மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 68 - இந்தியாவைக் கொண்டாடிய ஜோன்ஸ்

ஜோன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோன்ஸ்

வில்லியம் ஜோன்ஸ் நமக்கு அல்பெரூனியை நினைவுபடுத்துகிறார்.

முதன்முறையாக இந்தியாவைக் கண்ட அந்த ஜோடிக்கு, அவர்கள் முன்பு தோன்றிய எல்லாமே புதிதாக இருந்தன. எதைக் கண்டாலும் விழிகளை விரித்துப் பரவசமடைந்தார்கள். ‘ஆ, அங்கே பார்த்தாயா? புலியொன்று நீர் அருந்துவதற்காக ஆற்றுக்கு வந்துகொண்டிருக்கிறது!’ என்று கூச்சலிட்டார் அன்னா மரியா. வில்லியம் ஜோன்ஸ் திரும்பிப் பார்த்தார். அவர் மனம் ஏற்கெனவே கனவுகளால் நிறைந்திருந்தது. திருமணம் முடிந்து சரியாக நான்கே நாள்களில் மூட்டை முடிச்சுகளோடு இருவரும் இங்கிலாந்திலிருந்து கப்பல் ஏறிவிட்டார்கள். இந்தியாவை வந்தடைய ஐந்து மாதங்கள் ஆகின. இப்போது கல்கத்தாவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார்கள். `புலி மட்டுமா அதிசயம்? இந்தியப் பறவை, இந்திய ஆறு, இந்திய ஆகாயம் எல்லாமே அதிசயம்தான்’ என்று நினைத்துக்கொண்டார் வில்லியம் ஜோன்ஸ்.

வில்லியம் ஜோன்ஸை அறிந்தவர்கள் அனைவரும் ஒன்றுபோல் அவரை ‘மேதை’ என்கிறார்கள். ஆக்ஸ்ஃபோர்டில் பட்டம் பெற்றபோது, அவருக்கு 13 மொழிகள் சரளமாகவும், 28 மொழிகள் மிக நன்றாகவும் தெரிந்திருந்தன. அதே பல்கலைக்கழகத்தில் அரபு மொழிப் பேராசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் அவர் விருப்பம். அந்த இருக்கை என்னுடையதுதான் என்று இறுதிவரை உறுதியாக நம்பியிருக்கிறார். கிடைக்கவில்லை. போகட்டும் என்று மூன்றாண்டுகள் சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். வாங்கிக்கொண்டிருந்ததைவிடப் பத்து மடங்கு அதிக சம்பளமும், நீதிபதிப் பதவியும் கல்கத்தாவில் காத்திருக்கின்றன என்பது தெரிந்ததும், மரியாவை மணந்துகொண்டு 1783-ம் ஆண்டு கல்கத்தா வந்து சேர்ந்தார் ஜோன்ஸ்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 68 - இந்தியாவைக் கொண்டாடிய ஜோன்ஸ்

அவர் வருவதற்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, 23 ஜூன் 1757 அன்று வங்காளத்தின் நவாப் சிராஜ் உத் தவுலாவை, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் பிளாசி போரில் தோற்கடித்திருந்தார். வங்காளம் கிழக்கிந்திய கம்பெனியின் கரங்களுக்குச் சென்று சேர்ந்தது. விரைவில் ஒட்டுமொத்த இந்தியாவையும் முதலில் இந்நிறுவனமும், அதன் பிறகு நேரடியாக பிரிட்டனும் அடுத்த 190 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தன. இந்த 190 ஆண்டுகளில், பிரிட்டனிலிருந்து பலர் இந்தியாவுக்கு வருகை தந்தனர். வில்லியம் ஜோன்ஸ் அவர்களில் ஒருவர் என்றாலும், மற்றவர்களிடமிருந்து அவர் தனித்து நின்றதற்கும் மற்றவர்களைவிட வியப்பூட்டும் அளவுக்கு உயர்ந்து நின்றதற்கும் காரணம் அவருடைய மேதைமை.

வில்லியம் ஜோன்ஸ் நமக்கு அல்பெரூனியை நினைவுபடுத்துகிறார். அல்பெரூனி இந்தியாமீது கொண்டிருந்த அதே வியப்பை, அதே மதிப்பை ஜோன்ஸிடமும் நாம் காண்கிறோம். ‘இதென்ன நாடு, இப்படியா வெயில் அடித்துக் கொளுத்தும்... இதென்ன வீதிகள் இப்படித் தாறுமாறாக இருக்கின்றன... இந்த மக்களுக்குச் சுகாதாரம் என்றால் என்னவென்றே தெரியாதா... இவர்களுக்கு வரலாறு என்றால் என்னவென்றாவது தெரியுமா?’ இப்படியெல்லாம் நட்சத்திரத்தின்மீது ஏறியமர்ந்துகொண்டு அங்கிருந்து இந்தியாவை இளக்காரமாகக் குனிந்து பார்த்து முகம் சுளித்த எண்ணற்ற வெள்ளைக்காரர்களில் ஒருவராக இல்லாமல், இந்தியாவை அதன் உள்ளடக்கத்துக்காக, அதன் பண்பாட்டுக்காக, அதன் இலக்கியத்துக்காக, அதன் வளமான கடந்த காலத்துக்காக, மிக முக்கியமாக அதன் மொழிகளுக்காகப் பெரிதும் மதித்தார் ஜோன்ஸ்.

அல்பெரூனிபோலவே எந்தவித முன்முடிவும் இல்லாமல் இந்தியாவை அதன் நிறைகுறைகளோடு புரிந்துகொள்ள விரும்பினார் ஜோன்ஸ். அதற்காக உழைக்கவும் அவர் தயாராக இருந்தார். ‘இந்தியாவை எப்படிப் பிரச்னையின்றி ஆள்வது, இந்தியாவில் நமக்கு எதிரான மனநிலை தோன்றாமல் எப்படிப் பார்த்துக்கொள்வது, இங்கிருந்து முடிந்த அளவுக்கு எப்படிச் சுருட்டிக்கொண்டு செல்வது’ என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில், ‘இந்தியாவில் எங்கு திரும்பினாலும் இப்படி மலை மலையாக அறிவுச்செல்வம் குவிந்திருக்கிறதே, இதையெல்லாம் நான் எப்போது கற்கப்போகிறேன்’ என்று திக்குமுக்காடி நின்றார் ஜோன்ஸ்.

‘என் செய்வேன் நான்? பண்டைய இந்தியாவின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மலைப்பிலும் மலைப்பாக இருக்கிறது. மறை நூல்கள் கடல்போல் விரிந்திருக்கின்றன. கணிதம், வடிவியல், தர்க்கம், தத்துவம், இலக்கியம் என்று எதைத் தொட்டாலும் ஆகாயம்போல் நீள்கிறது. எனது துறையான சட்டத்தை எடுத்துக்கொண்டால் இந்துக்களும் முகமதியர்களும் தங்களுக்கான பிரத்யேக சட்ட நூல்களை இயற்றிவைத்திருக் கிறார்கள். நான் நவீன இந்தியாவின் அரசியலைக் கற்பேனா அல்லது பண்டைய இந்தியாவின் மரபுகளைக் கற்பேனா... இந்திய நிலவியலில் ஆர்வம் செலுத்துவேனா அல்லது காவிய அழகியலில் என்னைத் தொலைப்பேனா? கவிதை, மருத்துவம், உடற்கூறியல், இசை, அறம், வணிகம் என்று இங்கு வளம் பெறாத துறைகளே இல்லை! தனியொருவனான என்னால் இந்த ஞானக்கடலைப் பருகித் தீர்க்க முடியாது. ஓர் அறிவியக்கத்தை நாம் தொடங்கியாக வேண்டும். இந்தியாவின் செழுமையை நாம் பதிவுசெய்ய வேண்டும்’ என்று உறுதியெடுத்தார் அவர்.

‘நாம் ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டும்... அதற்காகவா வந்திருக்கிறோம் இந்தியாவுக்கு... யாரிடமிருக்கிறது பணம்... யார் நேரம் செலவிட முடியும் இதற்கெல்லாம்?’ என்று சலித்துக்கொண்டவர்களை ஒதுக்கிவிட்டு, ‘ஏஷியாடிக் சொசைட்டி’ எனும் அமைப்பை வந்ததும் வராததுமாக கல்கத்தாவில் உருவாக்கினார் வில்லியம் ஜோன்ஸ். தான் செய்ய விரும்பிய அனைத்தையும் அங்கே அமர்ந்துகொண்டு செய்யத் தொடங்கினார். அவரைப்போலவே ஆர்வமும் துடிப்பும் மிக்க பிரிட்டிஷ் இளைஞர்களை அமைப்பில் சேர்த்துக்கொண்டார். எல்லோரும் சேர்ந்து இந்தியாவின் பழங்கால ஏடுகளைத் தேடத் தொடங்கினர். மொழிபெயர்க்கத் தொடங்கினர். ஆய்வுக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினர்.

அலுவலக நேரங்களில் நீதிபதியாக அமர்ந்து வழக்குகளை விசாரிப்பார். வேலை முடிந்ததும் பரபரப்போடு விரைந்து வந்து, நீதிபதி ஆடையைக் களைந்து குர்தா அணிந்துகொண்டு புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கவும் எழுதவும் ஆரம்பிப்பார். அவருக்குக் கிடைத்த, அவர் தேடிய, அவர் கனவு கண்ட பிரதிகள் எல்லாமே சம்ஸ்கிருத்தில் எழுதப்பட்டிருந்ததால் அம்மொழி இயல்பாகவே அவருடைய பேரார்வத்தைக் கிளறிவிட்டது. விரைவில் சம்ஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தார். அதற்கு முன்பிருந்த எந்த ஐரோப்பியரும் பெற்றிராத ஆழமான உறவை சம்ஸ்கிருதத்தோடு ஜோன்ஸால் வளர்த்துக்கொள்ள முடிந்ததற்கு, அவர் ஒரு மொழியியலாளராக இருந்ததும் மற்ற எல்லோரையும்விட இந்தியாவை அவர் மனமார நேசித்ததும் ஒரு முக்கியமான காரணம்.

தனக்குத் தெரிந்த மொழிகள் அனைத்தோடும் சம்ஸ்கிருதத்தை ஒப்பிட்டு ஆய்வுகள் நடத்திய பிறகு, சில முடிவுகளுக்கு வந்துசேர்ந்தார் ஜோன்ஸ். ‘சம்ஸ்கிருதம் எவ்வளவு பழைமையானது என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு உறுதியாகத் தெரிவது என்னவென்றால், அது அற்புதமான அமைப்பைக் கொண்டிருக்கும் ஒரு மொழி. இலக்கணரீதியில் கிரேக்கம், லத்தீன் இரண்டோடும் சம்ஸ்கிருதம் நெருக்கமான உறவைக்கொண்டிருக்கிறது. அதேசமயம் கிரேக்கத்தைக் காட்டிலும் கச்சிதமானது. லத்தீனைக் காட்டிலும் செழுமையானது. இந்த மூன்றையும் அருகருகில் நிறுத்தி ஆராயும் எந்த மொழியியல் அறிஞரும் இந்த மூன்றும் ஒரே இடத்திலிருந்துதான் தோன்றியிருக்க முடியும் என்னும் முடிவுக்கே வந்துசேர்வர்.’

இவ்வாறு அறிவித்தபோது கடும் எதிர்ப்புகளை அவர் சக பிரிட்டிஷாரிடமிருந்து எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ‘மேற்குலகின் பாரம்பர்யமிக்க மொழிகளான கிரேக்கத்தோடும் லத்தீனோடும் ஓர் இந்திய மொழியை ஒப்பிடுவதா... இந்திய மொழி எல்லாவற்றையும்விடச் சிறந்தது என்று தீர்ப்பும் தருவதா... இதைவிடவும் பெரிய அபத்தம் என்ன இருக்க முடியும்?’ என்று கண்டித்தனர். ஆனால், ஜோன்ஸ் சொன்னது உண்மை என்பது இன்று உறுதியாகிவிட்டது.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 68 - இந்தியாவைக் கொண்டாடிய ஜோன்ஸ்

‘ஏன் சம்ஸ்கிருதம் உயர்ந்தது என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று செயலில் இறங்கினார் ஜோன்ஸ். ராமாயணம், பகவத்கீதை, ஜெயதேவரின் கீத கோவிந்தம், காளிதாசரின் காவியங்கள் என்று தொடங்கி, அவரும் அமைப்பினரும் சேர்ந்து பல சம்ஸ்கிருத நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடத் தொடங்கினார்கள். இலக்கியத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் வரலாற்றிலும் சில முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார் ஜோன்ஸ். பண்டைய இந்தியாவை, பண்டைய கிரேக்கத்துக்கு அருகில் நிறுத்தி காலவரிசையொன்றை உருவாக்கினார். மெகஸ்தனிஸின் இண்டிகாவை ஆராய்ந்து, அதில் வரும் ‘பலிபோத்ரா’ பாடலிபுத்திரம்தான் என்பதையும் அவர் குறிப்பிடும் விநோதப் பெயர்கொண்ட மன்னர் வேறு யாருமில்லை, சந்திரகுப்த மௌரியர்தான் என்பதையும் கண்டறிந்து சொன்னார்.

‘இந்தியா பிற்போக்கான நாடு, கல்வியற்ற நாடு, வரலாறற்ற நாடு, நாகரிகமற்ற நாடு. இந்தியாவை இந்தியர்கள் ஆள்வதைவிட நாம் ஆள்வதுதான் இந்தியாவுக்கு நல்லது.’ இந்தியாவை ஆக்கிரமித்ததற்கு கிழக்கிந்திய கம்பெனியும் பின்னர் பிரிட்டிஷ் பேரரசும் முன்வைத்த இந்த நியாயத்தை ஜோன்ஸ் தலைகீழாக மாற்றினார். ‘இந்தியாவை அறியாதவர்கள் மட்டுமே எங்கள் மதம் உயர்ந்தது, எங்கள் மொழி சிறந்தது, எங்கள் பண்பாடு மேலானது என்றெல்லாம் பெருமிதம் கொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரை இந்திய நாகரிகம் கிரேக்க, ரோமானிய நாகரிகத்துக்குச் சமமான வலுவும் ஆற்றலும் கொண்டது’ என்று திடமாக அறிவித்தார் ஜோன்ஸ்.

ஜோன்ஸின் படைப்புகள் பிரிட்டனுக்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லத் தொடங்கியதையடுத்து, அங்குள்ள மக்களும் மனமாற்றம் கொள்ளத் தொடங்கினர். ஜோன்ஸ் வாயிலாக `சாகுந்தல’த்தை முதன்முதலில் வாசித்த ஐரோப்பியர்கள், தங்கள் இதயத்தைப் பறிகொடுத்தார்கள். ஆங்கிலத்திலிருந்து `சாகுந்தலம்’ ஜெர்மனுக்கு உடனடியாக மொழிபெயர்க்கப்பட்டது. எங்கெல்லாம் ஜோன்ஸ் இந்தியாவை அறிமுகப்படுத்தினாரோ அங்கெல்லாம் இந்தியா வரவேற்கப்பட்டது, கொண்டாடப்பட்டது. பண்டைய இந்தியாமீது வில்லியம் ஜோன்ஸ் பாய்ச்சிய ஒளி அசாதாரணமானது. மொழியியல் முதல் மொழிபெயர்ப்பு வரை ஜோன்ஸ் ஆற்றிய பங்களிப்புகள் (அவற்றின் குறைகளையும் போதாமைகளையும் மீறி) இன்றும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. பண்டைய இந்தியவியலை ஒரு துறையாக வளர்த்தெடுத்தவர்களில் முதன்மையானவராக ஜோன்ஸ் திகழ்கிறார்.

சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு கிளம்பி விடலாம் என்று எண்ணித்தான் இந்தியா வந்தார் ஜோன்ஸ். 27 ஏப்ரல் 1794 அன்று அவர் மிகவும் நேசித்த கல்கத்தாவில் அவர் உயிர் பிரிந்தது. அப்போது அவர் வயது 47 மட்டுமே. அதற்குள் சட்டம், இசை, வரலாறு, இலக்கியம், தாவரவியல், புவியியல் என்று பல துறைகளில் மலைக்கவைக்கும் படைப்புகளை உருவாக்கிவிட்டார். ‘இந்தியா ஏற்படுத்திய மலைப்பைவிடவும் பெரிதான ஒன்றை யார்தான், எதுதான் ஏற்படுத்திவிட முடியும்?’ என்பார் ஜோன்ஸ்!

(விரியும்)