
டெவர்னியரையும் தாஜ் கவர்ந்துவிட்டது. `நானும் பல இடங்களுக்குச் சென்றுவிட்டேன்
முகலாயர்கள் குறித்து எழுதியவர்களில், இரண்டு பிரெஞ்சுப் பயணிகள் முக்கியமானவர்கள். முதலாமவர், பிரான்சுவா பெர்னியர். 15 வயதில் பாரிஸில் கல்லூரிப் படிப்புக்காகச் சென்றவர் ஒரு தத்துவவாதியால் ஈர்க்கப்பட்டு அவர் உதவியாளராகச் சேர்ந்தார். அவர் மூலமாகத் தத்துவம் அறிமுகமானது. `மூன்று மாதங்களில் மருத்துவராக வேண்டுமா? எங்களிடம் வாருங்கள்’ என்று ஒரு புகழ்பெற்ற பிரெஞ்சு கல்லூரி வெளியிட்ட அறிவிப்பால் ஈர்க்கப்பட்டு இணைந்துகொண்டார். மூன்று மாதங்களில் மருத்துவர் சான்றிதழ் வந்துவிட்டது. ஒரே ஒரு நிபந்தனைதான். பிரான்ஸ் தவிர எங்கு வேண்டுமானாலும் சிகிச்சை அளிக்கலாம்! அங்கிருந்து கிளம்பியவர், பாலஸ்தீனம், எகிப்து, அரேபியா, எத்தியோப்பியா என்று சுற்றிவிட்டு, 1658-ம் ஆண்டு சூரத் வந்தடைந்தார்.
இரண்டாவது பிரெஞ்சுக்காரர், ழான் படிஸ்ட் டெவர்னியர். நகை வியாபாரி. செல்வமும் செல்வாக்கும்மிக்கவர். பாரசீகத்துக்கும் இந்தியாவுக்கும் ஆறு முறை பயணம் மேற்கொண்டவர். மன்னர்களோடும் பெரும் புள்ளிகளோடும் புழங்கியவர். தந்தை, சகோதரர் இருவரும் வரைபடம் தயாரிப்பதில் வல்லுநர்கள் என்பதால் அத்திறமையை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டவர் டெவர்னியர். அரிய வகை 116 காரட் வைரத்தைக் கண்டுபிடித்ததற்காகவும், பதினான்காம் லூயிக்கு அதை விற்பனை செய்தததற்காகவும் புகழ்பெற்றவர்.

பெர்னியர், டெவர்னியர் இருவரும் ஒரே காலகட்டத்தில் இந்தியாவில் பயணம் செய்தவர்கள். டெவர்னியரைவிட 20 ஆண்டுகள் சிறியவர் பெர்னியர். இருவரும் சந்தித்துக்கொண்டது ஆக்ராவில். அந்தச் சந்திப்பை பெர்னியர் பதிவுசெய்திருக்கிறார். பெர்னியருக்கு தாஜ்மஹால் என்றால் உயிர். ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜின்மீது கொண்ட காதலின் வெளிப்பாடுதான் தாஜ்மஹால் என்பதை அறிந்துகொண்ட நாள்முதல் தாஜ் மீதான இவர் காதல் பலமடங்கு அதிகரித்துவிட்டது. ஒவ்வொருமுறை அதைப் பார்க்கும்போதும், மெய்மறந்துவிடுவார். `இதைவிட பிரமாண்டமான ஒன்றை, இதைவிட மயக்கவைக்கும் ஒன்றை இந்த உலகில் நான் கண்டதில்லை’ என்கிறார் பெர்னியர். `எகிப்து பிரமிடுகளை ஆகா ஓகோ என்று எல்லோரும் புகழ்கிறார்கள். உலக அற்புதங்களில் ஒன்று என்னும் பெயரையும் அது பெற்றுவிட்டது. சரி என்று நானும் போய் பார்த்தேன். ஒரு முறையல்ல, இரு முறை. ஏதோ பெரிதாகக் குவிந்திருப்பதுபோல் ஒரு தோற்றம். மற்றபடி அதில் என்ன இருக்கிறது? எந்த வகையிலும் பிரமிடுகள் என்னைத் திருப்திப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. இதோ, இந்த தாஜ்மஹாலைப் பாருங்கள்! அடடா! இதுவல்லவா உலக அதிசயம்!’
டெவர்னியரைப் பார்த்ததும் பெர்னியர் தன் உணர்வுகளை மறைத்துக்கொண்டு, `அது சரி, இந்தியா வந்திருக்கிறீர்களே, இந்த தாஜ்மஹாலைப் பார்த்தீர்களா... அது எப்படி இருக்கிறது?’ என்று ஒன்றும் தெரியாததுபோல் விசாரித்திருக்கிறார். அப்படி விசாரித்ததற்கான காரணத்தையும் பெர்னியர் எழுதிவைத்திருக்கிறார். `நான் இந்தியா வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்கு ஏனோ தாஜ் ரொம்பவும் நெருக்கமாகிவிட்டது. ஒருவேளை இந்தியாவிலேயே இருந்துவிட்டதால் இப்படியெல்லாம் எனக்குத் தோன்றுகிறதோ! இந்தியா என் கலை ரசனையைப் பாதித்துவிட்டதோ! ஒரு பிரெஞ்சுக்காரனாக, ஐரோப்பியனாகப் பார்ப்பதற்கு பதில் ஓர் இந்தியனைப்போல் நானும் தாஜைப் பார்த்து மயங்கிவிட்டேனோ! இந்த டெவர்னியர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!’
டெவர்னியரையும் தாஜ் கவர்ந்துவிட்டது. `நானும் பல இடங்களுக்குச் சென்றுவிட்டேன். இப்படியோர் அதிசயத்தை எங்கும் கண்டதில்லை’ என்று சொல்லியிருக்கிறார் அவர். பெர்னியருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. `அப்படியானால், தாஜ் நிஜமாகவே அழகானதுதான். நல்லவேளை, நான் இன்னமும் ஐரோப்பியனாகவே இருக்கிறேன்!’
பெர்னியர் மொத்தம் 12 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்தார். பிரான்ஸில் சாமானியர்களுக்கே மருத்துவராக இருக்க முடியாதவர், இங்கே ஷாஜகானின் மூத்த மகன் தாரா ஷுகோவின் பிரத்தியேக மருத்துவராக நியமிக்கப்பட்டார். தாரா ஷுகோவுக்கு அவருடைய சகோதரர் ஔரங்கசீப்பால் நேர்ந்த முடிவை பெர்னியரின் குறிப்புகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இஸ்லாத்தின்மீது ஔரங்கசீப் கொண்டிருந்த பற்றும் பிடிப்பும் தாராவிடம் இருந்ததுபோல் தெரியவில்லை. தத்துவம், இறையியல், சூஃபியிசம் போன்றவற்றில் ஆர்வமிக்கவராக இருந்திருக்கிறார் தாரா. கலைகளிலும் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது.
1657-ம் ஆண்டு ஷாஜகான் நோயுற்றதைத் தொடர்ந்து, அவருடைய நான்கு மகன்களுக்கு இடையில் வாரிசுப் போட்டி மூண்டது. தந்தையைச் சிறைப்படுத்தி, ஆட்சியைக் கைப்பற்றி, மூன்று சகோதரர்களையும் வேட்டையாடத் தொடங்கினார் ஔரங்கசீப். மூவரில் நிஜப்போட்டி தாராவோடுதான். ஔரங்கசீப்பை முறியடிக்க முயன்று, முடியாமல் போகவே தப்பிச்சென்றார் தாரா. மூன்று மாதங்கள் விடாமல் இடம்விட்டு இடம் ஓடிய தாரா, இறுதியில் ஆப்கன் மன்னரிடம் அடைக்கலம் புகுந்தார். முன்பொருமுறை ஔரங்கசீப்பிடமிருந்து அந்த மன்னரை தாராதான் காப்பாற்றினார் என்பதால், தனக்கு அவர் நன்றிக்கடன் பட்டவர் என்று நினைத்தார் தாரா. ஆனால், ஔரங்கசீப்பைப் பகைத்துக்கொள்ள விரும்பாத அந்த மன்னர், தாராவைச் சிறைப்படுத்தி ஔரங்கசீப்பிடமே அனுப்பிவைத்தார்.
தாராவும், அவர் 14 வயது மகன் ஷிகிர் ஷுகோவும் பிச்சைக்காரர்கள்போல் கிழிந்த உடையுடன் யானைமீது அமரவைக்கப்பட்டு டெல்லியில் ஊர்வலமாக இழுத்துவரப்பட்டதை பெர்னியர் கண்டிருக்கிறார். ஊரே வெளியில் வந்து நின்று பரிதாபப்பட்டிருக்கிறது. சுட்டெரிக்கும் வெயில். இருவரும் உடல் வெந்து துடித்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் உருவிய வாளோடு ஒரு வீரன் நடந்து வந்துகொண்டிருந்தான். தாராவும் அவர் மகனும் தப்பிச்செல்ல முயன்றால் தாமதிக்காமல் அவர்கள் தலையைச் சீவ வேண்டும் என்பது அந்த வீரனுக்கு இடப்பட்டிருந்த உத்தரவு. மிகச் சரியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இதே தாரா, சில தளபதிகளுக்கு தண்டனை அளிக்கும் வகையில் இதே வீதிகளில், இதேபோல் அவமானப்படுத்தி இழுத்துவந்ததை டெல்லிவாசிகள் மறந்திருக்க மாட்டார்கள். இருந்தாலும் தாராவுக்கும் இதேநிலை ஏற்படும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. `ஔரங்கசீப்பின் தண்டனையை அவர்கள் ரசிக்கவில்லை’ என்கிறார் பெர்னியர். மறுநாள் தாராவின் தலை துண்டிக்கப்பட்டது.

ஔரங்கசீப் பற்றி நிலவும் பொது பிம்பத்தை உடைக்கவும் பெர்னியரின் பதிவு உதவுகிறது. அக்பரின் ஆட்சியில் உயர் பதவியிலிருந்த முகலாய அதிகாரிகளில் இந்துக்களின் பங்கு 22.5%. ஷாஜஹானின் ஆட்சியில் இது கூடவும் இல்லை, குறையவும் இல்லை. ஔரங்கசீப்பும் ஆரம்பத்தில் இந்தச் சதவிகிதத்தை மாற்றவில்லை. ஆட்சிக்கு வந்து இருபதாண்டுகள் கழிந்து, அதிக இந்துக்களை அவர் இணைத்துக்கொள்ளத் தொடங்கினார். வெகு விரைவில் மொத்த அதிகாரிகளில் இந்துக்கள் 50% வரை உயர்ந்தனர். உயர் பதவிகளிலும் 30 சதவிகிதம் தாண்டிச் சென்றனர். அவர்களில் ஒருவர் ராஜா ரகுநாதா. ஷாஜஹானின் நிதியமைச்சராக இருந்தவர், ஔரங்கசீப்புக்கு நெருக்கமான அதிகாரிகளுள் ஒருவராக மாறினார். அவருடைய செயல்பாடு களால் கவரப்பட்ட ஔரங்கசீப், முதன்மை நிதியமைச்சர் (திவானி) என்னும் பொறுப்பை ராஜா ரகுநாதாவுக்கு அளித்தார். ரகுநாதாவாக இருந்தவருக்கு `ராஜா’ என்னும் பட்டத்தை அளித்தவரும் ஔரங்கசீப்தான். முகலாய கஜானாவைத் திறமையாகவும் சிறப்பாகவும் நிர்வகித்தவராக இவர் அறியப்படுகிறார்.
இது பல மட்டங்களில் புகைச்சலைக் கிளப்பியிருப்பதை பெர்னியர் கண்டிருக்கிறார். `இஸ்லாத்தை உயிர்மூச்சாகக் கருதி உயர்த்திப் பிடிக்கும் நம் மன்னர், எதற்காக ஓர் இந்துவை இப்படித் தேவையில்லாமல் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டும்?’ என்று அவர்கள் புலம்பியிருக்கிறார்கள். `முகலாயப் பேரரசைத் தலைமை தாங்கி நடத்துபவர் ஔரங்கசீப்பா, ராஜா ரகுநாதாவா என்று குழம்பும் அளவுக்கு அவர் புகழ்பெற்றவராக இருந்தார்’ என்கிறார் பெர்னியர். ஒருமுறை ஔரங்கசீப் காஷ்மீருக்குச் சுற்றுலா சென்றபோது, ரகுநாதாவையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். என்ன, ஏது என்று தெரியவில்லை. திடீரென்று அங்கே மரணமடைந்துவிட்டார் ரகுநாதா. ஔரங்கசீப்பால் இந்த இழப்பை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லையாம். உயிரோடு இருந்தவரை எல்லா முக்கியத் தருணங்களிலும் ரகுநாதாவை நினைவுகூர்ந்துகொண்டே இருந்திருக்கிறார் ஔரங்கசீப். ஔரங்கசீப் ஓர் இந்து விரோதி என்று நினைப்பவர்கள், பெர்னியரின் குறிப்புகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளும்போது தங்கள் முடிவை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
மதுவை அனுமதிப்பதா, வேண்டாமா என்னும் குழப்பத்தில் முகலாயர்களும் அன்று தடுமாறியிருக்கிறார்கள். மது ஒரே சமயத்தில் செல்வாக்குமிக்க பானமாகவும், இஸ்லாத்துக்கு விரோதமான பானமாகவும் இருந்ததால் நேர்ந்த தடுமாற்றம் அது. ஜஹாங்கீர் ஒரு குடிகாரர். ஆனாலும் ஓர் இஸ்லாமிய ஆட்சியாளராகத் தன்னைக் காட்டிக்கொள்வதற்காக மதுவுக்கு அவர் தடைவிதித்தார். அவருக்குப் பிறகு வந்த ஒவ்வொரு முகலாயரும் மதுவை எதிர்த்திருக்கிறார்கள், மதுவுக்குத் தடை விதித்திருக்கிறார்கள். அடிக்கடி தடை விதித்திருப்பதைப் பார்க்கும்போது எந்தவொரு தடையும் மக்களிடையே செல்லுபடியாகவில்லை என்பதையே உணர முடிகிறது.
ஔரங்கசீப்பும் தன் பங்குக்கு விழி பிதுங்கியிருப்பதை பெர்னியரின் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. `எல்லோரையும்விடத் தீவிர மதப்பற்றாளரான அவர், திராட்சைப் பழரசம் தொடங்கி எல்லாவிதமான மதுபானங்களுக்கும் தடைவிதித்திருக்கிறார். விதித்துவிட்டுத் திண்டாடியிருக்கிறார்’ என்கிறார் பெர்னியர். ஔரங்கசீப் தனிப்பட்ட முறையில் மது அருந்துவதில்லை. `என்னைப் பார்த்தும் என்னோடு இருப்பவர்கள் ஏன் திருந்த மாட்டேன் என்கிறார்கள்... அப்படி அதில் என்ன இருக்கிறது என்று எல்லோரும் அடிமையாகிக் கிடக்கிறார்கள்?’ என்று குழம்பியிருக்கிறார் ஔரங்கசீப். மது விற்பனையைத் தடுக்க அவர் வில்லாக வளைத்திருக்கிறார். பலனில்லை. அவர் ஆட்சியில் படுதோல்வியடைந்த திட்டங்களில் முதலிடத்தை மது பெற்றுவிட்டது!
(விரியும்)