
வெயில் காலங்களில் தில்லிச் சந்தையில் பழங்கள் கொட்டிக்கிடப்பதைப் பார்க்க வேண்டுமே! நீங்கள் அங்கே, இங்கே என்று எந்த நாட்டுக்கும் போக வேண்டாம்
தாஜ்மஹாலில் ஆரம்பித்த பெர்னியரின் காதல், விரைவில் ஒட்டுமொத்த தில்லிக்கும் பரவிவிடுவதைப் பார்க்கிறோம். `தில்லியெல்லாம் ஓர் இடமா... அங்குள்ள கட்டடங்களெல்லாம் ரசிக்கும்படியாகவா இருக்கின்றன?’ என்று முகம் சுளித்த ஐரோப்பியர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கிறார் பெர்னியர்.
`மேற்குலகோடு ஒப்பிட்டால், இந்தியக் கட்டடக்கலை ஒன்றுமே இல்லை என்று சொல்பவர்கள் ஓர் அடிப்படை உண்மையை மறந்துவிடுகிறார்கள். எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் கட்டடங்களை உருவாக்கிவிட முடியாது. சூழல்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. பாரிஸிலும், லண்டனிலும் ஆம்ஸ்டர்டாமிலும் இருப்பதைப் போன்ற ஒரு கட்டுமானத்தை தில்லியில் உருவாக்க முடியாது. இங்குள்ள வானிலைக்கு ஏற்பதான் இங்குள்ள கட்டடங்கள் அமையும். உங்களுக்கு அது அழகு என்றால் இங்குள்ளவர்களுக்கு இதுதான் அழகு’ என்று வாதிடுகிறார் பெர்னியர்.

`தாஜ்மஹால் போன்ற பெரிய கட்டடங்கள் மட்டுமல்ல, மக்களின் சாதாரண வீடுகள்கூட தில்லிக்கு ஏற்ற முறையில் கட்டப்பட்டிருக்கின்றன. இங்குள்ள சூட்டைத் தணிக்கும் வகையில், காற்று வந்து போகும்படி கதவுகளும் ஜன்னல்களும் பொருத்தி இங்கு வீடு கட்டுகிறார்கள். மேற்குலகம் வியக்கும்படியான கட்டடங்களை தில்லி மக்கள் சிரமப்பட்டு உருவாக்கவேண்டிய கட்டாயம் இல்லை. உங்களுக்குப் பிடிக்காவிட்டால் பரவாயில்லை’ என்கிறார் பெர்னியர். ஜும்மா மஸ்ஜித் தொடங்கி தெருவோரத்து வீடு வரைக்கும் எல்லாவற்றையும் விரிவாக வர்ணிக்கிறார்.
`மக்கள்தொகையை எடுத்துக்கொண்டால் டெல்லியும் பாரிஸும் கிட்டத்தட்ட ஒன்றுதான்’ என்கிறார் பெர்னியர். `குறைந்தது 25,000 வீரர்கள் குடும்பம், குழந்தை, குட்டிகளோடு இங்கே வசிக்கிறார்கள். பழைய முகலாய நகரமான ஆக்ரா போன்ற ஒரு நகரமல்ல தில்லி. வீதிகள் பல இடங்களில் ஒன்றுபோல் அமைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொன்றும் பார்க்க அகலமாக இருக்கின்றன. மக்கள் நெரிசல் அதிகம். வண்டிகள் எப்போதும் பறந்துகொண்டிருக்கின்றன. குதிரையிலும் யானையிலும் அமர்ந்தபடி மன்னர் உலா வருவதைக் காணலாம். சில சமயம் மனிதர்கள் மீதும் மன்னர் ஏறி அமர்ந்துகொண்டு வருகிறார். மன்னரைத் தோளில் வைத்துத் தூக்கிச் செல்லும் ஒவ்வொருவரும் ஆறடி உயரத்தில் இருக்கிறார்கள். வாயில் எதையோ போட்டு மென்றபடி நடக்கிறார்கள். வாயெல்லாம் சிவந்திருக்கிறது.’ பெர்னியர் இங்கே குறிப்பிடுவது பல்லக்கை.
`வெயில் காலங்களில் தில்லிச் சந்தையில் பழங்கள் கொட்டிக்கிடப்பதைப் பார்க்க வேண்டுமே! நீங்கள் அங்கே, இங்கே என்று எந்த நாட்டுக்கும் போக வேண்டாம். எல்லா நாட்டுப் பழங்களும் தில்லியைத் தேடி வந்துவிடும். பாரசீகத்திலிருந்து உலர்ந்த பழங்கள் கிடைக்கும். சாமர்கண்ட் தொடங்கிப் பல இடங்களிலிருந்து விதவிதமான கொட்டைகள் கிடைக்கின்றன. சுவையான திராட்சைகள், கறுப்பு, வெள்ளை இரு நிறங்களிலும் கிடைக்கின்றன. ஆப்பிள் அல்லது பேரிக்காய் வேண்டுமானால் குறைந்தது நான்கு வகைகள் வைத்திருக்கிறார்கள். சில பழங்களை மெல்லிய துணியில் சுற்றி விற்பனை செய்கிறார்கள்’ என்கிறார் பெர்னியர். முகலாயப் பேரரசைத் தொடங்கிவைத்த பாபருக்குப் பழங்களென்றால் உயிர். சிறு வயதில் உண்ட சாமர்கண்ட் பழங்களின் சுவையை இறுதிவரை மறக்கவில்லை அவர்.
`நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். உங்கள் முகம் வெளுப்பாக இருக்குமென்றால், நீங்கள் ஒரு முகமதியர் என்றால் நீங்களும் ஒரு முகலாயர்தான்’ என்கிறார் பெர்னியர். பாரசீகம், துருக்கி, அரேபியா, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் முகலாயர்களாகவே தில்லியில் கருதப்படுவார்களாம்.
செங்கோட்டையில் முகலாயப் பேரரரசர் எவ்வளவு ஆர்ப்பாட்டமாகக் கொலு வீற்றிருப்பார், அவர் என்னென்ன மணிகளும் மாலைகளும் அணிந்திருப்பார், எப்படிப்பட்ட உடை உடுத்துவார், எப்படி நகர்வலம் செல்வார் என்று அனைத்தையும் விலாவாரியாக விவரிக்கிறார். மன்னரை வானுக்கும், முடிந்தால் அதற்கு அப்பாலும் கொண்டு சென்று நிறுத்திப் புகழ்பாடும் அவையினரின் செய்கை மட்டும் பெர்னியருக்குப் பிடிக்கவில்லை. `அருவருப்பாக இருக்கிறது, இருந்தாலும் என்ன செய்ய? வகை தொகையில்லாமல் எல்லோரும் அதைத்தான் செய்கிறார்கள்’ என்று சலித்துக்கொள்கிறார்.
ஷாஜஹான், தாரா, ஔரங்கசீப் மூவரையும் கண்டிருக்கிறார் பெர்னியர். தந்தையைவிட ஔரங்கசீப் மிகவும் கருத்தூன்றி பணியாற்றுபவராக அவருக்குக் காட்சியளித்திருக்கிறார். `ஒரு நல்ல முஸல்மானாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் எப்போதும் அக்கறைகொண்டவராக இருக்கிறார். தன் செயல்பாடுகளில் தவறு நேர்ந்துவிடக் கூடாது என்று நினைப்பதால் பதற்றமாக அவர் இருப்பதுபோல் தோன்றுகிறது’ என்கிறார் பெர்னியர். இதை இத்தாலியப் பயணியான நிக்கோலி மனூஸ்ஸி என்பவரும் உறுதிப்படுத்துகிறார். `ஔரங்கசீப் எப்போதும் ஒருவித சோக மனோபாவத்துடன் காணப்படுகிறார். வழக்குகளைத் தீர்த்துவைக்கும் தருணங்களிலெல்லாம் பரபரப்போடு இருக்கிறார். சரியான முடிவை எடுக்க வேண்டும், நீதி வழங்க வேண்டும் என்னும் துடிதுடிப்பினால் ஏற்பட்ட பதற்றம் அது’ என்கிறார் மனூஸ்ஸி.

`ஔரங்கசீப்போடு ஒப்பிடும்போது தாரா மிக மிக தாராளமான சிந்தனையாளர்’ என்கிறார் பெர்னியர். `தாரா கற்றறிந்த ஓர் அறிஞரும்கூட. உபநிடதங்களைப் பாரசீகத்துக்கு மொழிபெயர்க்கும் ஆற்றல்மிக்கவர். எப்போது பார்த்தாலும் வழிபாட்டில் மூழ்கிக்கிடக்கும் ஔரங்கசீப்பை தாரா வெறுத்தார். மூடன் என்று அவரை அழைத்தார்’ என்கிறார் பெர்னியர். ஆனால், தாராவிடமும் நிறைய குறைகள் இருக்கத்தான் செய்கின்றன என்று ஒப்புக்கொள்கிறார் பெர்னியர். `அவர் ஒரு முன்கோபி. யாரை எப்போது தூக்கிப் போட்டுப் பேசுவார், யாரை எதற்காகச் சுடுசொல்லால் பழிப்பார் என்று ஒருவராலும் யூகிக்க முடியாது. நல்ல ஆலோசனைகளைக்கூடப் பொருட்படுத்த மாட்டார்.
அதேபோல், பல குறைகள் இருந்தாலும் சில நல்ல பண்புகளும் ஔரங்கசீப்பிடம் இருந்தன’ என்கிறார் பெர்னியர். அவர் எடுக்கும் முடிவுகள் தீர்க்கமானவை. யாரை, எந்தப் பணியில் அமர்த்த வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். ஔரங்கசீப்புக்கு பதில் தாரா ஷுகோவ் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்திய வரலாறு வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்று வாதிடுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள். குணங்களில் ஔரங்கசீப்புக்கு நேர் எதிரானவர் தாரா என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்படும் அனுமானம் இது. ஆனால் உண்மை அதுவல்ல என்பதை பெர்னியரின் குறிப்புகள் உணர்த்துகின்றன.
இதிலும் பெர்னியரோடு உடன்படுகிறார் மனூஸ்ஸி. அவர் விவரிக்கும் இந்த நிகழ்வைப் பாருங்கள். தலையைச் சீவுவதற்கு முன்பாக ஔரங்கசீப், தாராவிடம் கேட்டாராம். `ஒருவேளை நீ மன்னனாகவும், நான் உன்னிடத்திலும் இருந்திருந்தால் என்னை நீ என்ன செய்திருப்பாய்?’ தாரா அளித்த பதில் இது. ‘உன் உடலை நான்கு துண்டுகளாக வெட்டி, தில்லியின் நான்கு பிரதான வாயில்களில் தொங்கவிட்டிருப்பேன்!’
தில்லி பிடிக்கும் என்றாலும் அதன் குறைகளின்மீதும் வெளிச்சம் பாய்ச்சுகிறார் பெர்னியர். `இங்கே நடுவாந்திரம் என்றொன்று இல்லை. ஒன்று நீங்கள் பளபளப்பான செல்வந்தராக இருக்க வேண்டும் அல்லது பரம ஏழையாக. பாரிஸ் வீதியில் பத்துப் பேரில் எட்டுப் பேராவது நன்றாக உடுத்தியிருப்பார்கள். தில்லியில் இரண்டு, மூன்று பேர் நன்றாக இருந்தால் அதிகம். மிச்சமுள்ளவர்களுக்குப் பரிதாபகரமான வாழ்வுதான் விதிக்கப்பட்டுள்ளது.’
தன் கண்களால் கண்ட, தானும் பங்கேற்ற ஒரு சாகசக் கதையை பெர்னியர் விவரிக்கிறார். ஒருநாள் அவருடைய இந்து நண்பர் ஒருவர் இறந்துவிட்டாராம். அவர் மனைவி உடன்கட்டை ஏறுவதற்குத் தயாராகிவிட்டாராம். பெர்னியரும் அப்போது அங்கே இருந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் கேசம் கலைந்திருந்ததையும், அவர் முகம் வெளுத்திருந்ததையும் கண்டிருக்கிறார். தன் கணவனின் சடலத்துக்கு அருகில், கால்மாட்டில் அந்தப் பெண் அமர்ந்துகொண்டிருந்ததை பெர்னியர் கண்டிருக்கிறார். பிராமணர்கள் இருந்திருக்கிறார்கள். இன்னும் யார், யாரோ சூழ்ந்திருக்கிறார்கள்.
அந்தப் பெண் என்ன செய்ய உத்தேசித்திருந்தார் என்பதை அறிந்ததும் பதறிப்போய்விட்டார் பெர்னியர். `தயவுசெய்து நெருப்பில் விழுந்து உன்னை மாய்த்துக்கொள்ளாதே’ என்று இயன்றவரை மன்றாடியிருக்கிறார். `என்னை நீ தடுத்தால் சுவரில் முட்டி முட்டி, மூளைச் சிதறித்தான் நான் இறந்து போகவேண்டியிருக்கும். அதற்கு நெருப்பே மேல்’ என்று பதிலளித்திருக்கிறார் அந்தப் பெண். பெர்னியருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. `சரி அப்படியே சிதையில் விழுந்து செத்துப்போ! ஆனால் அதற்கு முன் உன் குழந்தைகளைக் கொன்றுவிடு. அவர்கள் கழுத்தை நெரித்துவிடு! தாயில்லாமல் தவித்து பஞ்சத்திலும் பசியிலும் அவர்கள் இறக்க வேண்டும் என்பதுதான் உன் விருப்பமா?’ என்று ஆவேசத்தோடு கத்தியிருக்கிறார். பெர்னியரின் வீர, தீரமான உரைக்குத் தக்க பலன் கிட்டியிருக்கிறது. நெருப்பில் விழத் துடித்த அந்தப் பெண்ணை அவருடைய கடினமான சொற்கள் சுட்டிருக்கின்றன. பதறித் துடித்து தன் குழந்தைகளிடம் ஓடியிருக்கிறார்.
` `உடன்கட்டை ஏறுவது’ என்று அதற்குப் பெயர் வைக்காதீர்கள். இது அப்பட்டமான கொலை’ என்கிறார் பெர்னியர். தயங்கி நிற்கும் பெண்களைத் தள்ளிவிடுவதற்கென்றே நீளமான தடியோடு சிலர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டதாக எழுதுகிறார். சில பெண்களைக் கட்டிப்போட்டும், இன்னும் சிலரை மயக்க மருந்து கொடுத்தும் நெருப்புக்கு இரையாக்குவதைக் கண்டாராம். வைர வியாபாரி டெவர்னியரும் இதே போன்ற காட்சிகளைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெர்னியரின் பதிவுகள் மேற்குலகில் பலரால் விரும்பி வாசிக்கப்பட்டன. முகலாய இந்தியாவை பெர்னியர் வாயிலாக அறிந்துகொண்டவர்கள் ஏராளம் பேர். பெர்னியரின் குறிப்புகள் எல்லாமே துல்லியமானவை என்று சொல்ல முடியாது. அவருடைய புகழ்பெற்ற, பிழையான பார்வைக்கு ஓர் உதாரணம் சொல்ல முடியும். `இந்துஸ்தானத்தில் யாரும் நிலம் வாங்க முடியாது. எல்லா நிலங்களும் மன்னருக்கே சொந்தம். துருக்கியிலும் பாரசீகத்திலும்கூட இதே வழக்கம்தான் நிலவுகிறது’ என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார் பெர்னியர். இதைக்கொண்டு கிழக்கு நாடுகள் பற்றிய தவறான ஒரு சித்திரத்தைப் பலர் உருவாக்கிக்கொண்டுவிட்டார்கள். அவர்களில் காரல் மார்க்ஸும் ஒருவர்.
(விரியும்)