மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 7 - அரிஸ்டாட்டிலின் யானை

அரிஸ்டாட்டில்
பிரீமியம் ஸ்டோரி
News
அரிஸ்டாட்டில்

அரிஸ்டாட்டில் இந்திய யானையை எங்கே, எப்போது கண்டார் என்பது மட்டுமல்ல, ஒரு முறையேனும் கண்டாரா என்பதுகூடத் தெரியவில்லை.

தத்துவமெல்லாம் பிற்பாடுதான். அடிப்படையில் அரிஸ்டாட்டில் இயற்கையின் காதலர். அழகு என்றால் என்ன, நீதி என்றால் என்ன, அறம் என்றால் என்ன என்றெல்லாம் கேட்டதோடு முடித்துக்கொள்ளாமல் புழு என்றால் என்ன, பூச்சி என்றால் என்ன, விலங்கு என்றால் என்ன போன்ற கேள்விகளையும் எழுப்பியவர். உலகிலுள்ள எல்லா உயிரினங்களையும் முறைப்படி அறிமுகப்படுத்தும் மாபெரும் களஞ்சியமொன்றை உருவாக்கிவிட வேண்டும் என்னும் வேட்கையோடு ஒரு பெரும் தேடலை முன்னெடுத்தவர் அரிஸ்டாட்டில். அப்படிப்பட்டவர், `அதிசய விலங்குகளின் வசிப்பிடம்’ என்று கிரேக்கம் கருதிய இந்தியாவை அறிந்துகொள்ளாமல் இருப்பாரா?
இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 7 - அரிஸ்டாட்டிலின் யானை

அரிஸ்டாட்டிலின் உயிரியல் களஞ்சியத்தில் மொத்தம் 500 விலங்குகள் இடம்பெற்றிருக்கின்றன. விலங்கின் பெயர் என்ன, அது எங்கே இருக்கிறது, எப்படிக் காட்சியளிக்கிறது, அதன் உடலுக்குள் என்னென்ன பாகங்கள் உள்ளன, அது என்ன சாப்பிடும், எப்படி இயங்கும், அதன் வரலாறு என்ன... ஒவ்வொரு கேள்வியும் ஒரு தேடலாக மாறும். அருகிலிருக்கும் விலங்குகள் என்றால் அவரே சென்று பார்வையிடுவார், குறிப்புகள் எடுப்பார். மற்றபடி யார் வெளியூர் போனாலும், வரும்போது அபூர்வமாக எதையாவது பிடித்துக்கொண்டு வர முடியுமா என்று உரிமையோடு கேட்டுப் பெற்றுக்கொள்வார்.

கையில் கிடைப்பதை அறுத்துப் பார்த்து உடல் பாகங்களை ஆராய்வதும் அவருக்குப் பிடிக்கும். ஒரு பூனையின் இதயமும் நாயின் இதயமும் ஒன்றுபோல் இருக்குமா, ரத்தம், தசை, தசைநார், தோல் எல்லாம் உயிருக்கு உயிர் மாறுபடுவது ஏன் என்பதை அறிய இயன்றவரை எல்லா உயிரினங்களையும் தொட்டு, தடவி, வெட்டி, உணர்ந்து எழுதத்தான் விரும்பினார் அவர். ஆனால் திட்டமிட்ட 500 விலங்குகளில் 50 மட்டுமே அவர் கைக்குச் சிக்கின.

இந்தியாவுக்கு அவரால் செல்ல முடியவில்லை. இந்தியாவிலிருந்து யாரும் எதையும் அவருக்குப் பிடித்து வந்து தந்ததுபோலவும் தெரியவில்லை. எனவே, தீஷியஸ் எழுதிவைத்த குறிப்புகளின் வழியே இந்தியாவை அறிந்துகொண்டார் அரிஸ்டாட்டில். தீஷியஸ் விவரித்த அத்தனை மாய விலங்குகளையும் கேள்வியின்றி அப்படி, அப்படியே ஏற்றுக்கொண்டதோடு தன்னுடைய களஞ்சியத்திலும் இணைத்துக்கொண்டார். ஒன்று மட்டும் அவர் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இரவும் பகலும் அவரைப் போட்டு அலைக்கழித்தது. ஒருகட்டத்தில் அவர் இதயத்துக்கு நெருக்கமானதாகவும் மாறிப்போனது. எனவே தனிப்பட்ட முறையில் அதை அவரே கவனமாக ஆராயத் தொடங்கினார். அந்த விலங்கு, இந்திய யானை. அரிஸ்டாட்டிலின் படைப்புகளில் இந்தியாவுக்கு உள்ளங்கையளவு இடம்தான் இருந்தது. அதையும் யானையே விழுங்கிக் கொண்டுவிட்டது.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 7 - அரிஸ்டாட்டிலின் யானை

அரிஸ்டாட்டில் இந்திய யானையை எங்கே, எப்போது கண்டார் என்பது மட்டுமல்ல, ஒரு முறையேனும் கண்டாரா என்பதுகூடத் தெரியவில்லை. இந்தியா எங்கே இருக்கிறது, இந்தியர்கள் எப்படிப்பட்டவர்கள், இந்தியர்களுக்குத் தத்துவம் என்றால் என்னவென்று தெரியுமா, அவர்கள் எந்தக் கடவுளை வணங்குகிறார்கள், எந்த மன்னர் அவர்களை ஆள்கிறார்... எதுவும் முக்கியமில்லை அரிஸ்டாட்டிலுக்கு. இந்தியா என்றால் யானை. யானை என்றால் இந்தியா. அவ்வளவுதான்.

முதலில் யானையை அகம், புறம் என்று பிரித்து வர்ணித்துவிடுகிறார். பெரிய உயிரினம். பார்க்கும்போதே பயத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. இரண்டு தந்தங்கள் உள்ளன. ஆண் யானைக்கு இரண்டும் மேல் நோக்கி உயர்ந்திருக்கும்; பெண் என்றால் கீழே இறங்கியிருக்கும். மொத்தம் இரு பற்கள்தான் என்று நினைத்துவிட வேண்டாம். வாய்க்குள் இரு ஓரங்களிலும் தலா நான்கு பற்கள் அமைந்துள்ளன. அவற்றைக் கொண்டுதான் உணவைக் கடித்து, அரைத்து உள்ளே தள்ளும்.

நல்ல திடமான தோல். பெரிய தலை. எனக்கும் தலைமுடி இருக்கிறது பார் என்று சொல்லிக்கொள்ளும்படியாக ஏதோ கொஞ்சம் முடி வளர்ந்திருக்கும். உருவத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாத சின்னஞ்சிறிய நாக்கு. நான்கு வயிறுகள் இருக்குமோ என்று நினைக்கும் அளவுக்குப் பெரிய வயிறு. வயிற்றுக்குள் குடல் சுருண்டிருக்கிறது. கல்லீரல் உண்டு. பித்தப்பை கிடையாது. இனப்பெருக்க உறுப்புகள் உள்ளொடுங்கி அமைந்துள்ளன. மிகவும் குட்டியாக உள்ளன.

சரியும் தவறும் கலந்த இந்த அறிமுகத்தைக் கடந்து உள்ளே போனால் யானையின் குடும்ப வாழ்க்கை விரிகிறது. நாம் எவ்வளவுதான் முயன்றாலும் யானைகளின் காதலைக் காண முடியாது என்கிறார் அரிஸ்டாட்டில். யானை கூச்ச சுபாவமுள்ள உயிரினமாம். மனித நடமாட்டமுள்ள பகுதிகளைத் தவிர்த்துவிட்டு, ஆள் அரவமற்ற அமைதியான சூழலில் மட்டுமே யானைகள் கூடுமாம்.

பெண் யானை 22 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள்வரை கர்ப்பமாக இருந்து குழந்தையை ஈன்றெடுக்கிறது என்கிறார் அரிஸ்டாட்டில். ஏன் இவ்வளவு காலம் என்பதற்கும் அவரிடம் விளக்கம் இருக்கிறது. யானை போன்ற ஒரு பெரிய உயிர் அதன் எல்லா பாகங்களோடும், எல்லா அளவுகளோடும் ஒரு தாயின் வயிற்றுக்குள் உருவாவதென்பது அசாதாரணமான செயல். ஒவ்வோர் உறுப்பும் வளர்ந்து ஒன்று திரண்டு வருவதற்கு நேரம் பிடிக்கும் அல்லவா?

ஒரு குட்டி யானையால் தன் பிறப்பை நன்கு உணர முடியும் என்கிறார் அரிஸ்டாட்டில். வெளியில் வந்து விழுந்ததுமே வாஞ்சையோடு தாயை நெருங்கி வந்து பால் அருந்தத் தொடங்கிவிடும். அதன் தும்பிக்கை தளிர்போல் இருக்குமென்பதால், நேரடியாக வாய் வைத்து பால் அருந்தும். பிறந்த சில மணி நேரங்களில் தத்தக்கா பித்தக்கா என்று நடக்கவும் தொடங்கிவிடும்.

மனிதன் உட்பட அனைத்து விலங்குகளைக் காட்டிலும் ஒரு யானையின் ஆயுள்காலம் நீண்டது என்கிறார் அரிஸ்டாட்டில். எவ்வளவு நீண்டது என்பது அவருக்குத் தெரியவில்லை என்பதால் தனக்குக் கிடைத்த சில தரவுகளின் அடிப்படையில் 120 அல்லது 200 ஆண்டுகள் என்கிறார். யானையால் 300 ஆண்டுகள் வாழ முடியும் என்று இன்னோரிடத்தில் குறிப்பிடுகிறார்.

யானை நின்ற நிலையிலேயே உறங்கும் என்று சொல்லப்படுவதை அவர் ஏற்கவில்லை. அதேசமயம் நான்கு கால்களையும் ஒரே நேரத்தில் தளர்த்தி யானையால் கீழே அமரவோ படுக்கவோ முடியும் என்றும் அவர் நம்பத் தயாராக இல்லை. அப்படியானால் எப்படித்தான் உறங்கும்? முன்னங்கால்களை அல்லது பின்னங்கால்களை மட்டும் மடக்கி, தன் எடையை ஒருவாறு சமநிலைக்குக் கொண்டுவந்து சட்டென்று உறங்கிவிடுமாம்.

எத்தனை பெரிய யானையாக இருந்தாலும், அது எத்தனைதான் திமிறினாலும் அதை அடக்கியாளும் திறன் இந்தியர்களுக்கு இருக்கிறது என்கிறார் அரிஸ்டாட்டில். ஒரு திறமையான பாகனால் எப்படி வேண்டுமானாலும் யானைகளைப் பழக்க முடியும். எதை வேண்டுமானாலும் கற்றுக்கொடுக்க முடியும். நிற்கவும், உண்ணவும், உறங்கவும் மட்டுமல்ல... போர்க்களங்களுக்குச் செல்லவும், விரைந்து ஓடவும், எதிரிகளைத் தாக்கவும்கூட யானைகளுக்குப் பயிற்சியளிக்க முடியும். சாதுவான யானைகளைக்கொண்டு காட்டு யானைகளை மயக்கி, கவர்ந்து செல்லும் இந்தியர்களின் வழிமுறைகள் குறித்தும் அரிஸ்டாட்டில் குறிப்பிடுகிறார்.

குறிப்பாக யானையின் தும்பிக்கை அரிஸ்டாட்டிலைத் தவியாய்த் தவிக்க விட்டிருப்பதைக் காண முடிகிறது. தும்பிக்கையை நினைத்து மருகி மருகி எத்தனை இரவுகள் அவர் உறக்கமிழந்தார் என்பதை இதுவரை யாரும் கண்டறிந்து சொல்லாதது நமக்கெல்லாம் பெரும் இழப்பு. நானும் எவ்வளவோ விலங்குகளை உயிரோடும் இறந்த பின்பும் ஆராய்ந்திருக்கிறேன். எத்தனையோ உடல் பாகங்களின் நுணுக்கங்களைக் கண்டுபிடித்திருக்கிறேன். ஆனால் தும்பிக்கைபோல் ஓர் அதிசயமான உறுப்பை எங்குமே கண்டதில்லை என்கிறார் அரிஸ்டாட்டில்.

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 7 - அரிஸ்டாட்டிலின் யானை

அடிப்படையில் தும்பிக்கை என்பது என்ன? நுகர்வதற்கு உதவும் மூக்கு என்றுதான் முதலில் நமக்கெல்லாம் தோன்றும். அதன் வழியேதான் காற்று உள்ளே போகிறது என்பதால் நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரியானதும்கூட. ஆனால் மூக்குக்கென்று ஓர் இலக்கணம் இருக்கிறதுதானே? குறிப்பிட்ட ஒரு விலங்குக்கு, குறிப்பிட்ட அளவுக்குத்தான் மூக்கு இருக்க வேண்டும் என்று விதிகள் இருக்கின்றன. யானைக்கு மட்டும் ஏன் இவ்வளவு நீளமாக ஒரு மூக்கு இருக்க வேண்டும்... அப்படி இருக்க வேண்டியதன் அவசியம் என்ன... எதற்கும் காரண காரிய தொடர்பு இருக்க வேண்டும் அல்லவா... தும்பிக்கை மட்டும் ஏன் இயற்கை விதிகளை மீறி துருத்திக்கொண்டு நிற்க வேண்டும்?

தும்பிக்கை என்பது மூக்கு கிடையாது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் அது என்ன? பொதுவாக நான்கு கால்கள்கொண்ட ஒரு விலங்கு தன் முன்னங்கால்களையே கைகளாகவும் பயன்படுத்திக்கொள்வது வாடிக்கை. யானையும் நான்கு கால் பிராணிதான். ஆனால் வழக்கத்தைவிடப் பெரிய உடல் என்பதால், முன்னும் பின்னும் தாங்கிப் பிடிக்க தூண்கள்போல் நான்கு கால்கள் அமைந்துள்ளன. யானையால் குனிய முடியாது. மெல்ல மெல்லத்தான் நடக்கும். நடக்கும்போது நான்கு கால்களும் சேர்ந்தே இயங்குகின்றன. நான்கு கால்களும் கால்களாகச் செயல்படும் வரைதான் யானையால் கீழே விழாமல் சமநிலை காக்க முடியும். மற்ற விலங்குகள்போல் முன்னங்கால்களைக் கைகளாகப் பயன்படுத்த ஆரம்பித்தால் சமநிலை குலைந்துவிடும். ஆக யானையின் நான்கு கால்களும் கால்களாகவே இருக்கின்றன என்பது தெளிவாகிறது.

எல்லாமே கால்களாகப் போய்விட்டதால் போனால் போகிறது என்று தும்பிக்கை வடிவில் ஒரு கையை அது பெற்றுவிட்டது என்று சொல்லாமா? நீர் மொண்டு அருந்தவும், உணவை அள்ளியெடுத்து வாய்க்குள் தள்ளவும், மரங்களை வளைத்து உடைக்கவும் தன் தும்பிக்கையையே யானை நாடுகிறது. நம் கைபோலவே தும்பிக்கை வளைகிறது. தொட்டுப் பார்த்தால் நம் கை போலவே இதமாக இருக்கிறது. சக யானையைத் தீண்டவும், அணைத்துக்கொள்ளவும் தும்பிக்கையே உதவிக்கரமாக நீண்டு வருகிறது.

இதிலுள்ள அதிசயத்தை உங்களால் உணர முடிகிறதா? யானைக்குக் கை இல்லை என்பதால் அந்தப் பணியை தும்பிக்கை தன் தலை மேல் போட்டுக்கொண்டு செய்துகொண்டிருக்கிறது. மூக்கு இல்லாததால் அதுவே மூக்காகவும் இருக்கிறது. கையின் வேலையைச் செய்கிறது என்பது போக, கையைவிடவும் நன்றாக வளைந்து வளைந்து செய்கிறது. பெரிய மூக்காக இருப்பதால் நிதானமாகச் சுவாசித்து யானையை நன்றாக வாழவைக்கிறது. ஒரே நேரத்தில் மூக்காகவும் கையாகவும் இருக்கும் இன்னொரு உறுப்பை எந்த விலங்கிடமாவது நீங்கள் கண்டதுண்டா என்று பரவசத்தில் ஆழ்கிறார் அரிஸ்டாட்டில்.

யானை மட்டும் இதையெல்லாம் படித்திருந்தால், எனது தும்பிக்கையை வைத்து இவ்வளவு தத்துவார்த்த தர்க்கங்களா என்று வியந்து அரிஸ்டாட்டிலை ஆசீர்வாதம் செய்திருக்கும்.

(விரியும்)