மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 69 - வரலாறு திரும்புகிறது

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

அங்கு இங்குமிருந்து பலரும் இந்த விநோத கல்வெட்டு எழுத்துகளைப் பிரதியெடுத்து பிரின்ஸெப்புக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருந்தனர்.

பிரிட்டிஷ் அதிகாரிகளில் ஒரு பிரிவினர் சமகால இந்தியாவை ஆண்டுகொண்டிருக்க, இன்னொரு சாரார் பண்டைய இந்தியாவை வியந்து வியந்து ஆராய்ந்துகொண்டிருந்தனர். இந்தியாவை ஆள்வதற்காகவும், ஆள்பவர்களுக்கு உதவி செய்வதற்காகவும் அனுப்பிவைக்கப்பட்டவர்கள்தான் என்றாலும், அரசியலைவிட வரலாறே அவர்களை ஈர்த்தது. நிர்வாகத்தைவிட தொன்மத்தில் அதிக கவனம் செலுத்தினார்கள். அலுவலகக் கோப்புகளைப் புரட்டிப் புரட்டிச் சோர்ந்துபோன கண்களுக்கு உயிரூட்டும் வகையில் பண்டைய இலக்கியப் பிரதிகளை மாய்ந்து மாய்ந்து வாசித்தனர்; ஆராய்ந்தனர்; மொழிபெயர்த்தனர். இந்த அறிவுத்தேடலின் விளைவாக ஜோன்ஸ்போலவே வேறு சிலரும் இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர்.

ஜேம்ஸ் பிரின்ஸெப் அவர்களில் ஒருவர். லண்டனில் கட்டடக்கலையும் வேதியியலும் பயின்றவர். பதின்பருவத்தைக் கடந்து வருவதற்குள் கிழக்கிந்திய கம்பெனி அவரை கல்கத்தாவுக்கு அழைத்து வந்துவிட்டது. நாணயங்கள் அச்சிட்டுத் தயாரிக்கும் ஆலையில் அவரை நியமித்திருந்தார்கள். ஓராண்டு பணியாற்றிய பிறகு அங்கிருந்து வாரணாசிக்கு அவரை அனுப்பிவைத்தார்கள். வாரணாசியைக் காணும்வரை பிரின்ஸெப் அறிவியல் நாட்டம் கொண்ட ஓர் இளைஞராக, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் ஒரு நல்ல பணியாளராகத்தான் இருந்தார். வேதியியல் தொடர்பான பணிகளில் மட்டும் அதுவரை கவனம் செலுத்திவந்தவர் வாரணாசியைக் கண்டதும், குறிப்பாக ஊரெங்கும் நிறைந்திருந்த கோயில்களைக் கண்டதும் பிரமித்துப்போனார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 69 - வரலாறு திரும்புகிறது

கண்பார்வையில் தோன்றிய குறைபாட்டால்தான் கட்டடக்கலையிலிருந்து வேதியியலுக்குத் துறை மாறினார் பிரின்ஸெப். வாரணாசி அவரை வேதியியலிருந்து மீண்டும் கட்டடக்கலைக்கே திருப்பிவிட்டது. பார்வைக் குறைபாடும் இப்போது சரியாகியிருந்ததால், உற்சாகத்தோடு வாரணாசி கோயில்களை வலம்வந்தார். குளமும், படித்துறையும், சிற்பமும், விதானமும் அவரை ஈர்த்தன. சித்திரங்கள் தீட்டினார். கோயில் கட்டடக்கலையை அருகில் சென்று ஆராய்ந்தார்.

வாரணாசி முழுக்க அலைந்து, திரிந்து ஒரு வரைபடத்தை உருவாக்கிக்கொடுத்தார். வாரணாசியின் அழகிய படங்களுடனும் விளக்கங்களோடும் அறிமுக நூலொன்றை எழுதினார். அடைத்துக்கொண்டிருக்கும் ஏரிகளைச் சீர்செய்யும் வகையில் சுரங்கப்பாதை வடிவமைத்துக்கொடுத்தார். ஔரங்கசீப் காலத்து கோபுரங்களைப் புனரமைக்கும் பணியில் தன்னை ஆர்வத்தோடு ஈடுபடுத்திக்கொண்டார். பத்தாண்டுக்காலம் வாரணாசியோடு நெருக்கமாக இருந்தார் பிரின்ஸெப். கல்கத்தாவுக்கு மீண்டும் வந்த பிறகும், ஏற்கெனவே அங்கே தொடங்கிவைத்த சில பணிகளைத் தொடர்ந்து மேற்பார்வையிட்டார்.

கலை, கட்டடம், பண்பாடு ஆகியவற்றிலிருந்து மொழிகள்மீதும் பிரின்ஸெப்புக்கு ஆர்வம் படர்ந்தது. வில்லியம் ஜோன்ஸ் தொடங்கிவைத்த ஏஷியாடிக் சொசைட்டியிலிருந்து வெளிவரும் ஆய்விதழின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். தனது பெயரை நிலைநாட்டும் மாபெரும் கண்டுபிடிப்பொன்றை பிரின்ஸெப் நிகழ்த்தியது அதன் பிறகுதான். பண்டைய இந்திய ஆய்வுகளின் ஒரு பகுதியாக, கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பணிகள் பல இடங்களில் அப்போது நடைபெற்றுவந்தன. அப்போது பல பகுதிகளில் பாறைகளிலும் தூண்களிலும் சில விசித்திரமான எழுத்துகள் பதிவுசெய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பலரும் முயன்று முயன்று பார்த்தும் அந்த எழுத்துகளைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதுவரை இந்தியாவை ஆராய்ந்துவந்த எவரும் அந்த எழுத்துகளை அதுவரை பார்த்ததில்லை.

அங்கு இங்குமிருந்து பலரும் இந்த விநோத கல்வெட்டு எழுத்துகளைப் பிரதியெடுத்து பிரின்ஸெப்புக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருந்தனர். அவர் எல்லாவற்றையும் தொகுத்துக்கொண்டு பல ஆண்டுகள் விடாமல் ஆராய்ந்துகொண்டிருந்தார். அங்கும் இங்குமாகக் கிடைத்த துப்புகளை ஒன்றுசேர்த்து ஒரு வழியாகக் கல்வெட்டில் இருப்பது பிராகிருத மொழி என்பதையும், அது பிராமி எழுத்துருவில் எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் கண்டுபிடித்தார். ‘தேவனாம்பிய பியதசி’ எனும் மன்னர்தான் இந்தத் தூண்களிலும் பாறைகளிலும் எழுதிவைத்திருக்கிறார் என்பது தெரியவந்தது. யார் இந்த மன்னர் என்று தேடலை விரிவாக்கியபோது, அசோகரிடம் வந்துசேர்ந்தார் பிரின்ஸெப். பண்டைய இந்தியாவின் மகத்தான பேரரசரான அசோகர் கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான்.

ஒருநாள் ஜேம்ஸ் பிரின்ஸெப், கல்கத்தாவில் அலெக்சாண்டர் கன்னிங்காம் என்னும் 19 வயது இளைஞனைச் சந்தித்தார். கன்னிங்காம் லண்டனில் பொறியியல் பயின்றவர், ராணுவப் பயிற்சியும் எடுத்துக்கொண்டவர். பிரின்ஸிப்போடு 1833-ல் தொடங்கிய உரையாடல் தனிப்பட்ட ஒரு நிகழ்வாக இல்லாமல் வளர்ந்து, நீண்டுகொண்டே போனது. தன்னுடைய பணிகளினூடே அவ்வப்போது பிரின்ஸெப்புக்குக் கடிதம் எழுதத் தொடங்கினார். பிரின்ஸெப்பின் இந்திய ஆர்வம் கன்னிங்காமைத் தொற்றிக்கொண்டது. இந்திய வரலாற்றில் பிரின்ஸெப் கொண்டிருந்த ஆழ்ந்த அக்கறையை கன்னிங்காம் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியபோது, இருவருக்கும் இடையிலான நட்பு வலுவடையத் தொடங்கியது. வாரணாசி பிரின்ஸெப்பை உருமாற்றியதுபோல் பிரின்ஸெப் கன்னிங்காமை உருமாற்றினார்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார் கன்னிங்காம். உயர் பொறுப்புகள் பலவும் அவரைத் தேடிவந்தன. கர்னலாகக் கிடுகிடு வென்று வளர்ந்தவர் பணி ஓய்வு பெறும்போது மேஜர் ஜெனரலாகியிருந்தார். எவ்வளவோ மாற்றங்கள். ஆனால், இறுதிவரை அவர் தன் கண்களைப் பழங்கால இந்தியாவிலிருந்து ஒரு கணமும் அகற்றவேயில்லை. பயணங்கள் வாயிலாக இந்தியாவோடு தன்னை நெருக்கமாக்கிக்கொண்டவர் கன்னிங்காம். வேலையாகத்தான் இந்தியாவெங்கும் சுற்றித் திரிந்தார் என்றாலும் செல்லும் இடமெல்லாம் இந்தியாவைத் தொடர்ச்சியாக அவர் ஆராய்ந்து கொண்டிருந்தார். தொல்லியல் துறையின்மீது அவர் ஈடுபாடு வளர்ந்திருந்தது.

இந்தியாவின் பழங்காலம் பூமிக்கு அடியில் புதைந்துகிடப்பதாக அவர் உறுதியாக நம்பினார். `அதுதான் நிஜமான இந்தியா. அது நம்மோடு உரையாடத் துடித்துக்கொண்டிருக்கிறது. எண்ணற்ற கதைகள் சொல்வதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. அலெக்சாண்டர் வந்து சென்ற இந்தியா, மெகஸ்தனிஸ் எழுதிய இந்தியா, கிரேக்கர்கள் கண்டுபிடித்த இந்தியா இங்குதான் எங்கோ புதைந்துகிடக்கிறது. சீனாவோடு பட்டுப்பாதையைப் பகிர்ந்துகொண்ட இந்தியா மணலுக்கடியில் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. புத்தரின் இந்தியா மறைந்துவிடவில்லை. பாஹியானின் கால்தடங்கள் அழிந்துவிடவில்லை. அதே காலடித்தடங்களில் மீண்டும் தன் கால்களைப் பதித்து நடந்த யுவான் சுவாங்கின் மூச்சுக்காற்று, நமக்காகக் கீழுலகில் காத்துக்கிடக்கிறது. ஒவ்வொன்றையும் தோண்டியெடுத்து மேலே கொண்டுவரும்வரை ஓயமாட்டேன்’ என்றார் கன்னிங்காம். குதிரையில் ஏறிச் சுற்றினார். மாட்டுவண்டியில் ஆடி அசைந்து சென்றார்; நடந்தார்.

கன்னிங்காம், தொல்லியலுக்குள் பேரார்வத்தோடு இறங்கியபோது, மிக மிக ஆரம்பநிலையில் இருந்தது அந்தத் துறை. அறிவியல் பார்வை என்பதே சுத்தமாக இல்லாத பிரிட்டிஷ்காரர்கள்தான் அதிகாரிகளாக இருந்தனர். எந்தவித வழிகாட்டு நெறிகளும் வகுக்கப்படவில்லை. கிடைத்த துப்புகளைக்கொண்டு ஓரிடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். உள்ளூர் மக்களைப் பணியிலமர்த்தி, `தோண்டுங்கள்’ என்று உத்தரவிட்டுவிட்டு, சாய்ந்து உட்கார்ந்துகொள்வார்கள். பழங்காலச் சிதிலங்கள், மாளிகைகளின் எச்சங்கள், தூண்கள், நாணயங்கள் என்று அகப்பட்டதை வெளியில் எடுத்து பத்திரப்படுத்திவிட்டு, மண்ணை மூடிவிட்டுக் கிளம்பிவிடுவார்கள். கிடைக்கும் பழங்காலப் பொருள்களைப் பெரும்பாலும் அதிகாரிகளே பத்திரப்படுத்திக்கொண்டு விடுவார்கள். மாளிகையின் தூண் பிடித்திருந்தால் பெயர்த்து எடுத்துவந்து வீட்டில் வைத்துக் கொள்வார்கள். தேவையில்லாதவை களையப் படும். எஞ்சி நிற்கும் சிலவற்றை அருங்காட்சியத்தில் கொண்டுவந்து கணக்குக் காட்டி வைத்து விடுவார்கள். விலை மதிப்புள்ளவை என்று தெரிந்தால், கப்பலில் போட்டு ஊருக்கு அனுப்பிவைத்துவிடுவார்கள். கன்னிங்காமின் வருகைக்குப் பிறகு இவையெல்லாம் பெருமளவில் மாறின.

கன்னிங்காமைப் பொறுத்தவரை பாஹியான், யுவான் சுவாங் இருவரும் எழுதிவைத்து விட்டுப்போன குறிப்புகள்தான் இந்தியாவைக் கண்டுபிடிப்பதற்கான சாவிகள். புத்தர்தான் அவருடைய கலங்கரை விளக்கம். பழங்கால இந்தியாவின் புவியியலைத் தெரிந்துகொள்ள அவர் நாடியது கிரேக்கர்களை. அலெக்சாண்டரின் வழித்தடத்தைப் பின்தொடர்ந்தால், பண்டைய இந்தியாவை அடைந்துவிடலாம் என்று கன்னிங்காம் திடமாக நம்பினார்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 69 - வரலாறு திரும்புகிறது

புத்தர் தம்மம் போதித்த சாரநாத்தில் தொல்லியல் ஆய்வுகளைப் படிப்படியாகத் தொடங்கினார். சாரநாத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து முதன்முறையாக, முறையான அகழ்வாராய்ச்சியை அங்கே தொடங்கிவைத்தவர் கன்னிங்காம்தான். அவருடைய முன்முயற்சியால் பழம்பெரும் இந்தியக் கட்டுமானங்களில் ஒன்றான சாஞ்சி நிலத்துக்கு அடியிலிருந்து மெல்ல உயிர்பெற்று எழுந்துவந்தது. பிரின்ஸெப் அசோகரைக் கண்டறிந்ததுபோல் அவர் நண்பர் கன்னிங்காம் அசோகரின் மாபெரும் கட்டுமானத்தைக் கண்டறிந்தார். புத்தரோடு தொடர்புடைய மற்ற இடங்களிலும் முறையான ஆய்வுகளைத் தொடங்கினார்.

தொல்லியல் ஆய்வுகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கான தெளிவான வழிகாட்டு நெறிகளையும் வகுத்துக்கொடுத்தார் கன்னிங்காம். பண்டைய வரலாற்றோடு தொடர்புடைய இடங்களை எப்படித் தேர்ந்தெடுத்துப் பார்வையிடுவது, அங்குள்ள கட்டடங்களை ஆராய்ந்து எவ்வாறு அறிக்கைகள் தயாரிப்பது, கண்டெடுக்கப்படும் சிற்பங்களையும் இன்னபிற பழம்பொருள்களையும் எவ்வாறு ஆவணப்படுத்துவது, படங்கள் எப்படி வரைவது, எப்படிப்பட்ட தாள்களில் படங்கள் வரைய வேண்டும், படங்களுக்குக் கீழே குறிப்புகள் எவ்வாறு எழுத வேண்டும், புகைப்படங்கள் எங்கே சேர்க்க வேண்டும் உள்ளிட்ட எல்லாவற்றையும் அவர் விளக்கி எழுதியிருக்கிறார். தனது தொல்லியல் ஆய்வுகளைத் தொகுத்து, 1854-ம் ஆண்டு அவர் வெளியிட்ட படங்களோடு கூடிய 368 பக்க நூலை தொல்லியல் ஆய்வாளர்கள் இன்றும் மதிக்கின்றனர்.

இதற்கிடையில், உடலையும் மனதையும் தேவைக்கும் அதிகமாக வருத்திக்கொண்டு பணியாற்றிக்கொண்டிருந்த ஜேம்ஸ் பிரின்ஸெப் துவண்டு விழுந்தார். லண்டன் சென்றுசேர்ந்த பிறகும் சரியாகாமல் தனது 41-வது வயதில் இறந்துபோனார். பிரின்ஸெப்பின் பணிகளை கன்னிங்காம் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார். 1857-ம் ஆண்டு சிப்பாய் புரட்சி மூண்டது. அதற்கு முன்பே பல இடங்களில் கிளர்ச்சிகள் தொடங்கிவிட்டன. தொல்லியலுக்கென்று ஓர் அமைப்பை இந்தியாவில் நிறுவ வேண்டும் என்று நீண்டகாலமாகப் போராடி வந்த கன்னிங்காமின் கனவு நிறைவேறியது. இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்குநராக கன்னிங்காம் நியமிக்கப்பட்டார். தட்சசீலம், நாளந்தா, கௌசாம்பி, பத்மாவதி, வைஷாலி என்று தொடங்கி பல பண்டைய இந்திய நகரங்களை அடுத்தடுத்து கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அவருடைய தொல்லியல் பங்களிப்புகளைச் சுருக்கமாகத் தொட்டுக்காட்டுவதுகூட மிகவும் கடினம்.

ஒரு சக்கரம்போல் வரலாறு உருண்டோட ஆரம்பித்தது. இருளில் புதைந்திருந்த பழங்காலம் மினுமினுப்பான வெளிச்சத்தை முதன்முறையாகக் கண்டது!

(அடுத்த இதழில் முடியும்)