவுகள், அவருடைய வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தையும் இவர்கள் எழுதிவைப்பார்கள். எங்கே அக்பரின் வாயிலிருந்து வரும் சொல் கீழே தவறி விழுந்துவிடுமோ என்பதுபோல் அவரையே உன்னிப்பாக கவனித்து, அவர் பேசத் தொடங்கியவுடன் எழுத ஆரம்பித்துவிடுவார்கள். அவர் பேசும் வேகத்துக்கு இவர்கள் கரங்கள் ஈடுகொடுக்கும். அக்பரின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லையும் இப்படி எழுதி வைப்பதன் மூலம் அப்படி என்ன நன்மை ஏற்பட்டுவிடும் என்றுதான் எனக்குத் தெரியவில்லை.

அந்நிய நாடுகளிலிருந்து வருபவர்களை வழக்கத்தைக் காட்டிலும் கூடுதல் பரிவோடு உபசரிக்கிறார். அயல்நாட்டுத் தூதுவர்களை, தஞ்சம் தேடி வரும் பக்கத்து நாட்டு இளவரசர்களைக் கரிசனத்தோடு வரவேற்று வசதிகள் செய்து கொடுக்கிறார். அவர்களிடமிருந்து அவர் எதிர்பார்ப்பது ஒன்றை மட்டுமே. இங்கிருக்கும் வரை, எங்கள் நாணயங்களைத்தான் பயன்படுத்த வேண்டும். எங்கள் அளவுகளையும் எடைகளையும்தான் கணக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

அத்தை குல்பதான் பேகம் (பாபரின் மகள்) மீது அக்பருக்கு பாசம் அதிகம். ஒருமுறை மெக்காவிலிருந்து அத்தை திரும்பி வரும்போது வீதியெங்கும் பட்டுத் துணி விரித்து வரவேற்றார். தானே நேரில் சென்று அவரை மாளிகைக்கு அழைத்து வந்தார்.

பிறப்பால் தாழ்ந்த ஒருவர் திறமையானவராக இருந்து, அக்பரின் பார்வையில் விழுந்துவிட்டால் படிப்படியாக அவர் நல்ல நிலைமைக்கு வந்துவிடலாம். தவறிழைப்பவர்கள் துரத்தப்படுவார்கள். சில பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். முக்கிய அதிகாரிகள் தொடர்ச்சியாகப் பணியாற்றுவார்கள். பலருக்கு வசதியான அலுவலக அறைகள் அமைத்துக் கொடுத்திருக்கிறார். தந்தையை இழந்த குழந்தைகள் பலருக்குக் கல்வி வழங்கியிருக்கிறார்.

வணிகம், ஏற்றுமதி, இறக்குமதி எல்லாம் நல்லபடியாக இருக்கின்றன. வரி வசூலும் நன்றாகவே நடக்கிறது. விளைச்சல் அமோகமாக இருக்கிறது. நாட்டிலுள்ள பெரிய மனிதர்கள் குவித்துவைத்திருக்கும் அளவற்ற செல்வத்துக்குத் தனியே வரி வசூலிக்கிறார். செல்வந்தர்கள் இறந்துபோனால் அவர்கள் சேகரிப்பு அரசருக்கே வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்தும் செல்வம் கிடைக்கிறது. பரிசுகள் அவரைத் தேடிவருகின்றன. எல்லாம் போக, அக்பரே பலவிதமான வணிகங்களில் நேரடியாக ஈடுபட்டு பெரும் லாபம் ஈட்டுகிறார். வருமானம் வரும் எந்த வாய்ப்பையும் அவர் நழுவவிடுவதில்லை.

அரசருக்குத் தெரியாமல் யாரும் நாட்டில் குதிரை வாங்கவோ, விற்கவோ முடியாது. குதிரை ஏலம் அடிக்கடி நடக்கும். அக்பரும் கலந்துகொள்வார். நல்ல குதிரை விலைக்கு வந்தால், அவரே வாங்கிக்கொள்வார். பல குதிரைகளைச் சேர்ந்தாற்போல் வாங்குவதும் உண்டு. அரசர் என்பதால் அடாவடியாகப் பிடுங்கிக்கொள்கிறார் என்று யாரும் கருதிவிடக் கூடாது என்பதற்காக அதிக பணம் கொடுத்தே அவர் கொள்முதல் செய்வது வழக்கம். ஏலம் விடுபவர் அக்பர் கொடுக்கும் பணத்தை மக்கள் முன்னால் காண்பித்து, அவர்கள் முன்னால் எண்ணி, கணக்கு சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

அக்பர்மீது மக்களில் சிலருக்கு வருத்தமும் இருக்கிறது. இந்த அளவுக்கு நம் மன்னர் மற்ற மதத்தினரோடு ஒன்று கலந்து பழகவேண்டுமா... இந்த அளவுக்குத் தாராளமாக எல்லோருக்கும் இடம் அளிக்கவேண்டுமா... அவர் ஏன் இப்படி இருக்கிறார்? ‘ஏனென்றால் அவர் அக்பர்’ என்பதைவிட வேறு என்ன பதிலை இவர்களுக்குச் சொல்வது?’

(விரியும்)