மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 67 - தரங்கம்பாடிக்கு வந்த பாதிரியார்

தரங்கம்பாடிக்கு வந்த பாதிரியார்
பிரீமியம் ஸ்டோரி
News
தரங்கம்பாடிக்கு வந்த பாதிரியார்

சீகன்பால்கு சாப்பிட அமரும்போது, இன்னொரு உதவியாளர் கையில் புத்தகத்தோடு அவர் பக்கத்தில் வந்து நிற்பார். வாய் சாப்பிட்டுக்கொண்டேயிருக்கும்.

டென்மார்க்கிலிருந்து 200 நாள்களுக்கும் மேல் பயணம் செய்து, 1706-ம் ஆண்டு, ஜூலை 9 அன்று தரங்கம்பாடிக்குக் கப்பலில் வந்துசேர்ந்தார் ஜெர்மானியப் பாதிரியாரான பாத்லோமேயு சீகன்பால்கு. கிறிஸ்தவத்தைப் பரப்ப வேண்டும் என்பதுதான் அவருக்கு இடப்பட்டிருந்த பணி. அப்போது அவர் வயது 24. கொடுக்க வந்தவரைப் பிடித்துவைத்துக்கொண்டு பலவற்றை வாரி வழங்கத் தொடங்கிவிட்டது தரங்கம்பாடி.

சீகன்பால்கு வருவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தரங்கம்பாடிக்கும் டென்மார்க்குக்கும் நெருங்கிய உறவு உருவாகிவிட்டிருந்தது. இந்தியாவோடும் சிலோனோடும் வணிகத் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்வதற்காக 17-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி. இந்தியாவில் ஓரிடத்தைப் பிடித்து, அங்கிருந்து மிளகு, பட்டை போன்ற நறுமணப் பொருள்களை ஏற்றுமதி செய்வதுதான் இந்நிறுவனத்தின் திட்டம். அதற்கு சோழமண்டலக் கடற்கரையில் அமைந்திருந்த தரங்கம்பாடி பொருத்தமான இடமாக இருக்கும் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.

கப்பலில் கிளம்பி வந்து, பக்கத்தில் தஞ்சாவூரை ஆண்டுவந்த மன்னரோடு பேசி ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள். அதன்படி, தரங்கம்பாடியிலிருந்து டேனிஷ் கம்பெனி தடையின்றி ஏற்றுமதிகளைச் செய்துகொள்ளும். அதற்கு ஈடாக, ஆண்டு தோறும் 3,000 சொச்ச ரூபாய் பணத்தை தஞ்சாவூர் மன்னருக்கு கம்பெனி செலுத்தும். அதிகம் அறியப்படாத ஒரு சிறிய கிராமமாக இருந்த தரங்கம்பாடி டேனிஷ்காரர்கள் குடியேறி, கோட்டையொன்றை எழுப்பியதைத் தொடர்ந்து வேகமாக வளரத் தொடங்கியது.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 67 - தரங்கம்பாடிக்கு வந்த பாதிரியார்

‘தரங்கம்பாடி’ என்றால் ‘பாடும் அலைகளின் நிலம்.’ கவித்துவமான இந்தப் பெயர் வாயில் நுழையாததால் ‘ட்ரான்கிபார்’ என்று கடித்துத் துப்பினார்கள் டேனிஷ்காரர்கள். அந்தப் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது. வணிகத்தை வளர்ப்பதற்குக் கப்பல் அனுப்பியதுபோல், மதத்தை வளர்ப்பதற்கு டென்மார்க் மன்னர் அனுப்பிவைத்த கப்பலில் வந்துசேர்ந்தவர்தான் பாதிரியார் சீகன்பால்கு.

வந்தவுடன் அவரைக் கவர்ந்தது, தமிழ். வளைந்தும் சுருண்டும் இருந்த தமிழ் எழுத்துகள் மீது கண்டவுடன் காதல் பிறந்துவிட்டது அவருக்கு. உடனே ஆட்களை அமர்த்தி, கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார். திண்ணைப் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை அமரவைத்து, மணலைக் கொட்டி அதில் எழுதக் கற்றுக்கொடுப்பார்கள் அல்லவா? அதேபோல் சீகன்பால்கு முன்னால் மணலைப் பரப்பி அதில் ஒவ்வொரு எழுத்தாக யாராவது எழுதிக்காட்டுவார்கள். அவர் ஒரு குச்சியைக் கையில் பிடித்துக்கொண்டு அந்த எழுத்தின்மீது வளைத்து வளைத்து கோடு போட்டபடி கற்றுக்கொள்வார். எழுத்துகள் அறிமுகமானதும் சொற்கள் இதேபோல் எழுதிக் காட்டப்படும்.

ஒவ்வொரு நாளும் காலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை முந்தைய இரவு கற்றுக்கொண்ட எழுத்துகளை நினைவுபடுத்தி சத்தம் போட்டு உச்சரிப்பார். கற்றுக்கொண்ட ஒவ்வொரு சொல்லையும் எழுதிப் பார்ப்பார். எட்டு மணியிலிருந்து மதியம்வரை தமிழ்ப் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு வாசிக்கப் பழகுவார். எழுத்துகளை எழுதிக்காட்ட ஓர் ஆசிரியரை நியமித்துக்கொண்டார் என்றால், புத்தகம் படிக்கும்போது உடனிருந்து சரிபார்க்கவும் திருத்தவும் ஒரு கவிஞரை அமர்த்திக்கொண்டார். சீகன்பால்கு திணறும்போது கவிஞர் உதவிக்கு வருவார். அவரால் உச்சரிக்க முடியாத சொற்களை அவர் சொல்லிக்காட்டுவார். ஒவ்வொரு சொல்லுக்குமான பொருளையும் கூடவே விளக்கிக்கொண்டு வருவார். அடுத்து பேச்சுப்பயிற்சி தொடங்கும். பேச்சு வழக்கில் தமிழை எப்படிக் கையாள்வது என்பதற்கு அதே கவிஞர் வகுப்பெடுப்பார்.

சீகன்பால்கு சாப்பிட அமரும்போது, இன்னொரு உதவியாளர் கையில் புத்தகத்தோடு அவர் பக்கத்தில் வந்து நிற்பார். வாய் சாப்பிட்டுக்கொண்டேயிருக்கும். காது அவர் படிப்பதைக் கேட்டுக்கொண்டிருக்கும். நேரம் விரயமானால் அவருக்குப் பிடிக்காதாம்! செவியும் வயிறும் நிறைந்ததும் கொஞ்ச நேரம் கோழித் தூக்கம் போடுவார். மூன்று மணிக்குத் தமிழ்த்தாயின் நினைவு வந்துவிடும். எழுந்து உட்கார்ந்து படிக்கத் தொடங்குவார். ஐந்து மணி வரை அசைய மாட்டார். அடுத்த வகுப்பு ஏழு மணிக்குத் தொடங்கும். உதவியாளர் இந்த முறை இலக்கிய நூலோடு வந்துவிடுவார். அடுத்த ஒரு மணி நேரம் தமிழ்ச் செய்யுள்களை அவர் வாசிப்பார். எழுத்துக்கூட்டி ஓரளவுக்குப் படிக்கக் கற்றுக்கொண்ட பிறகும், உதவியாளரை வாசிக்கச் சொல்லிக் கேட்கும் வழக்கத்தை சீகன்பால்கு மாற்றிக்கொள்ளவில்லை. ‘தொடர்ந்து நானே பல மணி நேரம் படித்தால், கண்கள் சோர்வடைந்துவிடும். அதனால்தான் இந்த ஏற்பாடு’ என்று அதற்கொரு காரணத்தையும் எழுதிவைத்திருக்கிறார்.

அவரே உருவாக்கிக்கொண்ட அட்டவணைதான் என்றாலும் கொஞ்சம்கூடத் தளர்த்திக்கொள்ளத் தயாராக இல்லை சீகன்பால்கு. தமிழுக்கும் அவருக்கும் இடையில் எவரும், எதுவும் குறுக்கே வராமல் பார்த்துக்கொண்டார். ‘இன்று வேண்டாம்’ என்றோ, ‘இந்தச் செய்யுள் ரொம்பவும் கடினமாக இருக்கிறது’ என்றோ, ‘இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் என்ன’ என்றோ ஒருபோதும் நினைத்ததில்லை அவர். மூன்று ஆண்டுக்காலம் தமிழுக்காகத் தவமிருந்தார் சீகன்பால்கு. மனநிறைவோடு ஊருக்கு ஒரு கடிதம் எழுதிப்போட்டார். ‘ஒரு தமிழரால் எப்படிப் பேச முடியுமோ, அப்படி என்னாலும் இப்போது தமிழ் பேச முடியும்!’

பேசினால், எழுதினால் போதுமா... அவர் வந்தது சமயத்தைப் பரப்புவதற்கு அல்லவா? தரங்கம்பாடி தமிழர்களுக்கு இயேசுநாதரை அவர்கள் மொழியிலேயே அறிமுகப்படுத்தினார். தமிழில் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அடுத்து, `புதிய ஏற்பாட்டை’த் தமிழில் மொழிபெயர்த்தார். அதைத் தொடர்ந்து டென்மார்க்குக்கு எழுதிப்போட்டு அச்சு இயந்திரங்களைத் தருவித்தார். தமிழ் எழுத்துருக்களை வரைந்து அனுப்பி, அச்சுப் பொறிகள் செய்து வாங்கிக்கொண்டார். எல்லாம் வந்துசேர்ந்தன என்றாலும், அச்சுகள் பெரியவையாக இருந்ததால் உள்ளூரிலேயே ஆட்களைவைத்து வேறு செய்துகொண்டார். அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் ஆலை, உலோகங்களால் தமிழ் எழுத்துகள் தயாரிக்கும் கூடம் ஆகியவற்றை நிறுவினார். முதன்முறையாகத் தமிழ் பைபிளை அச்சிட்டு வெளியிட்டார். தொடர்ந்து திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு என்று இலக்கியங்கள் வெளிவர ஆரம்பித்தன. தமிழ் இலக்கணம், அகராதி போன்றவையும் அடுத்தடுத்து வெளிவந்தன.

இங்கே ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டும். ‘இந்தியாவுக்கு அச்சுக்கூடத்தை அறிமுகப்படுத்தியவர்’ என்னும் புகழை சீகன்பால்கு பெற்றுவிட்டார் என்றாலும், அது உண்மையல்ல. 16-ம் நூற்றாண்டிலேயே போர்ச்சுகீசியர்கள் கோவாவில் அச்சுக்கூடத்தை அறிமுகப்படுத்திவிட்டார்கள். மத நூல்கள் பலவற்றையும் அச்சிட்டுக் கொண்டுவந்து விட்டார்கள். ஆனால் பல ஆண்டுகளாக அது பயன்பாட்டில் இல்லை என்பதால், சீகன்பால்கு அமைத்த அச்சுக்கூடம் முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. அறிமுகம் செய்தார் என்றுதான் சொல்ல முடியாதே தவிர, அச்சுக்கூடத்தை ஆர்ப்பாட்டமாக மறுஅறிமுகம் செய்துவைத்ததற்காக அவரைப் புகழலாம்.

அடுத்து இந்து மதத்தின்மீது தன் கவனத்தைக் குவித்தார் சீகன்பால்கு. புராணங்களையும் இதிகாசங்களையும் கேட்கக் கேட்க, ‘இவ்வளவு கடவுள்களா’ என்று வியந்துபோனார். எது அவர் ஆர்வத்தைக் கிளறுகிறதோ, அதில் ஆழம் செல்வது அவர் இயல்பு. எதில் ஆழமாகச் செல்கிறாரோ அதைப் பற்றி எழுதுவதும் அவர் இயல்புதான். ஆற்று மணல்போல் இந்துக் கடவுள்கள் அங்குமிங்குமாகச் சிதறிக்கிடக்கிறார்கள். யாரும் அவர்களை முறையாகத் தொகுக்கவில்லை என்று அவருக்குத் தோன்றிவிட்டது. ‘அதை ஏன் நாமே செய்யக் கூடாது’ என்று எல்லாக் கடவுள்களையும் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு ஆராய்ச்சி செய்யத் தொடங்கிவிட்டார்.

மூத்தவர் யார், அவருக்குப் பிறகு யார், யாருடைய வாரிசு யார், யாருக்கு என்ன பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று தொடங்கி வரவு, செலவு கணக்கு போடுவதுபோல் கட்டம் கட்டி, கோடு கிழித்து, கிளைகள் பரப்பி அவருக்குத் தெரிந்த எல்லாக் கடவுள்களையும் வரைபடம் போட்டு அடக்கிவிட்டார். அதன் பிறகு ஒவ்வொருவரைப் பற்றியும் விலாவாரியாக விளக்கிக் குறிப்புகள் எழுதினார். தகவல் சேகரிப்பது தொடங்கி சரி பார்ப்பது வரை எதிலும் குறைவைக்கவில்லை அவர். தமிழ் கற்பதில் காட்டிய அதே ஒழுக்கத்தை இங்கும் கடைப்பிடித்தார். உயர் சாதி பிராமணர்களைக் காட்டிலும் அடித்தட்டு மக்களிடமே அவர் அதிகம் உரையாடியதாகவும், அவர்களிடமிருந்தே அதிக தரவுகள் திரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. உரையாடியது போக தமிழ் நூல்களிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் கற்று, தரவுகள் இணைத்திருக்கிறார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 67 - தரங்கம்பாடிக்கு வந்த பாதிரியார்

இந்து மதக் கடவுள்களை ஐரோப்பிய கிறிஸ்தவர்களுக்கு அறிமுகப்படுத்தி சீகன்பால்கு எழுதிய காலத்தில் ‘இந்து மதம்’ என்னும் பெயரே தோன்றியிருக்கவில்லை. அவருடைய நூலை இன்று பார்க்கும்போது, தகவல்களில் அதிக குற்றங்கள் காண முடியாது. ஆனால் அவருடைய அனுமானங்களிலும் முடிவுகளிலும் முரண்படுவதற்கு நிறைய இருக்கின்றன. ஒரு விநோதத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இத்தனை கடவுள்களா என்னும் திகைப்போடுதான் அவர் ஆய்வையே தொடங்குகிறார். ஆனாலும், ‘எழுதும்போது மட்டும் இங்கிருப்பவர்களும் நம்மைப்போல் ஒரு கடவுளைத்தான் பிரதானமாக வழிபடுகிறார்கள்’ என்று முடிவுகட்டிவிடுகிறார்.

இன்னொரு தவற்றையும் செய்கிறார் அவர். ‘இவர்களுடைய நம்பிக்கைகள் முட்டாள்தனமானவை. இவர்களுடைய கதைகள் ஆபாசமானவை. உள்ளதிலேயே நம் கடவுள்தான் உயர்ந்தவர். இங்குள்ளவர்களின் கடவுள்கள் பொய்யர்கள்’ என்று தீர்ப்பெழுதிவிடுகிறார். ‘சில கதைகளை என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை என்பதால் அவற்றை எழுதாமல் விட்டுவிடுகிறேன்’ என்றொரு குறிப்பும் கொடுக்கிறார். இதுபோக, பிராமணர்களோடும் இஸ்லாமியர்களோடும் நீண்ட மத விவாதங்கள் நடத்தி, அதையும் தனி நூலாகத் தொகுத்திருக்கிறார் சீகன்பால்கு. அதில் பிராமணர்களைக் கடுமையாகத் தாக்குகிறார். இந்துக்களின் சாதி அமைப்பு, வழிபாடு, சடங்குமுறை அனைத்தையும் கண்டிக்கிறார். எங்கும் பரவியிருக்கும் வறுமையைச் சுட்டிக்காட்டிக் கேள்விகள் எழுப்புகிறார்.

எனவே, ‘மதம் மாறுங்கள்’ என்று சொல்லி முடிப்பதுதான் அவர் வழக்கம். அதுதான் அவர் இலக்கும்கூட. தரங்கம்பாடியில் சீர்திருத்தக் கிறிஸ்தவம் வளர்வதற்கான அடிக்கல்லை நாட்டுவதில் வெற்றிபெற்றார் சீகன்பால்கு. `புதிய ஏற்பாடு’ வெளிவந்ததும் `பழைய ஏற்பாட்டை’யும் மொழிபெயர்க்கத் தொடங்கினார். முடிக்கவில்லை. 1719-ம் ஆண்டு, தனது 36-ம் வயதில் இறந்துபோனார். தரங்கம்பாடியில் அவர் உதவியோடு நிறுவப்பட்ட தேவாலயத்திலேயே அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

(விரியும்)